Tuesday, March 27, 2018

எங்கிருந்து நான் வருகிறேன்



நான் பூமியில் இருந்து வருகிறேன்
பூமிக்கு வருகிறேன்
ஆபிரிக்காவின் இதயத்திலிருந்து
ஆசியாவின் சிறுநீரகங்களிலிருந்து
இந்தியாவிலிருந்து வாசனைத்
திரவியங்களுடன் வருகிறேன்


ஆழமான ஒரு அமேஸன் காட்டிலிருந்து
ஐவரி நிலத்திலிருந்து
திபேத்திய புல்வெளியிலிருந்து வருகிறேன்
இன்னும் அதி தொலைவிலிருந்து
என்னைச் சூழ உள்ள எல்லா இடங்களிலுமிருந்து
எங்கு மலைகள் மரங்கள் அருவிகள் கடல்கள்
இருக்கின்றனவோ அங்கிருந்து
இங்கிருந்து அங்கிருந்து எங்குமிருந்து
மத்தியதரைக் கடலின் கற்பத்திலிருந்து வருகிறேன்

ஒரு மனக் காயத்தின் வடுவிலிருந்து
மூடப்பட்ட எல்லைகளிலிருந்து
ஆயிரம் கூடாரங்களால் நிரம்பியிருக்கும் ஒரு முகாமிலிருந்து
அய்லான் குர்தி இறந்து கிடந்த கடற்கரையிலிருந்து வருகிறேன்

ஒரு துப்பாக்கி ரவையின் காயத்திலிருந்து
தனிமையிலிருக்கும் ஒரு குழந்தையின் முகத்திலிருந்து
ஒற்றைத் தாயின் பெருமூச்சிலிருந்து
மூழ்கவிருக்கும் காற்றூதிய படகின் ஒரு வெட்டிலிருந்து

ஐம்பது பேருக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு தண்ணீர் போத்தலிலிருந்து
குறுநடை போடும் ஒரு குழந்தையின் மூக்கில் உறைந்திருக்கும் சளியிலிருந்து
ஒரு தந்தையின் கன்னத்தில் வழியும் ஒரு துளிக் கண்ணீரிலிருந்து
ஒரு பசித்த வயிற்றிலிருந்து

நான் ஒருமுறை இங்கிருந்திருக்கிறேன் எனும் சுவர்க் கிறுக்கலிலிருந்து
நான் வாழ்க்கையை நேசிக்கிறேன் எனும் இன்னொரு மரக் கிறுக்கலிலிருந்து
ஒரு காணாமற்போன அங்கத்திலிருந்து
ஒரு மனிதனைப் போல எல்லாவற்றுடனும்
எனக்கான இடத்தைப் பகிர்ந்து கொள்ள நான் வருகிறேன்

ஆமிர் தர்வீஷ்
தமிழில்இன்ஸாப் ஸலாஹுதீன்

புலம்பெயர்ந்த ஒருவரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் அனுபவத்தைத் தருகிறது இக் கவிதை. இக் கவிதையை எழுதியவர் குர்தி இனத்தைச் சேர்ந்த சிரியக் கவிஞர் ஆமிர் தர்வீஷ்.இவர் குர்திஸ்தான் குறித்து எழுதிய கவிதையின் பின்னரே சிரிய அதிகாரிகள் அவரது எழுத்துக்கள் குறித்து அறிந்து கொண்டு அவரைத் தேட ஆரம்பித்தனர்.அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து இப்போது ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருகிறார்.

1 comment:

  1. Pakistani Escorts, However For Our Special Karachi Escorts Potential Clients And Returning Ones, We Share These Images In Highest Quality.

    ReplyDelete