வாழ்க்கைக் காகிதம் எப்போதும் வெள்ளையாகத் தான் இருக்கின்றது. அதில் உறவுகள்தான் அழகியலை வரைந்து வண்ணமாக்குகின்றன. மனித வாழ்க்கை யில் எத்தனை வகையான உறவுகள்...பாசம் மனிதனைக் கட்டிப் போட்டிருக் கின்றது. ஒவ்வொரு புன்னகையின் அடியிலும் தெரிகிறது ஒரு அடர்த்தி மிகு அன்பு. இந்த உலகில் எல்லோரும் அன்பின் கைதிகள்தான். யாரும் இன்னும் விடுதலையடையவே இல்லை.
உலகில் மனிதன் கொண்டாடும் எல்லா உறவுகளை யும் நினைக்கையில் ஒருவகை ஆச்சரியமும் அல்லாஹ்வின் வல்லமையும்தான் தெரிகின்றது. அன்பிற்கு இறைவன் அத்தனை சக்தியைக் கொடுத்திருக்கிறான். மனித உறவிற்கு வழங்கப்பட்ட மகத்தான கௌரவமும் அது எல்லா உயிர்களும் அன்பையே பரிமாறிக் கொள்கின்றன. அந்த அன்பின் நிழல் எல்லா உறவுகளிலும் படர்ந்திருக்கின்றது.
அன்பு, பாசம் என்பன கிடைக்கும்போது ஒருவன் அடையும் மகிழ்ச்சி வார்த் தைகளில் அடங்காதது. அதுபோலத்தான் அவை மறுக்கப்படும்போது அடை யும் மனவேதனையும். அன்பு, வலி என்ற இரண்டு சொற்களும் மனித உறவுக ளின் துக்கம், மகிழ்ச்சி என்ற தருணங்களைத் தீர்மானிப்பவை. எல்லா உறவுகளும் இந்த இரண்டில் ஒன்றையே உருவாக்குகின்றன அல்லது பரிசளிக்கின்றன.
நல்ல நோக்கத்திற்காகக் கொள்ளும் நேசம் புனிதமா னது. அதிக அர்த்தம் நிறைந்தது. ஒரு மழைநாளில் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருப்பது போல உன்னதமான தருணம் அது. அந்தத் தீராத பிரியத்தை, நட்பை, சகோதரத்துவத்தை இறைவனும் விரும்புகின்றான். அத்தகைய உறவில் இருப்பவர்கள் ஈமானின் சுவையை உணர்ந்து கொள்கின்றனர்.
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து எப்போதோ சந்தித்துக் கொண்டவர்கள் இப்போது எப்படியெல்லாம் உறவில் இணைந்திருக்கிறார்கள். சந்திப்புக்கள், கை குலுக்கல்கள், புன்னகைகள் என எல்லாமே பேரின் பத்தை வழங்கு கின்றன. உயிருக்கு நெருக்கமாகிய சகோதரர்கள்... நண்பர்கள்... இறைவா! உனக்கே எல்லாப் புகழும்.
எல்லா உறவுகளும் ஒரு அந்நியத்தில்தான் பிறக்கின் றன. அவை அப்படித் தான் அறிமுகமாகின்றன. கால நகர்வில் ஆழமான வேர்விட்டு, பின் அவை தனித்த நினைவுகளைக் கொண்ட ஒரு கனதியான புத்தகம் போல் ஆகி விடுகின்றன.
உறவும் நினைவுகள் போலத்தான். எவ்வளவு முயன்றாலும் அது தரும் வடுக்களை அழிக்க முடிவதில்லை. எப்போதும் இருந்துகொண்டே இருக்கின் றது. எப்போதும் அது வாழ்வின் ஆனந்தத்தைப் பறித்துக் கொண்டு போகலாம். அதுதான். வாழ்வில் மிகுந்த சந்தோசம் இருப்பதுபோலவே அடர்ந்த துக்கமும் இருக்கின்றது.
நிறையப்பேருக்கு அன்பு என்பது மறுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அவர்கள் அதனைக் கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்; தேடிக் கொண்டிருக்கிறார் கள். அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே அதனைச் சுவைக்கவில்லை. பாவம் அவர்கள், எந்தப் பாடசாலையில் போய் அன்பைக் கற்பார்கள்? அன்பு மறுக்கப் படும்போது கிடைக்காமல் போகும்போது வாழ்வின் வசீகரமே செத் துப் போகின்றது. அந்த வாழ்க்கை வரட்சியாகக் காட்சியளிக்கின்றது. ஒரு பேரவலம் மனக் குகைகளில் வந்து குந்திக் கொள்கின்றது. அப்போது இந்த உலகம் பொழியும். எல்லையற்ற கருணையும் இல்லையெனத் தோன்றுகின்றது.
எல்லா உறவுகளும் தூய்மையான அன்பையே பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எல்லோரினதும் பிரார்த்தனை. ஆனால், அது நிகழ்வதில்லை. தாயும் தந்தையும் தன் பிள்ளைக்கு அன்பை வெளிப்படுத்த வேண்டும். குறிப் பிட்ட வயதோடு அது நிறுத்தப்படும்போது குழந்தை ஏக்கத்தையே சுவாசிக் கின்றது.
அன்பை நேரடியாகக் காணும்போது; உணரும் போதுதான் மனிதன்தன் இருப் பின் அங்கீகாரத்தை நம்புகின்றான். நான் நேசிக்கப்படுகின்றேன் என்று ஒரு வன் உணர்வதே ஒரு எல்லையற்ற மகிழ்ச்சிதானே. எல்லோரும் முழுமை யான அன்பை வெளிப்படுத்தத் தவறுகின்றனர் என்றே எண்ணத்தோன்றுகின் றது. பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள்... என எல்லோரும்தான்.
ஒருவர் தனது நேசத்தை வெளிப்படுத்துவதுதான் உறவின் அடிப்படை. அதனைத்தான் இறை தூதர் (ஸல்) அவர்கள் ‘நீங்கள் ஒருவரை நேசிப்பதா யின் அவரிடம் அதனைத் தெரியப்படுத்தி விடுங்கள்’ என்றார்கள். இது ஒரு தூய்மையான நேசத்திற்கான மிகச் சிறந்த வரையறை. நாம் அந்த நேசத்திற் குச் செலுத்தும் மரியாதை.
மனிதர்களையும், மனதுகளையும் எதிர்கொள்வ தென்பது மிகப் பெரிய கலை. யாருமே அதனை முழுமையாகக் கற்றுக்கொள்ளவே இல்லை. கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் இல்லை. எல்லோரும் அவரவர் இயல் பிற்கேற்ப பழகவே விரும்புகின்றனர். தான் கொண்டிருக்கும் கருத்திற்கும் உணர்விற்கும் ஏற்ப ஏனையோரையும் இசைவாக்க முயற்சிக்கின்றனர். அதாவது அடுத்தவர் மனதைப் புரிய விரும்புகிறார்களே இல்லை. அதிகம் படித்தவர்கள்தான் இங்கே பிழைக்கிறார்கள்.
இப்படிச் சொல்லும்போது எல்லோரும் ஒன்று போல இல்லையே என்று சொல்லத் தோன்றும். உண்மையில் எல்லோரும் வேறுவேறுதான். அதனால் தான் உறவுகளில் கவனம் தேவைப்படுகின்றது. ஏனெனில், வாழ்க்கைப் பாதை யிலும் நினைத்தவாறு பயணிக்க முடியாது
மனதுதான் எல்லோரையும் வேறுபடுத்துகின்றது. சிலர் நுண்ணுணர்வுகள் கொண்ட மனிதர்கள். அவர்கள் எப்போதும் மனித உணர்வுகளை உணர்வுபூர்வ மாகவே பார்க்கின்றனர். அப்படித்தான் பழகுகின்றனர். ஒரு நுளம்பைக் கூட கொல்லலாமா,
வேண்டாமா என்று யோசிப்பவர்கள். வார்த்தைகள்,
நடத்தைகள் என எல்லாமே அவர்களிடத்தில் பாதிப்பு ஏற்படுத்துபவை. ஒரு சின்ன நிகழ்வு அவர்களுக்குள் ஆயிரம் நினைவலை களை உருவாக்கி விடுகின்றது. அதிலிருந்து விடுபடவே பல மணி நேரம் எடுக்கும்.
இறை தூதர் (ஸல்)அவர்களை நினைக்க ஆச்சரியம் தான் மேலிடுகின்றது. எல்லோரையும் அணைத்துக் கொள்பவராகவும்,
யாரைவிட்டும் விலகாதவராக வும் இருந்திருக்கிறார்கள். அவரது தோழர்கள் யாரும் அவரைப் பகைத்துக் கொள்ளவில்லை,
வெறுக்கவுமில்லை. அவர் தன்னோடுதான் அதிகம் நேசம் கொண்டுள்ளார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். இறைதூதர் போன்ற ஒரு நண்பர் இந்த உலகில் யாருக்கு வாய்க்க முடியும்?!
நண்பன் என்பவன் பக்கத்து இருக்கையில் இருப்பவன் அல்ல. எந்த நேரத்தி லும் புறக்கணிக்காமல் இருப்பவன். தன் தேவையின் போது மட்டுமல்லாமல் என் றைக்கும் நினைவில் வைத்திருப்பவன். அவனால்தான் நட்பின் சுகந் தத்தை அழுகாமல் பாதுகாக்க முடியும்.
தாயின் மடியினைப் போலத்தான் நல்ல நண்பன். அவனாலும் நிச்சயம் அந்த ஆறுதலைத் தர முடியும். ஒருவனை சிரிக்க வைக்க முடியும். புறக்கணிப்பின் உலகிலிருந்து ஒருவனை விடுவிக்க முடியும். தன் எல்லையற்ற கரு ணையை அவனுக்குக் கொடுக்க இயலும். இறைதூதர் அவர்கள் கறுப்பு நிற அடிமையான ஸாஹிர் இப்னு ஹராமை சந்தையில் கட்டிய ணைத்து இவரை யார் வாங்குவீர்கள்? என்றபோது அவர் எத்தனை மகிழ்ச்சியை உணர்ந்திருப்பார். என்னை யார் வாங்குவார்கள்? என்ற அவரது ஏக்கக் குரலுக்கு ‘நீ அல்லாஹ்விடத்தில் விலை கூடியவன்’ என்ற பதிலால் ஒரு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்த உத்தமர் சுவர்க்கத்தில் என்னையும் அப்படி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று மனது பிரார்த்திக்கின்றது.
இடைவெளிகள் இல்லாத உறவுதான் கௌரவமானது. என்றைக்கும் வாழ் பவை. தன் அன்பை யாரும் மிகைத்துவிடக் கூடாது என்பதற்காக உறவில் இடை வெளிகளை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. முழுமையான அன்பு அல்லாஹ்விடத்திலே இருக்கி றது. யாராலும் அதை மிகைக்க முடியாது.
சிலர் தம் வாழ்வின் சந்தடிகளுக்குள்ளும் அவர்களது நண்பர்களை நினைவில் வைத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்களோ சின்னச் சின்ன அவசரங்களில் கூட அவர்களை மறந்துவிடுவார்கள். ஏதோ ஒரு விட்டுக் கொடுப்பில்தான் உறவுகள் வாழுகின்றன.
‘நம்பிக்கை, வாக்குறுதி, உறவு, இதயம் என்ற நான் கையும் யாரும் வாழ்க்கை யில் உடைத்து விடவே கூடாது. அவை உடைபடும் போது எந்த சப்தத்தை யும் ஏற்படுத் துவதில்லை. ஆனால், அவை எண்ணற்ற வலிகளை உண்டுபண்ணுகின்றன’ என்ற எங்கோ வாசித்த வரிகள் நினைவில் நெருடுகின்றன.
உறவுகளின்போது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய வார்த்தைகள் இவை. நல்ல நண்பர்கள் உறவின் மிகப் பெரிய சொத்துக்கள். எத்தனையோ உறவுகள் இருந்தாலும் நட்பைத்தானே எல்லோரும் என்றைக்கு மான உறவாகக் காண்கிறார்கள். நட்பு ஒரு தீராத பிரியம். தயவுசெய்து நல்ல நண்பர்களை யாரும் இழந்து விட வேண்டாம். நல்ல நண்பன் எப்போதும் தன்னைவிட மேலாகவே தன் சக நண்பனைப் பார்க்கிறான். அவனுக்காக நிறைய விடயங்களை இழக்கிறான். இருந்தாலும் நல்ல நட்பு இலகுவில் கிடைப்பதில்லை. அது வாழ்வின் அழகிய தரிசனம்தான்.
பலர் தமது நட்பை இதயத்திற்கு வெளியில்தான் வைத்திருக்கிறார்கள். சுய நலத்தில் கிளைத்த நட்பு ஒருபோதும் நீடிப்பதில்லை. தேவை முடியும் போது மறந்துபோகும் இழிவான உறவு அது. நல்ல நட்பு எல்லாத் தருணங்களிலும் நண்பனை நினைவில் வைத்திருப்பது. இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றெ னப் பார்ப்பது. தன் வெற்றியை அவனுக்குப் பரிசளிக்க விரும்புவது.
நட்பு, சகோதரத்துவம் என எல்லா உறவுகளிலும் மற்றவரை மதிப்பதும் அங்கீகரிப்பதும்தான் மிக முக்கியமானவை. அதுதான் உறவின் எல்லையைத் தீர்மா னிப்பது. மரியாதையும் அன்பும் இல்லாதபோது அந்த உறவின் எல்லை மிகக் குறுகியதாகிறது. சில நாட்களுக்குள் உடைந்து போகின்றது.
அன்பைப் வெளிப்படுத்தும் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும் போலி ருக்கிறது. உறவுகளில் யாரும் உடைந்து போகக் கூடாது. வீட்டுக்கு வந்து செல்பவரை வழியனுப்பிவிட்டு மறந்துபோகாமல் அவர் போய்ச் சேரும் வரை நினைவில் வைத்திருப்பதுதான் உண்மையான அன்பின் அடையாளம். நல்ல நண்பர்கள், சகோதரர்கள் இலகுவில் கிடைப்பதில்லை. அவர்களை இழப்பதும் அப்படித்தான். செழியனின் இந்த வரிகள்போல...
நல்ல நண்பர்களைத் தேடி
மலைகளின் உயரத்திற்குச்
செல்ல வேண்டியிருக்கிறது
அவர்களை இழக்கும்போது
மலைகளையே சுமக்க வேண்டியிருக்கிறது