18 ஆவது லன்டன்
ஆசிய திரைப்பட விழாவில் முதலாவது திரையிடப்பட்ட இலங்கைத் திரைப்படம் “sulanga apa
ragena yawi'.இது தவிர சுமார் எட்டுக்கும் மேற்பட்ட சர்தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேசத்தின்
கவனத்தைப் பெற்றுள்ளது. இத் திரைப்படம் ஸ்டீவன் ஸ்பில் பேர்க் தனது முதலாவது திரைப்படத்திற்காக
வென்ற ரெமி விருதை ஹுஸ்டன் திரைப்பட விழாவில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச
மட்டத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, கவனத்தைப் பெற்றிருக்கும்
இத் திரைப்படம் இப்போது இலங்கையில் திரையிடப்படுகிறது.
இத் திரைப்படத்தின்
முன்னோட்டத்தைப் பாரத்துவிட்டு இத் திரைப்படத்தின் இயக்குநர் நுவன் ஜயதிலக்கவுடன் ஸ்கைப்பில்
உரையாடினேன்.இந்த உரையாடல் ஒரு நேர்காணலாக வெளிவந்தது.
பின்னர் தெரண
திரைப்பட விழாவில் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இலங்கையின்
மலைப் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தை அடிப்படையாகக்
கொண்டு கதை நகர்கிறது.மலைகள்,அருவிகள் நிறைந்த இயற்கையின் மடியில் அக்குடும்பத்தின் இரண்டு சிறுவர்கள் வாழ்கிறார்கள். பின் தங்கிய அவர்களது
கிராமத்திலிருந்து தவளம் முறையில் பக்கத்திலுள்ள சிறிய நகரத்திற்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அவர்களது வீட்டில் ஒரு காளை மாடு
இருக்கிறது. இதில் பொருட்கள் கொண்டு செல்வதன் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.அதே நேரம் சிறுவர்களின்
செல்லப் பிராணியாகவும் இது மாறுகிறது.ஒரு
நாள் காளை மாடு திருடப்பட்டு
கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.இதைப் பின்தொடரும் முயற்சியில் ஒரு சிறுவன் கொழும்புக்கு
மரக்கறி கொண்டு செல்லும் லொறி ஒன்றில் ஏறி
கொழும்பு மெனிங் சந்தையில் இறங்க நேரிடுகிறது.அங்கு சந்திக்கும் ஒரு சிறுமியுடன் சேர்ந்து
கொழும்பு வீதிகளில் அதனைத் தேட எடுக்கும் முயற்சிதான்
கதையின் சுருக்கம்.
இலங்கையின்
நக்கில்ஸ் மலைத் தொடரில் படம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.இயற்கையின் அழகினை மலை
தரும் பரவசத்தை கமெராவின் வழியே படம் தருகிறது.இயற்கையோடு இணைந்த இக் கதையை அற்புதமாகக்
காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குநர்.
அதேபோலத்தான்
கொழும்பின் காட்சிகளும்.நாம் அன்றாடம் பார்க்கும் மாநகரின் சலனங்களை வேறு கண்களைக்
கொண்டு அழகுறக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
சுலங்க அப ரெகன
யாவீ தரும் அழகியல் இதம் அலாதியானது.திரைக்கதை
ஒரு அனுபவத்தை மாத்திரம் பிரதிபலித்தாலும் அதன் காட்சிப்படுத்தலும் திரைமொழியும் இசையும்
நேர்த்தியாய் அமைந்திருக்கிறது.
வெறும் 16 நாட்களில்
இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக நுவன் சொன்னார்.ஐரங்கனி போன்ற பிரபல நடிகர்களும்
பல அறிமுக நடிகர்களும் தமது அசாத்தியமான நடிப்பின் ஊடாக வலுச் சேர்த்திருக்கிறார்கள்.
இயற்கையை,அதன்
இனிமையை,அதன் மடியில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் வழியே இத் திரைப்படம் அற்புதமாகக்
காட்சிப்படுத்துகிறது.காற்று எங்களையும் மிதக்கச் செய்கிறது.
No comments:
Post a Comment