Monday, October 25, 2010

அந்திபடும் நினைவுகள்...


நினைவு-01

"நினைவுகள் கனவுகளைப் போன்றவை. தமக்கென்ற ஒரு பிரத்தியேக விதியில் இயங்குபவை" என்ற எங்கோ வாசித்த வரிகள்தான் நினைவுகளைப் பற்றி எழுத நினைக்கும் போது மேலெழுகின்றது. இதுவரையிலான எல்லா நினைவுகளும் மனதுக்குள் எங்கோ ஒரு தொங்கலில் சேகரமாகியிருக்கின்றன.

எல்லோர் வாழ்க்கையிலும் குழந்தைப் பருவ நினைவுகள் பனிபொழியும் ஒரு காலையின் நினைவு போல எந்த நாளும் வந்து வந்து போகின்றன. குழந்தைகள் மனதின் வசீகரங்கள். இதைத்தான் அல்லாஹ் குழந்தைகள் வாழ்க்கையின் அலங்காரப் பொருட்கள் என்கிறான். உண்மைதான். அந்த வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள்... இருப்பினும் குழந்தைகள் மீதுள்ள பாசம் அணையற்றுத்தான் இருக்கின்றது.

குழந்தைகள் ஒரு சிணுங்கலில், அழுகையில், சிரிப்பில் அனைவரையும் வீழ்த்தி விடுகின்றன; தம்பக்கம் ஈர்த்து விடுகின்றன. அதுதான்; மனசு பிள்ளைகளின் சிரிப்பைத் தட்டிவிடுவதில்லை. அந்தப் பிஞ்சு அனுபவம் வெண்பனிப் படரல் போன்று எப்போதும் குழந்தைகளைக் காணும்போது நெஞ்சுக்குள் இடறுகிறது.

எந்தப் பொறுப்பும் அற்று வாழ்ந்த அந்த சுதந்திர வாழ்க்கையின் படிமங்கள் நினைவுப் பதிவுகளில் இன்னும் உயிர் வாழ்கின்றன. இந்த உலகம் திறந்து வைத்த புத்தகம் போன்றுதான். குழந்தைகள் விரும்பிய பக்கத்தைப் புரட்டுகின்றன. இந்த உலகம் தடைகள் அற்ற ஒரு வெளி. கண்ணுக்கெட்டும் தூரமும் அவர்களதுதான். அவர்களது வாழ்க்கை பற்றிய பாடல் மிக்க இன்பமயமானது.

அப்போது மழலை மொழியின் எல்லாப் பிழைகளும் அங்கீகரிக்கப்பட்டு ரசிக்கப்பட்டன. ஆனால், இப்போது ஒரு வார்த்தையின் உச்சரிப்புப் பிழையும் நகைப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. அழுதுகொண்டே பள்ளி செல்வது... அடம்பிடிப்பது... மழைநீரில் விளையாடுவது... சேற்றில் புரள்வது... எல்லாமே பிரத்தியேக நினைவுகள்தான். மீட்டிப்பார்க்க முடிகிறதே தவிர வாழ்ந்து பார்க்க முடியவில்லை.





நினைவு - 02

ஒரு மஞ்சள் நிற அந்தியில் பாடசாலைக்கு முன் னால் நின்றிருந்த போது, வெள்ளைச் சீருடையோடு மீண்டும் பாடசாலை செல்ல வேண்டும் என்ற எண் ணமே மனதில் தோன்றித்தோன்றி மறைந்தது. வாழ்க்கை அப்போது வெள்ளைதான். அங்குதான் எல்லோரும் அதில் எழுதிக் கொள்கிறார்கள்.

வாழ்வைக் கற்றது அங்குதான். உறவை, நட்பைப் புரிந்ததும் அங்குதான். கறுப்பு வெள்ளை வாழ்வு அங்குதான் வர்ணமாகியது. விழிகளுக்குள் காட்சிகள் தோன்றக் காரணமாய் இருந்த ஆசிரியர்களை மனது நன்றியோடு நினைத்துக் கொள்கிறது. அவர்கள் தந்த அன்பில் மனது இன்னும் நிறைந்திருக்கின்றது. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்ளட்டும். அவர்கள் உருவாக்கும் எத்தனையோ மாணவர்கள் அவர்களை விட்டும் எவ்வளவோ போய்விடுகின்றனர்; முன்னேறி விடுகின்றனர். ஆனால், எந்த உயரத்திலிருந் தாலும் அவர்களை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களுக்காகப் பிரார்த்திப்பதுதான் ஒரு மாணவனின் கடமை.

உறவும் நட்பும் பாடசாலையில்தான் துளிர்விடுகின்றது. பொறாமை, கசப்புணர்வில்லாத சுத்தமான உறவு அங்குதான் வலுப் பெறுகிறது. பக்கத்திலிருப்பவன் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறான் என்பது தெரியாமல் உண்மையாகப் பழகும் உறவு அதுதான். அங்கு கிடைக்கும் நல்ல சினேகங்கள்தான் ஆண்டுகளாக நீள்கின்றன.

பாடசாலையின் ஒவ்வொரு இடமும் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கின்றது. பேசிப் பழக தைரியம் தந்த மேடைகள், விளையாடப் பழக்கிய மைதானங் கள், அமர்ந்துபடித்த மேசைகள்... எல்லாம் நேற்றுப் போல் ஞாபகங்களில் நனைகின்றன. ஆயுளில் ஒரு முக்கிய பகுதி அங்குதான் கழிந்திருக்கிறது. வாழ்க்கைக்கு தைரியம் தந்த கனவுகளும், நம்பிக்கைகளும், புது விடியல்களும் பாடசாலை பூமியிலிருந்துதான் புறப்படுகின்றன. கடைசியாகப் படித்த வகுப்பறையும் அதைச் சூழ்ந்த நினைவுகளும் தொலைவில் மங்கலாகத் தோன்றி மறைகின்றன...



நினைவு - 03

பயணங்களின் போது ஜன்னலோர இருக்கை இதமானது. வாழ்க்கை போல எல்லாமே வேகமாக நகரும். பல வருடங்கள் பயணத்தில் கழிந்திருக்கிறது வாழ்வு. தனிமையில் தொடரும் பயணத்தில் வாகனச் சத்தமும் மௌனமும்தான் கடைசிவரை ஒலித்துக் கொண்டிருக்கும். பல மணித்தியாலங்கள் மௌனத்தில் இருப்ப தென்பது வேதனை நிறைந்த ஒன்று. அப்போதெல்லாம் நினைவுகள் அதன்பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும். மலைகள், ஆறுகள், மரங்கள், நுரைக்கும் அலைகள், வெவ்வேறு முகங்கள் என திரும்பத் திரும்ப வந்துபோகும் ஒரே காட்சிகள். "இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை" என்ற அல்குர்ஆன் வசனம் அப்போதெல்லாம் அடிக்கடி மனதில் வந்துபோகும்.


போர்ச்சூழல் மிகுந்த பீதியை உண்டுபண்ணியிருந்த போது கொழும்பு வீதிகளில் அச்சம் சூழ்ந்திருந்தது. எங்கும் குண்டுவெடிக்கலாம் என்ற எச்சரிக்கை ஒரு புது அனுபவத்தை மனதில் உண்டுபண்ணியது. ரயிலின் அறைகள் முழுவதும் ஒருவகை மரண ஓசை காதில் கேட்பது போன்று இருக்கும். அந்த நேரத்தில் நம் பக்கத்தில் குண்டொன்று வெடித்தால் எப்படியி ருக்குமென மனது நினைத்துப் பார்க்கும்.

பயணம் முதிர்ச்சி நிறைந்த ஒரு அனுபவம். அதுவும் ஒரு பாடசாலை போலத்தான். எவ்வளவோ சொல்லித் தருகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் பலமாதிரி யான பயணங்கள். சிலருக்கு வாழ்வே பயணம். இன்னும் சிலருக்கு பயணமே வாழ்வு. பயணம் எங்கள் நினைவுகளை வெளியில் அழைத்துச் செல்கிறது. அந்த நினைவுகள் தண்டவாளங்கள் போல நீள்கின்றன. அதன் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஓடும் ரயிலின் சத்தம் மட்டும் காதோரமாய்க் கேட்கிறது...



நினைவு - 04

புத்தகங்கள் நல்ல நண்பர்கள். அவற்றை நாம் நேசிக்கப் பழக வேண்டும். வாசிப்பின் மீதான காதல் அதிகரிக்கின்ற போதுதான் சிந்தனைகள் பிறக்கின்றன. யாரோ சொன்னதுபோல் ஒரு நல்ல புத்தகம் ஒரு விபத்தைப் போல நம்மைத் தாக்குகிறது. நம்மைச் சூழ இருக்கும் அமைதியைக் குலைக்கின்றது.

புத்தகங்களின் நினைவுகள் உள்ளுக்குள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. காசு கிடைக்கும் போதெல் லாம் புத்தகம் வாங்கலாமென்றே தோன்றுகிறது. அது ஒரு அலாதியான நினைவு; ஆனந்தம். எனக்கென்றால் புத்தகங்களை மிக்க நேர்த்தியாக வைத்துக் கொள்ளத் தான் பிரியம். அதை மடிப்பதையோ அதில் அடையா ளம் இடுவதையோ மனது ஒரு போதும் அங்கீகரிக் காது. ஏனெனில், அப்படிச் செய்வது புத்தகத்தின் ஆன்மாவை காயப்படுத்துவது போலத் தெரிகிறது.

புத்தகங்களுடனான நினைவுகள் வாழ்க்கைப் பயணத்தில் மறக்கக் கூடாத ஒன்று. எம்மை வளர்ப் பதில், எம் சிந்தனையை ஆழப்படுத்துவதில் எம்மை விட அவை எவ்வளவோ உதவியிருக்கின்றன. புத்தகங் கள் எனும்போது "சொர்க்கம் என்பது ஒரு மாபெரும் நூலகமென்றே நான் எப்போதும் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன்" என்ற லூயி போர்ஹேயின் வார்த்தைகள்தான் நினைவைத் தட்டுகின்றன.



நினைவு - 05

சில மனிதர்களை மனது எப்போதும் நினைவில் வைத்திருக்கின்றது. அவர்களது நினைவை மீட்டிப் பார்க்கும்போது குளிர்ச்சியாக இருக்கின்றது. எல்லோர் வாழ்க்கையிலும் அப்படியானவர்கள் இருப்பார்கள். நிச்சயமாக அவர்களது நினைவுகள் எம்மையும் பாதிக் கின்றன. அந்த நல்ல உறவுகள் எம் வாழ்க்கை அத்தியா யத்தில் ஒரு நிரந்தரப் பக்கமாகி விடுகின்றன. இன்பத் திலும், துன்பத்திலும், நம் சின்ன அசைவுகளிலும்  எப் போதும் அவர்கள் எம் வாழ்க்கைக்கு சமீபமாகவே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் நிலையான, நீங்காத நினைவுகளில் தங்கியிருப்பவர்கள். அத்தகைய வர்களை மறப்பதும், இழப்பதும் கடினமான ஒன்று.


இப்படியான மனிதர்கள் வெகுசிலராக இருப்பது தான் கவலையைத் தருகின்றது. எல்லோரும் நினை வில் இருந்தாலும் சிலர் மட்டுமே பிரத்தியேக நினைவு களில் இடம்பிடித்து விடுகின்றனர். மேகத்தில் உறைந்த மழைத்துளி போல வாழ்வில் கலந்து விடுகின்றனர்.

புகைப்படங்களைச் சேகரித்து அல்பமாக வைத்துக் கொண்டிருப்பதுபோல மனதும் நினைவுகளால் அல் பங்களை செய்து வைத்திருக்கின்றது. நினைவுகளின் அல்பம் எப்போதும் உயிர்ப்புடனே இருக்கின்றது. சூரியன் எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும் அந்தியில் தான் அது அழகாகத் தெரிகிறது. நினைவுகளும் அது போலத் தான் அந்திபடும்போது இசையில் நனையத் தொடங்கி எப்போதும் ஞாபகப் பரப்பில் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

No comments:

Post a Comment