Thursday, November 16, 2023

'வெய்யில் மணிதர்கள்' நூல் அறிமுகம்



அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் தோற்றம் மங்கலாக நினைவில் இருக்கிறது. அவரது பெயருடனான பரிச்சயம் அந்த அளவில்தான் இருந்தது.

வாசிப்பின் தாகம் தெரிய வந்த நாட்களில் மெல்ல மெல்ல அந்தப் பெயர் மனதில் ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டது. பின் நாட்களில் அவருடைய 'காணாமல் போனவர்கள்' கவிதைத் தொகுப்பை முதன் முதலாக வாசித்தது ஞாபகம். அது போல என்னைத் தீயில் எறிந்தவள். அவர் பிரதம ஆசிரியராக இருந்து வெளிவந்த 'யாத்ரா' கவிதைகளுக்கான இதழ் நல்ல கவிதைகளையும் கவிஞர்களையும் அடையாளப்படுத்தியது.நின்று போயிருக்கக் கூடாது என்று நான் நினைக்கும் இதழ்களில் அதுவும் ஒன்று.
வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறை, நாடக ஒலிப்பதிவு, பத்திரிகை நேர்காணல் என சில தடவைகள் சந்தித்துக் கொண்டோம். அவை அழகிய நாட்கள்.
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பத்தி எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர், பதிப்பாசிரியர் என பலவேறு அடையாளங்களோடு இயங்கிவரும் அஷ்ரப் ஷிஹாப்தீன் காத்திரமான பல படைப்புக்களை இலக்கிய உலகிற்குக் கொடுத்தவர். தொடர்ந்தும் எழுதி வருபவர். அவரது எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்.
அவரது மொழிபெயர்ப்பில் வெளியான ப/லஸ்தீன எழுத்தாளர் கஸ்ஸான் கனஃபானியின் 'வெய்யில் மணிதர்கள்' நூல் அறிமுக நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. வார இறுதியில் ஊருக்குச் செல்வதால் அவரது நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கிடைப்பதில்லை.
கஸ்ஸான் கனஃபானி இருபதாம் நூற்றாண்டில் தாக்கம் மிக்க ப/லஸ்தீனிய எழுத்தாளர்களுள் முக்கியமானவர். சிறுகதை ,நாவல், சிறுவர் இலக்கியம், அரசியல் எழுத்து என பல துறைகளில் பிரகாசித்தவர். அதிர்வுகளை உருவாக்கும் ஓர் எழுத்தாளனாக இருந்ததே அவர் கொல்லப்படவும் காரணம் ஆயிற்று.
வெய்யில் மனிதர்கள் 1962 வெளியான ஒரு நாவல். மூன்று ப-லஸ்தீனியர்கள் அகதிகளாக அலைந்து பஸராவில் இருந்து குவைத் நோக்கி தப்பிக்க முயல்கின்றனர். வாழ்க்கைப் போராட்டத்தின் இறுதியில் அம் மூவரும் மரணத்தைச் சந்திக்கின்றனர். அம் மூவரின் வாழ்க்கை, அதன் நினைவுகள், தமது சொந்த மண் பற்றிய கனவுகள், பசிக்கான போராட்டம் என சொந்த நாட்டை இழந்த மனிதர்களின் வலியைப் பேசுகிறது இந்த நாவல்.
சொந்த மண்ணில் அகதிகளானவர்கள் ப-லஸ்தீன மக்கள். தங்களது நாட்டை பறிகொடுத்து விட்டு தங்களுடைய நிலங்களுக்காக ஏங்கித் தவிக்கும் அப்பாவி ப-லஸ்தீனர்கள் அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். காஸாவில் நடமாடும் சிறைச்சாலையில் அவர்கள் வாழ்கின்றனர். கொத்துக் கொத்தாக மனிதர்கள் கொல்லப்படும் இன்றைய நாளில் இந்த நாவல் தரும் வலி இரட்டிப்பானது. இதை எழுதும் கனங்களில் எத்தனையோ அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
தனது சொந்த நிலத்தின் நினைவுகளை அதன் வலிகளை, உறவுகளை பிரிந்து வாழும் துயரை, தன் நிலத்தின் அழகியலை, ஒலிவ் மரங்களை, அந்த வானத்தை இழந்து பாலை நிலங்களில் தொழிலுக்காகவும் நிம்மதியான இருப்பிடத்திற்காகவும் தமது குடும்பங்களை கரை சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் தொழில் தேடி அலைவதையும் கஸ்ஸானி தன்னுடைய நாவலில் யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அவரும் ஓர் அகதியாக தனது நாட்டை விட்டு வெளியேறிவர். நாடற்றவனின் துயரத்தை வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த மூன்று கதாபாத்திரங்களின் வழியே அவர் சொல்லும் முறை தனித்துவமானது.
பின்னல்கள் நிறைந்த கதைகளின் வழியே குறியீடுகளுடன் அவர்களது வேதனைகளை நம் கண் முன் நிறுத்துகிறார்.
அகதிகளாக இந்த உலகம் எங்கும் வாழும் எல்லா மனிதர்களுடைய கதைகள் துயரங்களையும் கஸ்ஸானி இங்கே பதிவு செய்கிறார். எல்லா அகதிகளும் வாழ்நாள் முழுக்க புறக்கணிப்பின் நிழலை பின் தொடர்கின்றனர்.தம் நிலத்தின் இதயத் துடிப்பை ஏந்தியவர்களாக தமது நிலத்தைக் கனவு காண்கின்றனர்.
தம் நாட்டைப் பறிகொடுத்த ப-லஸ்தீனர்கள் அதனை மீட்க கொடுத்த விலை மிக அதிகம்.இ-ஸ்ரேல் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எத்தனை உயிர்களை காவு கொண்டிருக்கிறது! எத்தனை குழந்தைகளைப் புதைத்திருக்கிறது! தன் மரணத்திற்கு முன் தனது வீட்டைப் பார்த்துவிடத் துடிக்கும் பாட்டிகளின் கைகளில் இருக்கும் சாவிகள் சொல்லும் ஆயிரம் கதைகள்.
பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல் தமிழில் வருவது காலப் பொருத்தமானது. அஷ்ரப் ஷிஹாப்தீன் அழகிய முறையில் அதனை மொழிபெயர்த்திருக்கிறார். கஸ்ஸான் கனஃபானியின் கதை சொல்லும் முறையின் அழகியலை மொழிபெயர்ப்பிலும் காணமுடிகிறது.
நாவலில் வரும் மூன்று கதாபாத்திரங்களும் ஒட்டுமொத்த ப-லஸ்தீனர்களின் குறியீடே. அவர்கள் எல்லோரும் தம் இருள் நிறைந்த வாழ்விலிருந்து தப்பிக்கவே முயல்கின்றனர்.
ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து விட, தன் வீட்டுக்கு முன்பு ஓர் ஒலிவ் மரத்தை நட்டு வளர்க்க, தன் வராண்டாவில் அமர்ந்து வானம் பார்க்க, தன் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடவே எல்லாப் ப-லஸ்தீனர்களும் விரும்புகின்றனர். 75 வருடங்களாக அவர்கள் தம் விருப்பங்களை கனத்த இதயத்தோடு சுமக்கின்றனர்.
இத்தனை வருடங்களில் எத்தனை யுத்தங்கள்!எத்தனை அழிவுகள்! இருந்தாலும் இன்னும் ஓயவில்லை மரண ஓலம்.
நாவலில் பிரதான கதை மாந்தர்களாக வரும் மூவரும் தண்ணீர் தாங்கிக்குள் மறைந்து எல்லையைக் கடக்க முயல்கின்றனர். இறுதி எல்லையை அடைகின்ற போது ஏற்படும் தாமதம் காரணமாக வெப்ப மிகுதியால் அவர்கள் இறந்து போகின்றனர்.
ஏன் நீங்கள் தட்டி ஓசை எழுப்பவில்லை? ஏன் நீங்கள் தட்டி ஓசை எழுப்பவில்லை? என சாரதி தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவதோடு நாவல் நிறைவு பெறுகிறது.
அந்தக் கேள்வி இன்னும் பல கேள்விகளை எதிரொலிக்கச் செய்கிறது. ப-லஸ்தீனர்களை மரணப்படுகுழிக்குள் தள்ளியவர்கள் யார்? இத்தகைய கையறு நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றவர்கள் யார்? அவர்களது அழுகுரல்கள், மரண ஓலங்கள் ஏன் உலகின் மனசாட்சியை அசைப்பதில்லை?

No comments:

Post a Comment