இலங்கையின் பிரபல இயக்குநர் ப்ரசன்ன விதானகே இம்முறை அரசியல் சமூக உள்ளடுக்குகளைப் பேசும் ஒரு மலையாளத் திரைப்படத்துடன் எம்மிடம் வந்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் மலையாள நடிகர்களின் பங்குபற்றுதலுடன் இந்தியக் கலைஞர்களின் பங்களிப்புடன் ஒரு சர்வதேசத் திரைப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.
கதை,
பொருளாதார நெருக்கடிகள் சூழ்ந்த இலங்கையின் 2022 ஆம் ஆண்டை மையம்
கொண்டது. இச் சூழலில் தமது
5 ஆவது வருட திருமண
தினத்தைக் கொண்டாடுவதற்காக கேசவ்
மற்றும் அம்ரிதா தம்பதிகள் இலங்கை வருகின்றனர். அவர்கள் தங்கியிருக்கும்
அறையில் கொள்ளைக்காரர்கள் நுழைந்து அவர்களது தொலைபேசி,லப்டொப் போன்றவற்றை திருடிவிடுகின்றனர். அவற்றைத் தேடிப் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். அப்பொருட்களைத் தேடிய பயணமும் அது உருவாக்கும்
எதிர்பாராத மாற்றங்களும்தான் கதைக்களம்.
ப்ரசன்ன
எப்போதும் கதாபாத்திரங்களின் ஊடே படத்தை நகர்த்துபவர்.
அவரே சொல்வது போல லியோ டோல்ஸ்டோய்,
ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் பாரம்பரியத்தை பின்பற்றுபவர் அவர். இத்திரைப்படமும் சூழ்நிலைகள் கதாபாத்திரங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கேசவ்,
அம்ருதா, அன்ட்ரூ, மகேந்திர, சிறீ, இக்பால் ஆகிய ஆறு கதாபாத்திரங்களின்
வழியே மிக அமைதியாக ஆரம்பமாகும்
திரைப்படம் பல்வேறு அடுக்குகளில் பயணிக்கிறது.
இரு
தம்பதிகளின் வாழ்க்கை, அவர்களது இயல்புகள், இராமாணயப் பயணம், புராணங்களின் வழியே நவீன வரலாற்றை விசாரித்தல்,
காவல்துறையின் அதிகாரத் துஷ்பிரயோகம் என்ற பல்வேறு அடுக்களின்
வழியே சமகால நெருக்கடியை உள்ளும் புறமுமாக பேசியபடி நகர்கிறது திரைப்படம்.
கேசவ்,
அம்ரிதா இருவரும் ஐந்து வருடங்களை திருமண வாழ்வில் கடந்தவர்கள். இருந்தாலும் இருவருக்கிடையில் உள்ள தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகள், தெரிவுகள் காலம் கடந்தாலும் மாற்றவடைவதில்லை என்பதை இப்பாத்திரங்கள் வழியே இயக்குநர் நிறுவுகிறார். தனிமனிதர்களாக இருப்பதை விட
இணைந்து வாழும் போது மனிதன் தன்னுடைய
தெரிவுகளை விருப்பு வெறுப்புகளை எப்படிக் கையாளுகிறான், சூழ்நிலை அவற்றை எப்படிக் கையாள வைக்கிறது என்பதையும் தனியாள் வேறுபாட்டின் நுண்தளங்களையும் இருவரின்
கதாபாத்திரங்கள் வழியே
அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். இருவரின் நடிப்பும் இங்கு இயல்பான வாழ்க்கையாகப் பதிவாகிறது.
இராமாயணத்தின்
முக்கிய கூறுகளை திரைப்படத்தின் உள்ளே கதைக்கு இசைவாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். புராணங்களின் வழியே மனிதர்கள் பயணிக்கிறார்கள். அவற்றின் உண்மை பொய்களுக்கு அப்பால் அவை சார்ந்த நம்பிக்கைகள்
மனித உளவியலில் படிந்திருக்கின்றன. அவை வரலாறாகவும் அரசியலாகவும்
மாற்றம் பெறும் உலகில் அவற்றைக் கேள்விக்குட்படுத்தவும் செய்கிறது படம்.
“இராவணன் இறக்கவில்லை. தூக்கத்தில் இருக்கிறார். இலங்கையை அவர் காப்பாற்றுவார்“ என
பயண வழிகாட்டி அன்ட்ரூ சொல்லும் போது இராவணன் தூக்கத்திலிருந்து
வந்து இலங்கையைக் காப்பாற்ற இதுதான் சரியான தருணம் என்பார் அம்ரிதா. அத்தோடு இராமாயணத்திற்கு 300 பதிப்புகள் இருப்பதாகவும் வால்மிகி எழுதிய பதிப்பில் அப்படி எதுவும் இல்லை எனவும் கூறுவார். சீதையை
மகிமைப்படுத்தும் இப்படம் “ஒரு பெண் அழுது
கதறும் போது ஒரு ஆண்
வந்து காப்பாற்றுவான்“ எனவும் இராவணனை எதிர்த்து சீதை சண்டையிட்டாகவும் சொல்வார்.
இராமாயணம் வழியே சமகால வரலாற்றை சகமனிதனின் வாழ்வை வேறு கோணத்தில் பார்க்கிறார்
இயக்குநர்.
காவல்
துறையின் அதிகாரத் துஷ்பிரயோகம் சிறுபான்மை சமூகங்களின் கையறுநிலையைப் பதிவு செய்கிறது. யாரோ செய்யும் குற்றங்களுக்கு
அப்பாவிகள் தண்டிக்கப்படுவது உலகம் முழுக்க நடக்கும் ஒன்றுதான். அதிகாரத்தின் இருள் வெளியையும் அப்பாவிகளின் இருண்ட உலகையும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்துகிறார்.
மனித
உயிர்களின் பெறுமதி அதிகாரவர்க்கத்திடம் தூசுக்கும் பெறுமதி இல்லை என்பதை படத்தில் வரும் காவல்துறையின் உரையாடல்கள் மூலம் மெய்ப்பிக்கிறார் இயக்குநர்.
மனிதன் தனக்கு
ஏற்படும் நெருக்கடிகளின் போது தன்னை மாத்திரமே
கவனிக்க நினைக்கின்றான். தன் சக மனிதனின்
வேதனையை பெரும்பாலும் அவன் புரிந்து கொள்ளத்
தவறுவதை கேசவ் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் இயக்குநர் அதற்கு மாற்றமாகச் செயற்படும் அம்ரிதா பாத்திரத்தின் வழியே நீதிக்கான குரல் இன்னும் உலகில் மரணிக்கவில்லை என்பதைக் காட்டுகிறார்.
படத்தின்
இறுதியில் பொலிஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டு இறந்துபோனவருக்கான
நீதி கேட்கும் போராட்டம் வன்முறையாக மாறுகிறது. கல்லெறியும் மனிதர்கள் மீது பொலிஸ் சாஜன்
மற்றும் கேசவ் துப்பாக்கி
பிரயோகம் செய்கின்றர். அம்ரிதாவின் கையில் இருக்கும் அறைச் சேவகரின் வேட்டை துப்பாக்கியின் விசை எதிர்ப்பாராத விதமாக
அழுத்தப்படுகின்றது.தன் கணவர் கேசவ்
இறந்து போகிறார். அந்தத் துப்பாக்கியின் விசை தவறுதலாகவா பயத்தினாலா
அல்லது தன்
கணவனின் குணங்களின் மீது கொண்ட வெறுப்பினாலா
அழுத்தப்பட்டது என்பதைச் சிந்திக்கும் போது நம்மைச் சுற்றி
நிகழும் புரிந்து கொள்ள
முடியாத மர்மங்களின் முடிச்சுகள் நம்மைச் சூழ்கின்றன.
பரடைஸ்
அழகியல் ததும்பும் சினிமா அனுபவம். குறைந்த கதாபாத்திரங்களில் அலுப்புத்தட்டாமல் இலங்கையின் பொருளாதார அரசியல் கலாசார நெருக்கடிகளைப் பேசும் இத் திரைப்படத்தின் ஒளிப்பதிவு,
இசையமைப்பு, ஒளித்தொகுப்பு என எல்லாமே மிகத்
தரமாய் அமைந்துள்ளது.
ரோஷன்
மத்தியூ, தர்ஷனா, ஷியாம் பெர்னான்டோ, மகேந்திர பெரேரா ஆகியோரின் அசாத்தியமான நடிப்பு திரைப்படத்தின் வெற்றிக்கு வலு சேர்க்கிறது.
இலங்கையை
பூலோகத்தின் சுவர்க்கம் என்றழைக்கிறோம். அதன் இயற்கை அழகும்
வனப்பும் இன்னும் அதே போல் இருக்கிறது.
ஆனால் அதன் சமூக அரசியல்
நெருக்கடிகள் இந்த சுவர்க்கத்தை
நரகமாக மாற்றுகிறதா என்ற கேள்வியை படம்
எழுப்புகிறது.
நம்
சமகாலத்தை நெருக்கடிகளிலிருந்து விடுவித்து உண்மையான சுவர்க்கமாக இந் நாட்டை ஆக்க
வேண்டியது ஒவ்வொரு பொதுமகனின் பொறுப்பு என்பதை பரடைஸ் நமக்குச் சொல்கிறது.
No comments:
Post a Comment