Friday, August 12, 2011

நீராலான வாழ்வு...

 
இந்த உலக வாழ்க்கை பற்றி நினைப்பதற்கு மனிதனுக்கு நேரம் கிடைப்ப தேயில்லை. அதனால் அவன் தனது வாழ்வின் யதார்த்தம் பற்றி கவலை கொள்வதேயில்லை. எப்படியோ தனக்குப் பிடித்த மாதிரி வாழ்வை அமைத்துக் கொள்கிறான். பின் வாழ்க்கையின் கடிவாளத்தை அதனிடமே விட்டு விடு கிறான். வாழ்க்கை தனது பாட்டிற்கு அவனை அழைத்துச் செல்கிறது.

உலக வாழ்வின் தொய்ந்து போன ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தப்படுத்திக் கொள்ள மனிதன் அதிக பிரயத்தனம் எடுக்கிறான்.உழைப்பதாலும் உண்பதாலுமே அதனை சாத்தியப்படுத்தலாம் என நினைக்கிறான்.உழைத்து உண்டு கொண்டு நோய் ஏற்படுகின்ற போது மருந்துகளைப் பாவித்துக் கொண்டால் மரணத்திலிருந்து தப்பிவிடலாம் என அவன் நினைக்கிறான்.

தன் பொக்கிஷமாக நினைத்து வாழந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவன் கொண்டாடிக் கொண்டிருக்கிறான்.அதன் ஏகாந்தத்தில் அலைந்து திரிகிறான்.மனைவி,பிள்ளை,குடும்பம் என ஒரு நித்திய உறவை அவன் கட்டமைத்துக் கொண்ருக்கிறான்.பின் அவனது வாழ்வில் இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன.உறங்குதலின் சுகத்தை நினைத்து அவன் மகிழ்கிறான்.விழித்தலின் கஷ்டத்தை அவன் கடிந்து கொள்கிறான்.

ஏராளமான எண்னங்களும் நினைவுகளும் அவனது உள்ளத்தில் நிறைந்திருக்கின்றன.இருப்பினும் தனக்கு மேலிருக்கும் வானத்தையும் தான் வாழும் பூமியையும் பார்த்து ரசிப்பதற்கோ மலர்களை ஸ்பர்ஷிக்கவோ அனைத்தையும் படைத்தவனை நினைக்கவோ அவனது ஞாபகப் பரப்பில் தோன்றுவதே இல்லை.

இந்த வாழ்வின் புற அழகில் அவன் வீழ்ந்து போய்க்கிடக்கின்றான்.அதனது வசீகரம் அவனைக் கட்டிப் போட்டிருக்கின்றது.இதனால் எல்லாவற்றையும் நினைக்கும் மனதை அவன் நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றான்.அவனது ஆன்மாவின் கதவுகளை அவன் இதுவரை திறந்து பார்த்த தேயில்லை. அதனுடன் உரையாடியதும் இல்லை,அதன் தேவைகளைக் கேட்டதும் இல்லை. இதனால் அது ஒரு பாழடைந்த வீடு போலவே காட்சியளிக்கின்றது.

எனவே அவன் வாழ்க்கையின் சுவையை இன்னும் அறியவேயில்லை. வாழ்கையின் அழகியலை அவன் மனதுக்கு வெளியே காண்கிறான். வானவில்லைக் கண்டு வானம் வண்ணம் என்று சொல்வது போலத்தான் இதுவும்.

இந்த வாழ்வின் நிச்சயமின்மையை அவன் அறியவில்லை.அது முடிந்து போகக் கூடியது என்பதனை அவன் உணரவில்லை.எனவே படைத்தவனை வணங்குவதை விட ஒரு ஐஸ் பழம் அவனுக்கு இனிமையாக இருக்கின்றது.
 
போட்டிபோடுகின்றவர்கள் (சுவன விடயத்தில்) போட்டி போட்டுக் கொள் ளட்டும்.  (ஸூரா முதப்பிபீன்-26)
 


2011-08ம் மாத இஸ்லாமிய சிந்தனை இதழில் வெளியானது


No comments:

Post a Comment