Monday, October 25, 2010

உனக்காக அழுகிறேன்...

 




இருந்தாலும்... இருந்தாலும்... என்று சொல்லிப் பாருங்கள். உங்களாலும் அழா மல் இருக்க முடியாது என்று ஒருமுறை வாசித்தது நினைவில் இருக்கிறது. உண்மைதான், சொல்லிப் பார்த்தால் அழாமல் இருக்க முடியாது. அந்த ஒற்றை வரியின் முடிவில் உள்ள மௌனம் அதற்கு முன்னால் உள்ள ஏராளமான வார்த்தைகளை, நிகழ்வுகளை உள்ளடக்கியிருக்கின்றது.


நீ மிகத் தூய்மையானவன், நீ எங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைத் தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லைஎன்று சொல்லி மலக்குகள் மண்டியிட்டபோதே மனிதன் மகத்துவம் பெற்றுவிட்டான். அந்த நீல நிற வானவெளியும் பரந்து விரிந்த பூமியும் மனிதனுக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளன. எவ்வளவு மகத்தான ஏற்பாடுகளோடு அல்லாஹ் மனிதனை இந்த உலகில் வாழவைத்திருக்கின்றான்!


இந்த வாழ்க்கைக்கான மிகச் சரியான அர்த்தத்தை நாம் எழுதிக் கொண்டி ருக்கிறோமா அல்லது கிறுக்கிக் கொண்டிருக்கின்றோமா என்று எண்ணத் தோன்றுகிறது. வாழ்க்கைப் பாதை எம்மில் அநேகருக்கு கிறுக்கலாகத்தான் காட்சி தருகின்றது.


எத்தனையோ ஆயிரம் மனிதர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்து இறந்து போயி ருக்கின்றார்கள்... வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்... இன்னும் வாழ் வார்கள்... இறப்பார்கள்... ஆனால், மிகச்சிலர் தான் வாழ்வின் சரியான அர்த்தத்தை அடைந்து கொள்கிறார்கள்.


மேல் மாடிகளில் இருந்து மாநகர வீதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எறும்புக் கூட்டங்கள் போல வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். அவற்றின் நகர்வுகளில் வாழ்க்கையும் நகர்வது தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணங்கள். பாதைகள் முடிந்தாலும் இந்த உலகில் பயணங்கள் முடிவதில்லை போலிருக்கிறது.


தன் வாழ்வில் ஆயிரம் சோலிகளை மனிதன் தன் தலைக்குள் வைத்துக் கொண்டுதான் அலைகிறான். அவைகளை முடித்துவிட்டு யாரும் மரணிப்ப தில்லை. தன் வாழ்க்கையின் பாதி அலைச்சலை வைத்து விட்டுத்தான் மனி தன் இறந்து போகிறான்.


தனக்கு எல்லா வசதிகளும் கைகூடி வந்ததன் பிறகு மிகச் சிறந்ததொரு வாழ்க்கையை வாழலாம். இறைவனை திருப்திப்படுத்தலாம் என்றுதான் மனி தன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அப்படி வாழ எவருக்கும் இந்த உலகில் வாழ்க்கை எஞ்சுவதில்லை. சொல்லி முடியும்போது வார்த்தை முடிந்து போவது போலத்தான் வாழ்க்கையும். அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்துதான் எல்லாம் சாத்தியமாக வேண்டியிருக்கின்றது.


தனக்குத் துக்கம் நிகழும் போது மட்டும்தான் மனிதன் இறைவனை நினைக்கி றான், அழுகிறான். அப்போதுதான் தன்னைப் படைத்தவனை அவன் உண்மையாக நெருங்குகின்றான். மாறாக, அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனை மறந்து தன் சந்தோசச் சாளரங்களைத் திறந்து கொண்டிருக்கிறான்.



அதனால்தான் என்னவோ இறைவனை மனிதன் மறக்கக் கூடாது என்பதற் காக எல்லோரிலும் அவன் ஏதோ ஒரு குறையை வைத்திருக்கிறான். இல்லையென்றால் இந்த உலகில் மனிதர்கள் கடவுளையே மறந்துவிடுவார் கள்.


மகிழ்ச்சி, துக்கம் என இரண்டிலும் நினைவுக்கு வர வேண்டியது படைத்த இறைவன்தான். அவன் நினைவில் அமிழ்வதும், அழிவதும் ஒன்றுதான். எல்லா உறவுகளை விடவும் நெருக்கமாக இருப்பது நித்திய அல்லாஹ்வின் உறவு மட்டும்தான். ஏனைய எல்லா உறவுகளும் விலகக் கூடியது, முறியக் கூடியது.
எல்லோருமே அவனுடனான உறவில் இடைவெளிகளை விட்டுத்தான் இருக் கின்றோம். நிறை வான அவனது அன்பைப் புறக்கணித்துவிட்டு யாரிடமோ அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.


மனித உறவுகளின்போது நாம் எல்லோருமே எமது நன்றிகளை சக மனிதர் களுக்கு வெளிப்படுத்துகின்றோம். எமக்கு உதவியவர்களை பக்குவமாய் நினைவில் வைத்துக் கொள்கிறோம். பிரதியீடுகளை வழங்குகிறோம். பரஸ் பரம் நேசம் வைக்கிறோம்.


ஆனால், மலக்குமார்களை எமக்கு சிரம்பணிய வைத்து எம்மை கௌரவப் படுத்தியவனை மறந்து விட்டு நிற்கிறோம். அவன் எத்தனை அருள்களை நிஃமத்துக்களை எமக்கு நிரப்பமாகத் தந்திருக்கிறான்! வைத்தியசாலைகளுக் குச் சென்று பார்க்கும் போதுதான் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள நிஃமத்துக்களை நாம் நினைத்துப் பார்க்கிறோம். அப்போதுதான் நம் ஈமானை நாம் முதன்முறையாகத் தொட்டு பார்க்கிறோம்.


அது கனக்கும்போது நாம் உண்மையாக அழுகிறோம். எத்தனை வகையான நோய்களிலிருந்து அவன் எம்மை பாதுகாத்திருக்கிறான். இறைவனே! உனக்கே புகழ் எல்லாம்!


மனிதனுக்கு இறைவன் வழங்கியிருக்கும் அருளும் அவன்மீது காட்டும் அன் பும் எவ்வளவு விசாலமானது. வானைக் கூட சிலவேளை அளந்து முடித்தா லும் அவன் அன்பை எம்மால் அளவிட முடியாது போகும்.


தன் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட இறை தூதர் (ஸல்) அவர்களே கால்கள் வீங்கும் வரை நின்று வணங்கி தன் நன்றியை இறைவனுக் குத் தெரிவித்தார்கள். நான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?! என்று தான் ஆயிஷாவின் கேள்விக்குப் பதில் தந்தார்கள். பாவங்கள் நிறைந்த நாமோ அவனுக்காக ஒருதுளிக் கண்ணீரையாவது சிந்தாமல் இருக்கின்றோம். அவன் தன் அடியார்களுக்காக கீழ் வானத்தில் வந்து காத்துக் கொண்டிருக்கும்போது நாம் அவனிடம் செல்லாமல் இருக்கின்றோம்.


யாரோவாகிப் போனவர்களின் அழைப்புக்கெல்லாம் பதில் அளிக்கின்றோம், யாருக்காகவெல்லாமோ அழுகின்றோம். அந்த அல்லாஹ்வுக்காக அழாமல் இருக்கின்றோம்.


இறைவா! உனக்கு மாறு செய்தபோதும் உன் அன்பை நீ நிறுத்துவதில்லை. உன் நிஃமத்துக்களை துண்டிப்பதில்லை... அருளை இந்தப் பூமிக்கு அனுப்பா மல் விட்டதில்லை... நம் ஒவ்வொருவரின் ஆயுள் பாதையிலும் உன் அருள் கள் கொட்டிக் கிடக்கின்றன இருந்தாலும்... இருந்தாலும்...

4 comments:

  1. I think this is a useful
    article for the non muslim
    who know tamil
    & I like 2 read like
    these articles.
    I wish u 2 write like these
    article's 2 our muslims in
    Srilanka and in India.
    "Allah will help u 2 this great work"
    I'm thanking u 4 this article.
    God bless u........(ALLAH)

    Jazakallahu Khairah...

    ReplyDelete
  2. Nice to read...keep it up...
    Nawastheen

    ReplyDelete