சுமார் 600 இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இலங்கையின் சிங்களப் பாடல்களின் போக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்தவர்.தமிழ் இலக்கியத்தை சிங்கள மொழிக்கு கொண்டு செல்வதில் காத்திரமான பங்களிப்பையும் வழங்கியுள்ளார். இரண்டு மொழிகள் ஊடாக மூன்று சமூகங்களை இணைக்கின்ற ஒரு பாலமாக இவர் இருக்கிறார்.
தற்போது இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபணத்தில் விளம்பரம் மற்றும் ஊடகப் பிரிவின் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றுகிறார்.
அவருடைய 25 வருட கலை வாழ்க்கைக்கு வாழ்த்துக் கூறி இந்த நேர்காணலை மேற்கொள்கிறேன்.
நேர்காணல் – இன்ஸாப் ஸலாஹுதீன்
உங்களுடைய கலைப் பயணம் 25 வருடங்களை அடையும் இத் தருணத்தில் எப்படி உணர்கிறீர்கள்?
என்னுடைய கலைப் பயணம் 25 வருடங்களை
அடையும் இத் தருணத்தில் எனது படைப்புலகத்தை நான் திரும்பிப் பார்க்க ஆசைப்பட்டேன்.அந்தவகையில்
அதிகம் பேசப்பட்ட எனது 100 பாடல்களை High Quality Flash Drive ஆக வெளியிட நினைத்தேன்.இது
ஏனைய Flash Drive போல குறைந்த தரத்தில் பதிவு செய்யப்படுவதல்ல.ஒரு பாடல் ஒரு இறுவட்டின்
தரத்தில் பதியப்படுவது.இதுவே இலங்கையில் முதல் தடவையாக இப்படியான ஒரு Flash Drive வெளியிடப்படுகிறது.
அதே நேரம் இந்த 100 பாடல்களையும் “சரச வசன்தய“ என்ற பெயரிலேயே புத்தகமாகவும் வெளியிட
நினைத்தேன்.மேலும் நான்கு இறுவட்டுக்களையும் மக்களிடம் சேர்ப்பிப்பதன் மூலம் இப் பயணத்தை
இன்னும் அர்த்தம் நிறைந்ததாய் மாற்ற நினைத்தேன்.
இன்றைய தலைமுறையின் பாடல்கள் வெறும் மகிழ்வளிப்பு என்ற வட்டத்தில்
சுருங்கியிருக்கிறது.நாம் வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோமா?
புதிய தலைமுறை தொழில்நுட்பத்திற்கே
முதலிடம் கொடுக்கிறது. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சமே.இலக்கியத்திற்கான பெறுமானம் அவர்களிடம்
மிகவும் குறைவாகவே இருக்கிறது.இதன் விளைவுதான் இத்தகைய சீர்கேடுகள் என நாம் புரிந்து
கொள்ள முடியும்.
இந்த மாற்றம் பாடலில் மட்டுமல்ல
எல்லாக் கலை வடிவங்களிலும் வந்து கொண்டிருக்கிறது.சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கேற்ப
புதிய தலைமுறையின் ரசனை மாறுபட்டுள்ளதே இதற்கான காரணம்.
அத்தோடு புதிய தலைமுறை இலத்திரணியல்
உபகரணங்களுடனேயே தொடர்புபடுகிறது.மனிதத் தொடர்பை விட இதற்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகின்றனர்.இதனால்
மனிதம் மற்றும் இன ஐக்கியம் குறித்த பார்வையை விட்டும் அவர்கள் தூரத்தில் இருக்கிறார்கள்.
இந்த இடத்தில் எங்களுக்கு இன்னும்
ஒரு கூடுதல் பொறுப்பு வந்துவிடுகிறது.கலை இலக்கியத்தின் மேன்மையைத் தக்க வைத்துக் கொள்ள
இன்றைய சூழலில் நாம் பல்வேறு முயற்சிகளின் மூலம் போராட வேண்டியிருக்கிறது.
இத்தகைய மாற்றங்களுக்கு எல்லா
ஊடகங்களும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.கலாசாரத் திணைக்களங்கள்,ஊடகங்கள்,கல்வி அமைச்சு
என எல்லோரும் ஒன்றிணைந்து மக்களின் ரசனையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க
வேண்டும்.
இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வளர்ப்பதில் கலை இலக்கிய
முயற்சிகள் எந்தளவில் இருக்கின்றன?
இலங்கை போன்ற பல கலாசாரங்கள் பின்பற்றப்படும்
நாட்டில் அடுத்த சமூகங்களைப் பற்றிய ஒரு உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும்.அடுத்தவர்களும்
மனிதர்கள் என்ற சராசரி உணர்விலிருந்து யாரும் விலகிச் செல்ல முடியாது.
30 வருட கோர யுத்தம் ஒன்றிற்கு
நாம் முகம் கொடுத்தோம்.அது ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் தீரவில்லை.எத்தனையோ மனங்கள்
புண்பட்ட நிலையில்தான் இன்னும் இருக்கின்றன.இந்தக்
காயங்களுக்கு ஆறுதல் வேண்டாமா?
கலைஞர்களுக்கு இதில் கூடிய பங்கு
இருக்கிறது.சமூகங்களுக்கிடையிலான இடைவெளிகளை நிரப்புவது அவர்களது கடமை.அரசும் சிவில்
சமூகங்களும் இணைந்து இந்த முயற்சிகளை முன்னெடுக் வேண்டும்.தெரிகிற தூரத்தில் அத்தகைய
முயற்சிகள் இல்லாமை கவலை தருகிறது.
நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் சிங்களத் தளத்தில் பணியாற்றுகிறீர்கள்.இந்த
அனுபவம் சவால் நிறைந்த ஒன்றா?
இந்த நாட்டின் பெரும்பான்மையான
மக்கள் பயன்படுத்தும் மொழியை நான் கைக்கொண்ட பின் அந்த மூலத்தில் நானும் ஒரு அங்கமாக
ஆகிவிடுகிறேன். இந்த இடத்தில் நான் சிங்களவர் அல்ல என்பது எனக்கு விளங்குவதில்லை. என்னுடன்
தொடர்புபடும் அடுத்தவருக்கும் நான் சிங்களவர் அல்ல என்பது புரிவதில்லை.இந்தத் தடையை
உடைக்கக் கூடிய ஒரு இடத்திற்கு வர முடியுமாயின் மனிதத்தின் உயரத்திற்கு வந்துவிடலாம்
என நான் நினைக்கிறேன்
நான் ஒரு முஸ்லிமாக இருப்பது எனக்கு
ஒரு தடையாக அமையவில்லை.நான் சிங்கள மொழியிலும் இலக்கியத்திலும் நல்ல புலமை பெற்றிருக்கிறேன்.எனவே
எனது மொழியையோ அறிவையோ யாருக்கும் சவாலுக்கு உட்படுத்த முடியவில்லை.எனது பயணத்தை நான்
தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
முஸ்லிம் சமூகத்தில் கலை முயற்சிகள் மிக அரிதாகவே நடைபெறுகின்றன.இது
பற்றி சிங்களக் கலைஞர்கள் உங்களிடம் என்ன கதைக்கிறார்கள் ?
நானும் பதிலளிக்கத் தடுமாறுகின்ற
ஒரு இடம்தான் இது.முஸ்லிம் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் படியான அல்லது இஸ்லாமியக்
கலாசாரங்களை அறிந்து கொள்ளும் படியான கலை முயற்சிகளை அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
ஆனால் நாம் அவற்றை வழங்கத் தயாரக இல்லை.
இந்த இடத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு,
அதனை வழிநடத்தக்கூடியவர்களுக்கு நான் ஒருவிடயத்தை முன்வைக்க விரும்புகிறேன்.
நூறு வருடங்களுக்க முன்பு சிந்தித்தவாறு
நாம் இன்று சிந்திக் முடியாது.எமது கலாசார வரையறைக்குள் இருந்து கொண்டு எத்தனையோ கலை
வடிவங்களை நாம் தயாரிக்கலாம்.முஸ்லிம் நாடுகளில் இதற்கான முன்னுதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன.
புத்தகங்காலும் உரைகளாலும் மாத்திரம்
எமது பண்பாட்டையும் கலாசாரங்களையும் நாம் புரிய வைக்க முடியாது.உரையாடல் என்பது ஆன்மாவுடன்
நிகழ வேண்டும்.உரை,புத்தகம் என்ற வடிவங்களிலிருந்து விடுபட்டு பாடல்,நாடகம்,சினிமா
போன்ற தாக்கம் மிக்க வடிவங்களை நோக்கி நாம் நகர வேண்டும்.இல்லாத போது இடைவெளி இன்னும்
அதிகரிக்கத்தான் செய்யும்.
பெரும்பான்மை சமூகத்துடன் அதிகம் தொடர்புள்ளவர் என்றவகையில்
சிறுபான்மை சமூகங்களில் செயற்படும் கலைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எழுத்தாளன்,கலைஞன்,ஊடகவியலாளன்
என்பவன் சாதாரண மனிதனை விட ஒருபடி மேலானவன்.அவனது சிந்தனையும் மனப்பாங்கும் மாறுபட்டது.எனவே
அவன் அவனுக்கான ஒரு வாழ்க்கையை மட்டும் வாழ முடியாது.அவன் பேனையை எடுக்கும் போது சமூகப்பொறுப்பும்
வந்துவிடுகிறது. அவனுக்கு மனித மனங்களில் அதிகம் செல்வாக்கு செலுத்த முடியும்.உள்மனதுடன்
ஆழமாக உரையாட முடியும்.எனவே அவன் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
எந்த ஒரு நாட்டிலும் சிறுபான்மை
சமூகங்களுக்கு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.இவற்றுக்கு நாம் உரிய முறையில் பதிலளிக்க
வேண்டும்.
தமிழ் பேசும் கலைஞர்கள் தமது சமூகங்களின்
பிரச்சினைகளை சிங்கள சமூகத்திற்கு கொண்டு போய்ச் சேர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி
அதிகம் சிந்திக்க வேண்டும்.சிங்கள மொழி இதற்கான தடையெனில் அம் மொழியில் தேர்ச்சி பெற
வேண்டும்.
தனித் தீவுகளாக இருந்து சிந்திப்பதில்
எந்தப் பயனும் இல்லை.எனவே கலை இலக்கியங்கள் மூலம் ஏனைய சமூகங்களுடன் உரையாடுவது குறித்து தீவிரமாக சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
No comments:
Post a Comment