Monday, July 2, 2018

மலைப்பாடகன் – சக மனிதருக்கான குரல்



கனவின் மீதி - அசுரன்
நகரில் நானொரு
கனவு நாயகன்
கிரனைட் கற்களைச் செதுக்கி
கட்டப்பட்டது எந்தன்
பண்ணை வீடு
குளிரெடுக்கும் வீட்டினுள்

அமர்வதற்கோ நீர் இருக்கை


முற்றம் எங்கும்
இறக்குமதிப் புல்வெளி
ஆங்காங்கே கூண்டுகளில்
கிளிகள், குருவிகள்,
புறாக்கள், காதல்பறவைகள்...

இருளை வெட்டிப் போட்டதால்
விரிந்தகன்ற சாலைகளில்
பறப்பது எந்தன்
இறக்குமதிக் கார்.
நடைப்பயிற்சிக்குக் கூட
இயந்திரம்தான்.

இதுதான் வாழ்வென
வாழ்ந்தவன், திரும்பினேன்
மீதிக் கனவுகளை
விட்டுச் சென்றிருந்த
என் சிற்றூருக்கு

சின்ன வயதில்
மாடுகள் மேய்த்த
பசும் புல்வெளியெங்கும்
வீடுகள்...வீடுகள்...
மீன்கள் துள்ளி விளையாடிய
நீரோடைகள் எங்கிலும்
மணல்...மணல்...

புன்னை இலைகளடுக்கி
குவியாடியால் தீ மூட்டி
கெண்டை மீன் சுட்டு
புசித்த நிழற்பரப்பில்
வெயில்...வெயில்...

ஆடுகளை மேய விட்டுவிட்டு
கூடிக்களித்த மலைக்குகைகள்
சிதறிக் கிடக்கின்றன
சல்லி...சல்லியாக...

என் கனவின் மீதியைத்
தின்றழித்த
பாதிக்கனவு கேட்கிறது
"இனி
எந்த உச்சியில் ஏறி
கடலைப் பார்ப்பது?" (பூவுலகின் நண்பர்கள் இணையம்)

பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட நண்பர் சாளை பஷீரின் மலைப்பாடகன் சூழலியல்,மாற்று வாழ்வியல்,அனைவருக்குமான கட்டடக் கலை,நுகர்வு வெறி,அணு உலை எதிர்ப்பு,இயற்கை விவசாயம்,பழங்குடியினரின் பிரச்சினைகள் போன்ற முக்கிய விடயங்களை மையப்படுத்திய 13 கட்டுரைகளின் தொகுதியாகும்.
உலகமயமாக்கத்திற்கும் அதீத நுகர்வுவெறிக்கெதிராகவும் இன்று பல்வேறு போராட்டங்களும் எதிர்ப்புக்களும் நிகழ்ந்த வண்ணமுள்ளன.வாழ்க்கையின் வசீகரத்தை காவு கொள்ளும் இக் கொள்கைகளுக்கு எதிரான குரல்கள் உலகமெங்கும் மேலெழுந்த வண்ணமுள்ளன.
அந்தவகையில் இந்தியாவிலும் சுற்றுச் சூழல் மற்றும் மாற்று வாழ்வியல் குறித்த கருத்தாடல்களை பல்வேறு அமைப்புக்களும் தனிமனிதர்களும் நிகழ்த்தி வருகின்றனர்.
ஏன் இத்தகைய குரல்கள் உலகம் முழுக்க எழுகின்றன என்ற கேள்வி இங்கு முக்கியமானது? இதற்கான விடையை பஷீர் இப்படி முன்வைக்கிறார்.
“இப்பூவுலகின் மண், மலை, நன்னீர், கானுயிர்கள், பறவைகள், கடல், காடு,மரங்கள்,கனிம வளங்கள்,காற்று,மனித ஆற்றல் என அனைத்து இயற்கைக் கொடைகளையும் பணத்தாள்களாக மாற்றிப் பார்க்க முயலும் கண் மண் தெரியாத பேராசைதான் வர்க்க,வகுப்பு,சமூக மோதல்களாகவும், அணு ஆயுத உற்பத்தியாகவும்,பழங்குடி அழிப்பாகவும் நாடுகளுக்கிடையேயான பகையாகவும் பாசிச வல்லாதிக்கமாகவும் வடிவமெடுக்கின்றது.“(எதிரலை பயணிகள்.பக்-44)
இன்றைய உலகில் ஒவ்வொரு  தனிமனிதனும் அதீத நுகரவுக் கலாசாரத்திற்கெதிராக எதிர்விணையாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அந்தவகையில் சாளை பஷீர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இவை என்றாலும் மொத்தமாகச் சேர்த்துப் படிக்கும் போது நமக்கு அவசியமான வாழ்க்கைக்கு அறைகூவல்விடும் எழுத்துக்களாகவே இருக்கின்றன.
அவரே சொல்வது போல “எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை வளைத்துப் பிடித்துள்ள உலகமயமாக்கம் தாராளமயமாக்கம் பெரு வணிக நிறுவனங்களின்ஆதாய வெறி ஆக்கிரமிப்பிற்கு எதிரான தற்காப்பு முயற்சியில் ஒரு சிறு கவசமாக இந்த எழுத்துக்கள் எழுந்து நிற்கும்…“
சுற்றுச் சூழல் கரிசனை,பசுமைச் சூழல் என்ற கருத்தாடல்கள் எல்லாம் மரம் நடுவதோடு முற்றுப் பெறும் அம்சம் அல்ல.மாறாக முழு வாழ்வியலையும் உள்ளடக்கிய ஒன்றாகவே காணப்படுகிறது.
அந்த மாற்று வாழ்வை நோக்கிய குரல்கள் இன்று எம்மை பல்வேறு வழிகளிலும் வந்தடைகின்றது.
ஆனால் நாம் யாரும் அத்தகைய ஒரு வாழ்க்கை முறைக்கு எம்மை ஒப்புக் கொடுக்கத் தயங்கியவர்களாகவே இருக்கிறோம்.
இக் கட்டுரைகள் வாழ்க்கையின் இன்னொரு பக்கம் நோக்கி எம்மை அழைத்துச் செல்கிறது.புதிய வாழ்வியலுக்கான பல்வேறு சாத்தியங்களைத் தொட்டுக் காட்டுகின்றது.அந்தவகையில் பஷீர் தான் அனுபவித்த உணர்ந்த விடயங்களையே பெரும்பாலும் பதிவு செய்துள்ளார்.
விதையிலிருந்தே மரம் பயிற்சிப்பட்டறை குறித்த அனுபவங்களை மலைப்பாடகன் என்ற கட்டுரை பேசுகிறது.
பொதிகை மலை அடிவாரம் , தாமிரபரணி கரையோரத்தில் மூன்று நாட்கள் இயற்கையின் மடியில் தங்கிய அனுபவங்களையும் அதனூடு விரியும் வாழ்வையும் இங்கு அவர் பேசுகிறார்.
‘மரம் நடுவோம் மழை பெறுவோம் என குடிமக்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டே மறு புறம் காடுகள், மலைகள், ஓடைகள் ,நதிகள் , ஏரிகள் , குளங்கள் கண்மாய்கள் , அருவிகள் , இயற்கை உயிரினங்களை தேச வளர்ச்சி என்ற பெயரில் அரசு அழித்து வருகின்றது.

அரசின் கண்மூடித்தனமான இந்த போக்கிற்கு குடி மக்கள் கொடுத்த விலைதான் உத்தரகாண்ட் பேரிடர். தேச பாதுகாப்பு என்ற பெயரில் அணு உலைகளும் , தேச வளர்ச்சி என்ற பெயரில் கொள்ளை லாப கார்ப்பரேட் நிறுவனங்களும் நம் அருமை தாய் மண்ணையும், கடலையும் , விண்ணையும் சீரழித்து வரும் நிலையில் நாம் அதன் பலிகடாக்கள் ஆகத்தான் வேண்டுமா ? என்ற கேள்விகளுக்கு விடை காணும் முயற்சிதான் இந்த விதையிலிருந்தே மரம் பயிற்சி பட்டறை. “ என எழுதுகிறார்.
இதுபோன்ற பட்டறைகள் இன்றைய நவீன வாழ்வின் சந்தடிகளிலிருந்து விலகி இயற்கையான வாழ்வு குறித்து சிந்திக்க உதவுகின்றது.
அனைவருக்குமான கட்டடிடக் கலை குறித்த விரிவான இரண்டு கட்டுரைகள் இத் தொகுதியில் அமைந்துள்ளன.லாரி பேக்கர் என்ற அதிசய கட்டடக் கலைஞனின் சுவாசிக்கும் வீடுகள் குறித்த விரிவான பதிவுகளை இங்கே காணலாம்.
நாம் வாழும் வீடுகள் வாழ்வதற்குப் பொருத்தமான வீடுகள்தானா? என்ற கேள்வி கட்டுரையை வாசிக்கும் போது மனதில் எழுகிறது.
லாரி பேக்கர் காந்தியின் சிந்தனையினால் கவரப்பட்ட ஒரு அய்ரோப்பிய கட்ட்டக் கலைஞர்.இருந்தாலும் அவரது தேடல் இந்தியாவில்தான் நிறைவு பெறுகிறது.
அவரது கட்டடக்கலை குறித்த அருமையான விளக்கங்களை இங்கே காண முடிகிறது.வெறுமனே அது கட்டடக் கலை என்பதையும் தாண்டி அதன் உள்ளம்சம் குறித்து இப்படி எழுதுகிறார்.
“போர்,ஆக்கிரமிப்பு , ஃபாஸிசம்,  நுகர்வு வெறி , பெருந்தொழில் மயம் ஆகியவை இன்று கொடு வாளை மூர்க்கமாக சுழற்றுகின்றன. அவற்றை எதிர் கொள்ளும் கேடயங்களாக அஹிம்சை,போர் வெறுப்பு,எளிமையான வாழ்க்கை,கிராமீய கைத்தொழில்,மனித நேயம் ஆகியவற்றை முன் வைத்தனர் காந்தியும் லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கரும்.“
இவை தவிர நூல் மதிப்புரை,ஆவணப்படம் குறித்த பதிவுகள் நூலில் இடம் பெறுகின்றன. இவை இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
குக்கூ காட்டுப் பள்ளி குறித்த விரிவான ஒரு நேர்காணல் நூலில் இடம்பெறுகிறது.இன்றைய கல்வி முறையின் இறுகிய அம்சங்களையும்  மாற்றுக் கல்வி குறித்த யதார்த்தங்களையும் இந்த நேர்காணல் விரிவாகப் பேசுகிறது.
மாற்றுக் கல்வி முறையில் குக்கூ காட்டுப் பள்ளி எப்படி ஒரு முன்னுதாரணமாக இருக்கலாம் என்பதை நேர்காணலினூடாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
எல்லாக் கட்டுரைகளிலும் இழந்த ஒரு வாழ்வின் வலியும் நுகர்வு வெறிக்கெதிரான கோபப் பார்வையும் கலந்தே இருக்கின்றது.நுகர்வு வெறி ஒரு புயலென வந்தாலும் நம் கையிலுள்ள காற்றாடியும் ஆயுதம்தான் என்ற அளவில் நாம் போராட வேண்டியிருக்கிறது என்பதையே இந்த நூல் சொல்கிறது.
பஷீரின் உள்மனதில் மாற்று வாழ்வியலுக்கான தேடலும் நாட்டமும் வேரெனப் பதிந்து கிடக்கின்றது.வாழ்வாதாரத்திற்கான போராட்டம் மிகுந்த வாழ்விலும் அவர் அதனை விட்டுக் கொடுப்பதில்லை.இலக்கிய நிகழ்வுகளாக இருக்கலாம்,விவசாயப் பயிற்சி முகாம்களாக இருக்கலாம் சாத்தியப்படுகின்ற எல்லாவற்றிலும் அவரது பிரசன்னம் நிச்சயம் இருக்கும்.அந்த ஈடுபாடே அவரது வாழ்வையும் எழுத்தையும் சுவாரஸ்யம் மிக்கதாய் மாற்றுகிறது என நினைக்கிறேன்.
நுகர்வியத்திற்கு எதிரான ஒரு குரலாக,ஆவணமாக பஷீர் இந்த நூலை முன்வைக்கிறார்.அது ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை அனுபவமாக, உளக்கிடக்கையாக வெளிப்படுவதே இந்த நூலின் பிரதான அம்சம்.
இந்த உலகம் எல்லோருக்குமானது. மனிதர்களுக்கானது, தாவரங்களுக்கானது, பறவைகளுக்கானது,விலங்குகளுக்கானது.ஆனால் அதீத நுகர்வுக் கலாச்சாரம் அதனைத் தகர்த்து ஒரு துருவ நிலைக்கு உலகைக் கொண்டு செல்ல நினைக்கிறது.
இந்த ஒற்றை ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு அனுபவம் சார் எழுத்தாக நம்முன் நிற்கிறது இந்தப் பிரதி. மலைப்பாடகன் நம் அக மௌனத்தைக் கலைக்கிறான்.நாம் வாழும் பூமியின் ஒவ்வொரு அங்குலமும் சுரண்டப்படுவதை,மாசுபடுத்தப்படுவதை,யாரோ ஒருவருக்கு விற்கப்படுவதை நமக்கு உணர்த்துகிறான்.
“எல்லோருடைய ஆசைக்கும் இந்த உலகம் போதுமானது.ஆனால் எல்லோருடைய பேராசைக்கும் போதுமாகாது“ என்று யாரோ எழுதியது போல அனைவருக்குமாகவே இந்தப் பூமி படைக்கப்பட்டிருக்கிறது.ஆனால் ஒருசிலர் அதனை உறிஞ்சிக் குடிக்க முற்படுவதை நாம் ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டியுள்ளது. அந்த எதிர்வினையின் தார்மீகக் குரலாக மலைப் பாடகன் இருக்கிறான்.
நூல்மலைப்பாடகன்
ஆசிரியர்சாளை பஷீர்
வெளியீடு - பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு,புதுச்சேரி
விலை - ரூ.100

1 comment: