Tuesday, February 7, 2012

கடந்த காலத்தின் பிரமாண்டத்தில்...


 கடந்த காலம் என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியமானதோ அந்தளவுக்கு முக்கியமற்றதாகவும் இருக்கின்றது. கடந்த காலம் என்பதனை இறந்த காலம் எனவும் பொருள் கொள்வதுண்டு. இருப்பினும் இறந்த காலம் எனச் சொல்வதனால் வாழ்க்கையின் எல்லா நினைவுகளையும் அடக்கம் செய்து விட முடிவதில்லை.

ஒவ்வொருவர் வாழ்க்கையில் வாழ்ந்து முடித்த காலம் என்பது மிகவும் முக்கியமானதுபோலவே முக்கியமற்றதாகவும் இருக்கின்றது. அது ஒரு பிரத்தியேக அனுபவத் தொகுதி என்பதனால் முக்கியமானதாகவும் அதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமையினால் முக்கியமற்றதாகவும் இருக்கின்றது.

கடந்த காலம் என்பது நினைவுகளின் அல்பம் போலத்தான். நினைத்து நினைத்து மகிழவோ, வருந்தவோ முடிகிறதே தவிர வேறு எதுவும் செய்ய முடிவதில்லை. தனது 60 ஆவது வயதில் இருக்கும் ஒருவர் கடந்த 59 வருடங்களை நினைப்பதும், 26 ஆவது வயதில் இருக்கும் ஒருவர் கடந்த 25 வருடங்களை நினைப்பதும் இரு வேறு அனுபவங்கள்தான். அவை இருவ ருக்கும் இருவேறு சுகங்களும் வலிகளும் தருவதோடு காலத்தால் விரிவு பட்டிருக்கின்றன.

எல்லா மனிதர்களும் தமது அன்றைய நாளை பயன்படுத்தத் தவறிவிட்டு மறுநாள் அதற்கா வருத்தப்படுகிறார்கள். பின்னர் அப்படியான நாட்களைக் கொண்ட வருடங்களுக்காக வருந்துகிறார்கள்.

நதி எப்போதும் புதிதாகிக் கொண்டே இருக்கின்றது. வாழ்க்கையும் அது போலத்தான். நதி எவ்வளவுதான் நினைத்தாலும் தன்னைக் கடந்துபோன நீரை மீட்டிக் கொள்ள முடிவதில்லை.


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நேற்றைகள் என்பது விசித்திரமாகத்தான் காட்சியளிக்கின்றது. நிகழ்காலத்தை வாழ்ந்து கொண்டிருக்கின்ற எல் லோரும் தமது இறந்த காலத்தில் வெவ்வேறு மனநிலைகளில் வாழ்ந்தி ருக்கிறார்கள். வெவ்வேறு தராதரங்களில் இருந்திருக்கிறார்கள். இறந்த காலங்களில் எதிர்பார்க்கைகளுடனும் அவாக்களுடனும் அலைந்தவர்கள் தம் நிகழ்காலத்தில்தான் அதனைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், அல்லது தாகத்தோடு இன்னும் அதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

யாரும் தமது கடந்த காலங்களை மறந்து போவதில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. எத்தனை வருடமானாலும் நாம் அத்தனை நிகழ்வு களையும் நினைவில் வைத்தே இருக்கிறோம். கடந்த காலங்களின் எல்லா நினைவுகளும் சுனாமி போல் எல்லோரையும் ஒரு முறை தாக்கி அழிக்கத்தான் செய்கிறது. 

வாழ்க்கையில் மறுபடி மறுபடி வந்து உயிர் பெற்றுக் கொண்டிருப்பதுதான் கடந்த காலத்தின் பண்பு. எம் எல்லா வேலைகளிலும் அது “என்னைக் கொஞ்சம் நினைத்துப் பார்“. “இப்படி நடந்தால் இப்படி நடக்கும்“ என்று எச் சரித்துக் கொண்டேதான் இருக்கிறது. 

மனிதர்கள் முடிவெடுக்கும் தருணங்களில் இவை நியாயமான குறுக்கீ டுகளைச் செய்கின்றன. இதனால் மனிதர்கள் பிழையான நேரங்களில் சரியான முடிவுகளையும், சரியான நேரங்களில் பிழையான முடிவுகளையும் எடுத்து விடுகிறார்கள். பின் காலாகாலமாக தம் முடிவுகளை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள். 

வாழ்வில் மிக மகிழ்ச்சியான பொழுதுகளும், கசப்பான தருணங்களும் கடந்த காலங்களிலேயே இருப்பதாக மனிதன் நினைக்கிறான். அவை வாழும் நிகழ் காலத்திலும் வரப் போகும் எதிர்காலத்திலும் இருக்கின்றன என்பதே நிஜ வாழ்க்கையின் யதார்த்தமாக இருக்கின்றது. எல்லா மகிழ்ச்சிகளும் துன்பங் களும் முடிகின்றபோது அவை இறந்த காலத்தில் சேகரமாகி  விடுகின்றன.
கடந்த காலத்தில் இடம்பெற்ற மறக்க கூடாத அல்லது மறக்க முடியாத ஒன்றின் வேதனை என்பது எப்போதும் கூடுதல் வலிகளை தரக்கூடியதாக இருக்கின்றது. 

கிடைக்க வேண்டிய ஒன்று நெடுநாளாகப் போராடி, சீரழிந்த பின்னும் கிடைக்காதபோது அது குறித்த ஏக்கத்தின் நினைவலைகள் உள்ளத்தை சூழ்ந்து கொள்கின்றன. பின் சதாவும் நம்மை எதிலும் ஈடுபட முடியாத வர்களாக ஆக்கிவிடுகின்றது. 

இப்படித்தான் வாழ்க்கையில் எதிர்பாராத தருணம் ஒன்றில் கடந்த காலத்தில் செத்துச் செத்துத் தேடிய ஒன்று கிடைக்கின்றபோது மகிழ்வ டைவதா, கவலைப்படுவதா, ஏற்றுக் கொள்வதா, நிராகரிப்பதா என ஒரு கணம் தடுமாறிப் போக வேண்டி இருக்கிறது. எனவே நாம் கடந்த கால அனுபவங்களை நினைத்து அஞ்சத் தொடங்கி விடுகிறோம். 

எல்லோரும் தம் கடந்த கால வாழ்வின் அனுபவங்களை பொக்கிஷமாகவே கருதுகின்றனர். அது ஒரு பொற்காலம்எனச் சொல்லி ஆனந்த மடைகின்றனர். வாழ்க்கைப் பாடத்தில் அது ஒரு முக்கிய அத்தியாயம்தான் இருப்பினும் கடந்த கால அனுபவங்களை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது என்பதனை மனிதன் மறந்து போகிறான்.

மனமே காலத்தைத் தீர்மானிப்பதாகத் தோன்றுகின்றது. சிலபோது மனம் எதனை நினைக்கிறதோ மனிதன் அதனை அனுபவமாக அல்லது முடிவாக எடுத்துக் கொள்கிறான். தம் வாழ்க்கையின் சில முடிவுகளை வைத்துக் கொண்டு தான் எல்லா காலத்திலும் இப்படித்தான் இருப்பேன் என தன்னை நிர்ணயித்துக் கொள்கிறான்.

கடந்த காலம் என்பதும் வாழ்க்கையின் ஒரு பருவம் போலத்தான் அதில் குழந்தைத் தனம், இளமை, முதுமை என எல்லாமே இருக்கின்றன. கடந்த காலத்தை நினைத்து வருந்துவதால் என்ன கிடைக்கப் போகின்றது? எதுவும் மாறிவிடப் போவதில்லை. வரலாற்றுச் சின்னங்கள்போல அவை அந்த இடங்களிலேயே இருக்கின்றன. நம் சேவிகளுக்கு சமீபமாக கடந்த காலத் தின் குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அது ஒரு துயர் மிகு இன்பப் பாடல். அதன் ஓசையை நம்மால் புறக்கணிக்க முடிவதே இல்லை.

கடந்த காலமும் ஒரு கனவு போலத்தான் நாம் யார் யாராகவெல்லாமோ அதன் வெளிகளில் நடமாடித் திரிந்திருக்கிறோம். நிறையப் பேருடைய தூக்கத்தைத் திருடியிருக்கிறோம். கனவுகளையும் நினைவுகளையும் கொள் ளையடித்திருக்கிறோம். வலிகளை பரிசளித்திருக்கிறோம்.

கடந்த காலம் என்பது ஒரு மரம் போல நமக்கு முன்னால் வளர்ந்து நிற் கின்றது. அதன் பிரமாண்டமே நிகழ்காலமாக தோற்றமளிக்கின்றது. அந்தப் பிரமாண்டத்திற்குப் பின்னால் உள்ள வலிகளையும் காயங்களையும் அவற்றைத் தந்தவர்களையும் மறந்து, மன்னித்துவிட்டு நாம் நிகழ்காலத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 

கடந்த காலத்தில் நடந்த எல்லாத் தவறுகளையும் பிழைகளையும் மன்னித் துவிட முடிகிறது. மறந்து விடுங்கள் எனச் சொல்லிவிட முடிகிறது. ஆனால் அவை வாழும் காலங்களில் நிகழ்காலமாக இருந்தது என்பதையும் அவை நீண்ட நாட்களாக இருந்தன என்பதையும் உணர்ந்து கொள்ள நாம் மறந்துவிடுகிறோம். 

எல்லோரும் கடந்த காலத் தவறுகளுக்காக செய்ய வேண்டியது இனிமேல் அதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவற்றை “மறந்து விடுங்கள்“ எனச் சொல்லாமல் இருப்பதும்தான். மன்னிப்பதால் கடந்த காலத்தில் நடந்த எதனையும் எம்மால் மாற்றிவிட முடிவதில்லை. ஆனால் வரும் எதிர்காலத்தை விசாலித்துக் கொள்ளலாம்.  
  
“கடந்த காலம் என்பது ஒரு மரம் போல நமக்கு முன்னால் வளர்ந்து நிற் கின்றது. அதன் பிரமாண்டமே நிகழ்காலமாக தோற்றமளிக்கின்றது“

இம்மாத வைகறை இதழில் வெளியானது