ஒன்றை நினைக்கும்போது இன்னொன்று மறந்துவிடுகின்றது. இன்னொன் றை நினைக்கும்போது மற்றொன்று நினைவுக்கு வந்துவிடுகின்றது. சீ! மனது இப்படியேதான். எதையாவது நினைத்துக்கொண்டும் வருத்திக் கொண்டும்தான் இருக்கின்றது.
எல்லோரும் தன் பாழாய்ப்போன மனதை நினைத்து வருந்துவதுண்டு. அத னைக் கடிந்து கொள்வதுண்டு. உள்ளுக்குள் இருந்துகொண்டு ஒரு கைப் பிடியளவு மனதால் எவ்வளவெல்லாம் செய்ய முடிகின்றது. எந்தப் பெரிய மனிதனையும் இதயம் தனது கால்களுக்குக் கீழே வைத்துக்கொள்கிறது.
அன்றாடவாழ்வில் அத்தனைப் போராட்டங்களையும் மனதுதான் தொடக்கி வைக்கின்றது. சந்தோசத்தை, நிம்மதியை, கவலையை, காயங்களை அதுதான் வரைகின்றது. ஒரு சிரிப்பைப் பரிசளிக்கவும் ஒரு கண்ணீர்த் துளியை வரவழைக்கவும் அதனால் முடிகின்றது.
எப்போதும் மனது எதையாவது ஏவிக் கொண்டுதான் இருக்கின்றது. ஒரு தவறைச் செய்ய, பொய்யைச் சொல்ல, மற்றவனைத் தப்பாய் நினைக்க... என்று எல்லாப் பாவங்களையும் அது ஏவுகின்றது. பின் அவனை அதில் ஈடுபட வைத்து விடுகின்றது. எல்லா மனிதர்களும் தம் வாழ்நாளில் இந்த மனதின் ஏவுதல்களுக்குப் பதிலளித்துத்தான் வாழ்கின்றார்கள். பலருக்கு இந்த மனதின் ஏவுதல்கள் ரொம்பப் பிடித்தமான செயல்கள். எப்போதும் அது தீமையின் பக்கம் அழைத்துக்கொண்டே இருக்கின்றது. யாராவது பதில ளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்னொரு நிலையில் மனது எல்லோரையும் கண்டித்துக் கொண்டே இருக்கின்றது. நமது எந்தச் செயலையும் அது ஒருமுறை நிறுத்தி விசாரணை செய்கின்றது. எமது செயல் களுக்கும் மனசாட்சிக்குமிடையில் எப்போதும் ஒரு ரகசிய உரையாடல் நிகழ்கின்றது. மனி தன் புரியும் தவறுகளை உடனே தட்டிக் கேட்கும் தலைமையதிகாரிதான் மனசாட்சி என யாரோ எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நிலையில் எமக்கு பாவங் களை ஏவுகின்ற மனது இன்னொரு நிலை யில் எம்மை நிந்திக்கவும் செய்கின்றது.
இப்பொழுது இரண்டு நிலையில் ஒரு பேராட்டம் உருப்பெற்று விடு கின்றது. மனது ஒன்றைச் செய் என்கின்றது. அதேவேளை, வேண் டாமென்றும் சொல்கின்றது. செய்வதா இல்லையா என்ற இரு நிலையின் முடிவு கைசேதத்தில் முடிகின்றது. அல்லது மகிழ்ச்சியில் ஆரம் பமாகின்றது.
இன்னொரு நிலையில் மனது நிம்மதியாக இருக்கின்றது. தவறுகளோடு மனசாட்சி போராடி வெற்றிபெறுகின்றபோது இந்த நிலையை அடைய முடிகின்றது. இதுவொரு கலங்கமற்ற நிலை. நிர்மலமான வானம்போல வசீகரம் நிறைந்தது.
இந்த மனதுடையவர்களுக்குத்தான், சுவனம் பரிசாகக் கிடைக்கின்றதென எண்ணத் தோன்றுகின்றது.
‘திருப்தியடைந்த ஆத்மாவே நீ திருப்தியடைந்த நிலையில் உனது இறைவனின் பக்கம் மீள்வாயாக’ (பஜ்ர்: 28)
ஒரு முறை வாழும் இந்த வாழ்க்கையில் நாம் நினைத்தாலும் விடை பெற்றுக்கொள்ள முடியாது. ஒதுங்கி நின்று பார்வையாளனாகவும் இருக்க முடியாது. வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
வாழ்க்கைப் போராட்டத்தில் எல்லோரும் சிக் கித்தான் இருக்கின்றோம். ஒவ்வொருத்தருக் கும் ஒவ்வொரு வாழ்க்கை; ஒவ்வொரு போ ராட்டம். எல்லோரும் போராட்டத்திலிருந்து விடுபடவே நினைக்கிறார்கள். அதன்பிறகே தான் நினைத்திருக்கும் வாழ்வை வாழ வைத் திருக்கிறார்கள். இருப்பினும், அந்தப் போ ராட்டம் முடிவதே இல்லை.
வாழ்வோடு போராடுவது தான் விதி என்று இ ருக்கும்போது நாம் எப்படி அதனை விதி விலக்காக்க முடியும்? ஒரு பிரபஞ்ச நியதியை மீற யாருக்கும் முடியாது. நியதி என்பது ஏற்றுக்கொள்ளத்தான். மறுப்ப தற்கல்ல. பிரபஞ்ச நியதியை ஏற்றுக் கொள்ளும் மனிதன் தன்னோடு போ ராடவும் துணிய வேண்டும்.
இப்போராட்டம் சூரியன், சந்திரன், இரவு, பகல், வானம், பூமி போன்றவற்றை விடப் பெரியது. எனவேதான், இறைவன் இவற்றில் எல்லாம் சத்தியம் செய்துவிட்டுச் சொல்கின்றான்; ‘தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தியவன் வென்றுவிட்டான்.’ (ஷம்ஸ்: 09)
அடிக்கடி உருமாறும் மேகம்போலத்தான் மனதும். மூன்று நிலைகளில் அது மாறிக் கொண்டே இருக்கின்றது. மனதின் இந்த மாற்றத்தை மனிதனால் நிறுத்த முடியும். வெறுமனே அதனை நினைப்பதால் நிறுத்த முடியாது. போராடித்தான் நிறுத்த வேண்டும்.
மண்ணில் போராடுவதற்கும் மண்ணாலான மனதோடு போராடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. மனப் போராட்டம் என்பது ஆயுளில் இறுதி வரை இருப்பது.ஆழ்கடலின் அமைதி மனதுக்குள் வர வேண் டுமானால், தீமையை ஏவுகின்ற மனதோடும் மனசாட்சியோடும் போ ராடித்தான் ஆகவேண்டும்.
ஒருவனுக்குத் தன் வாழ்க்கையில் மிகக் கஷ்டமான விடயம் இதனைவிட வேறொன்று இருக்க முடியாது. களையும் மேகங்களை களையவிடாமல் இருக்கச் செய்வது மாதிரியான ஒரு செயல் தான் மனதைப்பக்குவமாக வைத்துக் கொள்வது.
இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளன் மிகுந்த அன்பாளன், எல்லையற்ற கருணையாளன். எமது போராட்டத்தில் நாம் தோல்வியுறும்போது மன் னிப்பைப் பெற்றுக்கொண்டு மறுபடி போராடச் சொல்கிறான். தன் எல்லா நிலைகளிலும் இறைவனுக்கு அஞ்சுபவனே இந்த உலகில் கண்ணியமா னவன். மனதை வைத்துதான் ஒரு மனிதனை நாம் அளவிட முடியும். ஒன்றுமட்டும் நிச்சயம், திருப்தியடைந்த மனிதனின் வாழ்க்கை இரு உலகத்திலும் முன்பனிக்காலத்தின் அதிகாலை போல கலங்கமற்றிருக்கும். ஒரு கவிஞன் இப்படி எழுதினான்.
வானின் உயரம் சிறகின்உயரம்
வாழ்வின் உயரம் மனதின் உயரம்
மனிதன் திசைகள் நான்குதானே
மனதின் திசைகள் நூறடா.
(இம்மாத வைகறை இதழில் வெளியானது)
ஒரு முறை வாழும் இந்த வாழ்க்கையில் நாம் நினைத்தாலும் விடை பெற்றுக்கொள்ள முடியாது. ஒதுங்கி நின்று பார்வையாளனாகவும் இருக்க முடியாது. வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
ReplyDeleteNice.....