Thursday, November 16, 2023

“சமாதானத்தின் குரல்கள்“ – கடந்த காலத்தின் சாட்சியங்கள்

 


 எங்களுடன் கதையுங்கள் எங்களைப் பற்றிக் கதைக்காதீர்கள்.“ அயா செப்பி

இலங்கையின் முப்பது வருட உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் போர் குறித்த பல்வேறு நூல்கள் யுத்தத்தின் கொடூரங்களைப் பேசும் நாவல்களாக, சிறுகதைகளாக, கவிதைகளாக, ஆய்வுகளாக பல வடிவங்களில் வெளிவந்தன.

இனியும் இப்படி ஒரு யுத்தம் வேண்டாம் என்று பரைசாற்றி கற்றுக் கொண்ட பாடங்களை மையப்படுத்தி அவற்றின் பேசு பொருள் அமைந்திருந்தன.

உண்மையான சமாதனத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் இன்னும் அப்படியான நூல்கள், ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வரிசையில் சாரா கபீரின்சமாதானத்தின் குரல்கள்“ -அவர்களும் எங்களைப் போன்றவர்களே- இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பத்து பேரினதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பத்து முன்னாள் போராளிகளின் கதைகளினதும் தொகுப்பாகும். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் வெளிவந்த இந் நூல் போருக்குப் பிந்திய இலங்கையில் வெளிவந்த முக்கிய தொகுப்பாகக் காணப்படுகிறது.

நூல் வெளிவந்த நாட்களில் அதனை எப்படியாவது படித்து முடிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டுபல தடவைகள் முயற்சித்தாலும் அது கைகூடவில்லை.

போராட்டத்தில் இணைதல், யுத்த வாழ்க்கையை நிறைவு கூறுதல், நெகிழ் கதவுகள், யுத்தத்தில் இருந்து சமாதானத்தை நோக்கி, நாங்கள் இன்று எங்கு இருக்கின்றோம் ,காலத்திற்கு ஏற்ற மாற்றம், சமாதானமும் நல்லிணக்கமும், எமது எதிர்காலம் ஆகிய எட்டு அத்தியாயங்களில் அவர்களது கதைகள் விரிகின்றன.

ஒரு சாதாரண வாழ்க்கை நடாத்தியவர்கள் ஏன் போராட்டதிற்கு தம்மை ஒப்புக் கொடுத்தார்கள் என்ற கேள்வி முக்கியமானது. இதற்கான பதிலை அவர்களது கதைகள் சொல்கின்றன. சிலபோது சீருடை மீதுள்ள விருப்பம், பறத்தலில் உள்ள ஆசை என்ற சாதரண காரணங்கள் தொட்டு தன்னைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளின் அதிர்வலைகள் தொடக்கம் பல்வேறு காரணங்களை அவர்கள் நமக்குச் சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன.சூழல் அந்தக் காரணிகளில் தாக்கம் செலுத்துகின்றது.

யுத்த வாழ்க்கையின் நினைவுகள் எத்தகையது என்பதை அவர்களது கதைகள் நமக்குச் சொல்லும் செய்தி தனித்துவமானது.ஒரு மனிதனின் வாழ்க்கையில் குடும்பம்,உறவு என்பன மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.போர் அவற்றைத் துண்டிப்பதில்லை.போரைச் சுற்றி அவை எப்படி வளர்ந்தன என்பதை அவர்கள் பதிவு செய்யும் கணம் உணர்ச்சி ததும்பும் தருணங்கள்.

தங்களது நண்பர்கள் ஒன்றாக இருந்துவிட்டு அடுத்த நொடி சடலமாகக் கிடக்கும் போது அல்லது தனது எதிரியை சுட்டுக் கொல்லக் கட்டளையிட்ட தருணம் அல்லது குண்டுகளை வீசிய தருணம்,தன் உடல் உறுப்புக்களை இழந்த தருணம் என யுத்த வாழ்க்கையை அவர்கள் நினைவுகூர்கிறார்கள்.

போரின் போது அரும்பிய காதல்களை போராட்டக்களத்தில் இருந்த காலத்தில் நடந்த திருமணங்களை அவர்கள் நினைவுபடுத்துகிறார்கள். மகிழ்ச்சியும் துக்கமும் தொண்டையை அடைக்கும் நினைவுகளாக அவை உருமாறுகின்றன.எறிகனைத் தாக்குதலின் போது தன் மடியிலேயே மரணித்த தன் காதலியை நினைவுபடுத்தும் வின்ஸ் தான் இனிமேல் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்கிறார்.

யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புனர்வாழ்வு காலகட்டம் மற்றும் அதைத் தொடர்ந்த காலங்களில் சமாதானத்தை நோக்கிய அவர்களது நகர்வை இங்கே பார்க்க முடிகிறது.ஒரு காலத்தில் தீவிரமாகப் போராடியவர்கள் இன்று நேருக்கு நேர் நண்பர்களாக உருமாறும் காலம் தம் குற்ற உணர்வுகளை அவர்கள் மெல்ல விடுவிக்கிறார்கள்.

இன்னும் அவர்கள் போராளிகளாக இல்லை என்பதைப் பதிவு செய்கிறார்கள். மின்னியலாளர்களாக, பறத்தல் பயிற்றுநர்களாக,அணிவகுப்புப் பயிற்சியாளர்களாக, சுற்றுச் சூழல் ஆர்வலர்களாக, விவசாயிகளாக என பல்வேறு வகிபாகங்களை மேற்கொள்பவர்களாக இருப்பதைப் பதிவு செய்வதோடு எச்சியிருக்கும் வாழ்வை குடும்பத்திற்காக எப்படி அர்ப்பணிக்க போகிறார்கள் என்பதை எல்லாம் அவர்கள் பேசுகிறார்கள்.

யுத்தம் ஓய்ந்திருக்கிறது. யுத்தம் தோன்றுவதற்கான காரணங்கள் நீங்கிவிட்டனவா என்ற ஆதங்கத்தின் வழியே உண்மையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அவர்களது குரல்கள் இங்கே ஒலிக்கின்றன. அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்படுகிறதா? பாரபட்சமற்ற அபிவிருத்தி நடைபெறுகிறதா? போரில் இறந்தவர்களை ஏன் நினைவுகூற முடியாதுள்ளது? சிறுபான்மை என்றில்லாமல் இலங்கையர்களாக ஏன் மதிக்கக்கூடாது? உரிமைகள் ஏன் வழங்கப்படுவதில்லை என்ற கேள்விகள் ஊடாக சமாதானத்திற்குத் தடையாக உள்ள காரணிகளை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இறுதியாக தமது எதிர்காலம் குறித்த கனவுகளை அவர்கள் பதிவு செய்கிறார்கள். தாம் வாழ்ந்த வாழ்க்கையை விட சிறந்த வாழ்க்கையை தங்களது பிள்ளைகள் வாழ வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இலங்கை மோதலற்ற ஒரு நிலமாக என்றைக்கும் இருக்கும் போதுதான் அது சாத்தியப்படும் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். பிரச்சினைகள் புறக்கணிக்கப்படாது தீர்த்துவைக்கப்படுகின்ற ஒரு நாடாக இருந்து அனைவரும் மதிக்கப்படக் கூடிய பெருமிதத்துடன் நான் ஒரு இலங்கையன் என்று சொல்லக் கூடிய ஒரு நிலையை அவர்கள் விரும்புகின்றனர்.

இன மத அடையாளங்களுக்கு அப்பால் நான் ஒரு இலங்கையன் என்ற அடையாளத்துடன் பெருமிதம் கொள்வதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வது அதற்கான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமையாகும். இனத்துவ அரசியலை கூர்மைப்படுத்துவதால், ஓர் இனத்தை எப்போதும் எதிரியாகக் கட்டமைக்கும் அரசியல் சூழ்ச்சிகளால் ஒரு நாடாக எம்மால் எழுந்திருக்க முடியாமல் போகும். அனைவரினதும் மனங்களை வென்று உண்மையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் பன்மைத்துவத்தின் ஏற்று அதற்கான பயணத்தைத் தொடர்வதே நாம் இலங்கையர் என்ற பெருமிதத்தை அனைவரும் கொண்டாட வழிவகுக்கும்.

அந்தவகையில் சாராவின் இந்த முயற்சி இன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்திருக்கின்றது. வரலாற்றிலிருந்து பாடம் கற்போரே மறுபடியும் வரலாற்றுத் தவறுகளைச் செய்ய மாட்டார்கள் என்பார்கள். ரத்தமும் சதையுமாக இந்தப் புத்தகமெங்கும் அப் பாடங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்நூல் பற்றிய அறிமுகக் குறிப்பில் இப்படிச் சொல்லப்படுகிறது

“ 'Voices of Peace' (சமாதானத்தின் குரல்கள்) இல் குறித்த நபர்களைப் பற்றி பேசுவதை விட அவர்களின் கதைகளுக்கு நாம் செவிமடுக்க அழைக்கப்படுகிறோம். நீண்ட காலமாக பிளவுபட்டுள்ள ஒரு நாட்டில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பாக இது அமைவதுடன், பொதுவான இலக்குகளை நோக்கிய நீண்ட பயணம் பற்றி சிந்திப்பதற்கான அவகாசத்தையும் இது எமக்கு அளிக்கின்றது. மோதல் மற்றும் மோதலுக்கு பிந்தைய காலப்பகுதியில் 'எமக்கு வெளிப்படுத்தப்படாத நிலவரங்களின் தொகுப்பாக இது அமைகிறது. "Voices of Peace" (சமாதானத்தின் குரல்கள்) இன் முக்கிய நோக்கம் மக்களிடையே அர்த்தமுள்ள விவாதத்தை ஊக்குவிப்பதும், ஆரோக்கியமான கலந்துரையாடல்களுக்கு வழிவகுப்பதாகும். இதன் மூலம் இலங்கையின் பன்முகத்தன்மையை அடையாளப்படுத்து வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் அதனைக் கொண்டாடுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.“

கதைகள் பல உண்மைகளைக் கொண்டிருக்க முடியும். அவை சரியானவை, தவறானவை என்பவற்றிக்கு அப்பால் கதைசொல்வோரின் கடந்த கால நிகழ்கால அனுபவங்களின் வழியே நம்பிக்கை நிறைந்த நாளையை எட்டிப்பார்க்க சாரா முயன்றிருக்கிறார். இது நம்பிக்கையூட்டும் பல பாடங்களைக் கற்றுத் தரும் முயற்சி. இந்த முயற்சியின் பங்காளிகள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.


No comments:

Post a Comment