நேர்காணல்- இன்ஸாப் ஸலாஹுதீன்
ஜெயக்குமரன், தமிழினியின் கணவர் என்றுதான் அறிமுகமாகி இருக்கிறார்.இதைத்
தாண்டி உங்களைப் பற்றி அறிமுகம் செய்வீர்களா?
என்னுடைய சொந்த வாழ்க்கை,செயற்பாடுகள்,அடையாளம் என்கின்ற
எல்லாவற்றையும் தாண்டி இப்போது நான் தமிழினியின் கணவன் என்றுதான் அறிமுகமாகியிருக்கிறேன்.இது
மகிழ்ச்சியானதாக இருந்தாலும் என்னுடைய தனிப்பட்ட அடையாளம் நீங்கிப் போகிறதோ என்ற ஒரு
பயம் உள்ளுக்குள் இருக்கத்த்தான் செய்கிறது. இருந்தாலும் காலப் போக்கில் அதெல்லாம்
சரியாகிவிடும் என்று தோன்றுகிறது.
நான் வடக்கிலுள்ள கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ்
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றேன்.1984 ஆம் ஆண்டு வரைக்கும் யாழ்ப்பாணத்தில்தான் இருந்தேன். அக்காலம்
மாணவ செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபாடு இருந்தது.இதனால் இராணுவத்தினரால் விசாரணைக்கு
அழைக்கப்பட்டேன்.தனி நாடு என்ற கருத்தியலோடு இயங்குபவர்களின் பெயர் விபரங்களைக் கொண்டு
வரச் சொன்னார்கள். அதை நான் செய்ய விரும்பவில்லை. செய்யாவிட்டால் இலங்கையில் இருக்கவும்
முடியாது என்ற நிலையில் இந்தியாவுக்குத் தப்பிச்
சென்றுவிட்டேன்.பின்னர் நான்
நாடு திரும்பவில்லை.
போராட்டத்தில் உங்களது பங்களிப்பு இருந்ததா? புலிகளின் கருத்தியலை
நீங்கள் ஏற்றிருந்தீர்களா?
எனக்கு போராட்டத்தில் அதன் இறுதி வரை எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.
அவர்களது கொள்கைகளோடும் நான் உடன்படவில்லை. எனினும் எனது நெருங்கிய உறவினர்கள் நான்கு
பேரை இப்போராட்டம் பலி கொண்டது. அப்போது இயக்கங்கள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த
காலம்..இந்திய இராணுவத்தின் பயிற்சிகள் அவர்களுக்குக் கிடைத்தன.இயக்கங்கங்கள் நிச்சயம்
விடுதலையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று
எல்லா மட்டங்களிலும் இருந்தது.தனிநாடு என்பது சாத்தியமில்லை என்ற கருத்து எனக்குள்
அப்போதே இருந்த ஒன்றுதான். ஏனெனில் இந்தியா உதவி செய்கிறது என்பதற்காக தனக்கு அருகாமையில்
இன்னொரு நாடு தோன்றுவதை அது ஒரு போதும் விரும்பாது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால்
வங்காளதேசத்தின் சுதந்திரத்திற்கு இந்தியா உதவியது.ஆனாலும் அது தமது பேச்சைக் கேளாத
நிலைக்குச் செல்லும் போது இந்தியா தனது செயலை நினைத்து வருந்தவே செய்தது.
போராட்டம் வெற்றியடைய மாட்டாது என்று எனது உள்மனம் சொல்லிக்
கொண்டே இருந்த்து.சர்வதேச நிலைமைகளை அவதானித்தால் இதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.அமெரிக்காவுக்கு
இலங்கையை இரு நாடுகளாக்கப் பிரித்துத்தான் தனக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற
தேவை இல்லை.போராட்டத்தை இல்லாதொழிக்க எல்லோரும் கூட்டுச் சேர்ந்த விதத்தை வைத்தே இதனை
ஊகிக்கலாம் அல்லாவா?
அப்படியாயின் நீங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு பற்றிச்
சொல்வீர்களா?
எமது பிரச்சினையை சிங்கள மக்களுடன் பேசித்தான் தீர்க்க வேண்டும்
என்ற நிலைப்பாடு எனக்கு அப்போதும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இதற்கு ஆயுத ரீதியான
போராட்டம் ஒருபோதும் பலனைத் தராது.இங்குள்ள சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து
தமது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதுத்தான் எனது நிலைப்பாடு.ஆயுதம் ஏந்தியதன்
மூலம் நாம் அதிக விலையைக் கொடுத்தாயிற்று. இருந்தாலும் போர் நாங்கள் விரும்பிய விளைவுகளைக்
கொண்டு வந்துதரவில்லை.இத்தனை அர்ப்பணிப்புகள், உயிரிழப்புகள், பொருட்சேதங்களுக்குப்
பிறகும் எதிர்பார்த்த எந்த விளைவுகளையும் அது தரவில்லை.மாறாக எதிர்பாராத விளைவுகளையே
கொண்டுவந்து சேர்த்தது.
யுத்தத்தை நாம் வரவழைக்கிறோம் என்றால் இழப்புகள் வரத்தான்
செய்யும்.இதை விளங்கிக் கொண்டுதான் நாம் யுத்தத்திற்குப் போயிருக்க வேண்டும்.இன்னொரு
மனிதனை அழிக்க வேண்டும் என்று நினைப்பது ஒருவரது மனதில் இருக்கின்ற வன்மத்தின் வெளிப்பாடுதான்.
இழப்புகளுக்கு இரு தரப்பும் பொறுப்புக் கூற வேண்டும்.இனியும்
இழப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டேயிருப்பதால் என்ன செய்து விடலாம்? இருப்பவர்கள் நலமாகவும்
மகிழ்ச்சியுடனும் வாழ வழிகளைக் காட்ட வேண்டும்.போர் ஓய்ந்த பூமியில் வேலையில்லாப் பிரச்சினை,குறைவான
வருமானம், வறுமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இப்போது தலைதூக்கியிருக்கின்றன. இப்போது
நாம் இவை குறித்துக் கவலைப் பட வேண்டும்.
போருக்குப் பிந்திய இலங்கையில் சமூகங்களுக்கு மத்தியிலான
உரையாடல் சாத்தியம் என்று கருதுகிறீர்களா?
யார் என்ன சொன்னாலும் தப்பிப்பிராயங்களும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும்
இருக்கத்தான் செய்கிறன.அவற்றைக் கட்டிக் காப்பதால் எந்த நன்மையும் வந்துவிடப் போவதில்லை.
அரசு இயந்திரம் ஒரு சிறுபான்மை இனத்தை இன்னொரு சிறுபான்மை இனத்திற்கெதிராகத் திருப்பிவிடுவதில்
வெற்றி காண்கிறது.இதற்கான வழிகளை நாம் எவ்வளவுக்குக் குறைக்கிறோம் என்பதுதான் முக்கியம்.வெறுமனே
ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசுவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை.ஒருவரை
ஒருவர் புரிந்து கொள்ளவும் அங்கீகரிக்கவும் பழக வேண்டும்.முஸ்லிம்களுக்கான அரசியலும்
அவர்களது தேவையும் தமிழ் மக்களின் தேவையை விட வித்தியாசமானது. இரண்டு சமூகத்தின் தேவைகளும்
அரசியலும் ஒன்றல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.,இந்தப் புரிதலின் அடியாகத்
தோன்றும் ஒற்றுமையே அர்த்தம் நிறைந்ததாகவும் உண்மையானதாகவும் இருக்கும்.
கிழக்கில் இளம் முஸ்லிம் இலக்கியவாதிகளை அண்மையில் சந்தித்தேன்.
தமிழினியின் புத்தகத்தை முன்வைத்து நாங்கள் உரையாடினோம். தமிழினியின் எழுத்தை முஸ்லிம்
மக்கள் அதிகம் வரவேற்றார்கள் என்பதையும் இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
முஸ்லிம் இளைஞர்கள் யாரும் என்னைப் பகை உணர்வுடன் எதிர்கொள்ளவில்லை.சர்வதேச
நிலமைகளைப் புலிகள் கவனிக்கத் தவறினார்கள் என்பதை அழகாகவும் ஆணித்தரமாகவும் விவாதித்தனர்.
யாரும் புலிகள் அழியத்தான் வேண்டும் என்ற மனநிலையில் இருந்து பேசவில்லை என்ற உண்மை
எனக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. அது வெறும் உணர்ச்சிப் பெருக்குகளை அறிவார்ந்த
சிந்தனைப் போக்கு வெற்றி கொண்ட தருணமாக எனக்குப் பட்டது.இந்த மாற்றம் இலகுவானதல்ல.
இந்த மாற்றம் தமிழ் இளைஞர்களிடமும் வர வேண்டும்.அவர்கள் இன்னும் இறந்த காலத்தில் உறைந்து
போனவர்களாக இருக்கக் கூடாது என்பது எனது அபிப்பிராயம்.தோல்வியும் இழப்பும் எளிதில்
கடந்து வரக் கூடியவையல்ல என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் சாதாரண மக்கள் தோல்வி,இழப்பு
என்பவற்றைத் தாண்டியே தமது வாழ்வைக் கட்டமைக்க முயல்கிறார்கள் என்ற யதார்த்தத்தை இளைஞர்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.குறுகிய மனநிலையில் இருந்து நாம் வெளிவர வேண்டும்.இது ஒரு
பல்லின பல் கலாசார நாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..
நாங்கள் ஐரோப்பாவுக்கு ஓடுகிறோம்.அங்கே அடுத்த வீட்டுக்காரன்
ஜமேக்காவில் இருந்து வந்த கறுப்பினத்தவனாக இருப்பான் அதற்கடுத்த வீட்டில் உள்ளவன் பிரேஸிலில்
இருந்து வந்த வெள்ளையனாக இருப்பான். இவர்களிடம் நாம் ஹலோ சொல்லி கைகுலுக்கிவிட்டுத்தான்
செல்கிறோம். அதை ஏன் எமக்கு இங்கு செய்ய முடியாமல் இருக்கிறது. அனைவரையும் அரவணைத்துச்
செல்லும் மனப்பாங்கு எம்மிடம் வளர வேண்டும்.
தமிழினியின் புத்தகம் இந்த ‘அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கு“
பற்றிப் பேசுவதாகக் கருத முடியுமா?
நிச்சயமாக தமிழினியின் புத்தகம் அதைத்தான் பேசுகிறது.அவர்
20 வருடம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தாலும் தம்மிடம் அர்ப்பணிப்பு மிக்க போராளிகள்,சக்தி
வாய்ந்த ஆயுதங்கள் இருந்தாலும் நாம் ஏன் தோற்றோம் என்பதை அவர் சிந்திக்கிறார்.தோல்வி
எங்கிருந்து ஆரம்பித்தது என்பதையே அவர் ஆராய்கிறார்.அடுத்துள்ள சமூகம் தொடங்கி நாடு
தொடங்கி சர்வதேசமும் தமக்கு நண்பர்களாக இல்லாமல் போன நிலை எதனால் வந்தது என்பதற்கான
பதிலை அவர் தேடினார்.
ஆயுதத்திலும் போராட்டத்திலும் இருந்த பக்தியும் காதலும் இறுதியில்
பயனளிக்கவில்லை.இந்தக் காதலும் பக்தியும் ஈடுபாடும் சமாதானத்தை உருவாக்குவதில் இருக்கவில்லை என்பதை தமிழினி பேசுகிறார்.அவரது அனுபவங்களின்
விளைவுதான் அது.மாறாக நான் அவரை மூளைச் சலவை செய்து எழுத வைத்தேன் என்பதும் அரசுக்குப்
பயந்து அவர் எழுதினார் என்பதெல்லாம் வெறும் மேலாட்டமான வாதங்களே.
தமிழினியின் “ஒரு கூர் வாளின் நிழலில்“ புத்தக உருவாக்கத்தில்
உங்களது பங்களிப்பு இருந்ததா?
அவரது போராட்ட அனுபவமும் உண்மைகளும் வெளியே வர வேண்டும் என்பது
எனது விருப்பமாக இருந்தது.இதனால் அவரை எழுதும் படி நான் தூண்டினேன்.இதனால் அவர் எழுத
முன் வந்தார்.இப் புத்தக உருவாக்கத்தில் இதுதான் எனது பங்களிப்பு.
அவர் எழுதி எனக்கு ஈமெயிலில் அனுப்புவார்.அதில் நான் எந்த
மாற்றமும் செய்யவில்லை.அவர் மக்களுக்குச் சொல்ல விரும்புவதைச் சொல்வது அவருடைய சுதந்திரம்.
அவருடைய கணவராக நான் இருந்தேன் என்பதால் நான் விரும்பியதைத் தான் அவர் சொல்ல வேண்டும்
என்ற கட்டுப்பாடு எதுவும் அவருக்கிருக்கவில்லை.நான் போராட்டத்தில் சம்பந்தப் பட்டிருக்வில்லை
என்பதால் அது குறித்த எந்த அனுபவமும் எனக்கு இருக்கவில்லை.எனக்கு அறவே பரிச்சயமற்ற
ஒரு விஷயத்தை தமிழினியின் பாதணிக்குள் ஏறி நின்று அவர் எழுதுவதாகவே எழுத வேண்டிய அவசியம்
எனக்கில்லை.அதையும் விட, தமிழினியின் மனநிலையில் இருந்து கொண்டு வேறு எவராலுமே அந்த
அத்தியாயங்களை எழுதியிருக்க முடியாது என்பது நூலை ஒரு திறந்த மனதுடன் படிப்பவர்களுக்கு
நிச்சயம் புரியும்.வேண்டுமானால் சில வசனங்களை நான் ஒழுங்குபடுத்தியிருப்பேன். அதுவும்
மிகக் குறைவான ஒரு பங்களிப்பே.
தோல்வியின் தாக்கமும் தனது மக்களாலேயே அவர் மீது சுமத்தப்பட்ட
அபாண்டங்களும் அவரை நோகடித்த விதத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. எல்லோரும் சரணடைவுக்கு
முன்னர் இருந்த தமிழினியையே தமது நினைவுகளில் மீட்டுகிறார்கள்.இருபது வருடம் மானசீகமாக
நம்பிக் கொண்டிருந்த ஒன்று தனக்கு முன்னாலேயே கலைந்து போனதை நினைத்து அவர் மிகவும்
வருந்தியிருக்கிறார். தனக்குள்ளேயே நீண்ட நாட்களாக அவர் அழுதிருக்கிறார். தன் மனதோடு
சமாதானம் செய்து கொள்ள முடியாமல் தினறியிருக்கிறார்.
இத்தனைக்கும் பின்னர்தான் அவர்
இந்த நூலை எழுதியிருக்கிறார் என்பது சிலருக்குப் புரியவில்லை..இருபது வருடம் போராடிய
ஒருவர் எப்படி இவ்வாறு எழுதுவார் என்று கேட்கிறார்கள்.நான் அதை எழுதியாக குற்றம் சுமத்துகின்றனர்.
அனுபவம் இல்லாத ஒருவனால் இத்தனையையும் எழுத முடியாது என்பதை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்
கொள்பவர்களாலேயே விளங்கிக் கொள்ள முடியவில்லை.காலம்தான் எல்லோருக்குமான சிறந்த பதிலாக
இருக்கும்.
தமிழினி ஒரு போராளிப் பெண்.நீங்கள் அவர் கொண்டிருந்த கருத்தியலுக்கு
எதிரானவர்.அவரைத் திருமணம் செய்யும் முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
சமூகத்தில் தமிழினியைப் போல ஆயிரக்கணக்கான போராளிகள் இருந்தார்கள்,
இருக்கிறார்கள்.ஆயுதத்துடன் திரியும் போது அவர்களுக்கு கௌரவத்தையும் மரியாதையையும்
கொடுத்த சமூகம் போராட்டம் தோல்வியடைந்ததும் அவர்களை அப்படியே ஒதுக்கிவிட்டது.அவர்களை
உள்வாங்கவும் சமூகம் இன்னும் தயாராக இல்லை என்பது தான் உண்மை. அவமதிப்புகளும் குத்தல்
கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.தமிழினி அவை தந்த துயரத்தையெல்லாம் உள்வாங்கிக் கொண்டுதான்
வாழ்ந்தார்.
அப்போது நான் லன்டனில் இருந்தேன்.தமிழினியை திருமணம் செய்யப்
போகிறேன் என்றதும் பல வகையான கருத்துக்கள், ஆலோசனைகள் என்னை நோக்கி வந்தன. அதில் முக்கியமானது எதுவெனில்
தமிழினியை திருமணம் செய்ய வேண்டாம் எனப் பல தமிழ் தேசியவாத ஆதரவாளர்கள் எனக்கு ஆலோசனை
கூறியது தான்.அக்கருத்துக்களை நான் ஒரு பொருட்டாகக்
எடுக்கவில்லை. ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய நான்
முன் வந்தேன் என்பதாக இதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.நாங்கள் இருவரும் பேசத் தொடங்கியதும்தான்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தொடங்கினோம்.நான் புலி ஆதரவாளன் இல்லை என்பதை முதலில்
அவரிடம் சொல்லி விட்டேன். அதுதான் அவருக்கும் தேவைப்பட்டது.ஏனெனில் அப்படியான ஒருவரிடம்தான்
அவர் மனம் விட்டுக் கதைக்க முடியும்.சுமார் ஆறு மாத காலம் வரை தொலைபேசியில் கதைத்தோம்,கடிதங்கள்
எழுதினோம். இப்படியாகத்தான் எமது புரிந்துணர்வு வளர்ந்தது.அது ஆழமான ஒரு உறவை நோக்கி
எம்மை அழைத்துச் சென்றது.
தமிழினியின் இழப்பை எப்படி எதிர் கொண்டீர்கள்?
நாங்கள் மிக மிக அன்பான கணவன் மனைவியாக இருந்தோம். எங்களுக்கிடையில்
அரசியல் ரீதியான சண்டைகள் எதுவுமே வரவில்லை.வேறுபட்ட அரசியல் கருத்துடைய இருவர் ஒரு
குடும்பத்தில் வாழ முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. எங்களுக்குள் இருந்தது
ஒரு உன்னதமான உறவு.அது எல்லாவிதமான வேறுபாடுகளையும் அன்பு வெற்றி கொண்டிருந்தது என்று
தான் எமது உறவை நான் எப்போதும் உணர்வதுண்டு.
தமிழினி என் மீது நிறைய அன்பு காட்டினார்.அவரிடம் நான் எதிர்பார்த்த்தை
விட மிகுந்த அக்கறையுடன் என்னுடன் நடந்து கொண்டார். சின்னச் சின்ன விசயங்களில்
கூட அவர் மிகுந்த கவனமெடுத்தார்.
அவரது இழப்பிலிருந்து ஓரளவு மீள்வதற்கு எனக்கு ஒரு வருடம் எடுத்தது என்றே சொல்ல வேண்டும்.
எந்த விஷயத்திலும் என்னால் ஈடுபாடு காட்ட முடியவில்லை. அவை மிகவும் துயர் மிகுந்த நாட்கள்.அந்த
நாட்களை மீட்டவே கஷ்டமாக இருக்கிறது. இப்போதும் நான் அத்துயரிலிருந்து முழுதாக மீண்டதாகச்
சொல்ல முடியாது.
அவரிடம் நல்ல குணங்கள் இருந்தன.ஒரு ஆளுமை மிக்கவராக, எவரையும்
தன்பால் இலகுவாக ஈர்க்கக் கூடிய பெண்ணாக அவர் இருந்தார். எவர் மீதும் குறை சொல்ல மாட்டார்.
எல்லோரிடத்திலும் அன்பும் இரக்கமும் உள்ளவராக இருந்தார். அவருடைய இயல்புகள் எப்போதும்
என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இப்போது அவர் இருந்திருந்தால் வாழ்க்கை இன்னும் சிறப்பாக
இருக்கும் என்று தோன்றுகிறது. அவர் உயிரோடிருந்திருந்தால் சமூகத்திற்குப் பல நன்மைகளை
அவரால் செய்திருக்க முடியும்.ஒரு அழகிய கனவு கலைந்தது போலத்தான் இருக்கிறது.
புனர்வாழ்வின் போது நல்ல முறையில் தமிழினி நடத்தப்பட்டார்
என்றுதான் புத்தகத்தின் கடைசி அத்தியாயங்களை வாசித்து முடிக்கும் போது உணர முடிகிறது.இதை
ஏற்றுக் கொள்ளலாமா?
புனர்வாழ்வு முகாம் என்பது ஏனைய தடுப்பு முகாம்களை விட அமைப்பிலும்
நடைமுறையிலும் வேறுபட்டது. யாரும் நினைத்த மாதிரி அங்கு எதுவும் செய்துவிட முடியாது.
அங்கு தமிழினி அனுமதிக்கப்பட்ட முதல் நாள் தமிழினிக்கு மூன்று மணித்தியால விசாரணையின்
பின்னர் இனிமேலும் உங்கள் அரசியலைக் கதைத்து இங்குள்ளவர்களின் மனதை மாற்ற முடியாது
எனும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாகச் சொன்னார். முகாமிலிருந்து வெளிவரும் போதும்
இப்படியான ஒரு விசாரணையை அவர் எதிர் கொண்டதாகச் சொன்னார்.
சிறுவர் முதல் முதியோர் வரை யாரையும் ஆட்கொள்ளும் ஒருவகை
வசீகரம் அவரிடம் இருப்பதை நான் அவதானித்திருக்கிறேன்.இது ஒரு ஆளுமைதான் .புனர்வாழ்வு
முகாமிலும் அவர் அங்குள்ளவர்களின் மனதையும் மதிப்பையும் வென்றிருந்தார். இது தனது தனிப்பட்ட
வசதிக்காக தமிழினி எதையும் விட்டுக் கொடுத்தார் என்ற அர்த்தமில்லை. தான் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட
சூழலை தனக்கு முரணற்றதாக மாற்றிக் கொள்ள முயற்சிப்பது எல்லா மனிதருக்கும் இயல்பானது
தான்..அவரது தனிப்பட்ட திறமையால் தமிழினி இதனைச் சாத்தியப்படுத்தியிருக்க கூடும்..
அத்தோடு புனர்வாழ்வு முகாமில் இருந்த அனைவரும் ஒரே முறையிலேதான்
கவனிக்கப்பட்டார்கள்.அந்த முகாமின் நடைமுறை அப்படித்தான்.அதை நாங்கள் விளங்கிக் கொண்டால்
இதை ஏற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
இப்போது உங்களது செயற்பாடுகள் எதில் மையம் கொண்டிருக்கிறது.
எங்களுக்கான பொது வெளி என்பது குறுகியதாகவே இருக்கின்றது.
நெருக்கடிகள் நிறைந்த சூழலில் மேலாதிக்க சக்திகளின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இனவாதம்
வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இன,மொழி அடையாளங்களை மறந்து இலங்கையன் என்ற ஒற்றை
அடையாளத்துடன் நாமெல்லாம் ஒன்றுபட இன்னும் 100 வருடங்கள் தேவைப் படலாம்.ஆனால் அதற்கான
பாதையை நாம் தொடங்காமல் இருக்க முடியாது.அதற்கான பயணம் நீண்டது என்றாலும் முதல் அடியை
நாம் எடுத்து வைக்கத்தான் வேண்டும்.இதுதான் எனது நம்பிக்கையும் அரசியலாகவும் இருக்கின்றது.
உரையாடலால், தனிப்பட்ட நட்புகளால், கலை இலக்கியச் செயற்பாடுகளால்
இதைச் சாத்தியப்படுத்த முயற்சிப்போம். இனி ஒருவருடன் ஒருவர் பேசுவோம். உரையாடல் மட்டும்தான்
நமக்கு முன்னால் எஞ்சியிருக்கிறது.இதை வழிநடத்துவதில்
தமிழ், சிங்கள இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளை விட முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளின்
பங்களிப்பு மிகவும் காத்திரமானது என நான் உணர்கிறேன்.. ஏனெனில் தமிழும், சிங்களமும்
அறிந்துள்ள அவர்களது திறமை இந்த உரையாடலுக்கு மிக முக்கியமானது. எதிர்காலத் தலைமுறைக்கு
நாம் எமது முன்னோரின் தவறுகளையும் பிழைகளையும் சுட்டிக் காட்ட வேண்டும்.அந்தப் பிழைகளை
அவர்கள் தமது வழிமுறையாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்..தமிழினி
சொன்னது போல உண்மையான சமாதானத்திற்காக எமது கைகளை நாம் உயர்த்துவோம்.
No comments:
Post a Comment