ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள்இ ஹ்யூஸ்டன் டெக்சாஸ் நகரில் விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டபோது ஜார்ஜ் வில்லி அவர்களினால் ஆற்றப்பட்ட வரவேற்புரையை தேசம் நெற்றில் வாசித்தேன்.சுசீந்திரன் என்பவர் அதனை அற்புதமாக மொழிபெயர்த்திருந்தார்.கவித்துவமான மொழி.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.
பிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி இலங்கையில் வடமராச்சியில் பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது அமெரிக்காவில் கிளரி கிளிங்டன் அமைச்சில் குடிவரவு பகுதியில் உத்தியோகப் பற்றற்ற ஆலோசகராக கடமை ஆற்றி வருகிறார்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! இப் பெருநகருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!. இங்கிருக்கும் ஓக் மரங்களையும் பிற பறவைகளைப் போல போலிக்குரல் எழுப்பும் பறவைகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் “இது இலங்கையோ?” என்று நீங்கள் இலகுவில் மயங்கிவிடலாம்.
நான் இலங்கையில் பிறந்தவன். என் தாயும் என் மனைவி சாந்தியின் தந்தையும் தாயும் மற்றும் எங்களது பாட்டன்கள் பாட்டிகள் யாவரும் அங்கேதான், என் அத் தாய்த்திரு நாட்டின் புனித மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நான் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து என் பத்தாவது வயதில்தான் கொழும்பு வந்தவன். என் மனைவி பதுளையைச் சேர்ந்தவள். அவள் தந்தை தியத்தலாவையில் மதிப்புமிக்கதொரு கப்டன் என்பதால் அவள் அங்கேயே வளர்ந்தவள். நான் யாழ்ப்பாணத்தின் வேப்பமரங்களின் இன்சுவை முகர்ந்தவன். கொழும்பில் பாடசாலை செல்லும் வழியில் செக்கச் சிவந்த ஜம்புப் பழம் தின்று அதன் சிவப்புக் கொட்டை விழுந்து என் சட்டை கறைபடிந்ததுண்டு. மரத்தில் பழுத்த பலாப்பழத்தை காக்கைகள் கொத்தித் திறந்துவிடுகையில் கவர்ந்திழுக்கும் நறுமணத்தை நன்றே தெரிந்தவன். வெசாக் திருநாளின் மிகைவர்ண அலங்காரப் பந்தல்கள் தோரணங்களைக் கண்டும் ஏழைகளுக்கு உணவிடும் அன்னசத்திரங்களில் கூச்சமின்றிச் சென்று உணவுண்டும் கோவில்களில் ஒலிக்கும் மந்திர உச்சாடனங்கள் தோத்திர பஜனைகள் கேட்டும் மல்லிகைப் பூக்களினதும் சந்தனக்குச்சிகளினதும் நறுமணங்களை அனுபவித்தும் சர்வ புனிதர்களின் தேவாலய மணியோசைகேட்டும் அங்கு நடைபெறும் திருப்பலிப் பூசையில் பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய ஹேரத் அவர்களுக்குத் திருப்பணி செய்துமிருகிக்கிறேன்.
ஆனால் 1975 இல் நான் இலங்கையை விட்டு வெளியேறிய நாளில் இருந்து வேதனையும் துன்பமும் கொடூரமுமே அங்கே மிஞ்சின. வழக்கமாக நன்செய் நிலங்களின் நெல்வயல்களுக்கு தன் புனித நீர் பாச்சிய வலிய ஜீவநதி மகாவலி கங்கையில் சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் செங்குருதியோடியது. என் முந்தையோர் வாழ்ந்து மடிந்த தாய் நிலம் சுவர்க்கத்தில் இருந்து நரகத்தின் அதல பாதாளத்தில் வீழ்வதை அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தில் இங்கிருந்தபடி கண்ணுற வேண்டியவனானேன். இதற்கு யாரை நோவதென்று எவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாதுள்ளது. அன்றியும் நொந்து குற்றங்காண்பற்கான காலமும் என்றோ கடந்துவிட்டது.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்களோ துட்ட காமினியின் பரம்பரை. என் மக்கள் எல்லாளன் பரம்பரை. கந்துல என்ற தன் யானையில் இருந்து துட்ட காமினி எவ்வாறு எல்லாளனுடன் சண்டையிட்டு அவனைக் கொன்றான் என்பதை எண்ணிப்பாருங்கள். முதன் முதலில் ஐக்கிய இலங்கையொன்றினை உருவாகியதற்காக நிச்சயமாக துட்ட காமினி இன்றும் நினைவுகூரப்படுகின்றான். ஆனால் அவன் வேறொன்றுக்குமாகவும் நினைவுகொள்ளப்படுகின்றான்.
எல்லாளனைத் தோற்கடித்து அவனைக் கொன்றபின் அந்தச் சிறப்புமிக்க எதிரி எல்லாளனை மதித்து நினைவுச் சின்னம் எழுப்பியவன் அவன். அதன் முன்னே நாட்டு மக்கள் அனைவரும் நின்று சிரந்தாழ்த்தி மதிப்பளிக்க வேண்டுமென்று சட்டம் பிறப்பித்தவன். அதன் மூலம் தான் பெருங்கண்ணியவான் மட்டுமல்ல சிறந்த அரசியல் சாணக்கியன் என்பதயும் நிரூபித்துக் காட்டினான். எல்லாளனைத் தோற்கடித்தபின் தமிழர்களையும் தானே ஆளவேண்டுமென்பதை அவன் தெளிந்தே வைத்திருந்தான்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, வாய்ப்பும் விதியும் மற்றும் உங்களது மாபெரும் அரசியல் ஆளுமையும் வரலாற்றில் ஒர் தனித்துவமான இடத்திற்கு உங்களைக் கொண்டு சென்றிருக்கின்றது. முன்னே பலபேர் முறியடிக்க முயன்று தோற்ற 25 ஆண்டுகால அரசியற் கிளர்ச்சியினை இறுதியில் அடக்கியவன் மகிந்த ராஜபக்ஷ என்ற பெயருடைய மாவீரன் என்று இனிவரும் எதிர்காலச் சிறார்கள் சரித்திர நூல்களில் தங்களது பாடம் படிப்பார்கள். 21 ஆம் நூற்றாண்டின் துட்ட காமினி என்று அவர்கள் உங்களைச் சொல்லக்கூடும். ஆனால் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே துட்டகாமினியின் அதே மேலாடையை நீங்கள் போர்த்திக்கொள்ள விரும்பினால் நீங்களும் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். அது டகோபாவாகவோ அல்லது வேறெந்தத் தூபிகளாகவோ அல்லாது நிறைவேற்றுச் சட்டவலுவுள்ள புதிய கொள்கையொன்றாக இருக்க வேண்டும். 58 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை மூட்டிய அதே தவறினை நீங்களும் செய்யவேண்டாம். பல்கலைக் கழகம் செல்ல நினைக்கும் தமிழ் இளைஞர்களை இனியும் தடுத்துவிட வேண்டாம். தமிழர்கள் தாம் இந்த நாட்டில் இரண்டாந்தரக் குடிமகனாக எண்ணிக்கொண்டிருக்க இடந்தர வேண்டாம். அவர்களது மத நம்பிக்கையினைப் புண்படுத்தாது அவர்களது மொழியினை மதித்து நடவுங்கள்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு அவர்களது மொழி வழிபடும் தெய்வம். உலகில் அவ்வாறு தம் மொழியை வழிபடும் கலாசாரங்கள் மிகச் சிலவே. நீங்கள் ஒரு சட்டத்தரணியாகப் பயிற்றப்பட்டவர். உங்கள் ஆரம்பகாலத்தில் நீங்கள் ஒரு கடும் மனித உரிமைப் பாதுகாவலனாக கீர்த்தி பெற்றிருந்தீர்கள். இப்போது உங்களுக்குப் பேரும் புகழும் வந்துவிட்டது.
படைநடத்திச்சென்று சமராடி ரோமாபுரிக்குத் திரும்பிவரும் ஜூலிய சீசரைப் போல அதிகாரம் படைத்த மகாவீரனாகிவிட்டீர்கள். நீங்கள் கேட்பதை மறுப்பவர் இல்லை. சட்டக் கல்லூரியில் படித்தபோது நீங்களும் நானும் கற்றுக்கொண்ட சோல்பரி அரசியல் யாப்பின் நீக்கப்பட்ட சரத்துக்களை மீண்டும் அங்கீகரிக்குமாறு பாரளுமன்றத்திடம் கேளுங்கள். என் உதவி வேண்டுமானால் இங்கே குழுமியிருக்கும் அனேகரைப்போல் நானும் இலவசமாகவே அதனைச் செய்து தருவேன். தங்களுக்கென்றொரு இடமிருக்கின்றது என்று நீங்கள் உறுதிமொழி சொல்வீர்கள் என்று தமிழர்கள் ஏதிலிகளாக உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றனர். உங்களுக்கு அந்த இடம் இருக்கின்றது என்பதை அவர்களுக்கு நீங்கள் உறுதிசெய்யுங்கள். ஒரு பிரபாகரனைக் கொன்றீர்கள். அப்படி இன்னொருவன் வளர இடம்வைக்கக்கூடாது. வாளோடும் துப்பாக்கியோடும் இன்னொருவன் தோன்றுவதை முற்காத்துக் கொள்ள உங்களால் முடியாது. மனதாலும் மகத்தான அறிவாலும் மட்டுமே அதனைத் தடுக்க முடியும். புத்தரிடமிருந்து கற்றுக்கொண்ட கருணை, உண்மை, நீதி என்ற ஆயுதங்கள் மட்டுமே அதற்குத் தேவை. பகைமையைப் பகைமையால் ஒருபோதும் அழிக்கமுடியாது. அன்பினால் மட்டுமே பகமையை இல்லாதொழிக்கலாம் என்பது ஒரு புராதன நியதி.“ என்று தம்மபதத்தில் புத்தர் சொல்லியிருக்கின்றார்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்கள் இந்த அழகிய மாநகரைவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது, நாளை தன் பாடசாலைக்குச் செல்லும் பத்துவயதுச் சிறுவனின் வெள்ளைச் சட்டையின் சிவப்புக்கறை ஜம்புப்பழத்தின் கொட்டையால் அன்றி வேறொன்றாலுமில்லை என்பதையும், காலையின் காக்கையொன்று அங்கே கொத்திக் கிழிக்கப்போவது பலாப்பழத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதையும் வேப்பமரத்தில் தொங்குவது நான் முகர்ந்த வேப்பம் பழங்களல்லாது வேறொன்றுமில்லை என்பதையும் எனக்குச் சத்தியம் செய்து தாருங்கள். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!
எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!
எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!
No comments:
Post a Comment