சிவலிங்கம்
அனுஷா கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கொழும்பு பல்கலை கழகத்திற்கு தெரிவாகி ஊடகத்துறை
பட்டபடிப்பை நிறைவு செய்து தற்போது ஊடகத்துறை , மொழிபெயர்ப்பு , புகைப்படத்துறை , எழுத்துத்துறை
ஆகியவற்றுடன் சேர்ந்து பயணிக்கிறார்.சிங்கள மொழியில் இவர் பெற்றுள்ள புலமையினால்
இதுவரை முக்கியமான இரண்டு நூல்களை சிங்களத்துக்கு மொழி மாற்றம் செய்துள்ளார். இன்னும்
இரண்டு நூல்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழியிலும் சிங்கள
மொழியிலும் ஊடாடும் அனுஷா போன்றவர்களால் சமூகங்களுக்கிடையிலுள்ள இடைவெளிகளைக்
குறைப்பதில் மகத்தான பணிகளை மேற்கொள்ள முடியும்.ஒரு சிங்கள நூல் வெளியீட்டு
விழாவில்தான் அனுஷாவை முதலில் சந்தித்தேன்.இது அவருடனான நேர்காணல்.
சிங்கள மொழியுடனான பரிச்சயம் எப்படி ஏற்பட்டது? விரும்பியா
அதைப் படித்தீர்கள்?
பாடசாலை
காலத்தில் சிங்கள மொழியை கற்றிருந்தன். அதனால் சிறு வயதிலையே சிங்கள மொழி எழுத வாசிக்கும்
அளவுக்கு பரீட்சையமாக இருந்தது. சிங்கள மொழியை கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதனால்,
சிங்கள மொழியை கற்றன். ஆரம்பத்தில் சிங்கள மொழி கற்பதில் சிரமங்களை எதிர்கொண்டன். ஓர்
கட்டத்தில் சிங்கள மொழியை கட்டாயம் கற்க வேண்டும் எனும் எண்ணம் என்னில் தோற்றம் பெற்றது.
விருப்பம் இல்லாமல் கற்ற அந்த மொழியால் , தமிழில் உள்ள பல விடயங்களை சிங்கள மொழிக்கு
கொண்டு செல்லலாம் எனும் எண்ணம் என்னில் தோற்றம் பெற்ற பின்னர் அதனை விரும்பி கற்க தொடங்கினன்.
இதுவரையிலான மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றி
பல்கலைகழகத்தில்
இரண்டாம் ஆண்டில் கற்கும் கால பகுதியில் , மொழிபெயர்ப்பு தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டது.
அதற்கு காரணமாக அமைந்தவர் யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளரும் , சிறந்த மொழி பெயர்ப்பாளருமான
விமல் சுவாமிநாதன் அவர்கள். அவர்களின் வழிகாட்டல் ஊடாக தமிழில் போர்க்கால அனுபவங்களை
பதிவு செய்திருந்த பிரதானமாக போர் சூழலில் வாழ்ந்த மக்களின் வாழ்நிலை அவர்களின் வாழ்வு
பற்றி எழுதியிருந்த கவிஞர் சிவராஜா கருணாகரனின் இப்படி ஒரு காலம் எனும் கட்டுரை நூலினை
கன்னி முயற்சியாக மொழி பெயர்த்தன்.
அதேபோன்று
தமிழ் பெண் ஒருவர் வேறு இனங்களுக்கு மத்தியில் வாழும் போது எதிர்கொண்ட பிரச்சனைகளை
மையமாக கொண்டு எழுதப்பட்ட நிஷ்ஷங்க விஜேமான்னவின் " தாரா மகே தெய்வதுவ "
எனும் சிங்கள நாவலை “தாரா ஷியாமலீ குமாரசுவாமி” என தமிழ் மொழிக்கு
மொழி பெயர்த்தேன்.
கவிஞர் கருணாகரனின் “மதக வன்னிய“ நூல் மொழிபெயர்ப்பு அனுபவத்தை
விளக்குவீர்களா?
இப்படி
ஒரு காலம் எனும் கட்டுரை நூலினை முதலில் என் கையில் தந்தது சுவாமிநாதன் விமல் அவர்கள்
, அந்த நூலினை வாசித்த போது , எனக்கு தெரியாத பல விடயங்கள் உள்ளன என்பவற்றை உணர்ந்தன்.
முக்கியமாக அந்த நூலில் போரிற்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் , அவர்களின்
வாழ்க்கை முறை பற்றியும் , போருக்கு பின்னர் தமது வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும்
இழந்த மக்களின் வாழ்வு பதிவாகி இருந்தது. அக்கால பகுதியில் வாழ்ந்த மக்கள் தமது உணர்வுகளை
அன்பு , பாசம் என்பவற்றையும் வாழ்க்கையையும் கடிதங்கள் ஊடாக பரிமாறிகொண்டனர் என்பதனை
அறிந்து கொண்டேன். அது பற்றி எனது தந்தையிடம் கேட்ட போது , போருக்கு முன்னரான கால பகுதியில்
மக்கள் செழிப்பாக வாழ்ந்ததாகவும் , கடிதங்கள் ஊடாகவே தமது அன்பு, பாசங்கள் என அணைத்து
உணர்வுகளையும் பரிமாறிக்கொண்டனர் என அக்கால நினைவுகளை மீட்டி எனக்கு சொன்னார். அவர்
தனது அக்கால நினைவுகளை மீட்டி எனக்கு கூறிக்கொண்டு இருந்த போது இக்கால பகுதியில் எமது
மக்கள் எவ்வாறு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் எனும் எண்ணமே எனக்கு தோன்றி அது பற்றி
நான் சிந்தித்துக்கொண்டு இருந்தன். தமிழ் மக்கள் போருக்கு முன்னர் வாழ்ந்த வாழ்க்கையும்
அவர்களின் வாழ்க்கை முறைமைகளும் , போருக்கு பின்னரான அவர்களின் வாழ்க்கையும், வாழ்க்கை
முறைமைகள் பற்றியும் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள்
தோற்றம் பெற்றது. அதனால் அந்த நூலினை மொழிபெயர்க்க முடிவு செய்தன். அது மட்டுமே என்னால்
செய்ய கூடியதாக இருந்தது. அதனை செய்ய முடிந்தது நான் சிங்கள மொழி கற்றதனால் தான்.
இந்த நூலுக்கு சிங்கள சமூகத்திடம் வரவேற்பு இருந்ததா?
நான்
எதிர்பார்த்ததை விட பல மடங்கு கூடுதலாக இருந்தது. புத்தக அறிமுக நிகழ்வு நடத்த முன்னர்
சமூக ஊடகங்கள் ஊடாக இவ்வாறு ஒரு புத்தகம் வெளியிடப்பட உள்ளதாக பகிர்ந்து மூன்று நாட்களுக்குள்
1000 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன. கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில்
அந்த நூலினை பலர் வாங்க முயன்ற போதும் , பிரதிகள் முடிவடைந்து விட்டன. அந்த நூலினை
வாசித்த பலர் தம்மையும் தமது இனத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்க தொடங்கினார்கள்.
அதன் பின்னர் இந்த நூல் தொடர்பில் விமர்சனங்கள் , பாராட்டுக்கள் என பல கடிதங்கள் எனக்கு
வந்தன. அவை எனக்கு மட்டும் அல்ல அந்த நூலினை தமிழ் எழுதிய கவிஞர் கருணாகரனுக்கும் பல
கடிதங்கள் சென்றன. பல பிரபலமான சிங்கள எழுத்தாளர்கள் அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி
பெயர்த்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன் தமது பாராட்டுக்களையும் தெரிவித்தனர். நூல் வெளியிட்டு
இரண்டு வருடங்கள் ஆகின்றன. கடந்த வாரம் கூட ஒரு கடிதம் வந்தது. அதனை அது ஒரு சிரேஸ்ட
சட்டத்தரணி எழுதி இருந்தார். அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமைக்கு நன்றி
தெரிவித்ததுடன் , அந்த நூலில் யாழில்.இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை
மாணவியான கிருஷாந்தி குமரசாமியின் வழக்கு தொடர்பில் தான் தேடி வருவதாகவும் எழுதி இருந்தார்.
அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமை ஊடாக சில சிங்கள மக்கள் மத்தியில் மாற்றங்களை
ஏற்படுத்த முடிந்தமையை நினைத்து நான் பெருமை கொண்டேன்.
போருக்குப் பிந்திய இலங்கையில் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளை ஒரு மொழிபெயர்ப்பாளர் என்றவகையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?
போருக்கு
பின்னரான கால பகுதியில் சிறுபான்மை சமூகங்கள் ஆகிய நாம் எதிர்கொள்ளும் பிரச்சனையாக
நான் காண்பது , போரின் போது அவர்கள் இழந்தவைக்கு நீதியை கோருகின்றோம். தற்போதைய நடவடிக்கைகள்
காயங்களை சுத்தம் செய்யாது மருந்து போடுவது போன்ற செயற்பாடுகளே .. இது காயத்தினை பெரிதாக்குமே
தவிர காயத்தினை மாற்றாது. போர் நடந்த பகுதிகளில் வாழும் மக்கள் வறுமையில் வாழ்கின்றார்கள்,
அவர்களுக்காக கொண்டு வரப்படும் அபிவிருத்தி திட்டங்கள் அவர்களிடம் போய் சேர்வதில்லை.
அவை வேறு இடங்களுக்கு போய் சேர்கின்றது. எஞ்சியுள்ள ஒரு சில வாழ்வாதாரத்தையும் , சில
பிரிவினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதனால் அந்த மக்கள் அந்த வாழ்வாதாரத்தையும்
இழந்து நிற்கின்றோம். முக்கியமாக குடிநீர் , நிலம் போன்றவை கூட நாம் இழந்து கொண்டே
இருக்கின்றோம். இவற்றில் துரதிஸ்டமான விடயம் யாதெனில் எமது மக்கள் பிரதிநிதிகளே எமது
மக்களின் வாழ்வை பறித்துக்கொண்டு உள்ளனர். தெளிவாக கூறுவதாயின் , அரசியல் பலத்திற்காக
போராடும் சில அரசியல்வாதிகள் தமிழ் தேசியம் பற்றி உணர்வு பூர்வமாக பேசினாலும் , அந்த
தேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றிய சிந்தனை இன்றி உள்ளார்கள். போருக்கு
பின்னரான கால பகுதியில் தற்போது மிக தேவையானது ஒரு நிழல் . அந்த நிழலை எமது பிரதிதிகள்
பெற்று தர இயலாதவர்களாக உள்ளனர். இது தனியே சிறுபான்மை மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனை
இல்லை. அனைத்து இன மக்கள் மத்தியிலும் இந்த பிரச்சனை உள்ளன.
சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மொழிபெயர்ப்பு முயற்சிகள்
ஊடாக சாத்தியப்படுத்தலாம் என்பதில் நம்பிக்கை கொண்டா உங்களது பயணத்தை தொடர்கிறீர்கள்?
மக்களின்
மனதில் இனங்கள் தொடர்பில் ஊட்டிவிட்ட பொய்யான உணர்வுகள் , பொய்யான விடயங்கள் , நிறைய
உள்ளன. அந்நிலையில் தான் நாம் உண்மைகளை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது.
நீதிக்காக மக்களை சிந்திக்க வைப்பதற்கு கலைகள் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு
உள்ளன. அந்த வகையில் கவிதைகள் , நாவல்கள் ,சிறுகதைகள் , திரைப்படங்கள் , பாடல்கள் என்பவற்றின்
ஊடாக அவற்றை முன்னெடுக்கின்றார்கள். அவை கடந்த கால வரலாற்றில் இருந்தே நடந்து கொண்டே
இருக்கின்றது. எத்தகையன கலைகள் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் , எமது மக்களின்
மனநிலை என்ன இடத்தில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ள முடியும். புத்தகங்கள் எழுதுவதால்
, மொழி பெயர்ப்பின் ஊடக நூறுக்கு நூறு வீதமான மாற்றத்தை எங்களால் எதிர்பாக்க முடியாது
ஆனால் ஒரு சில சதவீதமாக மாறும் எனும் நம்பிக்கையில் நாம் முயற்சிகளை முன்னெடுக்கின்றோம்.
அந்த மாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து முயற்சிகளை முன்னெடுப்போம்.
தமிழ்த்திரைப்படங்கள் குறித்து சிங்கள மொழியில் வெளியான
உங்களது நூல் குறித்து சொல்ல முடியுமா?
தமிழ்
சினிமாவில் இலங்கையில் முயற்சி எனும் பெயரில் தான் அந்த நூல் வெளியாக உள்ளது. அதில்
இலங்கை தமிழ் திரைப்படம் ஆரம்பம் முதல் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் திரையிட்ட கோமாளி
கிங்ஸ் வரை பதிவாகி உள்ளது. குறிப்பாக 83ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரத்தின் பின்னர் தமிழ்
திரைப்பட துறை காணமல் போய்விட்டதாக பலரும் கூறினார்கள் ஆனால் , அந்த கால பகுதியில்
கூட ஓர் கட்டத்தில் திரைப்படங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருந்தது என்பது அந்த புத்தகத்தில்
பதிவாகி உள்ளது. அது மட்டுமின்றி புலம்பெயர் தேசங்களில் உருவாகும் தமிழ் திரைப்பட முயற்சிகள்
குறித்தும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டு உள்ளது. விசேடமாக ஒவ்வொரு கால பகுதியிலும்
இலங்கை தமிழ் சினிமா துறையில் ஈடுபட்ட கலைஞர்கள் சிலர் இந்த நூலின் ஊடாக தமது சினிமா
வாழ்வை பற்றி உரையாடுகின்றார்கள்.
மொழிபெயர்ப்புக்கான நூல்களை எந்த அறத்தின் அடியாக தேர்ந்தெடுக்கிறீர்கள்?
சமூகங்களுக்கு முக்கியமான விடயங்களை கூறும் நூல்களை
தான் தேர்ந்தெடுப்பேன். மொழி மாற்றம் பெறும் அந்த நூல் அந்த சமூகத்திற்கு எவ்வளவு தூரம்
முக்கியமானது , எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதனை கருத்தில் கொண்டே நூல்களை
தேர்ந்து எடுக்கிறேன்.
நன்றி
– www.insafsalahudeen.com
No comments:
Post a Comment