Monday, November 3, 2025

විෂම භාග - வாழ்க்கைப் பின்னத்தின் அழகியல்

நமது கல்விமுறையின் மீது இத்தனை கூரான விமர்சனத்தை විෂම භාග-The Other Half  திரைப்படம் முன்வைக்கிறது. இது லலித் ரத்னாயக்க இயக்கி ஷ்ரத்தா பிலிம் தயாரிப்பிற்காக அலுதெனியே சுபோதி தேரரின் தயாரிப்பில் 2019 இல் வெளியான ஒரு திரைப்படம். இத்தனை தாமதமாகிக் கண்ணில் பட்டது. இத் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 60 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ விருது தேர்வுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கிராமத்து வாழ்வின் வலிகளை, சிறுநீரக நோயின் அவதியினால் இறக்கும் மனிதர்களின் அவலங்களை, எல்லாம் உள்ளடக்கி இருந்தாலும் நமது கல்விமுறையின் மீதான அறம்சார் விமர்சனமாக விரிகிறது இத்திரைப்படம். சமூக,பொருளாதார, சுற்றுச் சூழல் சார்ந்த குரலாகவும் ஒலிக்கிறது.

சிறுநீரக நோயினால் தந்தையை இழந்த குடும்பத்தில் தாயும் அவரது தந்தையும் இரண்டு பிள்ளைகளும் வாழும் ஒரு குடும்பத்தின் கதை சிறுநீரக நோயினால் இதுவரை மரணித்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் குறுக்கு வெட்டுமுகமாக மனதுக்கு முன் நிழலாடுகிறது.

வறுமையினாலும்,போதிய சுகாதார வசதிகள் இல்லாமல்,சுத்தமான குடிநீர் இல்லாமலும் அன்றாடம் இறந்து போகும் சாதாரண மனிதர்கள் இந்த நாட்டில் வாழ முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் வாழவில்லை. எல்லோருடைய வாழ்வையும் யாரோ சிலர்தான் வாழ்கிறார்கள். அந்த வலிகளை தந்துவிட்டே படம் என்னைக் கடந்து செல்கிறது.

ஆசிரியர் மையக் கல்வியானது எதிர்காலத் தலைமுறையின் கற்பனை வளத்தை வளர்க்காது மாறாக மாணவர் மையக் கல்வியாக அது பரிமாற்றமடையும் போதே மாணவர்களின் முழுமையான வளர்ச்சி சாத்தியமாகும் என்பதே படம் சொல்லுகின்ற மையச் செய்தி.

இரட்டை சகோதரர்களான பங்கஜ விக்ரமரத்ன மற்றும் பன்சிலு விக்ரமரத்ன இருவருமே குழந்தை வேடங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த இயல்பான நடிப்பும் ஜக்சன் அந்தணி, கௌசல்யா பெர்னாண்டோ மற்றும் ஹேமசிரி லியனகே ஆகியோர் நடிப்பும் ஒரு அழகிய காவியத்தைப் படைத்துவிடுகிறது. சாமர ருவந்திலகவின் இசை படத்தின் உணர்வோடு இயைந்திருப்பது அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் தாக்கமாக இருக்கலாம்.

போதுமான இசை, அளவான வார்த்தைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள்,கச்சிதமான நடிப்பு எல்லாம் சேர்ந்து படத்தை உணர்ச்சிமிக்க ஒன்றாக உருவாக்குகின்றன.

கணிதம் புரியாக ஒரு மாணவன் இசையில் ஈடுபாடு கொண்டிருக்கிறான். எப்படிப் படித்தாலும் அவனால் பின்னங்களைத் தீர்க்க முடிவதில்லை. நாளை வகுப்பில் கணக்கைச் செய்யாவிட்டால் தரம் 5 இலிருந்து தரம் 4 இற்கு தரமிறக்கப்படும் நிலை.இத்தகைய நிலையில் தன்னை அவன் எப்படி விடுவித்துக் கொள்கிறான் என்பதில் படம் முடிகிறது.

வாழ்க்கையின் புதிர் கணக்குகளை எல்லாக் கணித மேதைகளாலும் தீர்த்துக் கொள்ள முடிவதில்லை. வாழ்க்கையின் கணக்கு வேறு பின்னங்களால் ஆனது என்பதைப் புரியும் போதுதான் கல்வியின் நோக்கம் அர்த்தப்படுகிறது. “அகவிடுதலைதான் கல்வியின் முதலும் கடைசியுமான ஒற்றைநோக்கம்என்றார் ஜே. கிருஷ்ணமூர்த்தி

இந்தத் திரைப்படம் ஏன் கற்கிறோம்? யாருக்காகக் கற்கிறோம்? எதற்காகக் கற்பிக்கிறோம்? போன்ற கேள்விகளை மறுபடி மறுபடி எழுப்புகிறது. தீர்க்க முடியாத பின்னங்களாலே வாழ்க்கை அழகாகிறது என்பதுதானே வாழ்க்கையின் கணக்கு.

இன்ஸாப் ஸலாஹுதீன்

https://www.youtube.com/watch?v=cNb_5aRcTxU&t=5003s

No comments:

Post a Comment