Thursday, November 16, 2023

நூல் அறிமுகம் - ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’விறுவிறுப்பான ஒரு நாவலை ஒத்த நூல்.

 


தமிழின் முதல் நிகழ்ச்சி அளிக்கையாளர் பி.எச். அப்துல் ஹமீத். மற்றெந்த வானொலிக் கலைஞரையும் விட முதலாவதாகவும், மிகச் சிறப்பாகவும் இதைச் செய்திருப்பவர் பி.எச் அப்துல் ஹமீத். உண்மையில் அப்துல் ஹமீத் தோற்றுவித்த நியமங்கள்தான் நிகழ்ச்சி அளிக்கைகளுக்கு மிக முக்கியமாக அமைகின்றன.“ பேராசிரியர்.கா. சிவத்தம்பி

அன்பு அறிவிப்பாளர் எனும் அடைமொழியோடு நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் அப்துல் ஹமீத் அவர்களின் அரை நூற்றாண்டு கால வானலை அனுபவத்தைப் பேசும்வானலைகளில் ஒரு வழிப்போக்கன்விறுவிறுப்பான ஒரு நாவலை ஒத்த நூல்.

தனது அரை நூற்றாண்டு கால அனுபவத்தை மிகைப்படுத்தல் இல்லாமல் சுயபுராணம் பாடாமல் எழுதுவதென்பது எல்வோருக்கும் சாத்தியமானதல்ல. இப் பணியில் அவர் வென்றிருக்கிறார். இந்த எழுத்துமுறையே ஊடகவியலாளர்களுக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வல்லது.

அறிவிப்பாளராக, நாடக ஆசிரியராக, நடிகராக, பாடலாசிரியராக பல்துறைக் கலைஞராக தன்னை நிறுவிக் கொண்டவர் அவர். வைரமுத்து சொல்வது போலகுறளைப் போலவே குரலால் புகழ் கொண்டவர்

தன்னை முன்னிலைப்படுத்தாது தனது அனுபவங்களோடு சேர்த்து தமிழ் ஒலிபரப்புத்துறை கடந்து வந்த பாதையை இப் புத்தகத்தில் அவர் பதிவு செய்கிறார். வானொலியின் நதி மூலம் தொடங்கி இலங்கை வானொலியின் வரலாற்றை,அதன் நினைவுகளை,அதன் சாதனைகளை,சாதனைப் பயணத்தின் பங்காளர்களை,காற்றில் கலை படைத்த வரலாற்றை தன் இயல்பான மொழியால் அவர் பதிவு செய்கிறார். இன்றைய ஒளி,ஒலிபரப்புத் துறையின் மொழி பற்றிய தனது ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

இந்த நூலைப் படித்து முடிக்கும் போது அவரது வாழ்வில் எல்லாமே தற்செயலான வாய்ப்புகளால் நிறைந்தவை என்பதைப் புரியலாம். இறைவன் அவருக்கு பல வாயில்களை எதிர்பாராத சந்தர்ப்பங்களில் திறந்து கொடுக்கிறான்.

கொழும்பில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து தற்செயலாக வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்காக நண்பனோடு சென்று படிப்படியாக வானொலித் துறையில் உயர்ந்து சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற அவரது வாழ்வும் பணியும் பல பாடங்களைச் சுமந்திருக்கிறது.

தன்னைச் செதுக்கிக் கொள்ள அவர் எடுத்த முயற்சிகள், அன்றைய ஒலிபரப்புத்துறையில் இருந்த சவால்கள் எல்லாம் இன்றைய டிஜிட்டல் உலகுடன் ஒப்பிடும் போதுதான் புரிய முடிகிறது.

வானலைகளில் ஒரு வழிப்போக்கன்ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு குறிப்பாகவும் ஏனையோருக்கு பொதுவாகவும் பல பாடங்களைச் சொல்லும் அரிய நூல். உலகின் பல்வேறு நாடுகளில் அறிமுக நிகழ்வுகளைக் கண்ட ஒரு நூலாகவும் அது காணப்படுகிறது.

அவர் எப்போதும் புதிய விடயங்களைத் தேடிச் செல்பவராக இருக்கிறார்.புதிய கோணத்தில் சிந்திக்கிறார்.தனது பணியை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்ய அதிக பிரயத்தனம் எடுக்கிறார். தொடர்ந்தும் கற்கிறார். காலத்தோடு தன்னை  இணைத்துக் கொண்டு பயணிக்கிறார். இதனால் அவர் அப்டேட் ஆக இருக்கிறார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரைச் சந்திக்கும் போதும் அவரது வானொலி அனுபவங்களைச் சொல்ல அவர் மறப்பதில்லை. நூலை வாசிக்கும் போதும் அவரது வீட்டில் அமர்ந்து அவர் சொல்லக் கேட்பது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது.

அவரது பணிவும் அன்பும் அவருடனான நெருக்கமும் வாழ்வில் அழகிய தருணங்களாக எனக்குள் நிறைகின்றன.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இறைவன் கொடுத்த வாய்ப்புக்களால் தனக்கான பாதையைச் செப்பணிட்டு பல்லாயிரம் மக்களின் அன்பை வென்று அன்பு அறிவிப்பாளராக பலர் மனங்களில் வாழும் அப்துல் ஹமீத் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.


No comments:

Post a Comment