Thursday, November 16, 2023

අම්බලම සහ සමාජය : ශ්‍රී ලංකාවේ පුරාණ අම්බලම් පිළිබඳ ඓතිහාසික පර්යේෂණයක් “அம்பலமும் சமூகமும்''

 


 நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்பலம் பற்றிய நினைவுகள் எனக்குள் இருக்கின்றன. நான் கடக்கும் தெருக்களில் இரண்டு அம்பலங்கள் அமைந்திருப்பதே அதற்குக் காரணம். பெரும்பாலான நேரங்களில் அங்கே யாராவது அமர்ந்து கொண்டும் கதைத்துக் கொண்டும் இருப்பார்கள்.

 நண்பர் கலாநிதி. ரோஹித தஸநாயக்க அவர்கள் அம்பலம் பற்றிய நூலைத் தந்தபோது கிராமத்தின் அம்பலங்கள் பற்றிய நினைவே எனக்குள் மேலெழுந்தது.

கிராமத்தின் வாழ்வியலில் அதன் முக்கியத்துவம் பற்றி பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ரோஹித தஸநாயக்க எழுதிய අම්බලම සහ සමාජය : ශ්‍රී ලංකාවේ පුරාණ අම්බලම් පිළිබඳ ඓතිහාසික පර්යේෂණයක්  அம்பலமும் சமூகமும்இலங்கையின் பண்டைய அம்பலங்கள் குறித்த வரலாற்று மற்றும் தொல்பொருளியல் சார் ஆய்வு எனும் நூல் அம்பலம் பற்றிய விரிவான புரிதலைத் தருகிறது.

அம்பலத்தை வெறுமனே ஓய்வுக்கான இடமாகப் புரிந்து வைத்திருந்த நான் இந்த நூல் வழியே அதன் சமூகப் பணிகளைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

இலங்கையில் காணப்படுகின்ற சுமார் 75 அம்பலங்கள் பற்றிய குறிப்புக்களோடு அம்பலம் பற்றிய வலாற்றுத் தகவல்களையும் கிராமிய அமைப்பில் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி இந் நூல் பேசுகிறது.

பாதையோரங்களில் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டட அமைப்பே அம்பலம் எனப்படுகிறது. அம்பலம் என்றால் பொது மண்டபம் அல்லது பொது இடம் எனச் சொல்லலாம்.  அம்பலம் என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து அம்பலம  என்னும் சிங்களச் சொல்  பெறப்பட்டு சாலையோரத் தங்கு மடங்களைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது.

அம்பலங்கள் எளிமையான திறந்த அமைப்புக் கொண்டவை. மரத்தூண்களையும் மரத்தாலான கூரைச் சட்டகங்களையும் கொண்டவை அவை. சிங்களக் கட்டிடக்கலைப் பாணியைப் பிரதிபலிக்கும் வகையிலான சிறந்த மரவேலைப்பாடுகளுடன் அமையப் பெற்றவை.

இலங்கையில் அமைந்துள்ள அம்பலங்கள் பயணிகளின் ஓய்வுக்காகவும் சமூகத்தின் ஒன்றுகூடல்களுக்காகவும் பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ளன. சில அம்பலங்கள் பயணிகளின் பொதிகளை வைத்துக் கொள்வதற்கும் தனி அறைகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளன.

சிங்களக் காவியங்கள், வெளிநாட்டவர்களின் குறிப்புக்கள் மற்றும் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு நூலாசிரியர் அம்பலங்களின் வரலாற்றுப் பின்னணியை ஆராய்கிறார்.

அம்பலங்களின் பரவல் மற்றும் பன்முகத்தன்மை பற்றி ஆராயும் நூலாசிரியர் சுமார் 75 அம்பலங்கள் பற்றியும் அவற்றின் தனித்துவம்,கட்ட அமைப்பு, கட்டப்பட்ட காலம், என்பன குறித்தும் ஆராய்கிறார்.

அம்பலம் ஒருகாலத்தில் தூரப் பிரதேசங்களுக்கு கால்நடையாகப் பயணிக்கும் பயணிகள் நலன் கருதி அமைக்கப்பட்டதாகும். ஓய்வுக்காகவும் இரவில் தங்குவதற்காகவும் அவர்கள் இதனைப் பயன்படுத்தினர். அவை தவிர  அம்பலங்கள் பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றியுள்ளன.

சாதி அமைப்பை நீக்குவதில் அதன் பங்கு, அம்பலத்தை ஒட்டி உருவான நாட்டார் இலக்கியம், மத நடவடிக்கைகளில் அதன் பயன்பாடு, மக்கள் தொடர்பாடல், நீதித் தேவைகளை நிறைவேற்றுவதில் அதன் இடம், பொருளாதாரத் தேவைகளுக்காக வரி பெற்றுக் கொள்வது, பாதைகளை அடையாளம் காணுவது என அம்பலம் ஆற்றிய பல்வேறு சமூகப் பணிகளை நூலாசிரியர் விளக்குகிறார்.

அம்பலத்தின் கட்டடக்கலை மற்றும் தொலில்நுட்பம் குறித்து ஆராயும் நூலாசிரியர் அம்பலத்தின் வடிவமைப்பு அதன் தூண்கள், கூரை அமைப்பு, அலங்கார வடிவமைப்பு, பயன்படுத்தப்பட்டுள்ள சிற்பங்கள் குறித்துப் பேசுகிறார்.

இலங்கையின் கிராம அமைப்பில் அம்பலத்தின் வகிபங்கு தனித்துவமானது. நகரமயமாக்கபட்ட இன்றைய சூழலில் அது தன்னுடைய வகிபங்கை இழந்திருக்கின்றது. வெறுமனே தொல்பொருள் அடையாளமாக மாறியிருக்கின்றது.

இன்றைய நுகர்விய உலகில் வளர்ச்சி,முன்னேற்றத்தின் அளவுகோளாக யார்யாரினதோ மாதிரிகளை நாம் எடுத்துக் கொள்கிறோம்.எமக்கான மாதிரிகளை நாம் அவற்றிற்கு முன் தொலைத்துவிடுகிறோம்.இது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நூலாசிரியர் அம்பலம் பற்றிய தனது தேடலின் வழியே கிராமிய வாழ்க்கையின் மாதிரி ஒன்றை கண் முன் நிறுத்துகிறார்.


No comments:

Post a Comment