எப்போதோ பெய்த மழையின் ஈரம் மண்ணோடு இருப்பது போல வாழ்க்கையின் சுகந்தமும் மனதோடு ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொருவரும் தம் வாழ்வை ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். அதன் நிமிடங்களோடு சந்தோஷமடைகின்றார்கள். ஒவ்வொருத்தரின் வாழ்விலும் எத்தனை அலாதியான தருணங்கள் நினைவுகளில் மிதந்துகொண்டிருக்கின்றன. அவற்றை நாம் மறக்க முடியாத நாட்களாக, நிகழ்வுகளாக பதிந்து வைத்திருக்கின்றோம்.
ஒரு முக்கியமான பரீட்சையில் தோல்வியடைந்தது அல்லது வெற்றியடைந்தது, பாடசாலையின் முதல் நாள், நனைந்துகொண்டே ரசித்த ஒரு மழைநாள், ரயில் பயணத் தின் ஜன்னலோர இருக்கை, கடும் வெயிலில் சில்லறைக் காக அலைந்து திரிந்த சிறுவனின் நிழல் முகம்... என எத்த னையோ படைப்புகள் நினைவுகளில் அழியாமல் இருக்கத்தான் செய்கின்றன.
நகர வீதி ஒன்றில் சுட்டெரிக்கும் வெயிலில் நண்பர் ஒருவருடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவர் டாக்டர் அப்துல் கலாமின் வாழ்வில் மறக்க முடியாத நாளை நினைவுபடுத்தினார். ஒரு முறை அவர் சில அங்கவீனப் பிள்ளை களை தன்னிடம் வருமாறு அழைத்தபோது அவர் கள் தம் செயற்கைக் கால்க ளோடு மிகுந்த சிரமத்துடன் வந் தார்கள். அது அவருக்குள் அதிக வலியை உண்டுபண்ணியது. பின்னர் அவர்களுக்குரிய செயற்கைக் கால்களை 300 கிராம் அளவில் வடிவமைக்க ஒரு பதார்த்தத்தைக் கண்டு பிடித்தார். அதன்பின் இன்னு மொருநாள் அவர்களை அவரிடம் அழைத்தபோது வேகமாக பட்டாம்பூச்சிகள் போல அவரிடத்தில் வந்தார்களாம். அந்த நாளை அவர் தனக்கு மறக்க முடியாத நாளாக நினைவுபடுத்தினாராம். அவரது ஏக்கத்தை நினைத்து அந்த வெயிலில் மனது நெகிழ்ந்து கொண்டது.
எப்போதும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் தம் மகத்தான சாதனைகளையே நினைவில் வைத்திருப்பர். இத்தகைய எளிமையான தருணங்களை யாரும் கொண் டாடுவ தில்லை. வாழ்வில் இத்தகைய நிமிடங்களில் ஆசுவாசம் அடைவதென்பது தனிச் சிறப்பு வாய்ந்தது. உள்ளத்தின் சந்தோசம்தான் மனிதனைக் கோடீஸ்வரனாக்குகின்றது.
பெற்றோரை இழந்த பிள்ளைகள் கல்வி கற்கும் நிலையமொன்றிற்கு அண்மையில் ஒளிப்பதிவிற்காக சென்றிருந்த போது அவர்களின் மகிழ்ச்சியையும் அப் பருவத்துத்துள்ளலையும் பார்த்து மிக மகிழ்ந்திருந்தேன். மனது அலைபாய்ந்த அந்த நிமிடங்கள் ஒரு தீராத நெடுங்கனவு போல் இருந்தன.
அவர்களைப் போல் இந்த உலகில் எத்தனை ஆயிரம் குழந்தைகள் இருப்பார்கள்! அவர்களது உதடுகளும் சிரிக் கும்போதுதான் சுதந்திரம் அவர்களுக்கும் விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும்.
மாநகர வீதிகளில் நடக்கும்போது பறவைகளின் எச் சம் விழுந்துவிடாமலிருக்க வேகமாக நடப்பது மாதிரி வாழ்க்கையும் மிக வேகமாக நகர்கிறது. அன்றாட வாழ்க்கை எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சினைகளோடுதான் தொடர்கி றது. பிரச் சினை இல்லாமல் இந்த உலகில் யார்தான் வாழ்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சினைகள். நதி வளைவுகளை எதிர்கொள்வது போலத்தான் இந்தப் பிரச்சினையும். அவற்றை நாம் கடந்துதான் ஆகவேண்டும். சிலபோது நினைவுகளே பிரச்சினையாகி விடுவதுண்டு. அவர் இப்படி நினைப்பாரே! இவர் அப்படி நினைப்பாரே என்றெல்லாம் மனிதர்கள் பயப்படுவதுண்டு. தன் நிலையை தான் உணர்ந்துகொண்டால் போதும். எறும்புகளுக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அதைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்.
அன்றாடம் வாழ்வில் பல மனிதர்கள் எதிர்ப்படுகின்றார்கள். சிலரைப் பார்க்கின்ற போது மனதிற்கு மிக வருத்தமாக இருக்கின்றது. பாவம் என்று தோன்றுகின்றது. அப்படியானவர்களைக் கண்டு மனது கனத்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. யாசகம் கேட்வர்கள், சிறு தொழில் செய்பவர்கள், தொழில் இல்லாதவர்கள், ஒரு வேளை உணவுக்காகத் திண்டாடுபவர்கள்... எல்லோரது வாழ்வும் எப்படியாவது போய்க்கொண்டுதான் இருக்கின்றது.
எல்லோரும் தமக்கு மேல்நிலையில் உள்ளவர்களோடு தான் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். வீடு, காணி, வாகனம் என சொகுசாக வாழ்கின்ற மனிதக் கூட்டங் கள் ஒருபுறம். அப்படி எதுவும் இல்லாமல் வாழும் மனிதர்கள் இன்னொருபுறம். நிறைய மனிதர்கள் பொருட்களை சேகரித்து நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிற்பதும் ஓடுவதும்தான் அவர்களது வாழ்க்கை. ‘அவர்கள் பொருட்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். அவர்களது செல்வங்கள் என்றைக்கும் நிலைத்திருக்குமென நினைத்துக் கொள்வார்கள். அப்படியல்ல, அவர்களது செல்வங்களெல்லாம் நரகத் தில் எறியப்படும்’ என்ற அல்குர்ஆன் வசனம் நினைவைத் தட்டுகிறது. அந்த வீடுகளில் வெகுமதிகள் இருக்குமே தவிர நிம்மதி இருக்காது.
தன் சாதாரண வீட்டில் ஒழுங்கான கட்டிலோ, மெத்தையோ, தலையணையோ இல்லாமல் நிம்மதியாக உறங்கு பவர்கள் இந்த உலகத்தில் நிறையப்பேர் இருக்கி றார்கள். கால்கள்தான் அவர்களுக்கு வாகனம். அந்த நடைப் பயணத்தில் அவர்கள் திருப்தி கொள்கிறார்கள்.
ஏழை, பணக்காரன் என்பதனை வைத்து திருப்தி அளவி டப்படுவதில்லை. எத்த னையோ பணம் சேர்த்தவர்களும் பொருள் சேர்த்தவர்களும் நிம்மதியின்றித் தவித் துக் கொண்டிருக்கின்றார்கள்.
தன் தாயை காரில் ஏற்றி வந்துவிடும் மகனுக்கு அத்தாய் கொடுக்கும் முத்தமும் ஒரு ஏழைத்தாய் தன் மகனுக்கு இடும் முத்தமும் ஒன்றுதான். மனித உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதான். யாரும் அதனைக் காயப்படுத்தக் கூடாது. செல்வந்தன், பணக்காரன் என்பதெல்லாம் வெறும் அடையாளம் மாத்திரம்தான். சாம்பல் கரைவதுபோல அவை கரைந்து போகக் கூடியவை. வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான். ஏழைக்குக் கண்ணீர், செல்வந்தனுக்கு சிரிப்பு என்று இந்த உலகில் எந்தவிதியும் கிடையாது. எல்லா உதடுகளும் புன்னகைக்கின்றன. எல்லா கண்களும் கண்ணீர் சிந்துகின்றன.
மனிதன் தனது வாழ்வின் நிலையை நினைத்து நொந்து கொள்கின்றான். தன்னிடம் இருப்பது போதாது என நினைக்கிறான். மாடி வீடுகளில்தான் சந்தோசம் இருக்கி றது என யாரும் நினைத்துவிடக் கூடாது. அவை அழகாகக் காட்சியளிக்கின்றன என்பதுதான் உண்மை. மாடி வீடுகளில் உள்ளவர்களும் நெருக்கடிகளோடும் ஆறாத் துயரங்களோடும்தான் வாழ்கின்றார்கள்.
எளிமையும் தாழ்மையும்தான் ஒரு மனிதனை மகத்தானவனாக்குகின்றது. ஒரு வனிடத்தில் தாழ்வும் பணிவும் இருக்கும்போது அவன் எல்லோர் உள்ளத்திலும் உயரத்தில் வாழ்கின்றான்.
நிறையப்பேருக்கு நிம்மதி என்பது பஞ்சணை மெத்தைகளில் படுத்தும் கிடைப்பதில்லை. ஆனால், ஒரு மரநிழலே நிம்மதிக்குப் போதுமானது. வாழ்க்கையின் வளைவுகளைப் புரிந்து கொண்டவர்களுக்குத்தான் அது சாத்தியமாகிறது.
எல்லோருக்கும் வாழ்க்கை குறித்த ஏக்கங்கள் இருக்கத் தான் செய்கின்றன. ஏனையவர்களைப் போல வாழ முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பு எல்லோர் குரல்களிலும் எதிரொலிக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்த அங்க லாய்ப்பின் உண்மை வறுமையின் நிழலை தொட்டவர் களுக்குத்தான் தெரியும்.
சாதாரணமானவன் தன் வாழ்க்கையில் மாடிக்கணக்கில் நல்ல கனவுகளைக் கொண்டிருக்கிறான். ஆனால், மாடியில் வசிப்பவன் ஒரு குடிசையின் அளவான உருப்படியான கனவொன்றையாவது கொண்டிருக்க மாட்டான். அதுதான் அப்படிப்பட்டவர்களால் செயற்பாட்டாளர்களாக இருக்க முடிவதில்லை.
வெளி அலங்காரங்கள் ஒருபோதும் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. அவையெல்லாம் நுரைகள் போலத்தான். நிச்சயம் நீங்கிவிடும். பூ அழகு என்பதற்காக அது வாடாமல் இருப்பதுமில்லை. உதிராமல் போவதுமில்லை.
மனதுதான் நிம்மதியை, திருப்தியை, சந்தோஷத்தை வரைகின்றது. அதுதான் வசீகரத்தைக் கொண்டுவருகின்றது. திடமான மனது கொண்டவன்தான் இவ்வுல கில் மிகப் பெரிய செல்வந்தக்காரன். செழிப்புமிக்கவன். ஏழை, பணக்காரன் என்ற எந்த நிலைமையும் அவனில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
ரயிலின் பாரிய சத்தத்திற்குள்ளும் நிம்மதியாக நித்திரை போகத்தானே செய்கிறது. நம்மைச் சூழவுள்ள நிகழ்வுகளாலும் நபர்களாலும் நாங்கள் சங்கடப்படத் தேவை யில்லை. அழுது தீர்க்க வேண்டியதில்லை. நம்மைச் சூழவுள்ளவைகள் நம்மைக் கலைத்துவிடாமலிருக்கட்டும்.
இறக்கும் வரைக்கும் நமக்கு மூச்சை இறைவன் தந்திருப்பது மாதிரி வாழ்வாதாரத்தையும் தந்திருக்கிறான். எமக்கென்று எழுதியதை யாரும் அழித்துவிட முடியாது. யாரும் அதைப் பறித்துக்கொள்ளவும் முடியாது. அல்லாஹ் எல்லாப் பறவைகளுக்கும் உணவளித்திருக்கிறான். ஆனால், அவற்றின் கூடுகளில் அதனை வைக்கவில்லை. அலைந்து திரிந்துதான் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
வாழ்க்கையும் அப்படித்தான். பிறக்கும்போது யாரும் செல்வந்தராகப் பிறப் பதில்லை. பணம் வரும், போகும் என்பார்கள். மனதால் செல்வந்தராக இருப்பவர் கள் யாரும் தோற்பதில்லை. மனது அமைதியாகும்போதுதான் அந்த நிலை தோன்றுகின்றன. இறை தூதர் (ஸல்) அவர்கள் செல்வம் என்பது அதிகமான பொருட்கள் இருப்பதல்ல. செல்வம் என்பது உள்ளம் செல்வ நிலையில், நிறைந்த நிலையில் இருப்பது தான் என்றார்கள்.
exciting site i like this site very much and inshaf br i need ur permission 2 take some article from this site
ReplyDelete