Tuesday, October 26, 2010

ஓரத்து வாழ்க்கை...



  நான் கடக்கும் இந்த நகரத்தில்
  எங்கோ ஒரு குழந்தை
  சிலேட்டில்
  ஆணியால் எழுகிறது
  விடுதலைஎன்றும்
  கடவுள்என்றும்


மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதை வரிகளை முப்பதிற்கும் மேற்பட்ட தடவைகள் வாசித்தாயிற்று. இதன் சொற்களின் வலி மனதுக்குள் ஒரு பாதிப்பை உண்டு பண்ணிக் கொண்டே இருக்கின்றது. எல்லோருமே விடு தலைக்காகவும் இறைவனின் அன்பிற்காகவும் பிரார்த்திக்கிறார்கள். வாழ்க்கையின் ஓரத்தில் நிற்பவர்கள் இந்த இரண்டு வார்த்தைகளையும் சதாவும் உச்சரிக்கிறார்கள். தம் வெயில் நிரம்பிய வாழ்விலிருந்து நிழலைத் தேடவே எப்போதும் முயற்சிக்கிறார்கள். 

  ஒவ்வொருவரும் தம்மனசோடு வலிகளையும் சுமந்து கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு வலிகளே வாழ்க்கை. ஆனால் ஒவ்வொருவரதும் வாழ்க்கை பற்றிய பாடல் வித்தியாசப்படுகிறது. எல்லோர் மனசும் மொழிகள் அற்ற ஒரு துக்கத்தைப் பின்னிக் கொண்டே இருக்கின்றது. அந்தத் துக்கம் வாழ்வின் வசீகரத்தை அழித்து விடுகிறது.
அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நிறையப் பேர் இந்த உலகை நொந்து கொள்கிறார்கள். தம் வசதியற்ற வாழ்வில் எல்லா இன்பங்களும் தீர்ந்து போய் விட்ட தாக நினைக்கின்றனர். மற்றவர்களின் அங்கீகாரமற்ற பார்வையினால் அவர்கள் எப்போதும் வாழ்வின் விளிம்பிலேயே நின்று கொள்கின்றனர்.


அல்லாஹ் அனைவரையும் ஒரு ஆன்மாவிலிருந்தே படைத்தான். தங்களுக் குள் அன்பைப் பரிமாறிக் கொண்டு புரிந்துணர்வோடு வாழவே குலங்களையும் கோத்திரங்களையும் ஆக்கினான். ஆனால் இன்று ஒவ் வொருவரும் தனித் தனி மனிதர்களாக மாறிவிட்டார்கள். 

அழும் குழந்தையின் கண்ணீரை அங்கீகரிக்காதது போல நிறையப் பேர் இந்த உலக வாழ்வில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். துக்கம், புறக்கணிப்பு, அவம திப்பு போன்ற சொற்களோடு வாழ அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
உணவு வாங்க காசு இல்லாதவர்கள், மாற்றி உடுக்க ஆடை இல்லாதவர்கள், இன்னும் புத்தகப்பை வாங்காத மாணவர்கள், வீடு இல்லாதவர்கள், விரும்பி யதை வாங்கிக் கொள்ள முடியாதவர்கள் என்று இந்த உலகின் எல்லா ஊர் களிலும் எத்தனையோ பேர் கண்ணீரோடு வாழ்கின்றனர். 

நகர வீதிகளில் அன்றாடம் பயணிக்கும்போது எதிர்ப்படும் தெருவோர மனிதர்களின் நிழல் முகங்கள் மறைவதே இல்லை. அவர்களது முகத்தில் அப்பிக் கிடக்கும் துக்கம் மனதைப் பாதிக்காமல் விட்டதில்லை. வீதியோரங்களில் உறங்கும் மனிதர்களை சில வேளைகளில் பார்த்துக் கொண்டே இருந்த துண்டு. அவர்களுக்கு வீதியே வீடாகிப் போயிருக்கிறது. அந்த வீட்டில் புல் வெளி இல்லை... பூக்கள் இல்லை... வானமே அவர்களுக்குக் கூரை.  

வீதியும் ஒரு இலக்கியம் போலத்தான். கதாபாத்தி ரங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. கதை நகர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒரு சிறுகதைக்கான, ஒரு திரைப்படத்திற்கான, நாவலுக்கான கருக்கள் தெருவெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. 

ஒரு வெயில் பொழுதில் ரயிலினுள் கண்ட காட்சி இன்னும் ஞாபகப் பரப்பில் அழியாமல் இருக்கின்றது. தன் அம்மாவிடம் கடலை கேட்டு அடம்பிடித்தது ஒரு குழந்தை. அவள் அதன் கைகளைத் தட்டிவிட்டு அழைத் துச் செல்கிறாள். அவள் மனதில் இருக்கும் வேதனை அந்தக் குழந்தைக்கு நிச்சயம் புரியப் போவதில்லை. இதுபோல பொம்மை கேட்டு, ஐஸ்கிறீம் கேட்டு கதறும் எத்த னையோ குழந்தைகளின் கைகள் தட்டப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. 
பேரூந்தும் ரயிலும்       நகர்ந்தாலும்    அவர்கள்    பற்றிய துக்கத்தின் ரேகைகள் மட்டும் நகராமல் அப்படியே இருக்கின்றன. தன் நாய்க் குட்டியை காரில் தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு செல்லும் குழந்தையைப் பார்க்கும் ஆயிரம் சிறுவர்கள் இன்னும் கார்களில் பயணித்ததே இல்லை. எத்தனையோ பேர் தனது சொந்த வாகனங்களில் மிகுந்த சொகுசோடு பயணிக்கி றார்கள். வெயிலில் கால் கடுக்க பஸ்ஸுக்காக நின்றருக்கும் மனிதர்கள் அவர்களது பார்வைக்குப் படுவதே இல்லை. 

எல்லோருக்குள்ளும் நிச்சயம் ஆசைகள் இருக்கும். இந்த உலகில் ஒரு மத்திமமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அனைவரும் நினைக்கின் றனர். இருப்பினும் வருமானம் அவர்களுக்கு இடம்கொடுப்பதில்லை. வருமா னம் இருப்பவர்கள் அதைச் செய்து கொடுக்க முன்வருவதுமில்லை. 

இதனால் அவர்கள் வாழ்வின் வசீகரத்தை தொலைத்து விட்டார்கள். அந்த வசீகரத்திற்குப் பதிலாய் அவர்களுக்குள் இடம்பிடித்திருக்கும் அடர்த்தியான துக்கம் அநேகரால் புரியப்படாத ஒன்று. அவர்கள் தங்களது எல்லாக் கனவுக ளையும் வீட்டின் உடைந்த கட்டிலுக்கு கீழேதான் வைத்திருக்கிறார்கள்.

ஏழைகள் எனும்போது இந்த உலகம் அவர்களைத் தாழ்த்தியே பார்க்கிறது. யாரும் அவர்களை மதிப்பதில்லை. செல்வந்தன் என்ற ஒரே காரணத்தால் அயோக்கியனையும் இந்த உலகம் அங்கீகரித்து கௌரவிக்கிறது. ஆனால் ஏழையாக இருக்கும் எத்தனையோ மனிதர்களை, அவர்களது புன்னகையை இந்த உலகம் புறக்கணிக்கின்றது. கௌரவமான ஆடைகளில் மனிதம் இல்லை என்பது அதற்குத் தெரியாது. 

வறுமையில் வசிப்பவர்கள், நிரந்தர நோயாளிகள், அன்பை இழந்தவர்கள், தொழி லற்றவர்கள், இறைவனின் நெருக்கத்தை விட்டும் தூரமானவர்கள் என்று அனேகர் வாழ்க்கையின் ஓரத்தில்தான் நிற்கின்றனர். அவர்கள் இந்த உலகை கருணையற்றதாகக் காண்கின்றனர். கடவுள் நம்பிக்கை அற்றவன் கடவுளைத் திட்டுகிறான். மற்றவன் விதியின் வசம் என விட்டு விடுகிறான்.
தம் வாழ்வை சூழ்ந்திருக்கும் துக்கத்திலிருந்து விடு தலை பெறவே எல் லோரும் முயற்சிக்கின்றனர். துக்கம் ஒரு ஆயுள் கைதியைப் போன்று அவர்களுக்குள் குந்தியிருக்கின்றது. இந்த உலகம் அவர்கள் மீது அன்பைக் காட்ட மறுப்பதுதான் அந்தத் துக்கத்தை உருவாக்குகின்றது. "என் வாழ்வின் எல்லாக் கேள்விகளுக்குமான பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். நான் தனிமையில் இருப்பேனா, நீங்களும் என் பக்கத்தில் இருப்பீர்களா? எனக்காக பிரார்த்தனை செய் சகோதரனே!" என்ற ஆங்கிலப் பாடல் வரிகள் செவிக்குச் சமீபமாகக் கேட்கின்றது. 

இப்படி எத்தனையோ கேள்விகளோடு தன் தனிமையைப் பார்த்து பயப்படும் மனிதர்கள் வாழ்வை அச்சத்தோடே பார்க்கின்றனர். வர்ணம் மறைந்து போய் வாழ்க்கை அவர்களுக்கு கறுப்புவெள்ளையாகவே காட்சியளிக்கின்றது.
மனித அழிவுகளுக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் செலவிடும் தொகையை மனிதர்களது வாழ்வுக்குச் செலவிட்டால் என்ன என்று தோன்றுகிறது. 

இந்த உலகில் தனக்கு என்று வாழ்வதை விட பிறருக்காக வாழ்வதில்தான் ஆத்மதிருப்தி இருக்கின்றது. கண்ணீரோடு இருப்பவர்களை சிரிக்க வைப்பது தான் இன்றைய உலகின் மிகப் பெரிய விடுதலை. இறைவன் யாரையும் புறக் கணிப்பதில்லை. அவன் அன்பு நிறைந்தவன். இந்த வாழ்க்கையைக் கொண்டு அவன் மனிதர்களைச் சோதிக்கிறான். மற்றவர்களைப் பரிசோதிக்கிறான். 

வாழ்வின் ஓரத்தில் இருப்பவர்களை நாம்தான் வாழ்க்கைக்குள் அழைக்க வேண்டும். மற்றவர்களுடன் அன்பாக இருப்பதற்கு யாரும் காரணம் தேடத் தேவையில்லை. மழை அனைவருக்கும் பொழிகிறது. காற்று யாவருக்குமே வீசுகிறது.

எல்லோரும் தம் பக்கத்தில் இருப்பவர்களையும் அங்கீகரிக்க வேண்டும். அவ மதிக்கக் கூடாது. இந்த அவமதிப்பில் எல்லா சந்தோசமும் நசுக்கப்படுகின்றது. தெருவோர மனிதர்கள் இன்னும் வாழ வேண்டிய மீதி வாழ்க்கை இருக்கிறது.
இனி குழந்தைகள் விரும்பியதைக் கேட்டு நம்பிக் கையோடு கைகளை நீட்டட்டும். புன்னகையில் இந்த உலகம் நிறைந்திருக்கும்.




No comments:

Post a Comment