Thursday, November 25, 2010

எனக்குமொரு அழைப்புத்தா...



 உனக்கு
அழத்தோன்றும் ஒரு நாளில்
எனக்குமொரு அழைப்புத்தா...
சத்தியமாய் நானுன்னை
சிரிக்கப் பண்ண மாட்டேன்.
நிச்சயமாய் என்னாலும்
சேர்ந்தழ முடியும்.


உனக்கு தூரத்தே எங்காவது
ஓடிவிடத் தோன்றும்
ஒரு நாளிலும்
அச்சமின்றி எனக்கொரு
அழைப்புத் தா...
சத்தியமாய் நானுன்னை
நின்றுவிடக் கேட்க மாட்டேன்
நிச்சயமாய் என்னாலும்
சேர்ந்தோடி வர முடியும்.


உனக்கு
அனைத்துக் குரல்களும்
கசக்குமோர் நாளிலும்
எனக்கொரு அழைப்புத் தா
சத்தியமாய் நான் வந்து
குரலெலுப்பிப் பேசமாட்டேன்.
நிச்சயமாய் என்னாலும்
நிசப்தமாய் இருக்க முடியும்...!


ஆனால்...
நீயாக அழைக்குமோர் நாளில்
என் பக்கம்
நீண்ட நிசப்தமிருந்தால்..
வேகமாய் வந்து
என்னைப் பார்!
சேர்ந்தழவோ,
நிசப்தமாய் விழி பார்த்து
அமர்ந்திருக்கவோ,
அன்றைக்கு என் தேவை
நீயாக இருக்கலாம்...


இணையத்திலிருந்து பெறப்பட்டதாகக் கூறி இந்தக் கவிதையை நண்பர் ஸப்ராஸ் எனக்கு 2007.02.10 ம் திகதியன்று தபாலிட்டிருந்தார்.

Tuesday, November 23, 2010

நாஸ்திகக் கனவுகள்...




மலை...
அதில் விழும் மழை
நெடுங்கவியாய் நதி,
முத்தமிட்டு முடிகிறது
கடல். 

 
பூட்டைத் திறக்காமல் கதவைத் திறக்க முடியாது. 
முதலில் பூட்டைத் திறவுங்கள்.
மலைகள் எப்போது எழுந்து நின்றன?
வானம் எப்படி மேலே போனது?
அந்த நீல வெளியில் நட்சத்திரங்களை ஒட்டி வைத்தவன் எவன்?
பூமி சுற்றுவதென்றால் சும்மாவா?
இரவோடு பகலும் பகலோடு இரவும் மாறி மாறிக் கை குலுக்குகின்றனவே
வெயில்-மழை, இரவு-பகல், காலை-மாலை, விடியல்-அஸ்தமனம்
எப்படி எல்லாம் சாத்தியமாகின்றன?


இரவில் பகல் வந்ததாய், காலையில் மாலை வந்ததாய்
விடியலில் அஸ்தமித்ததாய்
வரலாற்றில் எந்தக் குறிப்பும் இல்லையே;
ஒவ்வொரு பறவையும் கூடு கட்டிக் கொள்கிறதே;
உயிருள்ள ஒவ்வொன்றுமே மரணக்கின்றதே;
எல்லாம் எவன் செய்தான்?
இது காறும் உள்ள மண்ணறைகளைத் தோண்டி மண்டையோடுகளை
விசாரியுங்கள் அவன் பெயர் சொல்லும். 

 
அனைத்தையும் படைததவன், எலும்புகளுக்கு சதைகளைப் போர்த்தி
உயிர் கொடுத்தவன்.
கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் படி
சூரியனுக்குக் கட்டளையிட்டவன்.
மலையைத் தூக்கி  பூமியில் நிறுத்தியவன்.


எந்தத் தேவையும் அற்றவன். தனித்து, நிலைத்து என்றைக்கும் நிலைக்கும் நித்தியன்.
ஒவ்வொரு ஆத்மாவும் என்றைக்கு இறக்கும் என்பதைத் தெரிந்தவன்.
இந்த உலகம் எப்போது முடியும் என்பதை அறிந்தவன்.
இவ்வுலகம் முடியும்போது...
வானம் வெடித்துச் சிதறும்.
மலைகள் துகள்களாகும்.
சூரியன் அணைந்து போகும்.

கடல் தீப்பற்றிக் கொள்ளும்.
இறந்தவைகளெல்லாம் உயிர்க்கும்.
இத்தனையும் செய்வன் அவன்
இந்த உலகின் சொந்தக்காரன்தான்.
அவன் பெயர் உச்சரிக்கும் போதே உன்னதமாகிறது.
அவன் நிஜம், அவன் வார்த்தைகள் நிஜம். சுவர்க்கம், நரகம்
அவன் தண்டனைகள் எல்லாமே நிஜம்
இறைவன் ஒருவன் இல்லை என்று சொல்பவன்
மட்டுமல்ல நாஸ்திகன்.
அவன் நினைவைத் துறந்து, அவன் வார்த்தைகளை மறந்து,
அவன் பாதையை விட்டும்
விலகி வாழ்பவனும் ஒரு வகையில் நாஸ்திகன்தான்.
நாஸ்திக மனிதர்களே!

நீங்கள் வழி தவறிப் போனால் அவன் தண்டனைகளிலிருந்து
ஒருபோதும் உங்களால் தப்ப முடியாது.
அவன் சொன்னவைகளைச் செய்யுங்கள்.
தடுத்தவற்றைச் செய்யாதீர்கள்,
அப்படியில்லாத போது அந்தத் தண்டனைகளையெல்லாம்
உங்கள் தோள்களில் சுமக்க வேண்டியிருக்கும்.
தாங்க முடியாத வேதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டி வரும்.
அவனுக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்து சுவர்க்கத்தை 
வாங்கிக் கொண்டால் என்ன



இனி நாளைக்காய் வாழுங்கள்.
அவன் வார்த்தைகளின் தொகுப்பைப் புரட்டுங்கள்.
வாசியுங்கள். பிறகு யோசியுங்கள்.
உங்களைப் படைத்தவனால் தானே உங்களுக்கு வழிகாட்டத் தெரியும்.
மறந்து போகாதீர்கள்.
நீங்கள் இதுவரை போற்றிப் புகழ்ந்த ஏடுகளை, சித்தாந்தங்களை
ஒரே குழியில் புதையுங்கள்
இதோ புதிய வேதம்
புதிய பாதை...
பாதைக்கு வெளியே நடந்து கொண்டு இதுதான் பாதை என்பவர்களே!
சற்றுத் தள்ளி பாதையில் நடவுங்கள். 


தெளிந்த நீரோடையில் சிறுகாற்றுக்கும் அலைகள் விரிவது மாதிரி, சின்னச் சலனமும் மனதுக்குள் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. நிலை
யாய் இருத்தல் என்ற பண்பில்லாததுதான் மனது. அது பிடிவாதமானது. நினைத்ததைச் செய்ய நினைக்கிறது. எத்தனையோ பேர் அழிந்து போனது இதனால்தான். மரணத்தின் முடிவில் இன்னொரு வாழ்விருக்கிறது என்பது அடிக்கடி மறந்து போகிறது. இந்த உலக வாழ்வு எம்மை வெகுவாகவே ஆட்கொண்டு விட்டது. அதன் ஆசைகளைத் தேடியலைந்து நாம் தொலைந்து விட்டோம். மண்ணறை இருட்டு மறந்து போவிட்டது.

கொஞ்ச நேர இருளில் எம்மால் இருக்க முடிவதில்லை. விளக்கேற்றிக் கொள்கிறோம். எங்களுக்கு வாழத் தெரியவில்லை. எதையெதையோ தேடுகி றோம். எல்லாவற்றையும் விட மனைவியும் பிள்ளைகளும் மேலாகத் தெரி கின்றன. 

எம்மைப் படைத்தவனுக்காய் வாழ வேண்டும். அவன் நினைவுகளில் வாழ வேண்டும். வாழ்ந்து... சுவர்க்கத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி வாழும்போது சைத்தானிய சிந்தனைகள் மனதுக்குள் வழி மறிக்கும். அவன் இதயத்தின் மத்தியில் அமர்ந்து கொண்டு நினைவுகளைச் சிதறடிப்பான். அவனை மிதித்துக் கொண்டு முன்னேறியாக வேண்டும். இந்த மனதோடு போராடி மனிதனாக வேண்டும். வெற்றி என்பது பெற்றுக் கொள்வது கஷ்டம் தான். கஷ்டப்பட்டுப் பெற்றால்தான் வெற்றி.

ஆஸ்திகக் கனவுகள் தொடங்கும்போது நாஸ்திக நினைவுகள் நிச்சயம் விழித்துக் கொள்ளும். அலைபாயும் மனதோடு ஒரு போராட்டம் தொடங்கி யாக      வேண்டும். நினைவுகளே வலியாகிப் போன இதயங்களோடு அவன்  நினைவுகளால் போராடுங்கள். இதயங்களுடனான ஒரு உலக மகா யுத்தம் தொடங்கட்டும்.
 
உங்களுக்கும் இதயம் இருக்கிறதா?
இருப்பதாயின் நினைவுகள் இருக்கும்.
வலிகள் வழி தெரியாமல் இருக்கும்.
ஒருவகை இருள் மனச் சுவர்களில் அப்பிக் கிடக்கும்.
அப்படியாயின் மனதுக்குள் இன்னும் இரவாக இருக்கிறது.
வாருங்கள் விளக்கேற்றுவோம்.