Tuesday, March 27, 2018

வான்கா: குழந்தைகளின் வானம்



ரஷ்ய எழுத்தாளர் அன்டன் செகோவினுடைய வான்கா எனும் சிறுகதையைத் தழுவி மலையாலத்தில் இயக்குனர் ஜெயராஜினால் எடுக்கப்பட்ட திரைப்படத்தை நண்பர் பஷீர் இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்திருந்தார்.இதனை நிச்சயம் பார்க்குமாறு எனக்குப் பரிந்துரைத்தார்.

ஓன்றரை மணிநேரம் ஒடும் இத் திரைப்படம் ஒரு காவியம் போல மனதில் நின்றுவிட்டது.

குட்டப்பாயி ஒன்பது வயது நிரம்பிய சிறுவன்.பெற்றோரை இழந்த இவன் தன் தாத்தாவுடன் வளர வேண்டிய கட்டாயம்.மிகுந்த அன்புடன் தாத்தாவுடன் இருந்து கொள்கிறான்.அவர் வயதான காலத்தில் வாத்துக்களைப் பராமரிக்கும் ஒரு பண்ணைக்கு இவனுடன் வந்து சேர்கிறார்.மெல்ல மெல்ல இவனும் தாத்தாவுக்கு ஒத்தாசை செய்கிறான்.

இயற்கையின் மடிதான் கதைக் களம்.கேரளாவின் வனப்பு மிக்க ஒரு பகுதியில் கதை நகர்கிறது.இருவரும் இயற்கையுடன் மிக இணக்கமாக வாழ்கின்றனர்.இயற்கையின் மடியில் படுத்துறங்குகின்றனர்.

குட்டப்பாயி இயற்கையிடமிருந்து ஒவ்வொன்றாகக் கற்றுக் கொள்கிறான்.காலம் அவனைக் கொஞ்சம் கொஞ்மாகச் செதுக்குகிறது.

பறந்த வானத்தின் கீழ் அருவிகளுக்கு மத்தியில் அவர்களது வாழ்க்கை கழிகிறது.இரவுகள் நட்சத்திரங்களால் அலங்கரிக்கும் நேரம் அவன் கதை சொல்கிறான்.யாருக்கு வாய்க்கும் இப்படி ஒரு வாழ்க்கை என்ற ஏக்கம் பிறக்கிறது.

இடையில் அவனுக்கு பெரிய வீட்டுப் பையன் தின்குவுடன் நட்பு ஏற்படுகிறது.இருவரும் நட்பைக் கொண்டாட விரும்புகின்றனர்.அவனைப் போல படிக்க ஆசைப்படுகிறான்.இருந்தாலும் அதற்கான வாய்ப்பு இவனுக்குக் கிட்டவில்லை.

ஒரு தடைவ தின்குவிற்கு பாடசாலைக் கண்காட்சிக்காக மீன் பிடிக்கும் ஒரு காட்சியை குட்டப்பாயி சிலையாகச் செய்து கொடுப்பான்..அது முதலாம் பரிசைப் பெறுகிறது.

தாத்தாவுக்கும் வயதாகி விட்டதால்,தான் இறந்தால் சிறுவன் யாரிடம் வளர்வான் என்ற கவலை பெரியவரை வாட்டத் தொடங்குகிறது.வேறு வழி இல்லாமல் தூரத்திற்குப் படிக்க அனுப்புவதாகக் கூறுகிறார். படிப்பதற்கு ஆசை இருந்தாலும் தாத்தாவைப் பிரிய அவனுக்கு மனமில்லை.படிக்க அனுப்புவதாகக் கூறி தாத்தா அவனை தூர இடமொன்றுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.

தாத்தாவினதும் இயற்கையையினதும் உறவைத் துண்டித்துக்கொண்டு அவனை அழைத்துச் செல்லும் போது கண்ணீர் தட்டி நிற்கின்றது. அவன் தாத்தாவுடன் இருந்து கொள்வதாக அடம் பிடிக்கிறான்.அது கைகூடுவதில்லை.

வேலைத் தளத்தில் கடுமையாக வேலை கொடுக்கப்படுகிறது.தாங்க முடியாமல் தன் தாத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான்.இரவில் எழுந்து ஒரு மெழுகுவர்த்தியைக் கொழுத்தி தன் கவலையை அவன் எழுதித் தபாலிடுவான்.

குழந்தைத் தொழிலாளிகளின் கதையை மையமாகக் கொண்டிருந்தாலும் இயற்கையுடன் சம்பந்தப்படுத்தி இப் படம் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல இலக்கியத்தை அருமையான முறையில் தழுவி படமாக்கப்பட்டிருக்கிறது.

செகோவ் இக்கதையை எழுதி ஒரு நூற்றாண்டு கடந்தாலும் இன்னும் குழந்தைத் தொழிலாளிகளின் எண்ணிக்கை உலகில் குறையவில்லை. தமது குழந்தைப் பருவத்தை எங்கோ ஒரு தொழிற்சாலையில், கடையில்,வீட்டில்,தெருவோரத்தில்,இழந்து கொண்டுதான் இருக்கிறார்கள் பல குழந்தைகள்.

இத் திரைப்படம் பல விருதுகளைவென்றுள்ளது.2015 ஆம் ஆண்டு இத் திரைப்படம் வெளியானமை குறிப்பிடத்தக்கது.



இயற்கை குறித்த ஒருபடமாகவும் இதைப் பார்க்கலாம்.காட்சியமைப்பு ஒளிப்பதிவு.பின்னனி இசை எல்லாமே மிகக் கச்சிதமாக அமைந்துள்ளது.

இத்தகைய இலக்கியங்களைப் படமாக்கும் முயற்சி தமிழில் நடைபெறுவதில்லை.ஆனால் ஜெயராஜ் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இதனைச் செய்துள்ளார்.

இத்திரைப்படத்தில் யாரும் கதாபாத்திரம் போலத் தோன்றுவதே இல்லை.வாழ்க்கையின் ஒரு அங்கம்போல அவர்கள் வந்து போகிறார்கள். திரைப்படத்தில் நடிகர்களுக்கு வேலையில்லை என்பது போல் இருக்கிறது.தேர்ந்த நடிகர்கள் இல்லா விட்டாலும் ஒரு நல்ல சினிமாவை எப்படி உருவாக்கலாம் என்பதை ஜெயராஜ் இங்கு நிரூபித்துள்ளார்.

ஒரு நல்ல இலக்கியத்திற்கும் நல்ல சினிமாவுக்கும் காலத்தைக் கடந்தும் பயணிக்கும் சக்தி இருக்கிறது என்பதை இங்கு புரிந்து கொள்ள முடிகிறது.

படத்தில் வரும் ஓடமும்,தாத்தாவின் முகமும், நதியும், மரங்களும், வயல்வெளியும்,நட்சத்திரங்களும் சிறுவனின் ஏக்கம் கலந்த முகமும் மனக் கண்களை விட்டு அகல மறுக்கின்றது.


No comments:

Post a Comment