Tuesday, August 28, 2012

அன்பின் இசை என்பது..


எனக்கு நெருக்கமாக இருக்கும் எழுத்துக்களை எழுதும் ஒருவரின் நினைவென்பது எப்போதும் எனக்குள் பிரத்தியேகமான ஒன்றாகவே இருக்கின்றது.அது நிற்காத காற்றைப் போல எப்போதும் என்னை துரத்துகின்றது.

படித்து முடிக்கும் போது மொத்த உணர்வும் சேர்ந்து ஒரு பாராங்கல்லைப் போல் மனதில் இறங்கும் அனுபவத்தை ஷாஜி அவர்களின் எழுத்தில் எப்போதும் நான் உணர்கிறேன்.கடந்த ஏழு வருடங்களாக அவரது எழுத்தைப் படிக்கும் நான் அவரைச் சந்திப்பேன் என்றும் எனது வீட்டில் அவர் தங்கிச் செல்வார் என்றும் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அவரது கட்டுரைகளைப் படித்து சிலபோது நான் மின்னஞ்சல் செய்வேன்.தவறாமல் அவர் பதில் அனுப்புவார்.அண்மையில் “இஸ்லாத்தில் இசை“ புத்தகத்தைப் பதிப்பு செய்த பின் அதனை நண்பர் சாலை பஷீர் ஒரு விமர்சனம் எழுதும்படி ஷாஜியைக் கேட்டிருந்தார். கவிஞர் அனார் அவர்களிடம் அதனை எழுதும்படி அவர் வேண்டிக் கொள்ள அனார் அவர்கள் எழுதிய “இசை எரிக்காத தீ “எனும் இஸ்லாத்தில் இசை நூலுக்கான அறிமுகக் குறிப்பு உயிர்மையில் வெளியானது.

இரண்டு புதிய உறவுகள் எனக்குக் கிடைத்தார்கள்.அது அளவில்லாத ஆனந்தத்தை உள்ளமெங்கும் பரவச் செய்தது.

திடீரென ஷாஜி அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.! நான் இலங்கை வரப் போகிறேன்.அது பற்றி என்ன சொல்கிறீர்கள்?இப்போது இலங்கையில் பயணம் செய்வதற்கான சூழல் எப்படி இருக்கின்றது?போன்ற விடயங்கள் அதில் இருந்தன.அவரது எழுத்தின் கடைசிப் பந்தியை வாசித்து முடிக்கும் போது தோன்றும் அதே உணர்வில் நான் உறைந்து போனேன்.

அவரை நேரில் காணும் வரை அந்த உணர்வின் நீட்சி என்னுள் இருந்தது.பின் அவருடன் ஐந்து நாட்கள் கூடவே இருந்தேன்.நிறையக் கதைக்கவும் சிந்திக்கவும் வாய்ப்புக்கள் கிடைத்தன.ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவமாகவே இருந்தது.அவரது எழுத்தைப் போலவே அவரது பேச்சும் வாழ்க்கையும் வலிமையாவே இருந்தது.எந்த மேதைத் தனமும் இல்லாமல் அவர் ரொம்பவும் இயல்பாகப் பழகக் கூடியவராக இருந்தார்.அவரது எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே பிரிகோடு இல்லை என்பதனை உணர்ந்து கொண்டேன்.அதனால்தான் அது வெற்றியடைகிறது.

இப்பயணத்தில் கவிஞர் அனாரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.கவிஞர் அனார் அவர்களும் ஷாஜியின் வருகையால் கிடைத்த மற்றொரு உறவு.அவரது அன்பும் பாசமும் அவரது கவிதையைப் போல,சமயலைப் போல ரொம்ப இதமாக இருந்தது.அவர் அடிக்கடி சொல்வதைப் போல சந்தோஷம்...சந்தோஷம்...

எழுத்தாளர் எஸ்.எல்.எம் ஹனீபா அவர்களையும் இந்தப் பயணத்தில் சந்திக்க முடிந்தது.நான் முதல் முறை அவரைச் சந்தித்தேன்.நீண்ட காலம் தெரிந்த ஒருவரைப் போல உரையாடினார்,உறவாடினார்.அந்த அன்பில் நான் நனைந்து போனேன்.ஒரு தந்தையின் உறவென நிலைத்திருக்கிறது அந்தத் தருணங்கள்...

ஒருஅந்திப் பொழுதுகளில் ஷாஜி அவர்களின் கட்டுரைகளைப் படித்து இதயம் கணத்த பொழுதுகளைப் போன்றே அவரைச் சந்தித்த போதும் பிரிந்த போதும் இருந்தது எனக்குள்.
இப்பெரிய அண்டத்தின் முன் வாழ்க்கை என்பது எம்மாத்திரம்!என்பதனை அடிக்கடி அவர் மொழிபெயர்த்த 

கண்கள் மூடினேன் ஒரு கணம்
அக்கணம் என்றைக்குமாக மறைந்துபோனது

எனது கனவுகள் அனைத்தும்

என் கண்முன்னேயே அழிந்தது

காற்றெடுத்து போகும் தூசி

நாம் அனைவரும்

முடிவற்ற காலக்கடலின் ஒரு வெறும் துளி

அனைத்துமே

காற்றெடுத்து போகும் வெறும் தூசி

எனும் கவிதையை நினைவுபடுத்தியவாறு கதைத்துக் கொண்டிருந்தோம்.
என்னை அவர் இன்ஸாப் என்றும் இன்ஸாப் ஸலாஹுதீன் என்றும் வாய் நிறைய அழைக்கும் போதெல்லாம் அவரது அன்பில் நான் மிதந்து கொண்டிருந்தேன்.சுயநலமில்லாது மற்றவர் மீது நாம் கொள்ளும் அன்பு மட்டுமே நம்மைப் பெரிய மனிதர்களாக்குகிறது.