Wednesday, April 11, 2018

பணம்தேடும் உலகில் ரசனைக்கான இடம் பூச்சியமாக இருக்கிறது - ஓவியர் ப்ரியந்த நந்தன


ஓவியர் ப்ரியந்த நந்தன ஸ்பெயினில் நடைபெற இருக்கும் ஓவியக் கண்காட்சிக்காக கொழும்பில் இருக்கும் தனது வேலைத்தளத்தில் ஓவியங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

ப்ரியந்த குருனாகலை,அலவ்வயைச் சேர்ந்தவர்.ஓவியத்தின் மூலம் ஜீவிக்கலாம் என்று நம்பி கொழும்புக்கு வந்தவர். கடந்த 13 வருடங்களாக இதனைத் தொழிலாகச் செய்கிறார்.

சுவாரஷ்யம் நிறைந்த அவரது வாழ்க்கைக் கதை குறித்து கதைக்க ஆரம்பித்தார்.

பாடசாலைக் காலம் முழுக்க சித்திரங்களாலே எனது மனம் நிரம்பியிருந்தது.பாடப் புத்தகங்களிலும் அப்பியாசக் கொப்பிகளிலும் வெள்ளைத் தாள்களை மறைத்து வைத்து நான் வரைந்து கொண்டிருந்தேன். இதனை விட்டுவிட்டு ஒழுங்காகப் படிக்குமாறு எனது தாய் என்னைக் கண்டிப்பார்.

சாதாரண தரப் பரீட்சைக்கு 3 மாதம் இருக்கும் போதுதான் பரீட்சையில் எப்படியாவது சித்தியடைய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. உயர்தரத்திற்கு சித்தியடைந்தேன்.விவசாயத்திலேதான் எனக்கு ஆர்வம் இருந்தது.இருந்தாலும் நான் ஓவியத்துறையைத் தேர்ந்தெடுத்தேன்.
எல்லோரும் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளிலே படித்தால்தான் உழைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.நான் இத்துறையிலும் முடியும் என்பதை நிரூபித்துள்ளேன்.

இந்த இடத்தில் எனது ஆசிரியர்களையும் குமார் ரத்னாயக்க மாமாவையும் நினைவுபடுத்த வேண்டும்.அவர்தான் நான் கொழும்புக்கு வரக் காரணமாக இருந்தவர்.அவரிடம்தான் கென்வஸ்(canvas) படித்தேன்.
நான் பல்கலைக்கழகங்களிலோ கலாசாலைகளிலோ போய்ப் படிக்கவில்லை.எனது தீவிர முயற்சியினாலும் உற்சாகத்தினாலும்தான் இதனை வளர்த்துக் கொண்டேன்.


ஆரம்பத்தில் பேப்பரில் வரைய ஆரம்பித்து pastel, water color, canvas என்று எனது பயணம் தொடர்கிறது.இன்று நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.நான் இருவருக்குத் தொழில் கொடுத்திருக்கிறேன்.அதை நினைத்தாலும் மகிழ்ச்சிதான்.

கொழும்பிலும் கண்டியிலும்தான் ஓவியங்களுக்கான இடம் இருக்கிறது.இலங்கையின் எல்லா இடங்களிலும் இதற்கான வரவேற்பு இல்லை.கென்வஸ் ஓவியங்கள் அதிகமாக விற்கின்றன.
அப்ஸ்ட்ரக்ட் ஓவியங்களுக்கு வெளிநாட்டவர்களிடம்தான் மதிப்பு இருக்கிறது.அவர்கள் ஒரு ஓவியத்தின் வர்ணம்,செய்தி என எல்லாவற்றையும் ரசிக்கின்றனர்.ஆனால் பெரும்பாலான இலங்கையர்கள் அழகுக்காகவே ஓவியங்களை வாங்குகின்றனர்.வீட்டை அழகுபடுத்துவதே அவர்களது நோக்கமாக இருக்கிறது.

அப்ஸ்ட்ரக்ட் ஓவியம் எங்களை சிந்திக்க வைக்கின்றது.ஆழ்ந்து நோக்கச் செய்கிறது.ஓவியம் பொதிந்துள்ள நுணுக்கங்களை அவதானிக்கக் கூறுகிறது.


வீதியோரம் நான் வைத்திருக்கும் ஓவியங்களை கைக்குழந்தையிலிருந்து முதியவர் வரை ரசித்துப் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன்.யாசகம் கேட்பவர்கள் கூட ஓவியங்களில் ஆர்வம் கொண்டுள்ளனர்.ஓவியங்களில் ஆர்வமிருந்தும் அதனை வாங்க முடியாமல் ரசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுத்ததும் உண்டு.எனது இரண்டு நாள் உழைப்பை பரிசளித்து வாழ்நாள் முழுவதும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறேன்.

இன்று மனிதர்கள் பணம் தேடுவதில் பிஸியாக இருக்கிறார்கள்.அவர்களது வாழ்க்கையில் ரசனைக்கான இடம் பூச்சியமாக இருக்கிறது.கலையுணர்வு இருக்கின்ற மனிதன்தான் மென்மையான உள்ளம் கொண்டவனாக இருக்கிறான். அப்படி இல்லாதவன்தான் மற்றவர்களுடன் குரோதம் கொள்கிறான்.அடுத்தவனுக்கு குழி வெட்டுகிறான்.எனவே மனிதன் கலாரசனை கொண்டவனாக வளர வேண்டும்.ஏதாவது ஒரு துறையில் அவடுக்கு ஈடுபாடு இருக்க வேண்டும்.


என் திறமையைக் கொண்டு இன்னும் நான் முன்னேற வேண்டும்.எனது நாட்டின் பெயரை உலக அளவில் உயர்த்துவதே எனது நோக்கம்.
ப்ரியந்தவின் ஓவியங்கள் உருவாகும் இடத்தைப் பார்த்துக்  கொண்டிருந்தேன். அவர் வரைந்த நவீன ஓவியங்களை எனக்குத் தெளிவுபடுத்தினார்.இருவரும் தேநீர் அருந்தினோம்.ஓவியங்கள் உருவாகும் இடம் என்பது எத்தனை அற்புதமானது. தனது எண்ணங்களை வர்ணங்களின் வழியே சிதரவிடும் ஓவியக் கலைஞன் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்துகிறான்.




1 comment:

  1. Pakistani Escorts, This Is The Reason Why We Do Not Shy Away From Flaunting The Beauty Of Our Girls Through Exclusive Show Of Their Islamabad Escorts Gallery.

    ReplyDelete