Monday, July 29, 2024

நூல் அறிமுகம் - களிகம்பு: இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய ஆடற்கலை

 



இலங்கை முஸ்லிம்களின் கலை வடிவங்களில் கோலாட்டம், கம்படி, பொல்லடி, களிக்கம்படி என பல பெயர்களில் அழைக்கப்படும்களிகம்புஒரு முக்கிய ஆற்றுகைக் கலையாக (Performing Art) காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணம், புத்தளம், மன்னார், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இக்கலை பிரபல்யம் பெற்றிருந்தாலும் பொதுவாக எல்லா இடங்களிலும் முஸ்லிம்களின் கலாசார நிகழ்வுகளில் சிறப்பிடம் பெறுவதுண்டு.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து வெளியிட்ட இந் நூலை சிராஜ் மஷ்ஹூர், எம். நைஸார் இணைந்து எழுதியுள்ளனர்.

மலையாள முஸ்லிம்களின் பாரம்பரியக் கலையாகத் தோன்றிய இக்கலையின் வரலாற்று வேர்களைத் தேடும் இந்நூல் இதன் பாடல் வகைகள், இதனை நெறிப்படுத்தும் அண்ணாவிமார், இதற்காகப் பயன்படுத்தும் தடிவகைகள், ஆடைகள், ஆடும் விதம் மற்றும் அதன் பன்முகத்தன்மை குறித்தும் பேசுகின்ற அதேவேளை களிகம்பாட்டத்தின் அக்கால நிலை பற்றியும் தற்போதைய மாற்றங்கள் பற்றியும் பேசுகின்றது.

நூலின் பெரும் பகுதி பொல்லடிப் பாடல்களின் தொகுப்பாக அமைந்திருக்கின்றது. கள ஆய்வின் ஊடாக எம். நைஸார் தொகுத்த கிழக்கு மாகாண களிகம்பாட்டப் பாடல்களும் எழுத்தாளர் லரீப் சுலைமான் தொகுத்துள்ள இறக்காமத்துப் பண்பாட்டு பாடல்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.

களிகம்பு ஆட்டத்தின் போது விருத்தம், தரு, பாடல், தாளம் ஆகிய பகுதிகள் உள்ளடங்குகின்றன என்பதைத் தெளிவுபடுத்தும் இப்பாடல்கள் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் கொண்ட உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கிராமியக் கலையான கோலாட்டம் கேரள முஸ்லிம்கள் வழியாக இலங்கை முஸ்லிம்களுக்குக் கிடைத்ததாகச் சொல்லப்படடுறது. தற்காப்புக் கலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இக்கலை சிங்கள, தமிழ் சமூகங்களிலும் கோலாட்டம், லீகெளி நெடும் ஆகிய பெயர்களில் முதன்மையிடம் வகிக்கின்றது. மூன்றுக்கு சமூகங்களுக்கு மத்தியிலும் காணப்படும் இக்கலை வடிவங்களுக்கு மத்தியில் ஒற்றுமைகள் இருப்பது போல வேற்றுமைகளும் காணப்படுகின்றன.

12,16,18,32 என்ற எண்ணிக்கையில் ஆடப்படும் இவ்வாட்டத்தின் கடந்த காலத்தையும் ஆடும் முறைகளையும் பார்க்கும் போது எத்தனை வளமான ஒரு கலையாக இது பயிலப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது.

நூலின் முன்னுரையில் சொல்லப்படுவது போல கொவிட் நெருக்கடி நிலவிய காலத்திலே நூலாக்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதால் விரிவான தகவல்களைத் திரட்டுவதில் சில வரையறைகள் இருப்பதை காண முடிகிறது.

இது குறித்து இன்னும் விரிவாகத் தேடுவதற்கான ஆர்வத்தையும் அதற்கான அடிப்படைகளையும் இந்நூல் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம்.

இக் கலை தொடர்பாக இதுவரை ஆவணமாகியுள்ள காணொளிகளின் இணைப்புக்கள் நூலில் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பு.

ஒரு தொடக்கம் என்ற வகையில் இக்கலை வடிவம் குறித்து மேலும் தேடவும் உரையாடவும் களிகம்புப் பாடல்களை ஒலிவடிவத்தோடு பாதுகாக்கவும் இந்நூல் நிச்சயம் உதவும்.நூலாக்கக் குழு பாராட்டத்தக்க பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந் நூலுக்கான வாழ்த்துச் செய்தியில் பேராசிரியர் எம் எஸ் எம் எஸ் அனஸ். இப்படிச் சொல்கிறார். “களிகம்பு ஆடற்கலை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் முஸ்லிம்களிடையே செல்வாக்கு பெற்ற கலை வடிவமாக திகழ்கிறது. இலங்கை முஸ்லிம்களிடையே இக்கலை மிகத் தொன்மை கால முதல் பயிலப்பட்டு வருகிறது. இக்கலை இன்று நலிந்த நிலையை அடைந்து விட்டாலும் கிழக்கிலும் புத்தளம், மன்னார் மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும் ஆங்காங்கே நிலை பெற்றிருப்பதை காண முடிகிறது. கிழக்கு மாகாணத்தில் பல குழுக்கள் இயங்கி வருகின்றன.

கம்புகளின் கணீர் ஓசைகளும் அதையொத்த அல்லது அதை விஞ்சும் ஆட்டக்காரர் மற்றும் அண்ணாவியாரின் குரலோசையும் தான் களிகம்பு ஆட்டத்தை அழகாக்குகின்றது. ஆடலும் இசைப் பாடலும் கலந்த இந்தக்கலை வகையை பாதுகாக்கும் பொறுப்பு முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு. உடல் பயிற்சிக்கும் இசைப் பயிற்சிக்கும் ஆதாரமாக அமையக்கூடிய இக்கலை பற்றி பாடசாலைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.“

எமது பாரம்பரிய ஆடற்கலை மரபை இன்றைய உலகில் தக்க வைப்பதும் புதிய தலைமுறை அதனைப் பயில்வதற்கும் எம்மிடம் என்ன ஏற்பாடு இருக்கிறது என்ற கேள்வி இப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

No comments:

Post a Comment