Saturday, October 30, 2010

கண்ணீரின் வலி




மேசையிலிருந்த மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது.சுவரில் மாட்டியிருந்த கலண்டரின் தாள்கள் சரசரவென கிழிக்கப்பட்டன. மேசை யிலிருந்த  DVD யை எடுத்தான். முகப்பில் இருந்த  வாசகத்தை  வாசித்ததும் கண்களுக்குள் நீர் துளிர்த்தது. அதை ஒரு பக்கமாக வைத்துவிட்டு விம்மி விம்மி அழுதான். கண்ணீரோடு நிறைய சோகம் கரைவதுபோல இருந்தது. இருந்தாலும் அழுது முடித்த பிறகும் சோகம் இருக்கத்தானே செய்கிறது. பிறகு சிரித்துக்கொண்டு எழுந்தான். வீட்டுக்கு முன்னால் வந்து வராந்தாவில் நடக்கலானான். 

முற்றத்து ரோஜாச் சேடியில் அழகாப் பூத்திருந்த ஒரு பூவைப் பறித்து நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். மீண்டும் அதை செடியில் பொருத்த முயற்சித்து கசக்கி எறிந்தான். அவனால் இப்பொழுது எதுவுமே செய்ய முடியவில்லை. அதிக பிரமை பிடித்தவன் போல முகம் வெளிரிக் கிடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென்று இப்படி மாறினான்.இது அவனின் நேற்றைகளது பிரதிப்பலிப்புகளாக இருக்க வேண்டும்.விழிநீரின் ஈரம் கன்னத்தில் உறைந்திருந்தது.
 
இப்போது  அவன் என் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றான். மஜீத் உள்ளே வா' என்றேன். அவன் எதுவும் பேசவில்லை. அவன் சந்தோசமா இருக்கிறான் என்பதற்கான எந்த தடயமும் முகத்தில் இல்லை. கையைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தேன். என் தோளில் சாய்ந்து கொண்டே என்னைப் போன்றவர்களுக்கு எஞ்சியிருப்பது கண்ணீரும்,சோகமும் தான்டா என்று கவிதை மொழியில் பேசினான். 



தலையை வருடி எனது அறைக்குள் அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தினேன். அறைச்சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியத்தை அவதானித்தான். அது ஒரு ஓவியக் கண்காட்சியிலிருந்து வாங்கி என் நண்பன் ஒருவன் எனக்குப் பரிசாகத் தந்தது. ஒரு ரோசாப் பூவிலிருந்து உதிரம் கசிவது போன்றிருந்தது. அது கலையுணர்வு அதிகமாக இருக்கும் என்னையும் வெகுவாக  ஈர்த்த ஓவியம். 

டேய் அந்த பூவைப் பார்த்தாயா செடியிலிருந்த முள்ளு குத்தியிருக்கு. அதுதான் இரத்தம் வடியுது. ஒரே செடியில தானே முள்ளும் இருக்கு மலரும் இருக்கு, பிறகு எதற்கு இத்தனை கோபம். முள்ள விட ரோசா அழகு என்பதாலதானே' என்று நிதானமாக கேட்டான். இல்ல மஜீத் ரோசாவ விட முள்ளுதான் ரொம்ப அழகு, நாங்க யாருமே இதக் கண்டுக்கொள்ரதில்ல என்று சொன்ன போது என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்.

என் வீட்டுக்கு வந்தால் வழமையாக கேட்கும் நினைவுகள் நெஞ்சில் பெருகி வர...என்று ஆரம்பிக்கும் பாடலை ஒலிபரப்பினேன். பிறகு Head phone எடுத்துக் கைகளில் கொடுத்தேன். தலை வரை உயர்த்தி விட்டுக் கீழே வைத்தான். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. எத்தனை முறை இந்தப் பாடலைப் போட்டாலும்    Head phone ஐ  கழட்டவே மாட்டான். 

இன்று கேட்க முன்னமே வைத்து விட்டான். எனக்குப் பயமாக இருந்தது. மஜீத் உனக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். சிரித்தான்; அறை அதிரச் சிரித்தான்; உள்ளே இருந்த என் தாய் ஓடி வந்து பார்த்து விட்டுச் சென்றாள். அவன் தொடர்ந்து சிரித்தான். உனக்கு பைத்தியம்டா என்றான். மெல்ல மெல்ல சிரிப்பு அடங்கியது; அப்படியே உறங்கிப் போனான். எனக்கு வியர்த்துக் கொட்டியது. அவனை எழுப்ப வேண்டாம் என்று தாயிடம் சொல்லிவிட்டு அவன் வீட்டுக்கு ஓடினேன்.

வீட்டு முற்றத்திலே சோகத்தோடு அமர்ந்திருந்த மஜீதின் தங்கை சுஹா என்னைக் கண்டவுடன் ஓடி வந்தாள். அந்தப் பிஞ்சின் கன்னங்களிலும் கவலையின் ரேகைகள் பயணித்திருந்தன.

நாநா என்னோட கோவமா இருக்கு பேசவேயில்ல. ஏன் என்னோட பேசுரதில்ல. அவளது வார்த்தைகள் தடைப்பட்டன. சுஹா தற்போது 5ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறாள். மஜீதை தவிர இப்போதைக்கு அவளுக்கு வேறு யாருமில்லை. அவளுக்கு வயது ஒன்றாக இருக்கும் பொழுது தாயை இழந்துவிட்டாள். பாவம் அவள் தாய் பாசத்தை எந்தக் கடையில் போய் வாங்குவாள். அவளைப் போலதான் மஜீதும் அவனுக்கு ஆறுதல் என்றிருப்பது என்னைவிட பல படிகள் மேலாக இருக்கும் அவனது நண்பன் ரிபா தான். இந்த உலகில் ஒவ்வொரு ஜீவனுமே அன்பை யாசித்துக் கொண்டுதான் இருக்கின்றன. கிடைக்காதபோது மனது படுகிறபாட்டை வார்த்தைகளால் எப்படி சொல்ல முடியும். 


சுஹாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். அவன் அறைச் சுவர் முழுக்க எழுதியிருந்தான். அதற்கு  கிறுக்கல்கள் என்று தலைப்பிட்டிருந் தான். அவன் கண்ணாடி உடைந்திருந்தது; எனது  DVD  பரிதாபமாக ஒருமூலையில் இருந்தது. அவன் அறைக்குள்  நிலவிய அமைதி என் இதயத்தை  ஏதோ செய்வதுபோல் இருந்தது. மேசையிலிருந்த dairyஎடுத்து அவசர அவசரமாக புரட்டினேன்.

என் இதயம் அழுகிறது
துடைக்கவும் தெரியாமல்
துடைக்க எவருமில்லாமல்
தனிமையில் கரைகிறது
ஆத்மாக்கள்,,
ஒரு துளிப் பாசம் தர
நீயுமில்லாமல் இருந்திருந்தால்
என்றோ நான் இறந்திருப்பேன்

என்ற கவிதையை பலமுறை எழுதியிருந்தான். இன்னும் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன. இன்னும் புரியாதபடி ஏதேதோ எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொன்றையும் பார்க்கும் போது எனக்கு கவலையும், அழுகையும் ஒரு சேர வந்தது. இவன் ஏன் இப்படி ஆனான்? என்ற கேள்வியும் சுஹாவின் மௌனமும் சில நிமிடங்களுக்கு நீண்டன. பிறகு அவனது தலையனைக்கடியில் இருந்த கவிதை அந்தக் கேள்விக்கு பதில் சொல்லியது. 

அவனுக்கும் ரிபாக்குமிடையில் இருந்த நட்பு காத்திரமானது; கனதியானது. ரிபாக்கு ஏதுமென்றால் இவன்தான் முதலில் பதறுவான். நல்ல நட்பின் நங்கூரம் என அவர்களை நான் புகழ்ந்துரைத்துள்ளேன். ஆனால் இவனுக்கு தேவையான பாசத்தை அவன் கொடுக்கவில்லை. அதில் பல இடை வெளிகளை விட்டிருக்கிறான். அந்தக் கவிதையின் கடைசி வரிகள் இப்படி முடிந்திருந்தன.

தாயா,தந்தையா,நண்பனா..
நினைத்திருந்தேன் ஆனால்
இப்போதுதான் புரிகிறது..
என் தாயின் கபன் துணியில்
என் நிம்மதியும் சேர்த்துத்தான்
சுற்றப்பட்டதென்று...

வாசித்து முடித்தபோது எனக்குள் இருந்த நிம்மதியும் விடைபெறும் போலிருந்தது. அவனது மனம் வெறுமையாகிப்போனதுதான் இத்தனைக்கும் காரணமென்பது இப்போது புரிந்தது.

சுஹாவோடு என் வீடு வந்து சேர்ந்தேன். மஜீத் என் computer ஐ  on பண்ணியிருந்தான். Headphoneல் பாடல் இலேசாக கேட்டுக்கொண்டிருந்தது. என் தாய் தேநீர் கொண்டு வந்தாள். என் தாயைப் பார்த்து ஒங்களப் பாக்குற நேரம் என்ட உம்மாதான்…’ வார்த்தைகள் தடைப்பட்டன.

நீங்க மூனு பேரும் எனக்கு பிள்ளைகள்தான் என்றுஅவன் முதுகை தட்டிவிட்டு என் தாய் சொல்ல சுஹாவும் பின்னால் ஓடினாள். திடீரென்று அவன் சிரித்தான். முன்னைய தடவையை விட இப்போது சிரிப்பு பலமாக இருந்தது. அவன் சிரிப்பொலிகளில் சோகம் கலந்திருந்தது. Headphoneஐ கழட்டி எரிந்தான். மேசையிலிருந்த தேநீர் கோப்பையை வீசினான். என் DVD அல்பத்தை தூக்கி நிலத்தில் அடித்தான். Computer  ஐ குத்தப் பார்த்த போது கையைப் பிடித்து கன்னத்தில் ஓங்கி ஓர் அறை கொடுத்தேன். என் பிடியிலிருந்து நழுவி கட்டிலில் விழுந்தான். 

இப்போது அவன் உறங்கிப் போகவில்லை. சுஹாவை அழைத்து இறுக அணைத்துக் கொண்டு அழுதான். என் கைகளைப் பற்றினான். நான் கையை எடுத்துக்கொண்டேன்.என் கையில் என்ன விஷமா இருக்குது' என்று கேட்டான். நான் துடித்துப்போனேன். ஏன் அவன் அப்படிக் கேட்டான். எனக்குள் இனந் தெரியாத சோகம் ஊடுருவியது. மனசெல்லாம் கனத்தது. இப்போது நாங்கள் எல்லோரும் அழுதோம்; என் தாய் ஆறுதல் சொன்னாள். என் கண்களை முந்தானையால் துடைத்து விட்டாள். என் அழுகை ஒருவாறு நின்றது. ஆனால் அவர்கள் இருவரும் அழுவதை மட்டும் என் தாயால் நிறுத்த முடியவில்லை.






No comments:

Post a Comment