Monday, March 12, 2012

கெமராக்காரன் வரும் போது...


கெமராக் காரன் வரும் போது எல்லோரும்
தம்மைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்கிறார்கள்

தலைகளைக் கொஞ்சம் கைகளைக் கொண்டு
சீவிக் கொள்கிறார்கள்

தம் பார்வைகளை ஒரு சின்னப் போஸுக்கு
தயார்படுத்திக் கொள்கிறார்கள்

நாம் கவனிக்கப்படுகிறோம் என்பதனை
மறைத்துக் கொள்ள முயல்கிறார்கள்..

சிலர் கெமராவின் பார்வையிலிருந்து
தப்பித்துக் கொள்ள அதிகபட்சம்
முயற்சிக்கிறார்கள்.

இது எப்போது எந்தத் தொலைக்காட்சியில்
ஓளிபரப்பாகும் எனக் கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

இவர்கள் போட்டோ எடுத்தென்ன
அமெரிக்காவுக்கா அனுப்பப் போகிறார்கள்
என ஒருவர் கேட்கும் போது
கெமராவைத் தூக்கியிருக்கின்ற கை
இன்னும் வலிக்கத் தொடங்கிவிடுகிறது...

Sunday, March 4, 2012

நிம்மதி எனும் மகிழ்ச்சி...

  

'சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.'எங்கோ வாசித்த இந்த வரிகளின் ஆழத்தில் நிம்மதியும் சந்தோஷமும் மறைந்திருந்து தம் பொருளை உணர்த்தி நிற்கின்றன.

உலக வாழ்க்கையின் அலங்காரங்கத்தில் சந்தோஷமே நிரந்தரக் குறியீடாக இருக்கின்றது.ஒரு ஒற்றைச் சந்தோஷத்திற்காக மனிதன் என்னென்ன வெல்லாமோ செய்து விடுகின்றான்.தன் சிந்தனையின் எல்லாத் தொலை வுகளிலும் அது பற்றிய நினைவுகளையே வேலிகளாக போட்டு வைத்தி ருக்கிறான்.

இந்த உலக வாழ்க்கையை வெளிப்பார்வையில் பார்க்கும் ஒருவன் அதனைப் பிரமாண்டமாகவே கண்டு கொள்கிறான்.அதன் வளைவை, தொய்வை, நிச்சய மின்மையை அவன் காணத்தவறிவிடுகிறான்.

வாழக்கை பற்றிய புரிதலற்றவன் சந்தோஷமாக இருக்கிறான்.வாழ்க்கையை சரியாகப் புரிந்தவன் நிம்மதியாக இருக்கிறான்.வாழ்க்கை பற்றிய புரிதலி னடியாகவே நிம்மதியும் சந்தோஷமும் தோன்றுவதாகத் தெரிகிறது.

சந்தோஷம் நீடித்து நிலைப்பதில்லை.அது கணப் பொழுது வாழ்க்கை போலத்தான்.வருவதும் போவதும்,திடீரெனத் தோன்றி மறைவதும்தான் அதன் இயல்பு.மேக உருமாற்றம் போல அது தன்னை எப்போதும் மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது.

நிம்மதி என்பது ஆளற்ற தனித் தீவு மாதிரி.பாரிய அலைகளை உண்டாக்கும் கடல்களுக்கு மத்தியிலும் தன் தனித்தன்மையுடன் அது நிற்கின்றது.எந்த சப்தமும் அதன் நிசப்தத்தை கலைத்து வடுவதில்லை.

மனிதன் நிம்மதியை முற்படுத்தாமல் சந்தோஷத்தை முற்படுத்தியதே அவன் கவலையைப் பெற்றுக் கொள்ளக் காரணமாகியது.அவ்வப்போதைய சந்தோ ஷங்களுக்காக மனிதன் நெடுநாள் நிம்மதியை தொலைத்துக் கொள்கி றான்.பின்னர் ஏமாற்றங்களைச் சந்தித்தபின் எதிர்பார்ப்பில்லாமல் வாழக் கற்றுக்  கொள்கிறான்.

நிம்மதியென்பது சந்தோஷத்தினடியாக மட்டும் வருவதல்ல.ஒரு நியாயமான கவலையும் நிம்மதியைக் கொண்டு வந்து தர முடியும்.நிம்மதி என்பது எப்போதும் இருப்பது.மகிழ்ச்சியும் கவலையும் வந்து போகக் கூடியது. இதனைத்தான் நபியவர்கள் “ஒரு முஃமின் நிலை ஆச்சரியத்திற்கு ரியது...மகிழ்ச்சியான ஏதும் நடந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து கிறான்.துன்பங்கள் ஏதும் நடந்தால் பொறுமையாக இருக்கிறான்“(முஸ்லிம்) எனக் கூறினார்கள்.

மனிதன் உலகிற்கு வந்த நோக்கத்தை புரிந்து உணர்ந்து கொள்ளும் போதுதான் சந்தோஷத்தையும் நிம்மதியையும் மிகச் சரியாகப் அறிந்து கொள்கிறான். இதனையே அல்லாஹ் ;அல்லாஹ்வை நினைவுபடுத்துவதன் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன' என்கிறான்.


ஜனவரி-மார்ச் இஸ்லாமிய சிந்தனை இதழில் வெளியானது

 

Thursday, March 1, 2012

A Separation - அன்பின் பிரிகோடு...


Asghar Farhadi யின் A Separation திரைப்படம் சிறந்த பிற நாட்டு மொழிப் படத்திற்கான ஒஸ்கார் விருதினை வென்றிருக்கின்றது. இதுவே ஈரான் திரைப் படம் ஒன்று முதலாவதாக ஒஸ்காரைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாகும். இப்படம் இஸ்ரேலின் திரைப்படத்தை தோற்கடித்திருப்பது ஈரானில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.  இரு நாடுகளினதும் முறுகல் நிலையில் இவ் வெற்றி பெறப் பட்டிருப்பதனால் அது மேலும் கொண்டாடப்படுவதாக பொருள் கொள்ள முடியும்.

அஸ்கர் பர்ஹாதி எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படம் இரு தம்பதிகளுக் கிடையிலான விவாகரத்து அதனைச் சுற்றிய பாரம்பரியங்கள் மற்றும் நவீன ஈரானில் ஆண் பெண் உறவுகள் பற்றிப் பேசுகின்றது.

nader இன் மனைவியான simin ஈரானை விட்டு வெளிநாட்டுக்குச் சென்று வாழ விரும்புகிறாள்.அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் வயதான தந்தையைவிட்டு வர முடியாது என அவளது கணவன் மறுத்து விடுகிறான். இதனால் simin விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறாள்.விவாகரத்து மறுக்கப் படவே  அவள் தன் பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுவிடுகிறாள்.மகள் termah  தந்தையோடு தங்கிக் கொள்கிறாள். தன் வயதான தந்தையைப் பராமரிக்க Razieh என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்துகிறான் Nader.

கீழ் நிலைக் குடும்பப் பெண்ணான Razieh இன் கவணயீனத்தால் தந்தை ஒரு நாள் கட்டிலிலிருந்து விழுந்துவிடுகிறார்.இதனைக் காணும் Nader வீட்டை விட்டுச் செல்லும்படி வேலைக்காரப் பெண்னை வெளியே தள்ளி விட அவள் மாடிப் படியினில் விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள்.தன் கரு கலைந்ததனால் Nader ஐ சிறையிலடைக்குமாறு நீதிமன்றத்தில் முறையி டுகிறாள்.நீதிக்கான போராட்டத்தில் Nader இன் மனைவியும் பங்கெடுக் கிறாள்.யாருக்கு நீதி என்பதும் மகள் Termah யாருடன் வாழச் சம்மதிக்கிறாள் என்பதுமே கதையின் கடைசிக் கணங்கள்.

நவீன வாழ்க்கைக் கலாசாரங்களுக்கும் பாரம்பரிய மரபுகளுக்கும் இடையிலான உறவு வழியே இத்திரைப்படம் பயணிக்கிறது.மேலும் தம்பதி களின் புரிந்துணர்விற்கும் தீர்மானம் மேற்கொள்ளும் தன்மைக்குமிடை யிலான  இடைவெளி பற்றியும் பேசுகின்றது.

பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து நவீன வாழ்க்கை முறைக்குள் நுழையும் போது எந்தக் குடும்பமும் உரையாடலைத் துண்டித்துக் கொண்டு போர் மண்டலத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது என்கிறார் பர்ஹாதி.
திருமண வாழ்வில் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்பும் தியாகமும் இல்லாமல் போகும் போது வாழ்க்கையும் ஒரு இடத்தில் நின்றுவிடுகிறது.பின் கணவனும் மனைவியும் தம் மாற்ற முடியாத முடிவுகளை தம்முடனே வைத்துக் கொண்டு வேறு வேறாக நிற்கிறார்கள்.
“உங்கள் தந்தைக்கு இருக்கும் நோயினால் உங்களை யாரென்று கூட அவருக்குப் புரிந்து கொள்ள முடியாது.வேறு யாரையாவது துணைக்கு வைத்து விட்டுச் செல்லலாம் “என மனைவி சொல்லும் போது அவர் என் தந்தை என்பது எனக்குப் புரிகிறதல்லவா? என கணவன் பதில் சொல்லும் போது மனது இறுகிவிடுகிறது.

திருமணமான பிறகு தம் பெற்றோர் மீது வைத்திருக்கும் அலாதியான பிரியத்தை கொஞ்சம் தள்ளி வைக்கவே இரண்டு தரப்பினரும் விரும்பு கிறார்கள் என்று எண்ணத் தோனுகிறது.

இந்த உலகில் இடம்பெறும் அதிகமான விவாகரத்துக்கள் அற்பக் காரணங்களாலேயே இடம் பெறுகின்றன.ஒரு அற்பமான விருப்பு வெறுப் பென்பது வாழ்க்கையின் பிரமாண்டத்தையும் அதனைச் சுற்றியுள்ளவற்றையும் எவ்வாறு பாதிக்கின்றது என்பதனையே பர்ஹாதி செபரேஸன் மூலம் சொல்ல முனைகிறார்.

மற்றும் தன்னையும் தனக்கு நெருக்கமானவரையும் காத்துக் கொள்ள எவ்வளவு மார்க்கப் பற்றுள்ளவறும் பொய் சொல்லக் கூடும் என்பதனையும் அஸ்கர் படத்தில் சித்தரிக்கிறார்.தான் சிறைக்குச் செல்வதால் தன் மகள் தனிமைப்படக் கூடாது என Nader பொய் சொல்கிறார்.தன் கணவனிக் கடனை அடைக்க பணம் தேவை என்பதனால் Razieh பொய் சொல்கிறாள். இருப்பினும்  இறுதியில் அவள் உண்மையைச் சொல்லத் தவறுவதில்லை.

நவீன வாழ்க்கை முறைகள் குடும்ப உளவியலை வெகுவாகவே பாதித்தி ருக்கின்றன என்பதனை இத்திரைப்படத்தை பார்க்கும் எவரும் தம் வாழ்க்கைத் தளத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

இப்படியான குடும்பங்களில் வளரும் பிள்ளைகளின் மனநிலையையும் இப்படம் துள்ளியமாக விபரிக்கின்றது.இருவருமே பிள்ளை தன்னோமுடனே வரும் என எண்னலாம்.ஆனால் அவள் யாரோ ஒருவருடன்தான் வாழ முடிவெ டுத்திருக்கிறாள். தன் முடிவை அறிவிக்க தம் பௌற்றோரை நீதிமன்ற அறைக்கு வெளியே செல்லுமாறு Termah சொல்கின்ற போது அன்பின் பிரிகோடு என்பது எவ்வளவு வலியுடையது என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடி கிறது.

வெளிநாட்டில் தன் குடும்பத்துடன் வாழ ஆசைப்படும் மனைவி,தன் தந்தையின் பாசத்தை விட்டுக் கொடுக்காத மகன்,தன் கணவனின் தந்தைக்காக தனதாசையை விட்டுக் கொடுக்காத மணைவி,நீதிக்கான போராட்டத்தில் தன்னை பாதுகாத்துக் கொள்ளத் துடிக்கும் வேலைக்காரப் பெண், தாயுடனா தந்தையுடனா வாழ்வது என்ற முடிவை தன் மனதுக்குள் பொத்தி வைத்துக் கொண்டிருக்கும் மகள் என ஒரு அன்பின் நேர்கோடு வழியே பயணிக்கும் கதைக்குள் அன்பின் பிரிகோடுகள் ஆயிரம் இருக்கின்றன...

எல்லோர் வாழ்க்கையிலும் இத்தகைய பிரிகோடுகள்,இடைவெளிகள் இருக்கத்தான் செய்யும்.விட்டுக் கொடுப்புக்களால்தான் உறவுகள் உயிர்வாழ்கின்றன என்பதனை உணராதவரை...