இன்ஸாப் ஸலாஹுதீன் கண்டி மாவட்டத்தில் உடுநுவரை, படுபிடியைச் சேர்ந்தவர்.நளீமியா பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஊடகவியல் டிப்ளோமாவை நிறைவு செய்துள்ளார்.ஊடகம்,பதிப்பு,கலை,இலக்கியம் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.'நிகழ்' என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தை நடாத்தி வருகிறார்.ஒரு ஊகவியலாளராக தனது பயணத்தை ஆரம்பித்து மீள்பார்வை பத்திரிகையினதும் வைகறை சஞ்சிகையினதும் துணையாசிரியராகப் பணியாற்றினார்.இவர் எழுதிய ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை நூல் மற்றும் அதற்காக இயற்றிய பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
நேர்காணல்- நஸார் இஜாஸ்
உங்களுடைய ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை உரைநடை தொகுதி சமுகத்தில் நடைபெறுகின்ற
சாதாரண நிகழ்வுகளையும் அப்பட்டமாக படம் பிடித்திருக்கிறது. உங்களுக்கான கதை களத்தை
நீங்கள் எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?
அன்றாட வாழ்க்கையிலிருந்தே எழுதுவதற்கான உற்சாகம் பிறக்கின்றது. துக்கம்,மகிழ்ச்சி,வறுமை,மரணம்,காதல்,நட்பு என்று வாழ்வுடன்
இணைந்த ஒவ்வொன்றிலும் எழுதுவதற்கான விடயங்கள் இருப்பதை நான் காண்கிறேன். என்னைப் பாதிக்கும்
எந்தவொரு விடயமும் எழுதுவதற்கான களத்தை நோக்கி
முன் தள்ளிக் கொண்டே இருக்கின்றது.அனுபவம் இருந்தால் எந்த மடையனும் எழுதலாம்
என்பார் வைக்கம் முஹம்மது பஷீர். உண்மையில் அனுபவம் மிகப் பெரிய களத்தை எழுத்துக்குத்
தருகிறது. ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை என்ற எனது நூல் அன்பு, நட்பு, வறுமை,ஏழ்மை,நினைவுகள்,வாழ்க்கைப் போராட்டம் என
மனதுக்கு நெருக்கமான,அன்றாட வாழ்வில் நாம் கவனிக்க
மறந்த விடயங்களைப் பேசு பொருளாகக் கொண்டுள்ளது.
உங்களுடைய குடும்பப்பின்னனி உங்களுடைய இலக்கிய ஈடுபாட்டுக்கு காரணமாக அமைந்ததா?
நான் பாடசாலையில் படிக்கும் நாட்களில் எனது சகோதரன் சிறுகதையில் ஈடுபாடு கொண்டிருந்தான்.தேசிய
மட்டத்திலும் அவரது கதைகள் பரிசு பெற்றிருக்கின்றன. அவற்றையெல்லாம் வாசிக்கும் போது
மிகவும் ஆர்வமாக இருக்கும்.இது தவிர வேறு ஒரு
சூழல் வீட்டில் இருக்கவில்லை. ஆனால் இலக்கியத்தை உள்வாங்கும் மனதும் வாசிப்பின் அகலத்
திறக்காத கதவுகளும் எனக்குள் இருந்தன.நளீமியா அதற்கான சூழலை உருவாக்கித் தந்தது.வாசிப்பினதும்
இலக்கியத்தினதும் ஜன்னல்களைத் திறந்து விட்ட ஆசிரிய நண்பர் ஏ.பீ.எம் இத்ரீஸ் அவர்களை
இங்கே நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
எமது சமுகம் இலக்கியத்தினூடாக எதை கற்றுக் கொள்ள வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
இலக்கியம் மட்டுமல்ல கலைகளும் ஒரு சமூகத்திற்கு முக்கியம்.கலை இலக்கியங்களினூடாக
நாம் நமது காலத்தின் நினைவுகளையும் பண்பாடுகளையும் பதிவு செய்கிறோம். கலைகளும் இலக்கியங்களும்
வெறுமனே பெயருக்காகவும் புகழுக்காகவும் படைக்கப்படும் ஒன்றல்ல.அது சமூகத்தின் அவலங்களை, எளிய மனிதர்களின் வாழ்க்கையை, விளிம்புநிலை மக்களின்
துயரங்களை, சமூகத்தின் உள்மனக் கிடக்கைகளைப்
பதிவு செய்ய வேண்டும். சமூகத்தின் சீரிய சிந்தனைக்கும் நிதானமான பார்வைக்கும் அவை வழிகாட்ட
வேண்டும். அப்படியாயின் அதற்கான படைப்புக்கள் வெளிவர வேண்டும்.மக்கள் அதனைப் படிக்க
வேண்டும்.இலக்கியவாதிகளும் கலைஞர்களும் சமூகத்தின் ஒரு அங்கமே.அவர்கள் சமூகத்திலிருந்து
தம்மைப் பிரித்து வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள்தான் தமது படைப்புகளின் வழியாக சமூகத்திற்குத்
தேவையான வழிகாட்டல்களை புதிய பார்வைகளை,அறம் சார்ந்த விமர்சனங்களை,கூர்மையான அவதானிப்புகளை வழங்க வேண்டும்.பிற சமூகங்களுடன் உரையாட கலை,இலக்கியம் சிறந்த வழியாக
இருக்கின்றது என்பதை இலக்கியவாதிகளும் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊடகத்துறையில் பல வருடம் பணியாற்றியவர் என்ற வகையில் எமது சமூகத்தின் ஊடக இடைவெளியை
எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஊடகத்துறையில் எமது சமூகம் முன்னை விட வளர்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனாலும்
தரமான ஊடகவியலாளர்களை உருவாக்குவதில் நாம் கவனம் கொள்ள வேண்டும்.இதை யார் செய்வது என்ற
கேள்வி எப்போதும் கேள்வியாகவே இருக்கிறது.சுய முயற்சியால் உருவாகின்றவர்களைப் பயன்படுத்தவே
நாம் தயாராக இருக்கின்றோமே தவிர தூர நோக்குடன் ஆளுமைகளை உருவாக்கும் பணியில் நாம் பூச்சியமாகவே
இருக்கிறோம். அமைப்பு,இயக்கம்,கட்சி என்று ஒரு குழுவுடன்
சாராத ஊடக அமைப்புக்கள் தோற்றம் பெற வேண்டும்.அல்லது அவை பொதுவான அடையாளத்துடன் இயங்க
வேண்டும். பொதுவான நிறுவனங்களால்தான் அதிக மக்கள் திரளுக்கான கருத்துகளை கொண்டு சேர்க்க
முடியும். ஊடகத்துறையில் முதலீடு செய்யக் கூடிய தனவந்தர்கள் முன்வர வேண்டும். சமூகத்தை
உண்மையாக நேசிப்பவர்களாலும் சுயலாபமற்றவர்களாலும்தான் சமூகத்தின் திசை வழியை சரிசெய்ய
முடியும். தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளாத
எந்த ஊடக முயற்சியும் வெற்றி பெறும் என்று சொல்வது கடிமானது.
கலைத்துறை சார்ந்த முயற்சிகள் எமது சமூகத்தில் எந்த இடத்தில் இருக்கிறது? இத்துறையில் உங்களது ஈடுபாடு
மற்றும் பங்களிப்பு பற்றிச் சொல்வீர்களா?
கலைகளுடனான ஈடுபாடும் நாட்டமும் நிறையவே இருக்கின்றது. இருந்தாலும் அது சார்ந்த
முயற்சிகளை வெளிக் கொண்டு வருவதில்தான் தாமதம் இருக்கிறன்றது. பொருளாதாரம் இதற்கு மிகப்பெரிய
தடையாக அமைகிறது.அத்தோடு கலை சார்ந்த முயற்சிகள் கூட்டு முயற்சியினூடாகவே நடைபெற வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எமது சமூகத்தின் கலை முயற்சிகளை அவதானித்து வருவதோடு
பங்களித்தும் வருகிறேன்.அந்தவகையில் 2000 களைத் தொடர்ந்து நான் அறிந்த வகையில் சுமார் ஏழு இசைத் தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.
அதில் நான்கு தொகுப்புக்களில் என்னுடைய பங்களிப்பை பாடல் எழுதியும் பாடியும் செய்திருக்கிறேன்.அதே
போல குறும்படங்கள்,ஆவணப்பட முயற்சிகள் நடைபெறுகின்றன.இவை
தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை.ஆனால் இதையறியாத சில ஆய்வாளர்கள் முஸ்லிம் சமூகத்தை குறை
சொல்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.இது போன்ற முயற்சிகளை சமூகம் ஏற்றுக் கொள்ளும்
பக்குவத்தில், கருத்துத் தெளிவில் இல்லை
என்பதற்காக நாம் சோர்ந்துவிட முடியாது.கலைத் துறை இன்று மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. மக்களின் உளவியல் கட்டமைப்பில் தாக்கம் செலுத்தும் சக்தியாக அது மாறியிருக்கிறது.உரிய
முறையில் அதைப் பயன்படுத்த நாம் முன் வர வேண்டும்.இத்துறை சார்ந்தவர்களை ஊக்குவிக்
வேண்டும்.ஆனால் எமது சமூகத்தில் இத்துறையில் பாரிய இடைவெளி இருக்கின்றது.ஒரு கானகம்
எரியும் போது ஒரு குவளைத் தண்ணீரால் என்ன செய்ய முடியும்?அது போன்றதுதான் பிற கலாசாரங்களின் தாக்கமும். இது குறித்து நாம் தீவிரமாகச் சிந்திக்கவும்
செலயாற்றவும் தவறும் போது எதிர்காலத்தில் நிச்சயம் கைசேதப்படுவோம். எமக்கான கலை,கலாசார அடையாளங்களை எத்தனை
நாளைக்குத்தான் பிரதிபன்னிக் கொண்டிருப்பது?
இலங்கைச் சூழலில் முஸ்லிம் பதிப்பகங்கள் பற்றிய உங்களது அவதானம் என்ன?
இலங்கையின் பதிப்பகச் சூழலும் பாரிய மாற்றங்களை உள்வாங்கி வளர்ந்து வருகின்றது
என்பதை மறுப்பதற்கில்லை. சிங்கள ஆங்கில வெளியீடுகளுடன் ஒப்பிடுகிற போது தமிழ் வெளியீடுகளின்
அளவு குறைவாக இருந்தாலும் கடந்த காலத்தை விட அது முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
ஆனாலும் வாசிப்பதிலும் தேடலிலும் உள்ள குறைந்த ஆர்வம் அப்படியேதான் இருக்கிறது.
வாசிப்பு ஆர்வம் குறைந்த ஒரு சமூகத்தில் பல பதிப்பகங்கள் தோன்றுவதை வாசிப்பை பல்வேறு
நிலைகளில் சாத்தியப்படுத்து வதற்கான முயற்சியாகவும் பார்க்கலாம். ஆனால் சந்தையை மாத்திரம்
கவனத்திற் கொண்டு வெளியீடுகளைச் செய்வதும் தமது இயலுமைக்கேற்ற புத்தகங்களை மாத்திரம்
வெளியிடுவதும் ஆரோக்கியமல்ல.
ஒரு பதிப்பகம் தனது புத்தகத் தேர்வுக்குப் பின்னால் பல நோக்கங்களை வைத்திருக்க
முடியும்.அதில் தவறில்லை ஆனால் மக்களுக்கு, வாசகர்களுக்குத் தேவையானவற்றை நாம் வழங்குகிறோமா என்பதுதான் முக்கியம்.
எமது சமூகத்தின் வெளியீடுகளை நாம் இஸ்லாமிய இயக்களின் வெளியீடுகள் இயக்கங்கள் சாராத
வெளியீடுகள் என இரண்டாகப் பார்க்கலாம்.இயக்கங்கள் சாராத வெளியீடுகள் எனும் போது தனிநபர்
முயற்சிகள்,இலக்கியப் படைப்புக்கள்
போன்றவற்றைச் சொல்லலாம்.பெரும்பாலும் இயக்கங்களது வெளியீடுகள் அவைகளது கொள்கை சார்ந்து
இருப்பவை.சிலபோது அவை ஒரே தன்மை கொண்டவையாக இருக்கின்றன.அல்லது மொழிபெயர்ப்பு நூல்களாக
இருக்கின்றன. ஆனால் சிறுகதை,நாவல் சிறுவர்களுக்கான நூல்கள் சமூகம் தொடர்பான கனதியான ஆய்வுகள், என்று பார்த்தால் மிகவும்
குறைவான வெளியீடுகளையே நாம் காண்கிறோம். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்குப்
போனால் இதைத் தெளிவாகப் பார்க்கலாம்.அதே போல இந்தியாவின் தமிழ்ப் பதிப்புச் சூழலை நோக்கினாலும்
இதை அவதானிக்கலாம்.அடுத்த சமூகங்கள் பதிப்பிலும் சரி உள்ளடக்கத்திலும் சரி பல்வகைமையையும்
புதிய போக்குகளையும் கொண்டிருக்கின்றன. வருடாந்தம் நடக்கும் புத்தகக் கண்காட்சியில்
எமது எத்தனை பதிப்பகங்கள் பங்கு கொள்கின்றன? அடுத்த சமூகங்களுடன் ஊடாடுவதற்கும் எம்மை அறிமுகப்படுத்துவதற்கும் நாம் எதை வைத்திருக்கிறோம்.எதனை
எழுதியிருக்கிறோம்? எனவே எமது பதிப்பகங்கள்
தமது வெளியீடுகளைத் தேர்ந்தெடுக்கும் போது கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.
சிறுவர்களுக்கான தனியான பதிப்பகம் தேவை என ஒருமுறை எழுதியிருந்தீர்கள். சிறுவர்களுக்கான
வெளியீடுகள் எமது சமூகத்தில் எந்தளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது?
எமது சமூகமும் சரி பதிப்பகங்களும் சரி அதற்கான உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை
என்பது எனது அபிப்பிராயம்.சிறுவர்களுக்கான கதைகள் என்று சொல்லி பக்கம் நிறைய கதைகளை
அச்சிடுகிறோம்.அதில் படங்களே இருப்பதில்லை. நீங்கள் ஆங்கிலத்தில் வெளிவரும் சிறுவர்களுக்கான
சில நூல்களைப் பார்த்தால் இதனை இன்னும் தெளிவாகப் புரியலாம்.குழந்தைகளின் கற்பனையையும்
தேடலையும் விருத்தி செய்யும் வகையில் நாம் நூல்களை வெளியிட வேண்டும்.அதை யாருக்கு விற்பது?அதிகவிலை கொடுத்து யார்
வாங்குவார் என்று நாம் யோசித்துக் கொண்டிருந்தால் நமது குழந்தைகள் ஒருபோதும் வாசிப்பில்
ஆர்வம் கொள்ள மாட்டார்கள்.இத்துறை சார்ந்து ஆர்வமும் ஆற்றலும் உள்ளவர்கள் ஒன்றாக இணைந்தேனும்
சிறுவர்களுக்கான கதைகளை,
பாடல்களை, கார்டுன்களைப் படைக்க வேண்டும்.சிறுவர்களுக்காக
எழுதக் கூடிய எழுத்தாளர்கள் எம்மில் தோன்ற வேண்டும்.சிறுவர்களுக்கான தனியான பதிப்பகங்கள்
எமது சமூகத்தில் தோன்ற வேண்டும்.
எப்படியான எழுத்துக்களை நீங்கள் வாசிப்புக்காக தேர்ந்தெடுக்கிறீர்கள்?
வாசிப்பு என்பது ஒரு அனுபவம் சார்ந்த செயல்.அது கசக்கின்றதாக இல்லாத வரையிலே அதன்
சுகம் இருக்கிறது.எனவே எழுத்தாளர்களை வைத்தும் வாசிப்பைத் தீர்மானிப்பதுண்டு. பயனுள்ள
எழுத்துக்களையே நான் எப்போதும் விரும்புகிறேன். ஒரு துறை சார்ந்த வாசிப்பில் எனக்கு
ஆர்வம் இல்லை. கிளைகள் பரப்பி வளரும் மரம் போல எனது வாசிப்பு பல தளங்களை நோக்கியதாய்
இருக்கிறது.
உங்களுடைய பெரும்பாலான எழுத்துக்களில் இந்திய எழுத்தாளர்களின் தாக்கம், மேற்கோள்கள் அதிகமாக இருப்பதை
அவதானித்திருக்கிறேன். இலங்கைச் சூழலில் தற்போது எழுதி வருகின்ற எழுத்தாளர்களை நீங்கள்
எவ்வாறு பார்க்கிறீர்கள்?
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களை நான் தொடர்ந்து படிக்கிறேன்.இதனால் அத்தாக்கம்
இயல்பாக என் எழுத்தில் ஒட்டியிருக்கலாம்.மாதாந்தம் படிப்பதற்கான கலை இலக்கிய இதழ்கள்
அங்கிருந்தே கூடுதலாக வெளிவருகின்றன. இந்தியாவில் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள்
வெளிவருகின்றன. ஒருவருடைய விருப்பம் சார்ந்தே வாசிப்புத் தேர்வு அமைகிறது. இலங்கை எழுத்தாளர்கள்
பற்றிக் கேட்கிறீர்கள். அவர்கள் குறித்த மதிப்பீடுகளை
நீங்கள் எதிர் பார்க்கிறீர்களா என்று தெரியாது. நான் யார் குறித்தும் மதிப்பீடு செய்ய
விரும்பவில்லை.சிறந்த எழுத்துக்கள் இலங்கையியிலுருந்தும் வெளி வருகின்றது. அவற்றையும்
நான் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
No comments:
Post a Comment