Friday, January 11, 2019

இனவாதம் தோற்றுப் போன ஒரு கோஷம் - இயக்குநர் அசோக ஹந்தகம



அசோக ஹந்தகம சர்வதேச அரங்கில் நன்கு அறியப்பட்ட இலங்கையின் முக்கிய திரைப்பட இயக்குநர். களனிப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் இங்கிலாந்தின் Warwick பல்கலைக்கழகத்தில்  அபிவிருத்திப் பொருளியலில் முதுகலைமாணிப் பட்டத்தை பெற்றுக் கொண்ட இவர் பல்வேறு கலைப்படைப்புக்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.இவரது திரைப்படங்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் பல விருதுகளை வென்றிருக்கின்றன.தொலைக்காட்சி நாடகம் மேடை நாடகம்,சினிமா என பல தளங்களில் இவர் தொடர்ந்தும் இயங்கி வருகிறார்.அதே நேரம் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகப் பணியாற்றுகிறார்.
சந்திப்பு – இன்ஸாப் ஸலாஹுதீன்


1.கலைத்துறையுடனான உங்களது தொடர்பு சிறுவயதிலிருந்தே இருந்த ஒன்றா?

நான் உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையில் படித்தேன் அப்போதுதான் நாடகம் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.பாடசாலைக் காலத்தில் நான் தயாரித்த இரண்டு நாடகங்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டன.இது நாடகத்தின் மீதான ஈடுபாட்டையும் தேடலையும் அதிகப்படுத்தியது.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான பின்னரும் நான் நாடகத்தைக் கைவிடவில்லை.கல்வி நடவடிக்கைகளோடு நாடகம் தயாரிக்கவும் செய்தேன்.பல்கலைக்கழகத்தில் தயாரித்த ஒரு நாடகம் இளைஞர்களுக்கான நாடக விழாவில் சிறந்த நாடகமாக தெரிவு செய்யப்பட்டது.அதன் பிறகு தொலைக்காட்சி நாடகம்,மேடை நாடகம்,சினிமா என எல்லைகள் விரிந்தன.

2.ஏன் நாடகத்துடன் சம்பந்தப்பட்டீர்கள்?குடும்பத்தில் அதற்கான பின்புலம் இருந்ததா?

குடும்பத்தில் அத்தகைய நேரடியான தொடர்பு எதுவும் இருந்ததில்லை. ஆனால் எனது பாட்டன் நாடகம் செய்திருக்கிறார் என தந்தையும் ஊராரும்  சொல்லிக்கேட்டிருக்கிறேன்.ஆனால் அவற்றைப் பார்த்ததோ படித்ததோ இல்லை.
எனது தந்தை கட்டடத் திணைக்களத்தில் பணியாற்றினார்.அவருக்கு ஓவியத்தில் ஈடுபாடு இருந்தது.அவர் நன்றாக ஓவியம் வரைவார்..எனது முதல் ஊடகமும் ஓவியம்தான்.இது தவிர வேறு அனுபவங்கள், தொடர்புகள் இருக்கவில்லை.இந்தப் பின்புலத்தின் நீட்சியாகக் கூட நான் இருக்கலாம் அல்லவா?

3.கணிதம், பொருளாதார அபிவிருத்தி துறைகளில் படித்த நீங்கள் அதே துறையில் தொழில் செய்து கொண்டு கலைத்துறையிலும் ஈடுபடுகிறீர்கள். தொழிலிலும் கலைமுயற்சிகளிலும் நீங்கள் எப்படி சமனிலை பேணுகிறீர்கள்?

கணிதம் என்பது எனது மூளைக்கு ஒரு பயிற்சியாக அமைந்தது.நாடகம் ஒன்றை உருவாக்கும் போது அதனை கட்டமைத்துக் கொள்ள கணிதம் உதவியாக இருந்தது.
1985 இல் ஹென என்று ஒரு நாடகம் தயாரித்தேன்.டீ.பி நிஹால்சிங்க அதனைப் பார்த்துவிட்டு அதன் கட்டமைப்பு ஜ்யோமெட்ரிகல் போலிருக்கிறது என்று சொல்லியிருந்தார்.
நான் மத்திய வங்கிக்கு வந்த பிறகுதான் பொருளாதாரத்துறையில் படிக்க ஆரம்பித்தேன்.இதனால் ஒரு பிரச்சினையை பார்ப்பதற்கு இன்னும் ஒரு கோணம் எனக்குக் கிடைத்தது.எனவே எனது பார்வைக் கோணம் இன்னும் விசாலமானது.

ஒரு சுயாதீன நிறுவனத்தில் இந்தத் தொழில் வாழ்க்கை எனக்கு திருப்தி தருகிறது..எனது கலை வாழ்க்கைக்கு இது ஒரு தடையாக அமையவில்லை.இரண்டு துறைகளும் ஒன்றினால் இன்னொன்று போஷிக்கப்படுகிறது. 

4.போர்ச் சூழல் மற்றும் போருக்குப் பிந்திய நிலமைகள் குறித்து எடுக்கப்பட்ட படங்கள் போருக்கான காரணங்கள் குறித்து ஆழமாக விவாதிக்கவில்லை என்ற ஒரு கருத்து இருக்கிறது.இது குறித்து என்ன சொல்கிறீர்கள்.

இந்தக் கருத்து எந்த நியாயத்தின் அடியாகச் சொல்லப்படுகிது என்று எனக்குத் தெரியாது.அப்படிச் சொல்வதற்கான காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

யாரும் யுத்தத்தைப் பற்றி அதன் கொடூரங்களைப் பற்றி பேசாத சந்தர்ப்பத்தில்தான் நாம் அதனைப் பேச ஆரம்பித்தோம். எமக்கிருந்த வரையறைகளுக்குள் நாம் அவற்றைப் பேசினோம்.அதனால் பிரச்சினைகளும் வந்தன.நாம் அவற்றை எதிர்கொண்டோம்.எமது திரைப்படங்கள் சர்வதேச அரங்கில் கவனத்தைப் பெற்றன.
இனிஅவன் திரைப்படத்தில் முரண்பாட்டுக்குப் பிந்திய நிலையின் யதார்த்ததைப் பற்றிப் பேசினேன்.அப்போது இது உண்மையில்லை.இப்படியான விடயங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பினர். நான்கு அல்லது ஐந்து வருடங்கள் சென்ற பின் அந்த விடயங்கள் உண்மையாகின.
எனவே இருக்கின்ற நிலைமைகளை வைத்து எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்பதையே நாம் கூற முற்பட்டோம்.
பிரச்சினைக்குரிய காரணங்களை ஆழமாகத் தொடவில்லை என்று யாராவது அதற்குரிய நியாயங்களுடன் முன்வைப்பார்களாயின் உரையாடத் தயாராக இருக்கிறேன்.

5.சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்ப்பதில் இலங்கை போன்ற நாட்டில் கலையின் வகிபங்கு என்ன?கலைஞர்களுக்குள்ள பொறுப்பு என்ன? 

கலைக்கு செய்ய முடியுமான நிறை விடயங்கள் இருக்கின்றன. சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவது அரசியல் ரீதியாக செய்ய வேண்டிய ஒன்று.அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களை மனோரீதியாக தயார்செய்யும் பணிக்கு கலை உதவ முடியும்.மக்களை விழிப்புணர்வூட்டுவதை கலைகளுக்குச் செய்ய முடியும்.அதை நாம் முடியுமானளவு செய்து கொண்டிருக்கிறோம்.
ஒரு கலைஞன் மக்களின் சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்துகிறான்.ஒரு படைப்பின் ஊடாக ஒருவரின் சிந்தனையில், உணர்வில் மாற்றம் ஏற்படுகிறது இது பொசிடிவ் ஆக இருக்கும் போது அப்படிச் செய்யும் சமூகப் பொறுப்பும் கலைஞனுக்கு இருக்கிறது.
கலைஞர்களுக்கு இனவாதத்தை பரப்பும் வகையில் செயலாற்ற முடியும் கடந்த காலங்களில் அப்படி நடந்ததுதானே? இது சமூகத்தை அழிவுக்குச் கொண்டு போய்ச் சேர்க்கிறது.30 வருடகால  யுத்தம் முடிந்த பின்னர் அதனுடன் சம்பந்தப்பட்ட மக்களுக்கு மத்தியில் சகவாழ்வை ஏற்படுத்துகின்ற வகையில் செயலாற்றும் பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கிறது.

6.பேசப்படாத சமூகப் பிரச்சினைகளை சினிமாவாக மாற்றும் போது ஏன் அதன் மீது தணிக்கையின் நிழல் விழுகிறது?உங்கள் படங்களுக்கும் அது நடந்திருக்கிறது.தணிக்கைகளுக்கு முன் கலை மனம் வீழ்ச்சியடைகிறதா?
 
தணிக்கை என்பது வரலாற்று நெடுகிலும் இருந்து வருகின்ற ஒன்று. கலைஞர்கள் நிபந்தனையற்ற கலைக்காக எப்போதும் முன் நிற்க வேண்டும்.நிபந்தனைகளை உடைத்துக் கொண்டு செல்லும் சக்தி கலைக்குத்தான் இருக்கிறது.இது கலைஞனுக்கு முடிவடையாத ஒரு போராட்டம்.
ஜனநாயகம் பற்றி அதிகம் கதைக்கின்ற அமெரிக்காவிலும் முழுமையான நிபந்தனையற்ற கலை இருப்பதாக சொல்ல முடியாது.எல்லா இடங்களிலும் தணிக்கையின் கரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்காக அஞ்ச முடியாது தொடர்ந்து போராட ணே்டும்.

7.சமூக மாற்றத்திற்கு சினிமா பயன்படும் என்று நம்புகிறீர்களா?

கலை உணர்வு பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.இந்த அடிப்படையில் சமூக மாற்றத்திற்கு இதனைப் பயன்படுத்த முடியும்

8.இனி அவன் படம் தயாரிக்கும் போது ஆய்வுகளின் வழியா அனுபவங்களின் வழியா அல்லது கேள்விகளின் வழியா தமிழ் சமூகத்தின் போருக்குப் பிந்திய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டீர்கள்? 

சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்தில்  ஏ9 வீதியைத் திறந்த ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு போனவர்களுள் ஒருவன் நான்.யுத்தத்திற்குப் பிறகும் பல தடவைகள் நான் போயிருக்கிறேன்.இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நான் அங்கு நிறைய விடயங்களை புரிந்து கொண்டேன்.உள்வாங்கிக் கொண்டேன்.
யுத்தம் ஏற்படுத்திய வலியைப் புரிந்து கொள்ள ஒரு கலைஞன் யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்க வேண்டியதி்ல்லை.அதனை அவனுக்குக் கற்பனை செய்ய முடியும்
நிறைய மனிதர்களுடன் பேசி உணர்ந்து கட்டமைக்கப்பட்ட கதைதான் இனிஅவன்.யதார்த்தத்தில் தான் அது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அப்படியில்லாமல் வானத்திலிருந்து விழுந்ததல்ல.

9.இனவாதத்திற்கு எதிராக எப்போதும் நீங்கள் முன்நிற்கிறீர்கள். இலங்கையின் அரசியல் பின்புலத்தில் எதிர்காலத்தில் இனவாதம் என்பது எத்தகைய நிலையை எடுக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இனவாதம் என்பது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற ஒன்று. இதனைப் பாவித்து அதிகாரத்தை கைப்பற்ற பலர் முயல்கின்றனர். ஆனால் யுத்தத்திறகுப் பிறகு இனவாதம்  தொடர்நதும் தோல்வி கண்டே வருகிறது.இது தோற்றுப் போன ஒரு கோஷம்.இதனால் நாட்டிற்கு நல்லது நடப்பதில்லை என்பதை மக்கள் புரிந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். காலப் போக்கில் இது இல்லாமல் போய்விடும் என்று நேர்மறையாக சிந்திக்க தோன்றுகிறது.

10.சமூகப் பொருளாதார நிலமைகளுக்கேற்ப மக்களின் ரசனையும் மாறுபட்டுள்ள நிலையில் கலையின் யதாரத்தத்தை தக்க வைத்துக் கொள்வது சவாலாக மாறியுள்ளது.மக்களின் ரசனையை மேப்படுத்த என்ன செய்யலாம்.

வணிகமயப்பட்ட உலகில் மக்களின் ரசனை மாறியிருக்கின்றது என்பது உண்மைதான்.இது மிகப் பெரும் சவால்.பாடசாலையிலிருந்து இதனைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பமாக வேண்டும்.
நவீன ஊடகப் பாவனை மனிதனை இன்று வெகுவாக ஆக்கிரமித்துள்ளது.நல்ல கலையை ரசிப்பதற்கான நேரத்தையும் மனோ ரீதியான தயார் நிலையையும் இது இல்லாமல் செய்துள்ளது.இது பயங்கரமான ஒரு நிலை.இந் நிலையிலிருந்து மீள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.நல்ல கலைகளை ரசிப்பதிலிருந்து தூரமாகும்போது மனிதம் எங்களிடமிருந்து தூரமாகிறது.சமூகமும் சமூக நிறுவனங்களும் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.அரச மட்டத்திலிருந்து இதற்கான பதிலை எதிர்பார்க்க முடியாது.அவர்களுடைய தேவை வேறுமாதிரி இருக்கிறது

11.மூவர் திரைப்பட உருவாக்கம் எத்தகைய அனுபவத்தைக் கொடுத்தது?

நாங்கள் மூவரும் சிந்தனைப் போக்கில் ஒன்றாக இருந்தாலும் சினிமா அணுகுமுறையில் வேறுபட்டவர்கள்.இந்த அனுபவம் சவால் நிறைந்ததுதான்.ஏனென்றால் திரைப்படம் என்ற அடிப்படையில் ஒரு நேர்கோட்டில் இருக்கவேண்டிய அதே நேரம் தனிப்பட்ட முறையில் எமது தனித்துவத்தையும் பாதுகாத்து கதையை சொல்ல வேண்டும். பார்வையாளர்களின் வரவேற்பும் மறுமொழியும் இந்த சவாலில் வென்றிருக்கிறோம் என்பதையே சொல்கின்றன.

12.இலங்கை தமிழ் சினிமா பற்றி… 

மக்கள் ரசனைக்காகவே படம் பார்க்கின்றனர்.தென் இந்திய சினிமாவிலிருந்தே அவர்கள் சினிமாவை புரிந்து கொள்கிறார்கள்.இனி அவன்,கோமாளி கிங்ஸ் போன்ற படங்கள் அவர்களுக்கு அந்நிய சினிமாவாகவே இருக்கிறது. சினிமா என்பது பலவகைப்பட்டது. அனைத்தையும் ரசிக்கும் போது புதிய அனுபவம் கிடைக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கலை என்பது மகிழ்ச்சிக்கு அப்பாற்பட்டது.
தமது அடையாளத்தை வைத்து இலங்கையில் தமிழ் சினிமாவை உருவாக்க இப்போதுள்ள தலைமுறை பாடுபட வேண்டும்.அப்போதுதான் எதிர்காலத்தில் இதற்கான பாதை திறக்கும்.

13.சிங்கள சினிமாவின் தற்போதைய நிலை பற்றி…

சவால் நிறைந்த ஒரு காலகட்டத்தையே சிங்கள சினிமா இப்போது கடந்து கொண்டிருக்கின்றது.டிஜிடல் தொழில்நுட்பத்தின் மூலம் நிறைய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறன.அனைத்தையும் இலகுவாக நுகர முடியும் என்றான பின் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து கொள்ள முடியாத நிலை உருவகியுள்ளது.அநாவசியமான ஒன்றுக்கு அதிகூடிய முக்கியத்துவம் கிடைக்கின்றது.
சினிமாவும் அப்படித்தான் யாருக்கும் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். சினிமா அபரிமிதமான தயாரிப்புக்களால் நிறைந்துள்ளது. திரையிடுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளன.ஆனால் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கிறேன்.

14.மத்திய வங்கியில் பணியாற்றுபவர் என்றவகையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இலங்கையின் பொருளாதாரம் என்பது சவால் நிறைந்ததுதான். இறக்குமதியில்தான் எமது பொருளாதாரம் தங்கியிருக்கிறது.இதனோடு ஒப்பிடும் போது எமது ஏற்றுமதி முன்னேற்றமடையவில்லை.பாரம்பரிய விவசாய உற்பத்தியானது இலாபகரமற்றதாகி வருகிறது. நவீன விவசாய முறைக்கு நாம் மாறவில்லை.
எமது பொருளாதாரத்தில் சவால்கள் இருப்பது போன்று சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் பொருளாதாரத்தில் உள்ள சவால் நிறைந்த சூழல்.

No comments:

Post a Comment