Friday, November 25, 2011

அன்பிற்குரிய ஒன்றை இழக்கும் போது...


இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன. எல்லோரும் அதனை ஒவ்வொரு விதமாய்க் கொண்டா டுகிறார்கள்.அது போலத்தான் தன் நேசத்திற்குரிய உறவுகளையும் கொண்டாடத்  தவறுவதில்லை.
 
வீடு,வாகணம்,தோட்டம்,செல்வம்,கணவன்,மனைவி,பிள்ளை,பெற்றோர்,நண்பன் என எல்லா மனிதர்களும் அதிக நாட்டம் கொள்ளும் எத்தனையோ விடயங்களை நாம் பார்க்க முடிகிறது.

மனிதன் தான் நேசிப்பவற்றை இழக்க ஒருபோதும் விரும்புவதில்லை.என்ன முயற்சி எடுத்தேனும் அதனைப் பாதுகாக்கவே எத்தனிக்கின்றான்.தன் வாழ்வை இழந்தேனும் அதனை அடைய வேண்டுமென ஒரு கட்டத்தில் நினைக்கிறான்.ஒன்றின் மீது மனிதன் கொள்ளும் அதிக நேசம், பிரியம் பிரிக்க முடியாததுதான். இருந்தாலும் இறைவனோ மனிதன் நேசிப்பவற்றையே பெற்றுக் கொள்ள விரும்புகின்றான்.

கடல் நீரில் ஒரு துளி போலான இவ் வாழ்வில் நன்மைகளைத் தவிர மனிதன் கொண்டாடும் எதுவும் மிஞ்சப் போவதில்லையே!
'நீங்கள் விரும்புகின்றவற்றை செலவளிக்காத வரை நன்மையைப் பெற்றுக் கொள்ளவே மாட்டீர்கள்' ஆல இம்ரான்-92 என்ற வசனம் இறங்கிய போது தல்ஹா(ரழி) அவர்கள் தனக்கு வசந்தமாக இருந்த தன்னுடைய 'பைரூஹா' தோட்டத்தையே இறைவனுக்காக அர்ப்பணம் செய்தார்கள். தன் மனைவியையும் பிள்ளைகளையும் அவர்களது மகிழ்ச்சிப் பிரவாகத்திலிருந்து விடுவித்து 'இத் தோட்டம் இனி நமக்குச் சொந்தமில்லை' என வெளியே அழைத்து வருகிறார்கள்.
 
தன் அன்பிற்குரிய ஒன்றை இழக்கும் போது அவருக்கு எந்த வலியும் இருக்கவில்லை.இப்ராஹீம்(அலை) அவர்களும் தன் அன்பிற்குரிய மகனை யும்  இறைவனுக்காக இழக்க முன்வந்தார்கள்.

உண்மையான இழப்பு நன்மைகளையே கொண்டுவருகிறது.இழப்பதில்தான் ஆத்ம திருப்தி இருக்கின்றது. இறைவன் விதித்திருக்கின்ற சோதனையும் அதுதான்.

அன்பிற்குரிய ஒன்றை இழப்பதனைப் பற்றி எல்லோரும் பேச முடியும். ஆனால் இழப்பதுதான் கஷ்டமானது. நாமும் விருப்பத்திற்குரிய ஒன்றை அல்லாஹ்வுக்காக இழந்து பார்ப்போம்.


இம்மாத இஸ்லாமிய சிந்தனையில் வெளியானது

Tuesday, October 18, 2011

அவ்வளவு வெயில்...


வெயில் அவ்வளவாக இருக்கிறதென்று
எல்லோரும் நொந்து கொள்கின்றனர்

வியர்த்துக் கொண்டு வீடு வந்த நண்பர்
தன் வியர்வை நெடியை மறக்க
என்ன வெயிலப்பா இது!
எனச் சொல்கிறார்

மின் விசிரி இல்லாத வீட்டில்
போய் அமரும் போது
எங்களை விடவும் அவர்களுக்கு
அதிக சங்கடம் ஏற்படுகிறது.

வெயில் எவ்வளவு கடுமையாக
இருந்தாலும்
ஆண்கள் குடைபிடிக்க
விரும்புவதேயில்லை.

வெயில் ஆடைகளின் மேல்
அப்படி ஒரு வெறுப்பை
ஏற்படுத்திவிடுகின்றது

வீட்டில் கூரை திருத்திக்
கொண்டிருப்பவர்
அவ்வளவான இந்த வெயிலை நினைத்து
எவ்வளவோ மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

2011-10-10




Thursday, October 6, 2011

கைப்பிடியாய் ஓர் கனவு...


இத்தனை வருடப் பழக்கத்தில் எத்தனை  பகிர்தல்கள்... பறிமாறல்கள்... புரிதல்கள்..எல்லாம் மறக்க முடியாத நினைவுகள் நண்பனே! கொள்கை எம்மை நீண்ட நாள் நண்பர்களாக ஆக்கியிருக்கின்றது.

இறைவனுக்காகக் கொள்ளும் நட்பில் எப்போதும் ஒரு ஆத்ம திருப்தி இருக்கின்றது.அதன் எல்லை இப் பிரபஞ்சத்தை தழுவி நிற்கின்றது.வானவில் வசந்தம் போன்றதுதான் அந்த நட்பும். பல்வேறு வண்ணங்களால் ஆகியிருக்கின்றது.ஈமானின் சுவையை ஒருவன் இங்குதான் உணர்ந்து கொள்கின்றான்.அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சுவை.

நண்பா! வாழ்க்கை எல்வோருக்கும் ஒன்று போல் வாய்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை.அதனுள் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள். ஈமான் எல்லாவற்றையும் ஒற்றைப் புள்ளியில் சேர்த்து விடுகின்றது.ஒவ்வொரு பரிமானத்தில் ஒவ்வொன்றும் பயணிக்கின்றது. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை.

ஆயுள் முடிவதற்குள் இந்த வாழ்க்கையை வென்றாக வேண்டும். உனக்குள் எப்போதும் சாதனைக் கனவுகளை வளர்க்கவே நான் விரும்புகிறேன். வளர்த்திருப்பேன் என நினைக்கிறேன்.

நல்ல நட்பென்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.அதிலும் இறை வனுக்காக நட்புக் கொள்ளும் சந்தர்ப்பம் அனைவருக்கும் வாய்ப் பதில்லை. எப்போது நாம் சுயநலமற்று அடுத்தவருக்காய் வாழ்கிறோமோ அப்போதுதான்  வாழ்க்கை அர்த்தப்படுவதாக தெரிகிறது.

வாழ்க்கையில் எல்லோரையும் நேசிக்க வேண்டும்.மதிக்க வேண்டும்.ஆனால் எல்லோரையும் புனிதனானக் கருதத் தேவையில்லை. ஒவ்வொருவருக் குள்ளும் பலம், பலவீனம் இருக்கத்தான் செய்கிறது.அதற்கு யாரும் யாரையும் மறுத்துக் கொள்ளத்தேவையில்லை.பலத்தை அதிகரிப்பதற்கும் பலவீனத்தைக் குறைப்பதற்கும் பரஸ்பராம் உதவிக் கொள்ள வேன்டும். நேரம் கிடைக்கும் போது சிரித்துக் கொள்ளும் நட்பில் எந்தப் பயனும் இல்லை நண்பனே!

இந்த உலகைப் பார்க்கும் போது எவ்வளவோ எண்னத் தோன்றுகின்றது. ஓவ்வொரு விடியலிலும் அந்தியிலும் எத்தனை மாற்றங்கள்...எத்தனை வசீகரங்கள்...எவ்வளவு கவலைகள்... எல்லா நிமிடங்களிலும் ஒரு குழந்தை பிறந்து கொண்டுதான் இருக்கிறது,ஒரு மரணம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஓவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள்.தம் பிரத்தியேகக் கனவுகளில் அதிக ஆர்மாய் இருக்கிறார்கள்.இருப்பினும் நண்பனே அதுமட்டும் வாழ்க்கையல்ல. எம் அறிவையும் அனுபவத்தையும் கொண்டு மற்றவனுடைய வாழ்க்கையின் இடைவெளிகளையும் நிரப்ப வேண்டும். அவர்களையும் நம் பயணத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விசாலமோ அப்படித்தான் மறுமைக்கான வாழ்க்கையின் அர்த்தமும். வாழ்க்கை மிகச் சிறந்ததொரு பாடப் புத்தகம். இருந்தும் யாருமே அதனைச் சரியாகக் கற்றுக் கொள்வதில்லை. கற்க இவ்வளவு இருக்கின்றதா என மனிதன்  கடைசித் தருணத்தில் நினைக்கும் போது வாழ்க்கை முடிவடைந்து விடுகின்றது. மரணம் வாழ்கையை விட சிறந்த ஒரு புத்தகம்.முடிவில்லாத அதன் பக்கங்களை எத்தனையோ பேர் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பனே! எஞ்சப் போவது இந்த உலக வாழ்க்கையின் நன்மை மட்டுமே. ஒரு மலையினளவு நுரையிருந்தாலும் அது பயணளிக்கப் போவதில்லை. வாழ்க்கையின் எல்லா மகிழ்ச்சிகளையும் நாம் தொலைத்து விட்டுத்தான் போகப் போகிறோம்.

நீ உனக்குள் கனவுகளை வளர்த்துக்கொள். கனவுகள்தான் வாழ்க்கை யாகின்றன. நேற்றுக் கண்ட கனவுகள்தான் இன்று மெய்பட்டிருக்கின்றன. இன்றைய கனவுகள்தான் நாளை  மெய்ப்படபப் போகின்றன.
அந்தக் கனவுகளை ஜெயிக்கும் துணிவு, தன் நம்பிக்கை உன்னிடம் நிறையவே இருக்கின்றது நண்பனே.

வா இந்த சமூகத்தின் எழுச்சிக்காய் ஒரு கனவு காண்போம். அது சமத்து வத்தையும் சுதந்திரத்தையும் முழு மனித சமூகத்திற்கும் யாசிக்கும் ஒரு பெருங்கனவு. எல்லோர் முகத்திலும் மலர்ச்சியை, புன்னகையை காண நினைக்கும்  இப் பணியில் நீ மனதால் இணைந்திரு நண்பனே!

ஒரு கனவு கண்டோம் என்பதற்காக அது நிஜமாகாது. அந்தக் கனவு நம் நித்திரையைக் கலைக்க வேண்டும்.சதா நம்மைத் துரத்திக் கொண்டிருக்க வேண்டும்.அக் கனவை மெய்ப்படுத்தும் நம்பிக்கையோடு உழைகை;க வேண்டும்,செயற்பட வேண்டும். அந்தக் கனவில் கொண்டிருக்கும் நம்பிக்கையை அவனது தியாகத்திலும் அர்ப்பணத்திலும் கண்டு கொள்ள முடியும்.
சாவதற்கு முன்னர் நீ படைக்கும் மகத்தான சாதனைகளினாலே மரணத்தின் பின்னரும் உன்னால் வாழ முடியும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்.நீ வாழ்ந்து இறந்தாய் என்பதற்காக சரித்திரம் உன்னை நினைவில் வைத்துக் கொள்ளாது.
நீ உன் பணியில் தூய்மையாய் களமிறங்கிடு.வானவர்கள் உனக்குத் துணை நிற்பார்கள்.கைப் பிடியளவே உன் கனவிருந்தாலும் உன் எண்னம் தூய்மை யாயின் இறைவன் அதனை ஒருநாள் நிஜப்படுத்தி வைப்பான்.

இத்தகைய ஒரு கனவை மெய்ப்படுத்தும் நம் நட்பில் எத்தனை பறிமாறல்கள்... உரையாடல்கள்... தூங்காத இரவுகள்...உண்னாத பொழுதுகள்..நினைக்க நினைக்க இனிக்கிறது நண்பனே! இந்தப் பணியில் நீ விழும் போது நான் தாங்கவும் நான் விழும் போது நீ தாங்கவும் வேண்டும்.பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்வோம்.எல்லாக் கனவுகளையும் வென்றெடுப்போம். அன்றைய நாளில் உன்னுடன் நான் என்னுடன் நீ சேர்ந்திருப்போம்.


ஒக்டோபர் வைகறை இதழில் வெளியானது

Tuesday, September 20, 2011

திடீரெனப் பெய்யும் இந்த மழை


திடீரெனப் பெய்யும் இந்த மழை
ஒரு அவசரப் பயணத்தை

தாமதிக்கச் செய்துவிட்டது

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை
ஒதுங்கச் செய்துவிட்டது

வெளியில் நன்றாக உளர்ந்திருந்த ஆடைகளை
நனையச் செய்துவிட்டது

பள்ளிக்குச் செல்பவர்களுக்கு
விடுமுறை கொடுத்துவிட்டது

விடுமுறையில் இருந்தவர்களை
சலிப்படையச் செய்துவிட்டது

இப்போது பெய்யும் இந்த மழையை
ஜன்னலினூடு ரசிக்கும்
ஒருவரைத் தவிர

மற்றெல்லோரும் மழையை
சபிக்கவே செய்கிறார்கள்

2011.09.01

Friday, August 12, 2011

நீராலான வாழ்வு...

 
இந்த உலக வாழ்க்கை பற்றி நினைப்பதற்கு மனிதனுக்கு நேரம் கிடைப்ப தேயில்லை. அதனால் அவன் தனது வாழ்வின் யதார்த்தம் பற்றி கவலை கொள்வதேயில்லை. எப்படியோ தனக்குப் பிடித்த மாதிரி வாழ்வை அமைத்துக் கொள்கிறான். பின் வாழ்க்கையின் கடிவாளத்தை அதனிடமே விட்டு விடு கிறான். வாழ்க்கை தனது பாட்டிற்கு அவனை அழைத்துச் செல்கிறது.

உலக வாழ்வின் தொய்ந்து போன ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தப்படுத்திக் கொள்ள மனிதன் அதிக பிரயத்தனம் எடுக்கிறான்.உழைப்பதாலும் உண்பதாலுமே அதனை சாத்தியப்படுத்தலாம் என நினைக்கிறான்.உழைத்து உண்டு கொண்டு நோய் ஏற்படுகின்ற போது மருந்துகளைப் பாவித்துக் கொண்டால் மரணத்திலிருந்து தப்பிவிடலாம் என அவன் நினைக்கிறான்.

தன் பொக்கிஷமாக நினைத்து வாழந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவன் கொண்டாடிக் கொண்டிருக்கிறான்.அதன் ஏகாந்தத்தில் அலைந்து திரிகிறான்.மனைவி,பிள்ளை,குடும்பம் என ஒரு நித்திய உறவை அவன் கட்டமைத்துக் கொண்ருக்கிறான்.பின் அவனது வாழ்வில் இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன.உறங்குதலின் சுகத்தை நினைத்து அவன் மகிழ்கிறான்.விழித்தலின் கஷ்டத்தை அவன் கடிந்து கொள்கிறான்.

ஏராளமான எண்னங்களும் நினைவுகளும் அவனது உள்ளத்தில் நிறைந்திருக்கின்றன.இருப்பினும் தனக்கு மேலிருக்கும் வானத்தையும் தான் வாழும் பூமியையும் பார்த்து ரசிப்பதற்கோ மலர்களை ஸ்பர்ஷிக்கவோ அனைத்தையும் படைத்தவனை நினைக்கவோ அவனது ஞாபகப் பரப்பில் தோன்றுவதே இல்லை.

இந்த வாழ்வின் புற அழகில் அவன் வீழ்ந்து போய்க்கிடக்கின்றான்.அதனது வசீகரம் அவனைக் கட்டிப் போட்டிருக்கின்றது.இதனால் எல்லாவற்றையும் நினைக்கும் மனதை அவன் நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றான்.அவனது ஆன்மாவின் கதவுகளை அவன் இதுவரை திறந்து பார்த்த தேயில்லை. அதனுடன் உரையாடியதும் இல்லை,அதன் தேவைகளைக் கேட்டதும் இல்லை. இதனால் அது ஒரு பாழடைந்த வீடு போலவே காட்சியளிக்கின்றது.

எனவே அவன் வாழ்க்கையின் சுவையை இன்னும் அறியவேயில்லை. வாழ்கையின் அழகியலை அவன் மனதுக்கு வெளியே காண்கிறான். வானவில்லைக் கண்டு வானம் வண்ணம் என்று சொல்வது போலத்தான் இதுவும்.

இந்த வாழ்வின் நிச்சயமின்மையை அவன் அறியவில்லை.அது முடிந்து போகக் கூடியது என்பதனை அவன் உணரவில்லை.எனவே படைத்தவனை வணங்குவதை விட ஒரு ஐஸ் பழம் அவனுக்கு இனிமையாக இருக்கின்றது.
 
போட்டிபோடுகின்றவர்கள் (சுவன விடயத்தில்) போட்டி போட்டுக் கொள் ளட்டும்.  (ஸூரா முதப்பிபீன்-26)
 


2011-08ம் மாத இஸ்லாமிய சிந்தனை இதழில் வெளியானது


Tuesday, August 9, 2011

தெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி!

தெய்வத் திருமகள் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுத நினைத்திருந்தேன். ஷாஜியின் இந்த விமர்சனத்தை தற்செயலாக அவரது வலைப்பூவிலே வாசிக்கக் கிடைத்தது.அதனையே உங்களுடனும் பகிர்ந்து கொள்ள நினைத் தேன்...

“தெய்வத் திருமகள் பார்த்தீங்களா? பலநாட்கள் கழித்து தமிழில் வந்த ஒரு உண்மையான படம்“. ஒரு விளம்பரப்பட இயக்குநர் வெள்ளிக்கிழமை நள்ளி ரவில் அலைபேசியில் அழைத்து சொன்னார். சனிக்கிழமை காலையில் இன்னும் சிலர் அழைத்தார்கள். “மிக முக்கியமான படம். உடனடி பாருங்கள். கடைசி இருபது நிமிடத்தை தவறாமல் பாருங்கள். அது ஒரு சினிமா உச்சம்“. திரைப்படங்களைப் பற்றி தெளிவான கருத்துக்கள் சொல்லக் கூடிய சில நண்பர்களிடம் கேட்டபோது “இன்னும் பார்க்க வில்லை. நன்றாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. நகரங்களில் படம் பெரிய அளவில் ஓடக்கூடிய வாய்ப்பிருக்கிறதாம்“ என்று சொன்னார்கள். அப்படியானால் அந்த மகத்தான படத்தை உடனடியாக பார்க்க வேண்டுமே எனப் பட்டது. கருப்புச் சந்தையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு நுழைவுச் சீட்டை வாங்கி அன்றைக்கே இரவு காட்சியைப் பார்த்து விட்டேன். அரங்கு நிறைந்து ஆர்ப்பரிக்கும் கூட்டம். அன்றைக்கு என்னால் தூங்க முடியவில்லை. பொய்மையின் உச்சமான இத்தகைய படங்களை இவர்களால் எப்படி ரசிக்க முடிகிறது என்று யோசித்து!

 பொய் சொல்லப் போறோம் என்கிற ஒரு படத்தை முன்பு எடுத்தவர் இப்படத்தின் இயக்குநர் ஏ எல் விஜய். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது பேட்டியை பார்த்தேன். தெய்வத் திருமகள், ஐ ஆம் சாம் (I am Sam) என்கிற ஹாலிவுட் திரைப் படத்தின் தழுவலா என்ற கேள்விக்கு ‘இந்த படத்தின் மையப் பாத்திரத்துக்கும் ஐ ஆம் சாமின் மையப் பாத்திரத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு. அவ்வளவுதான்என்றார். தெய்வத் திருமகள் ஐ ஆம் சாமின் அப்பட்டமான தழுவல்! ஆனால் இப்படத்தின் பிரச்சினை இது தழுவல் என்பது அல்ல. ஐ ஆம் சாமில் இருக்கும் உண்மை இதில் அறவே இல்லை என்பதுதான்.

மூளை வளர்ச்சி குறைந்த சாம் என்பவர் ஒரு உணவு விடுதித் தொழிலாளி. அவருக்கும் மனநலம் குன்றிய ரெபெக்கா என்கிற பெண்ணுக்கும் ஏற்படும் உடல் உறவில் லூசி என்கிற குழந்தை பிறக்கிறாள். பிரசவம் முடிந்த உடன் அக்குழந்தையை சாமின் கையில் விட்டுவிட்டு ரெபெக்கா ஓடிவிடுகிறாள். தனக்கு இருக்கிற குறைபாடுகளை எல்லாம் தாண்டி சாம் தன் குழந்தையை மிகுந்த அன்போடு செல்லமாக வளர்க்கிறார். உயர்ந்த மூளைத்திறனுடன் அவள் வளர்ந்துவருகிறாள். ஆனால் அவளுக்கு ஆறு வயதானபோது குழந்தைகள் நலத்துக்கான அரசு நிருவனம் ஒன்று, மேற்கொண்டு அவளை வளர்ப்பதற்கான மூளைத்திறன் சாமுக்கு இல்லை என்று சொல்லி, அவரிடமிருந்து அக்குழந்தையை பறித்து, குழந்தைகள் இல்லாத ஒரு பணக்கார பெண்மணியிடம் கொடுக்கிறது. தன் குழந்தையை மீட்டெடுக்க பேர்பெற்ற ஒரு பெண் வழக்கறிஞரின் உதவியுடன் சாம் நீதிமன்றம் செல்கிறார். ஆனால் அந்த வழக்கு தோல்வியடைகிறது. கடைசியில் அப்பாவுக்கும் மகளுக்குமான பிரிக்க முடியாத அன்புக்கு தடைபோட இயலாத அந்த பணக்கார பெண்மணி குழந்தையை சாமிடமே ஒப்படைக்கிறாள். ஆனால் இதற்குள் லூசிக்கு தன்னைவிட ஒரு அம்மா தான் தேவை என்பதை உணரும் சாம் தன் அன்புக் குழந்தையை அந்த பெண்ணுக்கே திருப்பி கொடுத்து விடுகிறான். இது தான் ஐ ஆம் சாம்.

மூளை வளர்ச்சி இல்லாத கிருஷ்ணா என்பவர் ஊட்டியில் ஒரு சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிலாளி. தன் பணக்காரத் தந்தையையும் குடும்பத்தையும் உதறி ஓடிவந்து கிருஷ்ணாவுடன் திருட்டுத் திருமணம் செய்துகொண்டவள் அவரது மனைவி பானு. அவர்களுக்கு நிலா என்கிற குழந்தை பிறக்கிறாள். பிரசவம் முடிந்த உடன் பானு இறந்து போகிறாள். தனக்கு இருக்கிற குறைபாடுகளை எல்லாம் தாண்டி கிருஷ்ணா தன் குழந்தையை மிகுந்த அன்போடு செல்லமாக வளர்க்கிறார். அதீதமான மூளைத்திறனுடன் அவள் வளர்ந்து வருகிறாள். ஆனால் அவளை முதலில் சேர்த்த பள்ளிக்கூடம் பானுவின் அப்பாவுக்கு சொந்தமானது. அதன் தாளாளராக அங்கு வரும் பானுவின் தங்கை ஸ்வேதா குழந்தைகளை அளவற்று நேசிக்கும் ஒருத்தி. அவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் குணம் படைத்தவள்.

தன் அக்காவின் குழந்தையை அடையாளம் காணும் ஸ்வேதா தன் காதலனை ஒரு அடியாளாக பயன்படுத்தியும் தன் அப்பாவின் தந்திரங்கள் வழியாகவும் அக்குழந்தயை, அது உயிரிலும் மேலாக நேசிக்கும் அதன் அப்பாவிடமிருந்து பறித்து தன் வீட்டுக்கு கொண்டுபோகிறாள். தன் குழந்தையை மீட்டெடுக்க கிருஷ்ணா ஒரு வழக்கேதுமில்லா பேரழகி வழக்கறிஞரின் உதவியுடன் நீதிமன்றம் செல்கிறார்! அந்த வழக்கு வெற்றிபெறுகிறது! ஆனால் இச்சம்பவங்களுக்கிடையில் தன் குழந்தை ஸ்வேதாவையும் அவளது கெட்ட அப்பாவையும் போன்ற மூளை வளர்ச்சியுள்ள அயோக்கியர்களிடம் வளரவேண்டியதன் முக்கியத்துவத்தை உணரும் கிருஷ்ணா தன் குழந்தையை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து அங்கிருந்து வெளியேறுகிறான். இது தான் தெய்வத் திருமகள். 

சாமுக்கு உதவி செய்ய பக்கத்து வீட்டில் ஆனி என்கிற ஒரு பெண். கிருஷ்ணாவுக்கு உதவி செய்ய பக்கத்து வீட்டில் ராஜி என்கிற ஒரு பெண். சாமுக்கு மூளை வளர்ச்சி குன்றிய நாலு நண்பர்கள். கிருஷ்ணாவுக்கும் மூளை வளர்ச்சி குன்றிய நாலு நண்பர்கள். லுசிக்கு பிடித்த ஒரு செருப்பை வாங்க பணம் பற்றாக்குறையினால் அவதிப்பட்டும் சாமுக்கு அந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்களிடமிருக்கும் சொற்பப் பணத்தைக் கொடுத்து உதவி செய்கிறார்கள். நிலாவுக்கு செருப்பை வாங்க கிருஷ்ணாவின் நண்பர்களும் அதுவே செய்கிறார்கள்! 


சாமும் அந்த நண்பர்களும் லூசியும் ஊதுபைகளை நூலில் கட்டி காற்றில் பறக்கவிட்டு சாலையின் ஜீப்ரா கோடுகளுக்குமேல் அணிவகுப்பாக நடந்துபோகிறார்கள். கிருஷ்ணாவும் நண்பர்களும் நிலாவும் அதையே செய்கிறார்கள். அமேரிக்க வெள்ளைக்காரர் சாமின் சிகை அல்ங்காரம் அதேபடி பின்பற்றுகிரார் ஊட்டித் தமிழர் கிருஷ்ணாவுமே. சாம் பெரும் பாலும் இரண்டு சட்டைகளும் அதன்மேலே ஒரு மேல்சட்டையும் அணிவார். கிருஷ்ணாவோ சென்னை நகரின் கொடும் வெப்பத்திலும் தனது கம்பளி மேல்சட்டையை கழற்ற மாட்டார். இப்படி பெருபாலும் பாத்திரத்துக்கு பாத்திரம், காட்சிக்கு காட்சி ஐ ஆம் சாம் தான் தெய்வத் திருமகள். 
 
ஆனால் முன்சொன்னது போல் இந்த நேரடித்தழுவல் அல்ல தெய்வத் திருமகளின் பிரச்சினை. கதைச் சுருக்கத்தில் குறிப்பிட்டதுபோல் ஐ ஆம் சாமில் மேலெழுந்து கொண்டேயிருக்கும் பல நேர்மைகள், மனித வாழ்க்கையின் உண்மைகள் தெய்வத் திருமகளில் பொய்களாக பரிண மிக்கிறது. அதன் எழுத்தாளர், இயக்குநர் தந்திரமாக உருவாக்கும் பொய்மையான பாத்திரங்களும் கதைத் தருணங்களும் திரைக் கதையில் அடிக்கடி நிகழும் தப்பித்தல் முயற்சிகளும் (Escapism) தான் இப்படத்தின் முக்கியமான பிரச்சினைகள்.
 
ஒரு குழந்தையை வளப்பதற்குத் தேவையான அடிப்படை மூளைத்திறன் சாமுக்கு இருக்கிறது ஆனால் கிருஷ்ணாவுக்கு அது இல்லை. இருந்தும் அவர் குழந்தையை நன்றாக வளர்க்கிறார்! சாமின் மூளை வளர்ச்சி குன்றிய நண்பர்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் மூளைக் குறை பாடுகள் எப்படிப்பட்டவை என்பது கச்சிதமாக சொல்லப்படுகிறது. அப்பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் அக்கதையின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு உண்டு. ஆனால் கிருஷ்ணாவின் நண்பர்கள் மனிதர்களின் மூளை வளர்ச்சியின்மையை கேலிசெய்யும் பொருட்டு வலிந்து அமைக்கபட்ட நகைச்சுவை பாத்திரங்கள். 
 
மூளைவளர்ச்சிக் குறைபாடு என்கிற உக்கிரமான சமூக பிரச்சினையையும் அதனால் அவதிப்படும் ஒருத்தருக்கு ஒரு குழந்தை பிறந்தால் என்னவாகும் என்கிற கேள்வியையும் ஐ ஆம் சாம் முன்வைக்கும்போது தெய்வத் திருமகள் அந்த பிரச்சினையைப் பற்றிய எந்தவொரு புரிதலுமில்லாமல் மலிவான குறுநாவல்களில் வருவதுபோல் அதை அணுக முயற்சிக்கிறது. அத்தகைய கதைகளை படித்து இன்புறும் மனநிலையுடன் சாதாரண மக்கள் இந்த படத்தையும் கைதட்டி வரவேற்கிராற்கள். இது நம்முடைய சூழலின் உக்கிரமான மற்றுமொரு சமூக பிரச்சினை அல்லாமல் வேறென்ன? 

தெய்வத் திருமகள் ஓடும் திரை அரங்குகளில் பெண்கள் வெள்ளமாக அலைமோதுகிராற்கள் என சொல்லப்படுகிறது. மலையாள மனோரமா என்கிற மலிவு இலக்கிய வார இதழ் இருபது லட்சம் பிரதிகள் விற்கப்படுகிறது. வாரம் தோறும் ஏராளமன கேரளப் பெண்கள் அதை படித்து அழுகிறார்கள், இன்புறுகிரார்கள். அக்கேரளச் சூழலில் இருந்து வருபவர்தான் இயக்குநர் பிரியதர்ஷன். மலையாளம், இந்தி என இதுவரைக்கும் 65 படங்களை இயக்கிய, இந்தியாவின் மிக வெற்றிபெற்ற இயக்குநர் அவர். அவரது ஏறத்தாழ எல்லாப் படங்களுமே தழுவல்கள். ஆங்கிலத்திலிருந்தும் உலகப்படங்களிலிருந்தும் மலையாளத்துக்கும் அங்கிருந்து இந்திக்கும் பிரமொழிகளுக்கும் என்பது தான் அவரது சினிமா சூத்திரம்.
 
அறிவார்ந்த தளத்தில் யோசிப்பவர்களுக்காகவோ, அறிவு ஜீவிகளுக் காகவோ, புத்திசாலிகளுக்காகவோ தான் படங்கள் எடுப்பதில்லை என்று தற்பெருமை பேசத் தயங்காத அந்த பிரியதர்ஷன் தான் மலையாள சினிமாவை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட கேரள சலச்சித்திர பரிஷத்தின் தற்போதைய தலைவர்! அவரது படங்கள் குழந்தைகளுக்காகவும் குழந்தை உள்ளம் படைத்தவர்களுக்காகவும் தான் என்கிறார்! சிறைச்சலை, காஞ்சிவரம், கர்திஷ், விராஸத் போன்ற அவரது படங்களைப் பார்க்கும் குழந்தைகளின் நிலமை என்னவாகும் என்று தெரியவில்லை! 

தனது ஒரு தழுவல் திரைப்படத்தைக் கூட அதன் மூலப்படத்தின் பாதி அளவுக்காவது சிறப்பாக இயக்க இதுநாள்வரைக்கும் அவரால் முடிந்ததில்லை. சந்தேகமிருந்தால் பரதன் இயக்கிய தேவர் மகன் திரைப்படத்தின் இந்தி வடிவம் விராஸத்தைப் பாருங்கள். போதாதெனில் லோஹித தாஸ் எழுதி சிபி மலையில் இயக்கிய கிரீடத்தின் பிரியதர்ஷன் வடிவமான கர்திஷ்ஐப் பாருங்கள். அந்த பிரியதர்ஷனின் பிரிய சிஷ்யன் ஆன ஏ எல் விஜயும் லோஹித தாஸின் கிரீடத்தை மொழியாக்கம் செய்துதான் தமிழில் இயக்குநரானார். 

தன் குருவைப் போலவே அசலான திரைப்படங்களின்மேல் ஏ எல் விஜயுக்கும் நம்பிக்கையில்லை என்றே நினைக்கிறேன். அவரது இரண்டாவது படமான பொய் சொல்லப் போறோம் 2006ல் வந்த கோஸ்லா கா கோஸ்லா என்கிற இந்தித் திரைப்படத்தின் மொழியாக்கம். அவரது அடுத்த படம்தான் மதராஸப்பட்டினம். அது டைடானிக், லகான் (இந்தி), அபோகாலிப்டோ, நோட்புக் போன்ற பல படங்களில் வரும் காட்சிகளின் தழுவல் தொகுப்பு. இப்போது ஐ ஆம் சாம். 

ஐ ஆம் சாமில் சாமாக நடிக்கும் ஷான் பென் (Sean Penn) ன் நடிப்பு அசாத்தியமானது, உண்மை மிக்கது, உலகத்தரமானது. ஆஸ்கார் பரிந்துரையுடன் உலகெங்கிலுமுள்ள பல முக்கியமான விருதுகளுகளை அவர் வென்ற பாத்திரம் அது. ஆனால் கிருஷ்ணாவாக வரும் விக்ரமின் நடிப்பு செயர்க்கைத்தனத்தின் உச்சம். அது பலசமையம் ஒரு கைப்பாவை ஆட்டத்தின் தன்மைகளைத்தான் கொண்டிருக்கிறது. ஷான் பென் செய்வதுபோலவே கையை தூக்கி தூக்கி வசனம் பேசுகிரார் விக்ரம். உதடுகளைச் சுளித்து, நாக்கை சுழற்றி மூளை வளர்ச்சி இல்லாத ஒருவராக நடிக்க படாத பாடுபடுகிறார். ஆனால் அவரது கண்கள் தான் செய்யும் செயற்கைத் தனத்தை தொடர்ந்து காட்டிக் கொடுத்தபடியே இருக்கின்றன. இது தான் நடிப்பின் உச்சம் என்றால் முப்பதாண்டுகளுக்கு முன்பு இத்தகைய பாத்திரங்களாக பதினாறு வயதினிலே, சிப்பிக்குள் முத்து போன்ற படங்களில் கமலஹாஸன் நடித்ததற்கு என்ன பெயர் சொல்லலாம்?

ஐ ஆம் சாம் முதலில் பார்த்தபோதே அதில் என்னை முற்றிலுமாக கவர்ந்த ஒரு விஷயம் அதன் இசை. ஜான் பவல் என்பவரின் இசையமைப்பில் பீட்டில்ஸ் இசைக்குழுவின் காலத்தை வென்ற இருபது பாடல்களை சமகாலத்தில் பிரபலமாக இருக்கும் சாரா மக்லாஷ்லன், ஷெறில் க்ரோ, ப்ளாக் க்ரோஸ், ஹீதர் நோவா, எட்டி வெட்டர் போன்ற பலரை பாடவைத்து படத்தின் முக்கியமான கதைத் தருணங்களுக்கெல்லாம் உணர்ச்சிகரமான பின்னணி இசையாக பயன்படுத்தியிருந்தார்கள். பீட்டில்ஸின் இசையும் பாடல் வரிகளும் ஐ ஆம் சாமுக்கு ஒரு காவியத்தன்மையையும் பலவித பரிமாணங்களையும் அளித்தது. 

தெய்வத் திருமகள் படத்தைப் போலவே அதன் சில பாடல்களும் தழுவல்களே. விக்ரம் பாடிய பா பா பாப்பா பாடல் 1973ல் வந்த வால்ட் டிஸ்னியின் கேலிச்சித்திரப்படமான ராபின் ஹுட்டில் ரோஜர் மில்லர் பாடிய பா பா பாப்பா என்றே தொடங்கும் ஆரம்பப் பாடலின் அப்பட்டமான நகல். அதேபோல் ஜகட தோம் என்ற பாடல் சரோத் மேதை உஸ்தாத் அம்ஜத் அலி கானின் மகன்கள் அயான் அலியும் அமான் அலியும் 2008ல் வெளியிட்ட ட்ரூத் என்கிற பாடலின் நகல்! பல இடங்களில் ஐ ஆம் சாமின் இசையை நகலெடுத்த பின்னரும் தெய்வத் திருமகளில் அமைந்திருக்கும் ஜி வி பிரகாஷின் பின்னணி இசை வெறும் உரத்த சத்தங்களாக மிகுந்த நாடகத்தன்மையுடன் ஒலிக்கிறது. புத்தகம் பார்த்து எழுதிய பின்னரும் பள்ளிப் பரீட்சயில் தோல்வி அடைவதைப் போல! 
 
 
ஒரு நல்ல படத்தால் பாதிக்கப்பட்டு, உந்துதல் பெற்று அதை மறு ஆக்கம் செய்ய முயற்சிப்பதில் எந்த தவறுமில்லை. பாலு மகேந்திராவிலிருந்து, மணிரத்தினத்திலிருந்து, கமலஹாஸனிலிருந்து மிஷ்கின் வரைக்கும் அதைச் செய்திருக்கிறார்கள். மிஷ்கினின் நந்தலாலா ஜப்பானிய படமான கிகுஜிறோவின் தழுவல் என்று தம்பட்டமடித்தவர்களுக்கு தெய்வத் திருமகள் ஐ ஆம் சாமின் அப்பட்டமான நகல் என்பதில் எந்தவொரு பிரச்சினையுமில்லை எனப்படுகிறது. பல தவறுகள் இருந்தாலும் காட்சிமொழியிலும் பாத்திரப்படைப்பிலும் கதைத்தருணங்களிலும் பல இடங்களில் நந்தலாலா கிகுஜிறோவை வெகுதூரம் தாண்டிச் சென்றதும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் தெய்வத் திருமகள் யாரையாவது மனதளவில் பாதிக்கிறது என்றால் அதன் முழு பெருமையும் அந்த பாத்திரங்களையும் கதைத் தருணங்களையும் உருவாக்கிய ஐ ஆம் சாமின் எழுத்தாளர்களான க்ரிஸ்டீன் ஜான்சன் மற்றும் ஜெஸி நெல்சன் என்கிற இரண்டு பெண்மணிகளுக்கு தான் சேரும். ஜெஸி நெல்சன் தான் அப்படத்தின் இயக்குநருமே.

சரி ஐ ஆம் சாம் ஐ முற்றிலுமாக மறந்து தெய்வத் திருமகளை ஒரு அசல் படமாகவே அணுகிப் பார்ப்போம். அதில்வரும் வாழ்க்கையின் யதார்த்தங்களும் உண்மைகளும்தான் என்ன? ஆரம்பக் காட்சிகளில் வழக்கரிஞர் என்ற தொழிலையே கேவலப்படுத்தும் வகையில் சந்தானம் என்கிற நடிகன் பேசும் யதார்த்த வசனங்களுக்கும் அவரது சேட்டைகளுக்கும் நீதிமன்ற வளாகத்தில் அவர் ஓடியாடி நிகழ்த்தும் இன்னபிற நகைச்சுவைகளுக்கும் திரை அரங்கில் கைதட்டல் எழுகிறது. இவ்வாறாக நகைச்சுவை உணர்ச்சியில் தமிழ்நாட்டை வெகுதூரம் முன்னேற்றியிருக்கிறது தெய்வத் திருமகள்! முதலில் வழக்கறிஞர்களை கேவலப்படுத்தும் நகைச்சுவை முயற்சியில் மும்முரமாக இருக்கும் இன்னுமொரு பாத்திரம் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் கதாநாயகியான அனுராதா என்கிற வழக்கறிஞர்!
 
குழந்தை பிறந்த உடன் அதற்குப் பால் கொடுக்க தன் மனைவி பானு எங்கே என்று தெளிவாக கேட்க்கும் கிருஷ்ணா பின்னர் அந்த குழந்தை பசியால் கதறி அழும்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறது எதனால்? சாக்லேட் நிருவனத்தின் முதலாளியான மலையாளத்தில் தமிழ் பேசும் அந்த பாத்திரம் கிருஷ்ணாவுக்கும் அவரது குழந்தைக்கும் எல்லா உதவிகளும் செய்யும் அளவில் நல்லவரும் வல்லவருமாக இருக்கும்பொழுது, கிருஷ்ணா பலகாலமாக வேலை செய்து சேர்த்த பணம் அவரிடம் கட்டுகட்டாக இருக்கும்பொழுது, தன் குழந்தைக்கு ஒரு செருப்பு கூட வாங்க வக்கில்லாதவராக கிருஷ்ணா இருப்பது எப்படி? 

நாசர் நடிக்கும் பாஷ்யம் என்கிற பாத்திரம் அசுர மூளை கொண்ட ஒரு மாபெரும் வழக்கறிஞர். அவர் சாதாரண மனிதர்களையே நீதிமன்றத்தில் மனநோயாளிகளாக சித்தரித்து வழக்குகளை ஜெயிக்கும் வல்லமை கொண்டவர். அவரை ஜெயிக்க தமிழ்நாட்டிலேயே ஆளில்லை. ஆனால் அவரது உதவியாளன் ஒருவன் அனுராதாவின் உதவியாளராக வரும் ஒரு பெண்ணின் பின்னால் ஜொள்ளு வழிந்து அலைந்துகொண்டு, மிக எளிதில் ஒற்றுவேலை செய்து நிலா வழக்கு சார்ந்த பாஷ்யத்தின் ரகசியங்கள், திட்டங்கள் அனைத்தையும் அனுராதாவிடம் சேர்க்கிறான்! அசுர மூளை கொண்ட பாஷ்யத்துக்கு வெகுநாள் அதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை! ஒரே ஒரு முறை கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினால் அக்கணமே தீர்ப்பாகக் கூடிய ஒரு வழக்குக்காக எத்தனை குழப்பங்கள், திருப்பங்கள், போராட்டங்கள்! இதற்காக அந்த அசுர மூளை பாஷ்யத்தை எவ்வளவோ சோதனைகளை சந்திக்க வைக்கிரார் இயக்குநர்!

அனுராதாவின் அப்பாவாக வரும் ஒய் ஜி மஹேந்திரனின் பாத்திரம் தன் மகள் மீதும் உலகத்தின்மீதும் சதா கோபத்துடன் திரிகிறார். எதற்கு? திடீரென்று ஒருநாள் அவர் நல்லவராக மாறி தன் மகளுக்கு ஆசி வழங்கி அவளை ஊக்குவிக்கிறார். எப்படி? ஊட்டி சாக்லேட் தொழிற்சாலையில் எடுபிடி வேலைகள் செய்யும் ஒருவன் தினமும் சாக்லேட் திருடி சாப்பிடுகிறான்! அதை அங்கு வேலை செய்யும் எம் எஸ் பாஸ்கரின் மூர்த்தி என்கிற பாத்திரம் கண்டுபிடிக்கும்போது, மூர்த்தியை திசை திருப்புவதற்காக மூர்த்தியின் மனைவி ராஜிக்கும் அவள் தன் சொந்த தம்பியைப்போல் கருதும் அப்பாவி கிருஷ்ணாவுக்கும் கள்ளக்காதல் இருப்பதாகச் சொல்லுகிறான். அதைமட்டும் வைத்துக் கொண்டு தான் மிகவும் நேசிக்கும் கிருஷ்ணாவை பகைக்க ஆரம்பிக்கும் மூர்த்தி, அவனையும் அவனது குழந்தையையும் பிரிக்க தன்னால் முடிந்தவை அனைத்தையும் மிக தந்திரமாக செய்கிரார். நீதிமன்றத்தில் ஆஜராகி அங்கேயும் கிருஷ்ணாவுக்கு எதிராக பேசி கடைசியில் பெரிய ஒரு திருப்பத்துடன் ஒரு நல்லவராக மாறி கிருஷ்ணாவுக்கு ஆதரவாக பேசுகிறார். எப்படி? 

குழந்தைகள் மீது பேரன்பு கொண்ட, குழந்தைக் கல்வியை முற்றிலுமாக மாற்றியமைக்க அவதரித்திருக்கும் அமலா பால் நடிக்கும் தாளாளர் ஸ்வேதா பாத்திரம் தன் பள்ளியின் குழந்தைகள் மீது யாராவது கோபப்படுவதைக் கூட தாங்க முடியாதவர். ஆனால் அந்த அம்மா தன் காதலனேயே ஒரு அடியாளாக மாற்றி அந்த பச்சைக்குழந்தையை அதன் அப்பாவிடமிருந்து பிரிப்பதும் குழந்தையை உனக்கு தரமுடியாது என்று அந்த அப்பாவியை அடித்து துரத்துவதும் எந்தவகையான திரைக்கதை உத்தி? ஒரு திடீர் திருப்பமாக அங்கு வந்து சேரும் ஸ்வேதாவின் அப்பா, எம் ஜி ஆர் படங்களில் வரும் நம்பியாரின் கெட்ட பாத்திரங்கள் செய்வதுபோல் முதலில் நல்லவனாக நடித்து கிருஷ்ணாவையும் குழந்தயையும் கூட்டிச் சென்று, சென்னை 30 கி மீ என்றெழுதியிருக்கும் மைல்க் கல்லுக்கரிகில் அந்த வாயில்லா ஜீவனை தன் வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு அவன் குழந்தையை அபகரிக்க வைப்பதன் நோக்கம் என்ன? தமிழ் சினிமாவை மீண்டும் அதன் இழந்த காலத்துக்கு அழைத்துச் செல்வதா இல்லை தொலைக்காட்சி கண்ணீர் தொடர் பார்த்தும் அழுகை வராமல் கஷ்டப்படும் பெண் உள்ளங்களை அழவைப்பதா? 

அந்த கணனி வரைகலை கதைப்பாட்டுக் காட்சியில் கிருஷ்ணா ஒரு பேராண்மை வாலிபனாக, பேரழகனாக, போர் வீரனாக, அதிமானுடனாக காட்சியளிக்கிறார்! அதில் டைனோசர் முதல் அனகொண்டா வரைக்கும் வந்து போகுது! அதையெல்லாம் பார்த்த பின்னரும் கிருஷ்ணாவுக்கு கற்பனை சக்தி அறவே இல்லை, அவனுக்கு மூளை வளர்ச்சியே இல்லை என்பதை பார்வையாளர்கள் நம்பித்தான் தீரணுமா? 

பாஷ்யத்துக்கும் ஒரு சின்னக்குழந்தை இருக்கிறது. அதற்கு இரவில் ஜுரம் வந்தால் கொடுக்க ஒரு குரோசின் மருந்து கூட அந்த மகா அஇவாளியின் வீட்டில் இல்லை! அதைக்கூட நிலா.. அவலாஞ்சி.. ஊட்டி.. சாக்லேட்.. இவைத் தவிர வேறு எதுவும் தெரியாத கிருஷ்ணா, நள்ளிரவில் தன்னை அடைத்துப் போட்டிருக்கும் அறையின் கதவை உடைத்து வெளியேறி, அடியாள்களிடமிருந்து தப்பித்து நொடிநேத்தில் எங்கிருந்தோ கொண்டுவரவேண்டியிருக்கிறது! கிட்த்தட்ட ஒரு நிழல் உலக தலைவன்மாதிரி இருக்கும் பாஷ்யத்தின் வாட்டசாட்டமான அடியாள்களால் சரியாக நடக்கக் கூடத்தெரியாத கிருஷ்ணாவை தடுத்து நிறுத்தவே முடிவதில்லை! கிருஷ்ணாவுக்கு என்னத்தான் மூளை வளர்ச்சி இல்லாமலிருந்தாலும் விக்ரம் ஒரு உச்ச நட்சத்திரம். அடியாள்களால் அவரை எளிதில் தொடமுடியுமா? என்ன?

கிருஷ்ணாவின் மூளை வளர்ச்சியில்லாத நாலு நன்பர்களையும் சாட்சிகளாக பாஷ்யம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகிறார். அது செல்லாது என்று எதிர் வழக்கறிஞர் அனுராதா சொல்லும்போது ‘சரி அப்படியானால் மூளை வளர்ச்சி உள்ள சாட்சியை ஆஜர்ப்படுத்துகிறேன் என்று சொல்லித்தான் மூர்த்தியை ஆஜர்படுத்துகிறார். அது முதலிலேயே செய்திருக்கலாம் தானே? அந்த கணமே நீதிமன்றத்தை ஏமாற்றியமைக்காக பாஷ்யத்தை என்றென்றைக்குமாக நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற முடியும் என்பதெல்லாம் இப்படத்தை எழுதி இயக்கியவருக்கு தெரியவேயில்லையா! நீதிமன்ற நடவடிக்கைகளை விடுங்கள், மனித உறவுகள், உணர்வுகள், மூளைக்குறைபாடுகள் உள்ள மனிதர்களின் வாழ்க்கை என எதைப்பற்றியுமே அவருக்கு எந்தவொரு நுட்பமான பார்வையோ அவதானிப்புகளோ இருப்பதற்கான அடையாளம் எதுவும் இப்படத்தில் தென்படவேயில்லை! 

ஒரு நேபாள் குழந்தையின் முக அமைப்பு கொண்ட சின்ன சாரா என்கிற அந்த அழகுக் குழந்தையின் நாவில் ஒரு குழந்தை ஒருபோதும் பேச வாய்ப்பில்லாத நீங்க உங்க அப்பா கூட இருக்கலாம், நான் என் அப்பா கூட இருக்கக் கூடாதாபோன்ற மேதாவித்தனம் மிகுந்த வசனங்களை தயக்கமில்லாமல் நிரப்புகிரார் இயக்குநர். இருந்தும் அக்குழந்தையின் நடிப்பு அசாத்தியமானது. அத்துடன் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் அனுஷ்காவின் அழகும் மட்டும்தான் இப்படத்தின் குறிப்பிடக்கூடிய அம்சங்கள். 
 
 
 
பலநாட்கள் பார்க்காமல் இருந்த தன் அன்பு அப்பவிடம், அப்பா என்ற கதறலுடன் அந்த குழந்தை ஓடி வந்து கட்டியணைத்தால் இந்த உலகத்தின் எந்த நீதிமன்றமும் அக்குழுந்தையை தடுக்கப்போவதில்லை. ஆனால் தெய்வத் திருமகள் நாடகத்தில் அது சாத்தியமில்லை! வழக்கறிஞர்களின் சரமாரியான வார்த்தைப் போரின் நடுவில் அந்த அப்பாவும் குழந்தையும் வாய் பேசாத ஊமைகளைப்போல், நாடகத்தனமான பின்னணி இசையின் உதவியுடன் அதீதமான சைகை மொழியில் ஏதேதோ பேசுகிராற்கள். வழக்கறிஞர்களின் அனல் பறக்கும் விவாதங்களுக்கு காதே கொடுக்காமல் நீதிபதி அக்காட்சியை பார்த்து ரசிக்கிரார். திரை அரங்கில் பலர் கண்ணீர் வடிக்கிறார்கள். அதுதான் போலும் நாம் தவறாமல் பார்க்க வேண்டிய தெய்வத் திருமகளின் அந்த கடைசி இருபது நிமிடங்கள்! 

விவாதத்தின் கடைசியில் வழக்கறிஞர் பாஷ்யம் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு உற்றுப் பாற்கிறார் நீதிபதி! ஆம்! இப்படத்தில் நீதிபதி அல்ல, வழக்கறிஞர் தான் தீர்ப்பு சொல்லுகிறார்! குழந்தை அதன் அப்பாவுடன் போவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று! அவ்வாறாக நள்ளிரவில் தன் குழந்தைக்கு குரோசின் மருந்து வாங்கிக் கொடுதத்மைக்கு தனது நன்றியை கிருஷ்ணாவுக்கு காணிக்கையாக்குகிரார் போலும் பாஷ்யம்!

படம் இன்னும் முடியவில்லை. நீதிமன்ற வாதாட்டங்களுக்கிடையில் தன் குழந்தயை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க தன்னை விட பல சிறப்புகள் உள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள் என்று உணரும் கிருஷ்ணா, தன் உயிரான நிலாவை தன்னிடமிருந்து அடியாள்களை வைத்து பறித்த அந்த சித்தியிடமும், ஊர் பேர் தெரியாத தன்னை நடுசாலையில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற, இரக்கமே இல்லாத அவளது அப்பாவிடமும் தானாகவே கொண்டு சென்று ஒப்படைக்கிறார். ஒரு தொலைக்காட்சிக் கண்ணீர்த் தொடரின் பலபகுதிகளை ஒரே அடியாக பார்த்துவிட்டதைப் போன்ற கண்ணீர் மகிழ்ச்சியில் தாயுள்ளங்களும் தந்தை உள்ளங்களும் திரை அரங்கிலிருந்து வெளியேறும்போது அங்கு இருள்மட்டும்தான் மீதமிருக்கிறது.
 
Thanks: http://musicshaji.blogspot.com/

Tuesday, July 19, 2011

நிராசையின் தினத்தில்...



நிராசையின் தினத்தில்
என் உள்ளங்கையையே
நான் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்

நான் அதற்கு முன்பு
அந்தக் கைகளைப் பார்த்ததே இல்லை
என்பது போல


நான் பார்ப்பதை
ஒரு கணம் தவறவிட்டாலும்
அது என்னுடைய கைகளாக
இல்லாமல் போய்விடும்
என்பதுபோல


நான் பார்க்கும்போதே
அதன் ரேகைகள்
இடம்மாறுகிறதா என்று


நான் பார்க்காதபோது
அந்தக் கைகள்
என்னைப் பார்க்கிறதா என்று


நிராசையின் தினத்தில்
நமக்குப் பார்ப்பதற்கு
நமது கைகளைத் தவிர
வேறு எதுவுமே இல்லாமல் போய்விடுகிறது



மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதையைப் படித்த போது மறுமையின் நினைவுகளே மனதுக்குள் எழ ஆரம்பித்தன. பின்னர் வெறுங்கைகளோடு இப்படித்தான் நிற்க வேண்டி வருமோ என்ற அச்சம் மனதெங்கும் பரவத் தொடங்கிற்று...


 

Monday, July 11, 2011

ஒரு சிறிய தனிமை



இப்போது சிறிது நேரத்திற்கு
ஒரு சிறிய தனிமை
கிடைத்திருக்கிறது
நான் அதை
உனக்கு முழுமையாக அளிக்கிறேன்

நீ அதை
அவ்வளவு விரும்பினாய்
எத்தனையோ முறை
திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறாய்
இப்போது நான் அதை
உன் கைகளில் தரும்போது
உனக்கு மிகவும் திகைப்பாக இருக்கிறது
அது ஒரு அபூர்வமான
பிராணியைப் போல இருக்கிறது
உனக்கு அதைக்
கைகளில் எப்படித் தொட்டு எடுப்பது
எனத் தெரியவில்லை
அது நழுவிச் செல்கிறது
உன்னைக் கொஞ்சம் பயப்பட வைக்கிறது

இந்தத் தனிமை
அவ்வளவு பெரியதல்ல
ஒரு சாளரத்தைப்போன்றது
ஒரு சின்னஞ்சிறு துவாரத்தைப்
போன்றதாகக்கூட இருக்கலாம்
அது இரவாக இருந்தால் கொஞ்சம் நிலவொளியும்
அது பகலாக இருந்தால் கொஞ்சம் சூரிய ஒளியும்
உனக்குக் கிடைக்கும்
மேலும்
அந்தத் தனிமை
உனக்கு என்ன பருவத்தில் கிடைக்கிறதோ
அந்தப் பருவத்தின் விசேஷங்களில்
ஏதேனும் ஒரு துளி
உன்னை வந்தடைந்துவிடலாம்
ஆனால் நீயோ வேறொன்றை யோசிக்கிறாய்
அந்த சிறிய துவாரத்தின் வழியாக
நீ வாழ்வின் வேறொரு பக்கத்திற்கு
சென்றுவிட விரும்புகிறாய்
அது அப்படி நடப்பதில்லை என்று
உறுதியாகத் தெரிந்தபிறகும்
நீ அதைத்தான் திட்டமிடுகிறாய்

திடீரென கிடைக்கும்
சிறிய தனிமை
ஏராளமானவற்றைத் திட்டமிட வைக்கிறது
ஏராளமான வழிமுறைகளைப் பரிசீலிக்கச்செய்கிறது
நாம் எதற்கும் தரவேண்டிய
நியாயமான நேரத்தைத் தருவதே இல்லை
ப்ரொஜக்டரில் நமது சினிமா
வேகமாக ஓட்டப்படுகிறது
அதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது
சிறிய நுட்பமான விஷயங்கள்
தவறவிடப்படுகின்றன
நாம் அந்தத் திரையைவிட்டு
எப்படியாவது வெளியே வந்துவிடமாட்டோமா
என்று நமக்கு மூச்சுத் திணறுகிறது

திடீரென கிடைக்கும்  தனிமையில்
நாம் கொஞ்சமாகவே வாழ்கிறோம்
ஆனால்
அதை நிறைய பார்க்கிறோம்
நிறையப் பதிவுசெய்துகொள்கிறோம்
பிறகு அதைப்பற்றி
நிறைய கற்பனை செய்கிறோம்
உண்மையில் அது நமக்கு
ஒரு நீண்ட வாழ்க்கைபோல தோன்றிவிடுகிறது
சகலத்தையும் பார்த்துவிட்டதுபோல
களைத்துப் போய்விடுகிறோம்

ஒரு சிறிய தனிமை என்பது
ஒரு அமுதத்தைளப்போல
நமது நாக்கில் படிகிறது
ஆனால் வெகு நீண்டகாலத்திற்கு
நமது உடல்களை
அது நஞ்சாக்கிவிடுகிறது

Manushya Puthiran

Thanks to Manushya Puthiran's Notes



Monday, June 20, 2011

நாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா?


சில வருடங்களாகிவிட்டன. சென்னையில் உள்ள நாரத கானசபாவில் ஒரு ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. இளந்தலைமுறைப் பாடகரான சஞ்சீவ் அபயங்கர் பாடிக்கொண்டிருந்தார். கச்சேரி நன்றாக இருந்தது. பெரிய உணர் வெழுச்சிகள் அடைவது குறைவாக நேர்ந்தாலும் தேர்ந்த குரலில் முற்றிலும் சுருதி சுத்தமாகப் பாடக்கூடியவர் சஞ்சீவ். தடைக ளில்லாமல் பிரவாகித்து ஓடும் ஒரு ஆற்றினைப் போன்றது அவரது பாடும் முறை.

என் பக்கத்தில் ஹிந்துஸ்தானி இசையில் அதிக ஈடுபாடு கொண்ட நண்பர் ஒருவர் அம்ர்ந்திருந்தார். அவர் தன்னுடைய நண்பர் ஒருவரையும் அழைத்து வந்திருந்தார். கச்சேரி இடைவேளையின்போது நான் அவரிடம் அரங்கில் இருந்த மோசமான ஒலியமைப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ஒலியமைப்பின் பிரச்சினைகளினால் இது போன்ற இதமான இசைகூட எப்படி எரிச்சலூட்டுவதாக மாறிவிடுகிறது என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அப்பொழுது அந்த நண்பர்தான் ஒரு புது சி டி பிளேயரை 2500 ரூபாய்க்கு வாங்கியதாகவும் அதைத் தேர்வு செய்வதற்கு தன்னுடன் வந்துள்ள நண்பர்தான் உதவி செய்தார் என்றும் தெரிவித்தார். என் அனுபவத்தில் அன்றைக்கு 2500 ரூபாய்க்குக் கிடைக்கும் சி டி பிளேயர் என்றால் நிச்சயம் தரக்குறைவான ஒரு உள்ளூர்த் தயாரிப்பாகத்தான் இருக்கும். அதில் பாட்டுக் கேட்பது தேர்ந்த இசை ரசனை உள்ளவர்களுக்கு நாராசமான அனுபவம். அத்தகைய ஒரு பிளேயர் வாங்குவதற்கு எதற்கு ஒரு நண்பரின் உதவி என்று வேறு தோன்றியது.

 ஐந்தாயிரம், ஆறாயிரம் ரூபாய்க்கு நல்லதாக ஒரு மினி ம்யூசிக் சிஸ்டம் வாங்கியிருந்தால் அதில் எல்லா வகையான குறுந்தட்டுகளையும் கேட்க வும் பார்க்கவும் முடியுமே என்று நான் ஆலோசனை சொன்னேன். அது என் நண்பருடன் வந்திருந்தவருக்கு எரிச் சலை உண்டுபண்ணியிருக்க வேண்டும். அவர் வேண்டா வெறுப்புடன், நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் ஒரே பெட்டிக்குள் பொருத்திய காம்போ (Combo) ம்யூசிக் சிஸ்டம்கள் பற்றித்தானே. அதில் இசை கேட்பது கர்ணகடூரமாக இருக்கும். அது இசையின் உயிரையே வாங்கி விடும் என்றார்.எனக்கு வியப்பாக இருந்தது. இந்த மனிதன் சிறந்த ஒலியுடன் இசை கேட்பதை நுட்பமாக அறிந்து வைத்துக் கொண்டுதான் பேசுகிறார். ஆனால் எதற்காக 2500 ரூபாய்க்கு மலிவான சி டி பிளேயர் வாங்கியிருக்கிறார் என்று யோசித்தபடியே என்ன பிளேயர் வாங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் உடனே மரான்ட்ஸ் (Marantz) என்றார். அதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து போனேன்.

மரான்ட்ஸ் என்பது உலகின் சிறந்த ஆடியோ சி டி பிளேயர் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. விலையுயர்ந்த ரகம். 2500 ரூபாய்க்கு அது எப்படிக் கிடைத்தது என்று கேட்டேன். நண்பர் அதை இரண்டாம் விற்பனையில் (Second Hand) வாங்கியதாகச் சொன்னார். இப்போது எனக்குப் புரிந்தது! பல சமயம் இத்தகைய தரமான ஒலிக்கருவிகள் இரண்டாம் விற்பனையில் எளிதாகக் கிடைக்கின்றன. இசையின் ஒலிநுட்பம் அறிந்த ஒருவரின் உதவியுடன் இத்தகைய சிறந்த கருவிகளை குறைவான விலையில் வாங்கிவிடவும் முடியும்.

அப்படித்தான் அவர்களும் வாங்கியிருப்பார்கள் என்று புரிந்தது. நான்தான் அதைப் புரிந்து கொள்ளாமல் பேசியிருக்கிறேன் என்று நொந்தபடியே நானும் இசையின் சிறந்த ஒலிக்கான தொடர்ந்த தேடல் கொண்டவன் என்றும் இது போன்ற கருவிகளைத் தேடி வாங்கி இசை கேட்கக் கூடியவன் என்றும் விவரித்தேன். ஆனால் அவர்களிடம் சலனமேயில்லை!

ஹை-ஃபை (Hi - Fi) ஹோம் ஆடியோ சிஸ்டம் அல்லது வீடுகளில் பொருத்தப்படும் சிறந்த ஒலியமைப்புக் கருவிகளைப் பற்றி ஓரளவு அறிந்திருக்கிறேன், இந்தத் தொழில்நுட்பம் குறித்து மும்பையிலிருந்து வெளியாகும் ஆங்கில இதழான ஏ வி மாக்ஸில் (AV Max) இசை குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என்பதையெல்லாம் விளக்க முயன்றேன். அவர்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றே தோன்றியது. ஒருவேளை நான் காம்போ சிஸ்டம் வாங்குங்கள் என்று சிபாரிசு செய்ததை வைத்து என்னை இந்த விஷயத்தில் எதுவும் தெரியாதவன் என்று அவர் நினைத்திருக்கலாம்.

உண்மையில் ஹை-ஃபை (Hi - Fidelity) ஒலி என்றால் என்ன? அதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அதை விளக்குவது சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்றாலும் ஒலியின் தொழில்நுட்பம் குறிக்கும் ஆங்கில வார்த்தைகளையும் பெயர்களையும் ஏராளமாகப் பயன்படுத்தாமல் அதை விளக்க முடியாது என்கிற சிக்கலும் இருக்கிறது. ஒருவேளை நான் அதற்குள் எப்படிச் சென்றேன் என்பதை அறிந்து கொள்வதன் வழியே நீங்களும் ஹை-ஃபை ஒலி பற்றித் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.


நானும் நீண்டகாலம் ஒரு வாக்மேன் அல்லது சாதாரண கேசட் / சி டி பிளேயரில்தான் இசை கேட்டுக் கொண்டிருந்தேன். எதிலிருந்து கேட்டால் என்ன, எல்லாம் இசைதானே என்ற மனோபாவமே எனக்கும் அப்போது இருந்தது. ஆனாலும் கூட 3000 வாட்ஸ் PMPO, 5000 வாட்ஸ் PMPO, Extra Bass, Dynamic Sound என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் ம்யூசிக் சிஸ்டம்களுக்கு எதாவது ஒரு பெரிய சிறப்பு இருக்கும் என்றும் அத்தகைய ஒன்றை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றும் ஓர் ஆசை உள்ளூர இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் அப்போதெல்லாம் அவைகளின் விலை எட்டமுடியாததாக இருந்தது.

ஒருவழியாக 1997 இல் பெரிய சோனி (Sony) ம்யூசிக் சிஸ்டம் ஒன்றை வாங்கினேன். அதில் ஒரே நேரம் மூன்று குறுந்தகடுகளையும் இரண்டு ஒலிநாடாக்களையும் சுழல விடலாம். வி சி டியும் போட்டுப் பார்க்கலாம். 3000 வாட்ஸ் PMPO என்ற பளபளா ஸ்டிக்கர் ஒன்று அதன் மீது பெரிதாக ஒட்டப்பட்டிருந்தது. அதை பர்மா பஜாரில் பத்தொன்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். அப்போதைய என் வசதிக்கு அது ஒரு மாபெரும் தொகை!

மிகச்சிறந்த ம்யூசிக் சிஸ்டம் ஒன்றை வாங்கிவிட்ட உச்சபட்ச சந்தோஷத்தில் அதை ஒரு ஆட்டோவில் ஏற்றி வைத்துக் கொண்டு ஆட்டோகாரன் கேட்ட தொகையை பேரம் பேசாமல் தருவதாகச் சொல்லியபடியே வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். வழியில் ஒரு போலீஸ்காரன் மடக்கி இது வெளிநாட்டுப் பொருள், இதை வாங்கியதற்கு முறையான ரசீது வேண்டும் என்று கேட்டார். அது அவரது வேலையில்லை என்று சண்டை போட வேண்டும் என்று மனதில் தோன்றிய போதும் அப்போதிருந்த சந்தோஷத்தில் போலீஸ்காரருக்கு 50 ரூபாய் கையூட்டு தந்து விட்டு அவசரமாக வீட்டிற்குக் கிளம்பினேன்.

புதிய ம்யூசிக் சிஸ்டம் வைப்பதற்காகவே உயரமான மேடை ஒன்று தயார் செய்தேன். அதில் வைத்துப் பார்ப்பதே ஆனந்தமாகவிருந்தது. கொஞ்சம் கூட தூசு படியாமல் அதைத் துடைத்துக் கொண்டேயிருந்தேன். சில நாட்கள் வெளியே கூடச் செல்லாமல் பகலும் இரவும் அதில் இசை கேட்டபடியே இருந்தேன். மூன்று குறுந்தட்டுகளும் இரண்டு ஒலிநாடாக்களும் மாறி மாறி முடிவில்லாமல் சுழன்று கொண்டேயிருந்தன. ஆனால் சில நாட்களிலேயே அதன் உரத்து அதிரும் ஒலி தெளிவற்றதும் சுவாரசியமில்லாததுமாக எனக்குப் பட்டது. அதில் இசை கேட்கும் ஆர்வம் வடிந்து போனது. அந்த ஒலியை விட என்னுடைய பழைய சிறிய ப்ளேயரின் ஒலிதான் நன்றாக இருப்பது போல் தோன்ற ஆரம்பித்தது.

மெல்ல நான் எப்போதும் இசை கேட்கும் பழைய பிளேயருக்கு மாறத் துவங்கினேன். ஓரிரண்டு மாதத்தில் எனது மூவாயிரம் வாட்ஸ் ம்யூசிக் சிஸ்டத்திலிருந்து முற்றிலுமாக நான் விலகிப் போனேன். எப்போதாவது அதில் வி சி டி போட்டு படம் பார்ப்பது கூட மோசமான அனுபவமாகவே மாறிப்போனது. 6 மாதம் முடியும் முன் தூசு படிந்து கிடந்த அந்த இசைப் பெட்டியை கிடைத்த விலைக்கு விற்றுவிட்டேன்.

நான் பணியாற்றிக் கொண்டிருந்த இசை நிறுவனத்தின் வேலைகளுக்காக அடிக்கடி ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கே கேட்கும் ஒலியின் பிரமிக்க வைக்கும் தரத்தைக் கேட்டு அதன் ஒரு சதவிகிதம் கூட வீட்டில் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உருவாகும். அந்த ஒலிப்பதிவுக் கூடங்களின் வடிவமைப்பில் பொருத்தியிருக்கும் முறையான ஒலித்தடுப்பான்கள் மற்றும் அதிநுட்ப ஒலிக்கருவிகள் தான் அந்தச் சிறந்த ஒலிக்குக் காரணம் என்று அறிந்திருந்தேன். சில ஒலிப்பதிவுக் கூடங்களின் ஒலியின் தரம் மோசமாக இருப்பதையும் உணர்ந்தேன்.
 
இப்படி ஒலியின் மேலான எனது கவனம் அதிகரிக்கத் துவங்கிய நாட்களில் நான் எங்கள் அலுவலகத்தில் இருந்த ம்யூசிக் சிஸ்டத்தைக் கூர்ந்து கவனித்தேன். அதில் கேசட் ப்ளேயர், சி டி ப்ளேயர், ஆம்பிளிஃபையர், ஸ்பீக்கர்கள் என எல்லாம் தனித்தனியாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் தயாரிப்பாகவும் இருந்தது. இரண்டு சிறிய ஸ்பீக்கர்களிலிருந்து மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் அதன் ஒலி வெளிப்பட்டது. அதில் இசை கேட்பது எனக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக மாறியது.

ஒரு நாள் மகேந்திரா என்ற நபரை தற்செயலாகச் சந்தித்தேன். அவர் ஸ்பீக்கர்கள் மற்றும் ஒலி உபகரணங்களின் விற்பனை மற்றும் பொருத்துதல் செய்து வருபவர். அவரோடு பேசிக்கொண்டிருந்த போது அவரது பிரதான விருப்பம் வீட்டிற்குப் பொருத்தமான ஹை-ஃபை சவுண்ட் சிஸ்டம்களை உருவாக்கி பொருத்தித் தருவதும் சிறந்த ஒலிக்கான ஆலோசனைகள் வழங்குவதும்தான் என்று அறிந்து கொண்டேன். தன் ‘ஆடியோ லேபு’க்கு அவர் என்னை அழைத்தார்.

ஆழ்வார்பேட்டையில் இருந்த மகேந் திராவின் வீட்டுக்குச் சென் றேன். எங்கே பார்த்தாலும் ஒரே ஆடியோ உபகரணங்களாகவே கிடந்தன. பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த, விதவிதமான அளவுகளில் உள்ள ஸ்பீக்கர்கள், ஆம்பிளிஃபையர்கள், கே சட் ப்ளேயர்கள் மற்றும் எனக்கு இனம் தெரியாத பல்வேறு ஒலிக்கருவிகள்... அதில் பெரும்பான்மை ஒருமுறை யாவது உபயோகபடுத்திய பின் விற்பனைக்கு வந்திருப்பவை. அவைகளில் பார்த்த பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் நான் முன் ஒருபோதும் அறியாதவை.

எங்கு பார்த்தாலும் ஒயர்களும் ஒலிக்கருவிகளுமாக நிரம்பியிருந்த தனது சோதனைக் கூடத்திற்குள் மகேந்திரா என்னை அழைத்துச் சென்றார். அங்கே மூன்று அடுக்குகளில் மூன்று வகையான ஒலிக் கருவிகளின் வரிசைகள் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு ஸ்பீக்கர் இணைப்புகள். துல்லியமாக இசை எதில் கேட்க முடிகிறது என்பதை அறிந்து கொள்ள ஒன்றுக்குப்பின் ஒன்றாக இரண்டு மாறுபட்ட ஆடியோ சிஸ்டம்களில் இசை கேட்க வேண்டும் என்று சொன்னார்.

அவர் ஒரு சி டி யை எடுத்து முதல் அடுக்கில் இருந்த பிளேயரில் போட்டார். அது சுழலத் துவங்கியதும் தெளிந்த பியானோ இசை இனிமையாகப் பீறிட்டது. அவ்வளவு துல்லியமாகவும் தரமாகவும் அதன் முன்பு நான் இசையைக் கேட்டதேயில்லை! மற்ற இரண்டு அடுக்குகளில் இருந்த வேறுபட்ட ஒலிக்கருவி வரிசைகளில் அதே சி டி யைக் கேட்டபோது முன்பு கேட்டதை விடவும் தெளிவாகவும் தரமாகவும் அந்த இசை ஒலித்தது. குறுந்தகட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த மெல்லியதும் மிக நுட்பமானதுமான எல்லா ஒலிகளும் இனிமையாக என் காதுகளுக்குள் நிறைந்து வழிந்தன. எனக்குப் பிடித்தமான பல மேற்கத்திய இசை மற்றும் இந்திய இசைப் பாடல்களை ஆசை அடங்காமல் போட்டுப் போட்டுக் கேட்டுக் கொண்டே யிருந்தேன்.

அங்கிருந்து வீட்டிற்கு வந்த பிறகும் இசையின் அந்த ஒலி அனுபவம் எனக்குள்ளாகவே அதிர்ந்து கொண்டிருந்தது. மகேந்திரா பரிந்துரைத்த இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு ஸ்டீரியோ ஆம்பிளிஃபையரை உடனடியாக விலைக்கு வாங்கினேன். ஒருமுறை உபயோகப்படுத்திய பின் விற்பனைக்கு வந்தவைதான். ஆனாலும் அது எனக்கு பட்ஜெட்டில் அடங்காத பெரும் செலவு. எல்லாவற்றையும்விட சிறந்த ஒலியுடன் இசையைக் கேட்க வேண்டும் என்ற வெறி தான் மேலோங்கியது. தரமான ஒலிக் கருவிகளில் மட்டும்தான் சரியாக இசை கேட்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன். அன்றிலிருந்து அத்தகைய கருவிகளின் ரசிகனும் ஆய்வாளனுமாக நானும் மாறிவிட்டேன்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒலிக் கருவிகளில் கேட்கும் இசையின் தரமானது பதிவுசெய்யப்பட்டதின் பாதியைக் கூட எட்டுவதில்லை. அந்த இசையில் உள்ளடங்கியுள்ள பல்வேறு நுட்பமான ஒலிகளைத் துல்லியமாகப் பிரித்துக் கொடுப்பதற்கு இந்தக் கருவிகளால் சாத்தியமில்லை. பெரும்பாலானோர் பாடல்வரிகள் புரியுமளவுக்குக் கேட்பதையே இசை கேட்பதாக நினைத்து திருப்தி கொண்டுவிடுகிறார்கள். பலர் காதுகளுக்கு ஒரு பாடல் என்பது அதன் முக்கிய மெட்டும் மொத்தமான ஒரு ஒலியும்தான். அதன் நுணுக்கங்கள் எதுவும் அவர் காதுகளில் விழுவதில்லை.

ஆனால் சிலரது காதுகள் மிக நுட்பமானவை. அவை ஒவ்வொரு சிறு இசைஒலிகளையும் பிரித்து அறிந்து ரசிக்கக் கூடியவை. அவர்கள் தாங்கள் கேட்கும் இசையுடன் அதன் ஒலியையும் தங்கள் நினைவில் தேக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களால் இசையின் ஒலித் தரத்தைப் பிரித்துப் பார்க்க முடியும். உடனடியாக எது துல்லியமான ஒலி என்பதை அடையாளம் கண்டுவிடவும் முடியும். இப்படிப்பட்டவர்களை ஆங்கிலத்தில் ஆடியோஃபைல் (Audiophile) என்று சொல்வார்கள். இவர்கள் மிகச் சிறந்த ஒலிக் கருவிகளில் மட்டுமே இசை கேட்பதை விரும்பக் கூடியவர்கள். இசை கேட்பதன் ஒலிநுட்பமும் அதன் தொழில்நுட்பமும் அறிந்தவர்கள்.

தரமான இசைஒலியை அடைவதற்குத் தரமான பல்வேறு வகைப்பட்ட ஒலிக்கருவிகள் மிக அவசியம். அவை ஒவ்வொன்றையும் இணைக்கும் ஒயர்களின் தரம் கூட அந்த ஒலியின் தரத்தைத் தீர்மானிக்கக்கூடும். பெரும்பாலும் இந்தக் கருவிகளில் ஒவ்வொன்றுமே வேறு வேறு நிறுவனங்களின் தயாரிப்பாகத் தான் இருக்கும். வெகுஜன மத்தியில் பெரும் புகழ்பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் எதுவுமே பெரும்பாலும் ஆடியோ ஃபைல் தரத்துக்கு ஏற்றவையாக இருப்பதில்லை. பொதுவில் இத்தகைய கருவிகள் வெகுஜன ஊடகங்களில் விளம்பரப்படுத்தி விற்கப்படுவதுமில்லை. மாறாக இவைகளின் விபரங்களும் விளம்பரங்களும் கொண்ட தனிப்பட்ட இதழ்கள் ஆடியோஃபைல்களுக்காக உலகெங்கும் வெளிவருகின்றன. Hi-Fi, What Hi-Fi, Home Sound News, Home Cinema, Stereophile, AV Max போன்றவை உதாரணங்கள். பிரத்தியேகமான கடைகளில் மட்டும்தான் இத்தகைய கருவிகள் விற்கப்படுகின்றன. அவை ஆடியோஃபைல்களால் தேடிக் கண்டு பிடித்து வாங்கப்படுகின்றன.

விலை நிலைக்குத் தகுந்தாற் போல தரமான ஒலிக்கருவிகளின் வரிசையை ஆரம்ப`நிலை, மத்திய நிலை, உச்ச நிலை என மூன்று நிலைகளில் பிரிக்கலாம். தேவையும் பொருளாதார வசதியும் வைத்து இந்த உபகரணங்களில் எதைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்யலாம். இவற்றில் பலதின் விலை சில சொகுசுக் கார்களின் விலையைவிட அதிகம் என்பது சாதாரணமான விஷயம். பல கோடி ரூபாய்கள் விலைமதிப்புள்ள பல ஒலிக்கருவிகளும் உள்ளன.

ப்ளேயர், ஆம்ப்ளிஃபைர், ஸ்பீக்கர்கள் இவை அடங்கிய ஒரு ஆரம்ப நிலை ஒலிக்கருவி வரிசையின் விலை ஐம்பதாயிரம் வரைக்கும் இருக்கக் கூடும். இரண்டாம் விற்பனையில் வாங்கினால் இருபதாயிரம் ரூபாய்க்கு ஒரு ஆரம்ப நிலை ஒலிக்கருவி வரிசையை உருவாக்கலாம். மத்திய நிலையில் இது ஒரு லட்சம் தாண்டலாம். உச்சநிலை ஒலிக்கருவி வரிசை ஒன்று பத்து லட்சத்துக்கு மேல் விலைபோகலாம். வீட்டில் சினிமா பார்க்க உதவும் பல உயர்தர ஹோம் தியேட்டர் ஒலிக்கருவிகளின் விலை ஒரு உயர்தொழில்நுட்ப டிவியின் விலையைவிடப் பல மடங்கு அதிகமானது. இந்தக் கருவிகள் கச்சிதமாகவும் மிக அழகாகவும் வடிவமைக்கபட்டவையும்கூட.


பலவிதமான ஒலிக்கருவி வரிசைகளிலும் விலை உயர்ந்த ஸ்பீக்கர்களிலும் நான் இசையைக் கேட்டிருக்கிறேன். விலைக்கு ஏற்ப ஒலியின் தரம் உயர்ந்திருப்பதை அறிந்துமிருக்கிறேன் என்றாலும் எப்போதுமே விலைக்கு ஏற்றாற்போல ஒலியின் தரம் உயர்ந்து நிற்கும் என்று சொல்ல முடியாது. சில சமயம் ஐம்பதாயிரம் ரூபாயின் கருவிகள் ஐந்து லட்சத்தின் கருவிகளைவிட சிறந்த ஒலி படைப்பதை கவனித்திருக்கிறேன். நாம் இசை கேட்கும் அறையின் வடிவமைப்புடன் பொருந்திப்போகும் துல்லியமான ஒலிக்கருவிகளை அடையாளம் கண்டு, தேர்ந்தெடுத்து சரியாகப் பொருத்துவது தான் விலையை விட இதில் மிக முக்கியமானது.

இசையின் ஒலியை தரத்தோடு ரசிப்பவர்கள் ஆடியோ சி டி மற்றும் எப் எம் ரேடியோ அல்லது வினைல் இசைத்தட்டுகள் போன்றவற்றிலிருந்து மட்டும்தான் இசை கேட்க விரும்புகிறார்கள். எம்பி3-ஐ ஒரு இசைக் குப்பையாக கருதும் அவர்கள் ஒருபோதும் அதைக் கேட்பதில்லை, ஒத்துக் கொள்வதுமில்லை. மாறாக சூப்பர் ஆடியோ சி டி மற்றும் டி வி டியில் பதிவு செய்யப்பட்ட இசை போன்ற உயர்தொழில்நுட்ப ஒலிப்பதிவுகளில் இசை கேட்பதில்தான் அவர்கள் பெரிதும் ஆர்வம் கொள்கிறார்கள்.

சிலர் இப்போதும் பழைய காலத்து தொழில்நுட்பமான வினைல் இசைத்தட்டுகளில் இசை கேட்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நவீனத் தொழில்நுட்பத்துடன் உள்ள ரிக்கார்ட் பிளேயர்கள் இன்று ஆடியோ ஃபைல் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அதன் விலை மிக அதிகம். உதாரணமாக ரோக்சன் ஜெரெக்ஸ் (Roksan xerxes) என்ற மத்திய நிலை ரிக்கார்ட் பிளேயரின் விலை இரண்டு லட்சம். ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் விலை போகும் ரிக்கார்ட் பிளேயர்களும் உள்ளன!

நாம் டி வி டி பிளேயர்களிலேயே இசையும் கேட்க முடியும் அல்லவா? ஆனால் இவைகளில் படத்துடன் வரும் ஒலி நன்றாக இருந்தாலும் கூட இவற்றில் இசை மட்டும் பதிவு செய்யப்பட்ட குறுந்தகடுகள் சிறப்பாக இயங்குவதில்லை. சிறந்த ஒலியுடன் இசை கேட்க விரும்புபவர்கள் ஒருபோதும் இத்தகைய வீடியோ பிளேயர்களில் இசை கேட்பதில்லை. இசை கேட்பதற்கு என்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் ஆடியோ சி டி பிளேயர்களில் மட்டும்தான் அவர்கள் இசை கேட்கிறார்கள். அத்தகைய ஆடியோ சி டி பிளேயர்களின் விலை அதிகமானது. உதாரணத்திற்கு மரான்ட்ஸ் அல்லது நாட் (NAD) நிறுவனங்களின் ஆரம்ப நிலை பிளேயர்களின் விலை இருபதாயிரத்திற்கும் மேலே.

தரமான பிளேயர்களுடன் சரியான ஆம்பிளிஃபையர்கள் சிறந்த ஒலிக்கு மிக அவசியமானவை. காரணம் இவையே பிளேயர்களிலிருந்து வரும் ஒலி அலைகளைப் பிரித்து, பெருக்கி முறைப்படுத்தித் தருகின்றன. இவற்றி லிருந்துதான் ஒலிகள் மின் அலைகளாக ஸ்பீக்கர்களுக்குச் செல்லு கின்றன. இதில் செயல்படும் மின் சக்தியின் அழுத்தத்தின் அளவு RMS (Root Means Square) என்று அழைக்கப்படுகிறது. அதிக RMS என்றால் ஒலிக்கு அதிக அழுத்தமும் தெளிவும் என்று அர்த்தம். முன் சொன்ன மாதிரி பல ஆடியோ கருவிகளின் விளம்பரங்களில் PMPO (Peak Music Power Output) எனக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒலி நிபுணர்கள் மத்தியில் இதுக்கு எந்த மதிப்பும் கிடையாது. இது வெறும் கவனம் கவரும் வெறும் வியாபார உத்தி மட்டுமே.

இரண்டு சேனல் கொண்ட ஸ்டீரியோ ஆம்ப்ளிஃபையர்கள் தான் இசை கேட்பதற்கு உரியவை. ஆனால் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு உதவியாக 5.1. மற்றும் 7.1 சேனல்கள் கொண்ட மல்டி சேனல் ஆம்ப்ளிஃபையர்கள் தேவைப்படுகின்றன. டிஜிட்டில் தொழில்நுட்பம் வந்த பிறகும் பழைய வால்வ் முறையில் ஒலிபரப்பும் ஆம்ப்ளிஃபையர்களுக்கு தனித்த ரசிகர்கள் இருக்கிறார்கள். அவை தரும் ஒலியின் தரம் அபூர்வமானது என்று அவர் கூறுகிறார்கள்.

உயர்ந்த ஒலித்தரத்துடன் இசை கேட்பதில் ஸ்பீக்கர்களின் இடம் மிக முக்கியமானது. பல்வேறு தரநிலைகளில், விலைகளில் ஸ்பீக்கர்கள் ஆடியோஃபைல் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரணமாக இருபதாயிரம் முதல் ஐந்து லட்சம் வரைதான் அவற்றின் விலை என்றாலும் இரண்டு ஸ்பீக்கர்களுக்கு 45 லட்சம் ரூபாய் என்ற விளம்பரம் ஏ வி மாக்ஸில் பார்த்த ஞாபகமும் இருக்கிறது!

ஸ்பீக்கர்களை நாம் வீட்டில் பொருத்தும் போது அறையின் அளவு மற்றும் எவ்வளவு உயரத்தில் எந்த இடத்தில் அவை பொருத்தப்படுகின்றன என்பதும் முக்கியமானது. காரணம் ஒலிஅலைகள் தரையில் சுவரில் மற்றும் தடைபடும் பொருட்களின் மீதுபட்டு எதிரொலிக்கக் கூடியவை. ஆகவே சிறந்த ஒலியில் இசை கேட்பதற்கு சரியான இட அளவும் அமைப்பும் அவசியமானது. ஆகவே தீவிர இசையொலி ரசிகர்கள் தாங்கள் இசை கேட்பதற்கான அறையை விசேஷமாக வடிவமைத்துக் கொள்வதும் உண்டு.

ஒலி ரசிகர்கள் பலர் சில தரமான ஒலிக்கருவிகளைத் தேடி நாடு விட்டு நாடு போவார்கள். நேர்த்தியான ஒலியில் இசை கேட்பதற்கான அவர்களது தேடலும் ஆர்வமும் அசாத்தியமானது. ஆனால் இவரில் சிலருக்கு இசை என்பதே பல்வேறு ஒலிக் கருவிகளை சோதித்து பார்ப்பதற்கான ஒரு சோதனைப் பொருள் மட்டும்தான். எப்படி ஒலி உபகரணங்களின் திறனை அதிகப்ப டுத்துவது என்ற சிந்தனையே அவர்களது பிரதான வேலை. ஆகவே அதன் இணைப்பில் புதிது புதிதாக ஏதாவது செய்து வித்தியாசத்தைப் பார்த்தபடியே இருப்பார்கள்.

தொடர்ந்து இசை கேட்டுவருகிற எனக்கும் இன்று சிறந்த ஒலியில் இசை கேட்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. தேடி அலைந்து சேகரித்து வந்ததின் வழியாகவே இன்று தரமான ஒரு ஒலிக் கருவி வரிசையை நானும் வைத்திருக்கிறேன் என்று சொல்லலாம். ஆனாலும் அதில் என் மனது முழுத் திருப்தி கொள்ளவில்லை. இருக்கிறதைவிடத் தரமானதாக இன்னொரு ஒலிக்கருவியை, இன்னொரு இணைப்பை மனம் தேடிக் கொண் டேயிருக்கிறது. சிறந்த இசைஒலிக்கான தேடுதல் என்பது முடிவற்றது. இது பல சமயம் நம்மை அலைக்கழிக்கத்தான் செய்யும். ஆனால் அலைக்கழிப்பதும் இசையின் தன்மைகளில் ஒன்றுதானே.
 
 
 
இன்றுள்ள ஆடியோஃபைல் சந்தைக்காகப் பல்வேறு நிறுவனங்கள் அதி நவீன ஒலியமைப்புக் கருவிகளைத் தயாரித்து வழங்குகிறார்கள். இதில் எந்த மாடல் தரமானது, எப்படி அதைத் தேர்வு செய்வது என்பது குழப்பமானது.
ஆனாலும் சிறந்த ஒலியில் இசை கேட்க விரும்புபவர்களுக்கு
நான் சிபாரிசு செய்யும் சில பிராண்டுகள் (Brands) இவை

CD Players: Arcam, Cyrus, Primare, Marantz, NAD, Cambridge Audio
DVD Players : Denon, Arcam, Meridian, Marantz, Pioneer, Samsung
2 Channel Amplifiers : Halcro, Denon, Rotel, Quad, Primare, Densen, Vincent, Harman Kardon
Multi Channel Amplifiers : Primare, Rotel, Sherwood, Marantz, NAD, Onkyo, Yamaha
Speakers: Dynaudio, B&W, Anthony Gallo, PSB, Dali, Mission, Mordaunt Short, Monitor Audio, Tannoy, Wharfedale, Wilson, Mission

என் ஒலிக்கருவி வரிசை
Marantz 4001- CD Player, Samsung HD 860- DVD Player, Haraman Kardon HK 3550 - 2 Channel Amplifier, Yamaha RX 363 - Multi Channel Amplifier, Mordaunt Short Avant - Floor standing Speakers, Cambridge Audio - Book shelf Speakers.

 ஷாஜி

தமிழில்: எஸ் ராமகிருஷ்ணன்

from-http://musicshaji.blogspot.com






Friday, June 3, 2011

உன்னோடு போராடி...



ஒன்றை நினைக்கும்போது இன்னொன்று மறந்துவிடுகின்றது. இன்னொன் றை நினைக்கும்போது மற்றொன்று நினைவுக்கு வந்துவிடுகின்றது. சீ! மனது இப்படியேதான். எதையாவது நினைத்துக்கொண்டும் வருத்திக் கொண்டும்தான் இருக்கின்றது.

எல்லோரும் தன் பாழாய்ப்போன மனதை நினைத்து வருந்துவதுண்டு. அத னைக் கடிந்து கொள்வதுண்டு. உள்ளுக்குள் இருந்துகொண்டு ஒரு கைப் பிடியளவு மனதால் எவ்வளவெல்லாம் செய்ய முடிகின்றது. எந்தப் பெரிய மனிதனையும் இதயம் தனது கால்களுக்குக் கீழே வைத்துக்கொள்கிறது.

அன்றாடவாழ்வில் அத்தனைப் போராட்டங்களையும் மனதுதான் தொடக்கி வைக்கின்றது. சந்தோசத்தை, நிம்மதியை, கவலையை, காயங்களை அதுதான் வரைகின்றது. ஒரு சிரிப்பைப் பரிசளிக்கவும் ஒரு கண்ணீர்த் துளியை வரவழைக்கவும் அதனால் முடிகின்றது.

எப்போதும் மனது எதையாவது ஏவிக் கொண்டுதான் இருக்கின்றது. ஒரு தவறைச் செய்ய, பொய்யைச் சொல்ல, மற்றவனைத் தப்பாய் நினைக்க... என்று எல்லாப் பாவங்களையும் அது ஏவுகின்றது. பின் அவனை அதில் ஈடுபட வைத்து விடுகின்றது. எல்லா மனிதர்களும் தம் வாழ்நாளில் இந்த மனதின் ஏவுதல்களுக்குப் பதிலளித்துத்தான் வாழ்கின்றார்கள். பலருக்கு இந்த மனதின் ஏவுதல்கள் ரொம்பப் பிடித்தமான செயல்கள். எப்போதும் அது தீமையின் பக்கம் அழைத்துக்கொண்டே இருக்கின்றது. யாராவது பதில ளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்னொரு நிலையில் மனது எல்லோரையும் கண்டித்துக் கொண்டே இருக்கின்றது. நமது எந்தச் செயலையும் அது ஒருமுறை நிறுத்தி விசாரணை செய்கின்றது. எமது செயல் களுக்கும் மனசாட்சிக்குமிடையில் எப்போதும் ஒரு ரகசிய உரையாடல் நிகழ்கின்றது. மனி தன் புரியும் தவறுகளை உடனே தட்டிக் கேட்கும் தலைமையதிகாரிதான் மனசாட்சி என யாரோ எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நிலையில் எமக்கு பாவங் களை ஏவுகின்ற மனது இன்னொரு நிலை யில் எம்மை நிந்திக்கவும் செய்கின்றது.

இப்பொழுது இரண்டு நிலையில் ஒரு பேராட்டம் உருப்பெற்று விடு கின்றது. மனது ஒன்றைச் செய் என்கின்றது. அதேவேளை, வேண் டாமென்றும் சொல்கின்றது. செய்வதா இல்லையா என்ற இரு நிலையின் முடிவு கைசேதத்தில் முடிகின்றது. அல்லது மகிழ்ச்சியில் ஆரம் பமாகின்றது.

இன்னொரு நிலையில் மனது நிம்மதியாக இருக்கின்றது. தவறுகளோடு மனசாட்சி போராடி வெற்றிபெறுகின்றபோது இந்த நிலையை அடைய முடிகின்றது. இதுவொரு கலங்கமற்ற நிலை. நிர்மலமான வானம்போல வசீகரம் நிறைந்தது.

இந்த மனதுடையவர்களுக்குத்தான், சுவனம் பரிசாகக் கிடைக்கின்றதென எண்ணத் தோன்றுகின்றது.

திருப்தியடைந்த ஆத்மாவே நீ திருப்தியடைந்த நிலையில் உனது இறைவனின் பக்கம் மீள்வாயாக’ (பஜ்ர்: 28)

ஒரு முறை வாழும் இந்த வாழ்க்கையில் நாம் நினைத்தாலும் விடை பெற்றுக்கொள்ள முடியாது. ஒதுங்கி நின்று பார்வையாளனாகவும் இருக்க முடியாது. வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

வாழ்க்கைப் போராட்டத்தில் எல்லோரும் சிக் கித்தான் இருக்கின்றோம். ஒவ்வொருத்தருக் கும் ஒவ்வொரு வாழ்க்கை; ஒவ்வொரு போ ராட்டம். எல்லோரும் போராட்டத்திலிருந்து விடுபடவே நினைக்கிறார்கள். அதன்பிறகே தான் நினைத்திருக்கும் வாழ்வை வாழ வைத் திருக்கிறார்கள். இருப்பினும், அந்தப் போ ராட்டம் முடிவதே இல்லை.

வாழ்வோடு போராடுவது தான் விதி என்று இ ருக்கும்போது நாம் எப்படி அதனை விதி விலக்காக்க முடியும்? ஒரு பிரபஞ்ச நியதியை மீற யாருக்கும் முடியாது. நியதி என்பது ஏற்றுக்கொள்ளத்தான். மறுப்ப தற்கல்ல. பிரபஞ்ச நியதியை ஏற்றுக் கொள்ளும் மனிதன் தன்னோடு போ ராடவும் துணிய வேண்டும்.

இப்போராட்டம் சூரியன், சந்திரன், இரவு, பகல், வானம், பூமி போன்றவற்றை விடப் பெரியது. எனவேதான், இறைவன் இவற்றில் எல்லாம் சத்தியம் செய்துவிட்டுச் சொல்கின்றான்; ‘தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தியவன் வென்றுவிட்டான்.’ (ஷம்ஸ்: 09)


அடிக்கடி உருமாறும் மேகம்போலத்தான் மனதும். மூன்று நிலைகளில் அது மாறிக் கொண்டே இருக்கின்றது. மனதின் இந்த மாற்றத்தை மனிதனால் நிறுத்த முடியும். வெறுமனே அதனை நினைப்பதால் நிறுத்த முடியாது. போராடித்தான் நிறுத்த வேண்டும்.

மண்ணில் போராடுவதற்கும் மண்ணாலான மனதோடு போராடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. மனப் போராட்டம் என்பது ஆயுளில் இறுதி வரை இருப்பது.ஆழ்கடலின் அமைதி மனதுக்குள் வர வேண் டுமானால், தீமையை ஏவுகின்ற மனதோடும் மனசாட்சியோடும் போ ராடித்தான் ஆகவேண்டும்.

ஒருவனுக்குத் தன் வாழ்க்கையில் மிகக் கஷ்டமான விடயம் இதனைவிட வேறொன்று இருக்க முடியாது. களையும் மேகங்களை களையவிடாமல் இருக்கச் செய்வது மாதிரியான ஒரு செயல் தான் மனதைப்பக்குவமாக வைத்துக் கொள்வது.


இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளன் மிகுந்த அன்பாளன், எல்லையற்ற கருணையாளன். எமது போராட்டத்தில் நாம் தோல்வியுறும்போது மன் னிப்பைப் பெற்றுக்கொண்டு மறுபடி போராடச் சொல்கிறான். தன் எல்லா நிலைகளிலும் இறைவனுக்கு அஞ்சுபவனே இந்த உலகில் கண்ணியமா னவன். மனதை வைத்துதான் ஒரு மனிதனை நாம் அளவிட முடியும். ஒன்றுமட்டும் நிச்சயம், திருப்தியடைந்த மனிதனின் வாழ்க்கை இரு உலகத்திலும் முன்பனிக்காலத்தின் அதிகாலை போல கலங்கமற்றிருக்கும். ஒரு கவிஞன் இப்படி எழுதினான்.

வானின் உயரம் சிறகின்உயரம்         

வாழ்வின் உயரம் மனதின் உயரம்

மனிதன் திசைகள் நான்குதானே

மனதின் திசைகள் நூறடா.


(இம்மாத வைகறை இதழில் வெளியானது)










Thursday, June 2, 2011

ஷெல் சில்வர்ஸ்டைன் கவிதை


சிலவேளைகளில் நான் ஸ்பூனைத் 

தவறவிட்டுவிடுகிறேன் என்றான் சிறுவன்

நானும் அப்படிச் செய்வதுண்டு என்றார் கிழவர்

சிறுவன் முணுமுணுத்தான்

டவுசரிலே மூத்திரம் பெய்துவிடுகிறேன்,

நானும் கூட அப்படித்தான் என்று சிரித்தார் கிழவர்

நான் அடிக்கடி அழுகிறேன் என்றான் சிறுவன்

நானும் அப்படியே செய்கிறேன் 

என்று தலையாட்டினார் கிழவர்

எல்லாவற்றையும்விட மோசம் ,

பெரியவர்கள் என்பிரச்சனைகளைக்

கண்டுகொள்வதேயில்லை

என்றான் சிறுவன்

சுருக்கம்விழுந்த கைகளின் இதமான

அரவணைப்பை அச்சிறுவன்உணர்ந்தான்
 
நீ சொல்வதை என்னால் புரிந்து 

கொள்ளமுடிகிறது என்றார் அந்தச் சிறிய கிழவர்


from:www.sramakrishnan.com


Wednesday, May 11, 2011

இரண்டு துறவிகள் ஆற்றைக் கடக்கிறார்கள்...


ஒரு நாள் இரண்டு துறவிகள் ஒரு பயணம் சென்று கொண்டிருந்தார்கள். இடையில் ஒரு ஆறு குறுக்கிட்டது.அப்போது அங்கே ஒரு பெண் நின்று கொண்டிருந்தால். இந்த ஆற்றைக் கடக்க உங்களால் எனக்கு உதவ முடியுமா என்று இருவரிடமும் கேட்டால். ஒருவர் தயங்கிப் பின் நின்றார். மற்றவரோ உடனே அவளை தனது முதுகில் ஏற்றிக் கொண்டு போய் அடுத்த கரையில் விட்டார்.

மறுபடி பயணம் தொடங்கியது.மற்றத் துறவிக்கு இச் செயல் ஆச்சரியமாகவே இருந்தது.தான் பேசாமல் இருக்க முயன்றும் அவரால் முடியவில்லை.தன் மௌனத்தை உடைத்து மற்றத் துறவியிடம் 'சகோதரரே! எமது ஆன்மீகமோ பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கற்றுத் தருகிறது. நீரோ அப் பெண்னை முதுகில் வைத்தீரே! எனக் கேட்டார்.

அதற்கு மற்றத் துறவி 'சகோதரரே! நான் அவளை அந்தக் கரையிலேயே வைத்து விட்டேன். நீங்களோ இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்களே! என்றார்.


இணையத்தில் வாசித்ததும் மொழிபெயர்த்தேன்.உங்களுடனும் பகிர நினைத்து...