இரவில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காயம்பட்ட இரண்டு இராணுவ வீரர்களும் எதி;ர்பாராத விதமாக சந்தித்துக் கொள்கின்றனர். இராணுவ அதிகாரியைக் காப்பாற்ற கோப்ரல் முயற்சிக்கின்றார். இராணுவ அதிகாரியின் இறுதி நேரப்புலம்பல் கோப்ரலின் மனதை அசைக்கின்றது. அவர் மேல் கௌரவம் ஏற்படுகின்றது. அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சி பயனற்றுப் போகிறது.
இராணுவ அதிகாரி தனது மனைவி கிருபா மீது அளவு கடந்த காதல் கொண்டிருப்பதாகவும் அவளை எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் தனது காதலை அவளிடம் தெரியப்படுத்துமாறும் கூறுகிறார்.இராணுவ அதிகாரியின் மரணத்திற்கு தானும் பொறுப்பச் சொல்ல வேண்டுமென கோப்ரலின் மனசாட்சி அவரை உறுத்துகிறது. பின் அவரது வாழ்க்கைப் பின்னனியைத் தேடிச் செல்கிறார்.அதன் மூலம் அவர் ஆறுதலைத் தேடுகிறார்.
இந்த இரண்டு இராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மனித நேய செயற்பாட்டையே 'இர ஹந்த யட' பேசுகின்றது.
கடந்த மூன்று தசாப்த கால யுத்தம் மனித வாழ்க்கையை வெகுவாகப் பாதித்த ஒன்று. போரென்பது ஏராளமான கலைப் படைப்பிற்கு கருவாக அமைந்துள்ளது. போர் எல்லோரையும் யோசிக்கவும் பேசவும் வைத்தது.எல்லோரது கற்பனையையும் கலைத்து விட்டது.
பென்னடிக் ரத்னாயக தயாரிப்பில் வெளிவந்துள்ள 'இர ஹந்த யட' போரை மையமாக வைத்து இலங்கையில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் சற்று வித்தியாசமானது.போரைப் பற்றி மட்டும் பேசாமல் அதற்குப் பின்னுள்ள வாழ்வியலையும் பேசுகின்றது.
குருதிக்குள் கரைந்து போன வாழ்வியலையும் மனித நேயத்தையும் அது பக்கச்சார்பில்லாமல் பதிவு செய்கிறது.இது தான் படத்தின் முக்கிய அம்சம். எல்லா மனிதர்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவே விரும்புகின்றனர். அது எல்லோருக்கும் பொதுவானது.மனிதமென்பது எம்மைச் சூழவுள்ள எல்லாத் தடைகளையும் உடைத்து மற்றவர்களுடனும் எம்மை உறவாட வைக்க வேண்டும். இந்த உண்மையை 'இர ஹந்த யட' அழுத்தமாகச் சொல்ல முனைகின்றது.
படம் எடுக்கப்பட்டுள்ள விதம், இசை, தொகுப்பு என மொத்தமாகப் பார்க்கின்ற போது அவை எந்த சலிப்பையும் ஏற்படுத்த வில்லை. ஆனால் இரண்டு மணி நேரம் மிக நீண்ட நேரம் ஓடியது போல் இருந்தது. யுத்தக் காட்சிகள் கூட அலுப்பில்லாமல் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன.
போர்கள் நிம்மதியற்ற உலகைத்தான் உருவாக்குகின்றன.அவை எல்லா சந்தோஷங்களையும் பறித்து விடுகின்றன.காயங்களையும் கண்ணீரையுமே பதிலிகளாகத் தருகின்றன. இந்த உணர்வு படம் முழுக்க இழையோடுகின்றது.ஒரு இராணுவ வீரனால் தன் மனைவிக்கு நிறைவானதொரு முத்தத்தைக் கூட கொடுக்க முடியாதனெ;பது புரிகின்றது.எல்லா இன்பங்களையும் குண்டுகளும் துப்பாக்கிகளும் பறித்து விடுகின்றன.
இந்தப் போரினால் நிம்மதியை இழந்தவர்கள்,துக்கத்தைச் சுமந்தவர்கள், வாழ்வைத் தொலைத்தவர்கள் எத்தனைபேர்களோ...? குரூர யுத்தத்தின் கனல் படிந்த நினைவுகளை படம் மீட்டிப் பார்க்க வைக்கிறது.
போராடிய இரு தரப்பினையும் யாருக்கும் வீர வணக்கம் வைக்காமல் நியாhயமான முறையில் பென்னட் காட்டியிருக்கிறார்.மனிதமற்றவர்களும் மனிதமுள்ளவர்களும் எந்தத் தரப்பானாலும் இருக்கத்தான் செய்வார்கள்.
'சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் இந்த நாடு சொந்தம் அம்மா...' என்றொரு வசனம் படத்தில் வருகிறது.மேலும் ஒரு முஸ்லிம் இராணுவ வீரணும் புலிகளால் கைது செய்யப்படடிருப்பதும் அவர் தொழுகையில் ஈடுபடும் காட்சியும் வருகிறது.அதனைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.
மொத்தத்தில் ஒரு சமனிலைப் பேணுதலை படத்தில் கடைசிவரை அவதானிக்க முடிகிறது.போரினால் எல்லோரும் பாதிக்கப்பட்டாhகள்.மனித உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை.இனங்களைப் பொறுத்து அவை ஒருபோதும் வேறுபடுவதில்லை.கண்ணீரைத்தான் எல்லாக் கண்களும் சிந்துகின்றன.அந்த உண்மை வெளிப்படையானது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் கீழுள்ள யாவும் வெளிப்படையானவை.யாரும் அதனை மறைக்க முடியாது.அந்த மறையாமையின் அழகியல் தான் 'இர ஹந்த யட'.
மனித நேயமும் அன்பும் தான் இந்த வாழ்வின் ஆதாரங்கள்.இலங்கை அதனைத்தான் தேடுகின்றது.சூரியனுக்கும் சந்திரனுக்கும் கீழுள்ள யாவும் அன்பினாலும் மனித நேயத்தினாலும் நிரம்ப வேண்டும்.சுதந்திரமும் ஐக்கியமும் அப்போதுதான் அர்த்தப்படும்.முதலில் எல்லோரையும் மனிதர்களாக அங்கீகரிக்க வேண்டும்.மனிதத்தினாலும் அன்பினாலும் இந்தப் பூலோகம் நிரம்ப வேண்டும் இதுதான் 'இர ஹந்த யட' சொல்லும் வெளிப்படையான அழகியல்.
No comments:
Post a Comment