Thursday, January 3, 2019

என் வானம் என் சிறகு - நட்புக்காக சில வார்த்தைகள்



பயணங்கள் நம் அகக் கண்களைத் திறக்கின்றன.தனிமையிலும் சோர்விலும் சிக்கித் தவிக்கும் வாழ்விற்கு வாசிப்பு மற்றும் பயணத்தின் வழியேதான் விடுதலை கிடைக்கின்றது.ஒவ்வொரு பயணமும் புத்தகமும் பூட்டப்பட்டிருக்கும் ஒரு சாளரத்தைத் திறக்கிறது.புதிய வெளிச்சத்தை  பாய்ச்சுகிறது.

இந்தியா எப்போதும் என் நினைவுகளுக்கும் உணர்வுகளுக்கும் நெருக்கமாய் இருக்கும் நாடு.அதன் ஊர்களும் மனிதர்களும் இலக்கியங்கள் ஊடாகவும் திரைப்படங்கள் மூலமாகவும் மனதுக்கு நெருக்கமாய் இருக்கின்றன.

மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சில பிரதேசங்களுக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.இந்தியப் பெருநிலப்பரப்பில் ஒரு ரயில்ப் பயணத்தில்  தூங்கி எழுந்ததும் பண்பாடு,கலாசாரம்,மொழி என எல்லாமே மாறிவிடுகிறது.புத்தம் புது அனுபவங்கள் தண்டவாளங்கள் போல நீண்டு கொண்டே கொண்டு செல்கிறது.

பஷீர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் குறுக்காகவும் நெடுக்காகவும் பயணப்படுபவர்.பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது பயண அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார்.

ஆனால் அவரது வடகிழக்கிந்தியப் பயணமானது ஏனைய எல்லாப் பயணங்களிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கிறது.இருண்ட குகைக்குள் பயணிக்கும் ஒளிக் கீற்றைப் போல நம்மைப் பின்தொடர்கிறது,புதியதொரு உலகிற்குள் அழைத்துச் செல்கிறது.

ஒவ்வொரு நிலப்பரப்பிலும் விடியலும் அஸ்தமனமும் ஒன்றுபோல இருந்தாலும் வாழ்க்கை முறையில்தான் எத்தனை மாறுதல்கள்!
வடகிழக்கிந்தியாவின் நிலத்தோற்றத்தை,வாழ்க்கை முறையை,மனிதர்களை,பண்பாட்டை காட்சி மொழியில் எழுதும் எழுத்துக்களே இக் கட்டுரைகள்.

பஷீரின் பயணக் கட்டுரைகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.பஷீர் தனது பயணங்களை காட்சி மொழியில் அற்புதமாக விபரிப்பவர்.அவரது பயண எழுத்துக்கள் ஒளிப்பதிவு போல இருக்கும்.எதையும் விட்டு வைக்கவில்லை எனும் அளவுக்கு முழுப் பயணத்தையும் எழுதக் கூடியவர்.

பயண அனுபவத்தை யார் வேண்டுமானாலும் எழுதலாம்.ஆனால் பயணத்தின் வழியே வரலாற்றையும்,நிகழ்காலத்தையும்,பண்பாட்டு மானுடவியலையும் கூர்மையான அவதானிப்புக்களின் வழியே வெளிக் கொணர்வது அத்தனை இலகுவானதல்ல.

இக் கட்டுரைகளைப் படிக்கும் போது நாம் அறிந்து வைத்திருந்த இந்தியா பின்நோக்கிப் போய் ஒரு புது இந்தியாவிற்குள் நாம் நுழைகிறோம். இதுதான் இந்தப் பயணத்தினதும் எழுத்தினதும் வெற்றி.இல்லையென்றால் அபாயங்களும் நிச்சயமின்மைகளும் நிறைந்த ஒரு தொலைதூரப் பயணத்திற்கு என்ன தேவை இருக்கிறது?புதிய வாழ்க்கை முறையை,நிலப்பரப்பை பார்த்துவிடத் துடிக்கும் பஷீரின் அகம் சார்ந்த தவிப்பே இப்பயணத்தின் அடிநாதம்.

எதிர்படும் மனிதரின் உரையாடல் வழியே அல்லது அவரது ஒரு செயலின் வழியே பஷீர் ஒரு பண்பாட்டை,வரலாற்றை வெளிக் கொண்டு வருகிறார்.வடகிழக்கிந்திய பயணத்தில் ரயிலில் அவருக்கு எதிர்படும் முதல் மனிதர் முதல் இறுதியாக சந்திக்கும் ராஜூ என்கிற ராணுவ ஓட்டுனர் வரை அனைவரிடமிருந்தும் நமக்கு ஒரு கூடுதல் தகவலை கொண்டு வந்து சேர்க்கிறார்.

பயண இடங்களை அதனோடு சம்பந்தப்பட்ட வரலாற்றை சமகாலத்தில் அவற்றின் இருப்பை அறம் சார்ந்த விமர்சனப் பார்வையின் வழியே அவர் வெளிப்படுத்துகிறார்.

கிறிஸ்தவப் பரப்புரையாளர்கள் மூலம் அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேர்மையாகப் பதிவு செய்கிறார்.

“வளர்ந்து வரும் இந்தியாவில் தங்களுக்குரிய பங்கை பெறுவதற்கான விழிப்புணர்வும் முனைப்பும் உழைப்பும் அதன் விளைவாக ஈட்டிய ஓரளவு வெற்றியும் வடகிழக்கிந்தியர்களிடம் இருக்கிறது. சட்டியின் அடியில் ஒட்டி வரும் கரிப்பிசுக்கு போல வளர்ச்சியினடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மேலாதிக்கத்தை அடையாளங்கண்டு கொள்கின்றனர். இவையனைத்தும் அவர்களிடம் இருக்கும் பழங்குடி தன்னுணர்வு, கிறிஸ்தவம், நவீன கல்வி என்ற மூன்று காரணிகளின் விளைவாகத்தான் சாத்தியமாகியுள்ளது.“

மியன்மார்எல்லைக்குள் அவர் நுழைந்த அனுபவத்தை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.ஒரு மிகப் பெரியவன்செயல் அங்கு நடந்து முடிந்திருக்கிறது.அதன் உளவியலை பஷீர் தத்ரூபமாகப் பதிவு செய்கிறார்.
“தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் சிறீலங்காவும் மியான்மரும் இந்திய எல்லையை ஒட்டியே அமைந்திருப்பதாலும் சனாதன தெய்வங்களையும் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் பிரிவினைகளையும் இந்த தேரவாத பௌத்தம் பெருமளவில் உள்வாங்கியிருக்கின்றது அதனால்தான் சக மனிதன் மீதான வெறுப்பை பௌத்த ஆன்மீகத்தின் பெயரால் நிகழ்த்த முடிகின்றது. இத்தனைக்கும் சனாதனத்தின் முக்கிய குறியீடுகளை தொன்மங்களை நிராகரிப்பதுதான் தேரவாத பௌத்தத்தின் அடிப்படை. மதங்கள் ஆதிக்க வெறிக்கான ஊர்தியாக மாற்றப்படும்போது மதத்தின் ஆன்மா இறந்துதான் போகின்றது. ஆதிக்க வாதிகளின் கையில் அது உயிரற்ற கூடாகத்தான் மிஞ்சுகின்றது.“

பழங்குடி வாழ்க்கை குறித்து இப் பயணத்தின் வழியே நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.அவர்களைப் பற்றிய பார்வையை இப்படிப் பதிவு செய்கிறார்.

“இயற்கையுடன் இணைந்து வாழுதல், தாவரங்கள், விலங்குகளுடனுனான ஒத்திசைவும் நல்லிணக்கமும் என பழங்குடி வாழ்வில் சமவெளி மனிதர்கள் கற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் நிறையவே இருக்கின்றன. ஆனால், பிற இன பழங்குடிகளிடம் குருதியைப் பெருக்கும் அவர்களின் பூசலிடும் தன்மையை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமெனில், நீதியும் சனநாயகத்தன்மையும் நிறைந்த வலுவான நிலையான அரசானது பழங்குடியினரை ஆள வேண்டும். ஆனால் இன்றைய இந்திய அரசு இதில் எவ்வளவு தொலைவிற்கு தகுதி பெற்றுள்ளது?“

எடுத்துக்காட்டுக்கு இந்த மேற்கோள்களை இங்கு குறிப்பிட்டுள்ளேன். இதுபோன்ற நுண்மையான பார்வைகளாலும் வரலாற்றுத் தகவல்களாலும்,நிகழ்கால நடப்புகளின் உண்மை அவதானங்களாலும் பஷீர் தன் பயணத்தை அர்த்தம் நிறைந்ததாக மாற்றியிருக்கிறார்.

ஒரு பயணக் கட்டுரையாக சுவாரஸ்யமாக படிக்கவும் வரலாற்றை நம் கண் முன் நிறுத்தும் ஆவணம் என்ற அளவில் கனதியாகப் படிப்பதற்கும் இக் கட்டுரைகள் பயன்படுகின்றன.

பஷீர் நட்பின் அர்த்தத்தை அடர்த்தியாக்குபவர். கடந்த பத்தாண்டுகளில் நாம் எவ்வளவோ பேசியிருக்கிறோம் பரிமாரியிருக்கிறோம்.இந்தப் பயணத்திற்கான ஏக்கத்தை ஒரு தாயைப் போல அவர் மனதில் சுமந்திருந்தார்.அவரது கனவுகள் மெய்ப்படுவது மட்டற்ற மகழ்ச்சியைப் பொழியச் செய்கிறது.

தொழில் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு இலக்கியத்துறையில் பயணிப்பதென்பது சிக்கலும் சிரமமும் வாய்ந்தது. நுகர்வே எல்லாம் என்றாகிப் போன உலகில் எழுத்தும் வாசிப்பும் படைப்பும் பொதுப் புத்தியில் கடைசி வரிசையில் வைத்துப் பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் மனதின் விடுதலைக்கு அதுதான் காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் தம் பயணத்தை தொடர்கிறார்கள்.உங்கள் பயணம் தொடரட்டும்.புதிய திசைகளில் புதிய பாதைகள் நிச்சயம் இருக்கும்.வாழ்த்துக்கள் நண்பரே!



No comments:

Post a Comment