Monday, July 29, 2024

நூல் அறிமுகம் - பக்கீர் பைத் பாரம்பரியம் | சமூக வாழ்வியலும் பண்பாடும்


"பாவா வந்தாராம்

பைத்துச் சொன்னாராம்

பைத்துப் பொட்டிய கீழ

வெச்சிட்டு பாங்கு சொன்னாராம்"

பாடசாலை நாட்களில் இந்த நாட்டுக் கவியை அடிக்கடி பாடுவோம். பாவா என்னும் இடத்தில் ஒரு சில நண்பர்களின் பெயர்கள் மாறி மாறி வரும். கிராமியப் பண்பாட்டினடியாகத் தோன்றிய நாட்டார் பாடல்களின் சில அடிகள் எங்கள் பயன்பாட்டிலும் இருந்தன.அப்போது அதன் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை.

என் இளமைக் காலத்தின் றாத்திப் நிகழ்வுகளும் நினைவுகளும் இந்த நூலைப் படிக்கும் போது எனக்குள் மேலெழுந்தன. ரிபாய் ராத்திப் என்பது தஹரா இசைத்து நிகழ்த்தப்படும் ஒரு ஆற்றுகை வடிவம். கண்டி மாவட்டம் உடுநுவரைப் பிரதேசத்தில் இது இன்னும் நடைமுறையில் உண்டு.

ரபான் எனும் தஹராக்களை கையில் ஏந்திச் சென்று நெருப்பின் இளஞ்சூட்டில் அதைப் பதப்படுத்தி விரல்களின் நுனியால் அதிர வைத்துப் பார்த்து சரியான பதத்தை அறிந்து கொள்வோம். பின் அவற்றை வெந்நிறப் புடவையின் மீது வைப்போம். மெல்ல மெல்ல எழுப்பப்படும் தகரா ஓசையும் பாரயணங்களும்  புகை மண்டலம் போல அந்த அறையை நிரப்பும். ஆன்மாக்களின் மிதத்தலாய் அந்த ஆற்றுகை முடிவடையும்.

இலங்கை முஸ்லிம்களின் கலை கலாசார வெளி என்பது இடைவெளிகள் நிறைந்தது. என்றாலும் எமக்குள் இருக்கும் கலைகளும் பண்பாடுகளும் தனித்துவம் மிக்கவை.அடுத்த சமூகங்களுக்கு சற்றும் குறையாத வகையில் முஸ்லிம் சமூகத்திலும் கலையம்சங்கள் இருந்தன என பேராசிரியர் அனஸ் குறிப்பிடுகிறார்.

காலவோட்டத்தில் கலைகள் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை தவறாக புரிந்து கொண்டமை, கலை வடிவங்களில்  மார்க்கத்திற்குப் புறம்பான கருத்துப் பாவனைகள் இடம்பெற்றமை,தூய்மைவாதக் கருத்தாடல்  போன்ற பல்வேறு காரணங்களால் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் கலை முயற்சிகள் வீரியமாக வெளிவரவில்லை. இதனால் எமது வாழ்க்கை முறையை அடுத்த சமூகங்களுக்குக் கடத்துவதற்கு எங்களால் முடியாமல் போனது. விளைவு அவர்கள் எங்களது வெளித்தோற்றத்தை வைத்தே  எங்களை அறிந்து கொண்டனர்.

முஸ்லிம்கள் அறிவுக்கும் பண்பாட்டிற்கும் கலைக்கும் வழங்கிய பங்களிப்புக்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது எப்படிப் போனாலும் நாங்களே அவற்றை அறியவில்லை. கோட்பாட்டுச் சர்ச்சைகளில் இந்த சமூகத்திற்கு இருக்கும் ஆர்வம் கலை முயற்சிகளை உருவாக்குவதில் இருப்பதில்லை. இது தனித்த ஆய்வை வேண்டி நிற்கும் பகுதியாகும்.

பாரம்பரியமாக இருந்து வந்த கலை வடிவங்களும் மங்கி மறைகின்ற ஒரு சூழலில் அவற்றை ஆவணமாக்குவதன் தேவை வலுவாக உணரப்படுகிறது.

கலாசார மரபுகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை இன்று ஆவணக் காப்பகங்களும் மேற்கொள்ள முன் வருகின்றன.

எமது சமூகத்தில் நிறுவனமயமாக தொடர்ச்சியாக அப் பணியை மேற்கொள்ள நிறுவனங்கள் இருந்தும்  இல்லாத துரதிஷ்டம் நம்மைச் சூழ்ந்திருக்கின்றது. தனிநபர்களே அப்பணியை இன்னும் ஆற்றுகின்றனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த முயற்சியில் வெளியான  இந்நூலும் களிகம்பு, கஸீதா ஆகிய நூல்களும் முக்கியமானவை.

பக்கீர்களின்  தோற்றம், பக்கீர் பைத் பாரம்பரியம், இஸ்லாமிய இலக்கியங்களை மக்கள்மயப்படுத்தியோர், பக்கீர்களின் பாடல் சிறப்புக்கள், பக்கீர் பைத் எதிர்நோக்கும் சவால்களும் புத்துயிருப்புக்கான முன்மொழிவுகளும் ஆகிய ஐந்து இயல்களில் மிக விரிவாக உரையாடும் எஸ். . எம் நளீமின்  இந்நூல்   பக்கீர் சமூகத்தின் வாழ்வியலையும் பண்பாட்டையும் மிகத் தத்துரூபமாக ஆவணப்படுத்துகின்றது.

பக்கீர் சமூகம் வரலாற்றில் எப்படித் தோன்றினார்கள், தரீக்காக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு,  ஒழுக்கநெறிகளை கிஸ்ஸா,நாமா,முனாஜாத், மாலை போன்ற வடிவங்கள் வழியே அவர்கள் எப்படி மக்கள் மயப்படுத்தினார்கள், அவர்களது பாடல் முறைகளின் உள்ளடக்கம், அவற்றின் தனித்துவம் என பல விடயங்களை விரிவாக ஆராயும் இந்நூல் பக்கீர் சமூகம் எதிர்நோக்கும் சவால்களையும்  நடைமுறை ரீதியாக ஆராய்கிறது.

ஒரு சிறுசமூகமாக அவர்களது பண்பாட்டை மீளுருவாக்குவதற்கு அவர்களால் முடியாமல் போயுள்ள நிலையில் அவர்களது பக்கீர் பைத் பாரம்பரியமும் மங்கி வருகிறது.

நவீன வடிவங்களுடன் அதன் உள்ளடக்கம், ஆற்றுகை சார்ந்த மீள் உருவாக்கத்தில் நவீன கலைஞர்கள் கவனம் செலுத்துவதால் இப் பாரம்பரியத்தைக் காக்கலாம்.

முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றையும் வாழ்வியலையும் பண்பாட்டையும் பாதுகாக்க முனையும் ஒவ்வொருவரும் இது குறித்துச் சிந்திக்க, செயலாற்றக் கடமைப் பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment