விசாகேசவ சந்திரசேகரம் எழுதி, இயக்கிய மணல் திரைப்படம் போருக்குப் பிந்திய சூழமைவைப் பேசும் இலங்கையின் முழுநீளத் திரைப்படம். இலங்கைக் கலைஞர்களின் பங்குபற்றுதலோடு வெளியான இத் திரைப்படம் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படத்திற்கான நான்கு
விருதுகளை வென்றுள்ளது. எழுத்தாளர்,சமூக செயற்பாட்டாளர்,மனிதஉரிமை சட்டத்தரணி எனப் பல பரிமானங்கள் கொண்ட விசாகேசவ இதற்கு முன் பாங்ஷு எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.அவனது தாயினதும் கதையே மணல். முழுக்க முழுக்க புதிய கலைஞர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இத் திரைப்பட இயக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு,திரைமொழி எல்லாம் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.பெரும்பாலான நடிகர்கள் போருடன் வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தாலும் இத்திரைப்படம் சிறப்புப் பெறுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்முறை நடிகர்கள் அல்லர். இருந்தாலும் தம் இயல்பான நடிப்பை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக அம்மா,மகன் பாத்திரங்கள் அற்புதமாக அமைந்திருக்கின்றன.
போருக்குப் பிந்திய இலங்கையில் தமிழ் சமூகம் எதிர்கொள்கின்ற முக்கிய நெருக்கடிகளைப் படம் மையப்படுத்துகிறது. முன்னாள் போராளியாக இருந்த ஒருவர் சமூகத்தின் மையநீரோட்டத்தில் கலப்பதில் உள்ள சிக்கல்களின் முடிச்சுக்களை அது அவிழ்க்கிறது. கைதுகளின் பின்னர் சோடிக்கப்படும் குற்றச்சாட்டுகள், சிறைக் கூடங்களின் கொடுமைகள், பொருளாதார நெருக்கடிகள், உடல் அங்கவீனத்தின் வாதைகள் வழியே நாளையை எட்டிப்பார்ப்பதற்கான பிரயத்தனங்கள், என போர் விட்டுச் சென்ற பல்வேறு அம்சங்களை திரைப்படம் பேசுகின்றது.
கதாபாத்திரங்களின்
வழியே முப்பது வருடக் கொடூர யுத்தத்தின் நிழல் உலகை இயக்குநர் உருவாக்குகிறார்.
எல்லாக் கதைகளிலும் பல உண்மைகள் இருக்கின்றன
என்ற யதார்த்தத்தை அவர் கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
எல்லோருக்குள்ளும் இருக்கும் மறைக்கப்பட்ட பகுதிகளை நாம் உணர்ந்து கொள்வதற்கான
இடங்களை இயக்குநர் திரையில் வைத்திருக்கிறார்.
கடவுள்
நம்பிக்கையை,சடங்குகளை,கலாசாரத்தின் வண்ணங்களை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருப்பதோடு அது சார்ந்த கருத்தியல்களை
அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
யுத்தத்தில்
தம் பிள்ளைகளைப் பலி கொடுத்த எல்லாத்
தாய்மார்களின் வலிகளையும் தன் கண்களிலே பிரதிபலிக்கும்
தாயாக ருத்ரனின் தாய் எனக்குத் தெரிகிறார்.
பல வருடங்கள் காத்திருந்து தனது
விடுதலை தொடக்கம் தனது காதலியைத் தேடும்
ருத்ரன் அவளைக் காணும் தருணம் இன்னும் உணர்ச்சி ததும்பும் ஒரு தருணத்தை இயக்குநர்
உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
யதார்த்த வாழ்க்கையில் இருக்கும் ஒரு தருணமாக அவர்
அதைக் கடந்து செல்கிறார்.
படத்தின்
கதை அடுத்தடுத்த லேயர்களில் முழுமையை நோக்கிச் செல்லாதது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.
முழுமைபெறாத சுதந்திரத்தை அது சொல்ல வருகிறதா?
இத்தனை இழப்பிற்குப் பின்னும் வலிகளோடு சேர்த்து வாழ்க்கையையும் சுமக்கும் அவலத்தைச் சொல்கிறதா?
மணல்
திரைப்படம் உருவாக்கும் உணர்வு
நிலை மிக முக்கியமானது. அது
நம் அகமனதை, மனசாட்சியை கேள்விகளால் காயப்படுத்தி நம்மை உறையச் செய்துவிடுகிறது. படம் முடிகிற போது
மனதுக்குள் ஏற்படும் மகா மௌனம்
நம்மைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.கருப்புத் திரைகளைப் பாரத்தவாறே என்னை உறையச் செய்தது.
வன்முறையற்ற,பேதங்கள் இல்லாத, சுதந்திரத்தின் நிழலில் இலங்கையராக நிமிர்ந்து நிற்கும் போதே சமாதானத்தின் உண்மையான
அர்த்தத்தை உணர முடியும். உண்மையான
சமாதானத்தின் பாதை போரை விடக்
கடினமானதுதான்.
No comments:
Post a Comment