Friday, November 25, 2011

அன்பிற்குரிய ஒன்றை இழக்கும் போது...


இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன. எல்லோரும் அதனை ஒவ்வொரு விதமாய்க் கொண்டா டுகிறார்கள்.அது போலத்தான் தன் நேசத்திற்குரிய உறவுகளையும் கொண்டாடத்  தவறுவதில்லை.
 
வீடு,வாகணம்,தோட்டம்,செல்வம்,கணவன்,மனைவி,பிள்ளை,பெற்றோர்,நண்பன் என எல்லா மனிதர்களும் அதிக நாட்டம் கொள்ளும் எத்தனையோ விடயங்களை நாம் பார்க்க முடிகிறது.

மனிதன் தான் நேசிப்பவற்றை இழக்க ஒருபோதும் விரும்புவதில்லை.என்ன முயற்சி எடுத்தேனும் அதனைப் பாதுகாக்கவே எத்தனிக்கின்றான்.தன் வாழ்வை இழந்தேனும் அதனை அடைய வேண்டுமென ஒரு கட்டத்தில் நினைக்கிறான்.ஒன்றின் மீது மனிதன் கொள்ளும் அதிக நேசம், பிரியம் பிரிக்க முடியாததுதான். இருந்தாலும் இறைவனோ மனிதன் நேசிப்பவற்றையே பெற்றுக் கொள்ள விரும்புகின்றான்.

கடல் நீரில் ஒரு துளி போலான இவ் வாழ்வில் நன்மைகளைத் தவிர மனிதன் கொண்டாடும் எதுவும் மிஞ்சப் போவதில்லையே!
'நீங்கள் விரும்புகின்றவற்றை செலவளிக்காத வரை நன்மையைப் பெற்றுக் கொள்ளவே மாட்டீர்கள்' ஆல இம்ரான்-92 என்ற வசனம் இறங்கிய போது தல்ஹா(ரழி) அவர்கள் தனக்கு வசந்தமாக இருந்த தன்னுடைய 'பைரூஹா' தோட்டத்தையே இறைவனுக்காக அர்ப்பணம் செய்தார்கள். தன் மனைவியையும் பிள்ளைகளையும் அவர்களது மகிழ்ச்சிப் பிரவாகத்திலிருந்து விடுவித்து 'இத் தோட்டம் இனி நமக்குச் சொந்தமில்லை' என வெளியே அழைத்து வருகிறார்கள்.
 
தன் அன்பிற்குரிய ஒன்றை இழக்கும் போது அவருக்கு எந்த வலியும் இருக்கவில்லை.இப்ராஹீம்(அலை) அவர்களும் தன் அன்பிற்குரிய மகனை யும்  இறைவனுக்காக இழக்க முன்வந்தார்கள்.

உண்மையான இழப்பு நன்மைகளையே கொண்டுவருகிறது.இழப்பதில்தான் ஆத்ம திருப்தி இருக்கின்றது. இறைவன் விதித்திருக்கின்ற சோதனையும் அதுதான்.

அன்பிற்குரிய ஒன்றை இழப்பதனைப் பற்றி எல்லோரும் பேச முடியும். ஆனால் இழப்பதுதான் கஷ்டமானது. நாமும் விருப்பத்திற்குரிய ஒன்றை அல்லாஹ்வுக்காக இழந்து பார்ப்போம்.


இம்மாத இஸ்லாமிய சிந்தனையில் வெளியானது