Thursday, November 11, 2010

நீ எனக்குக் கண்ணாடி...





மனசு உடைந்து  விடக் கூடாதென்று பார்க்கிறேன் இப்படிச் சொல்பவர் களைப் பார்த்திருப்பீர்கள். இது உண்மைதான். கண்ணாடி உடைந்த பிறகு கண்ணாடியின் தன்மையில் அது இருப்பதில்லையே. கசக்கிப் போட்ட பூ மறுபடி எப்படிப் பூவாக முடியும்?

யாரும் யாரையும் விட உயர்ந்தவர்க ளல்ல. அந்தஸ்து, பட்டம், படிப்பு, அழகு எல்லாமே மனதுக்குக் கீழால் இருக்க வேண்டியவை. அவை மனதுக்குள் கர்வத்தைப் போர்த்தி விடக் கூடாது. தக்வா உள்ளவர் தான் இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர், கணிப்பீட்டுக்குரியவர்.



ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனிதர்கள். சிலரின் வெளித் தோற்றத்தில் இருக்கும் நேர்த்தியும் அழகும் மனதுக்குள் இருப்பதில்லை. சிலரின் வெளித்தோற்றத்தில் இருக்கும் அசிங்கமும் கர்வமும் மனதுக்குள் இருப்பதில்லை. மனிதர்கள் புரியாத புதிராகவே இருக்கிறார்கள்.

ஒவ்வொருவர் வாழ்விலும் பல மாதிரியான உறவுகள்... சில நீடித்து நிலைக்கின்றன. இன்னும் சில ஒற்றை வார்த்தையில் உடைந்து போகின்றன. எல்லாமே ஏதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே வாழ்கின்றன. உயிருக்கு மிக நெருக்கமாக இருந்து பழகியவர்களே மிகப் பெரிய இடைவெளிகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வதைப் பார்க்கும் போது, உறவின் நிச்சயமற்ற தன்மையை நினைத்து மனது அச்சம் கொள்கிறது.

எத்தனை உறவுகளால் ஆகியிருக்கிறது வாழ்வு...? தாய், தந்தை, அன்புக்குள் நெருக்கமாகி கணவன், மனைவி, ஆசிரியர், மாணவர், சகோதரன், சகோதரி, நிர்வாகி, உத்தியோகத்தர், தம் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆத்ம நண்பர்கள், பக்கத்து வீட்டார்கள், இரத்த உறவுகள், ஒரே அறையில் வசிப்பவர்கள், இயக்க சகோதரர்கள், எதிரிகள்... அடங்க மறுத்து எழும் அன்பு என்ற ஒற்றைச் சொல் எல்லாவற்றையும் பிணைத்துள்ளது. அன்பு மறுக்கப்படும் போது உள் மனதில் ஏற்படும் நுண் அதிர்வுகள் இதயத்தையே அசைத்துப் போடுகிறது. ஆன்மாவின் இருப்பையே அந்நியமாக்கி விடுகிறது.

 கனத்த கண்ணீரோடு தா யைத் தேடி அழும் குழ ந்தையின் முகத்தைக் கொ ஞ்சம் நிதானித்துப் பா ருங்கள், வலியின் அத்தனை ரேகைகளும் எத்தனை திக்கு களில் பயணிக்கிறது என்று. உறவோடு எப்பவும் ஒட்டி யிருக்கிறது விலகல். ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு சின்ன நிகழ்வு... இப்படி ஏதோ ஒன்று உலகில் உள்ள ஒவ்வொருவர் மனதையும் உடைக்காமல் இருந்த தில்லை. அத்தனை பேரும் உடைந்து போன உள்ளங்களோடுதான் வாழ்கின்றார்கள். வலிகளை எப்படி மிகச் சரியாகப் பதிவு செய்வது...?

எல்லோரும் தம்மை நல்லவராக நினைக்கிறார்கள். தம் உடை. நடை, கனவுகள், பேச்சு, பார்வை... என எல்லாமே பிரத்தியேகமானவை என்றும் தனித்துவமானவை என்றும் நினைக்கின்றனர். நினைப்பதில் என்ன தவறு இருக்கின்றது? மற்றவனை மறுக்கும் போதுதான் எல்லாம் பிழைத்துவிடுகிறது. தன் சொந்தக் கருத்தில் உறுதியாக இருத்தல் என்பது தான் சரியான கருத்தில் இருக்கிறேன் என்று அர்த்தப்படாது. பிழையென்று காணும்போது தன் உறுதியை அவர் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

உலக வாழ்வில் எல்லோருமே தவறு விடுகின்றனர். தவறுதானே மனிதனைத் திருத்தி விடுகின்றது. சிலருக்கு தவறைச் சுட்டிக் காட்டும் போது தாங்க முடியாத வேதனையில் தவிக்கின்றனர். தவறென்றால் முகத்திற்குச் சொல்லிக் காட்ட வேண்டும். ஆனால் முகத்தில் சொல்வது எல்லோருக்கும் பிடிப்ப தில்லையே!

குறைகள் இல்லாத மனிதனை இந்த பூமிப் பந்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் தேடிவர முடியாது. கணினி; வைரஸோடு வாழ்வது போல எல்லோரும் குறைகளுடன் தான் வாழ்கிறார்கள். எனவே தான் வாழ்வு பரிபூரணத்தை நோக்கிப் பயணப்படுகிறது.


இப்போதுதான் வருகிறது பிரச்சினை. இந்தக் குறைகளைச் சோல்லும் போது அல்லது சுட்டிக் காட்டும் போது, தான் நேசிக்கும் சகோதரன் மீது வைத் திருக்கும் அன்பையும் மீறிக் கொண்டு எல்லோருக்கும் எழுகிறது ஒரு வகை கோப உணர்வு.

தன் சகோதரன் அல்லது நண்பன் தனக்கு உபதேசிப்பதில் என்ன தவறு இருக்கிறது? இப்படிச் சொல்லும் போது இன்னொன்றையும் சொல்ல நினைக்கிறது மனசு.


உபதேசிப்பவர் நினைத்துக் கொள்ளக் கூடாது, ‘இந்த உலகில் எல்லாக் குறைகளிலிருந்தும் விடுபட்ட ஏக சிருஷ்டி நான்தான் என்று. உபதேசிக்கப்படுபவர் நினைத்துக் கொள்ளக் கூடாது எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்யும் எனக்கா இவர் உபதேசிக்க வந்து விட்டார் என்று.

இரண்டு முரண்பாடுகளுக்கும் நடுவே நாம் ஒவ்வொருவரும் எமது மனதை ஒருமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. வயதை வைத்து வாழ்க்கை தீர்மா னிக்கப்படுவதில்லை. மனதை வைத்தே வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. அது எந்தளவு உயர்ந்திருக்கிறதோ, அதுதான் அவரது வயது. இதைத் தான் "மனம் போல் வாழ்வு" என்றார்கள் அன்று.


அடுத்தவர் மனதைப் புரிந்து கொள்வதற்கு தோற்றுத் தோற்றுத்தான் முயல வேண்டியிருக்கிறது. தன் சின்ன அசைவுகளாலும் அடுத்தவன் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கும் அன்பில் நனைந்த உள்ளங் களைக் காண்பது என்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது.

எல்லோர் கனவுகளிலும் நாம் வாழ வேண்டும். தன் சிநேகிதனுக்காக, சகோதரனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பு எவனிடத்தில் இருக்கிறது. அது வார்த்தையிலும் எழுத்திலும் இருந்து என்ன புண்ணியம் இருக்கப் போகிறது?

அடுத்தவனுக்காக, தான் பசித்திருப்பதும், விழித் திருப்பதும் சிலருக்குப் பைத்தியகாரத் தனமாப் படலாம். இறைவனுக்காக என்று நோக்கும்போது அங்கு, தான் அழிந்து தன் சகோதர நண்பன் வாழ்வதே உன்னதமாக மாறுகின்றது.

மனது முழுக்க நீர்த்துளிகள் நிறைந்த மாதிரியான நட்பில், உறவில் இருக்கும் திருப்தி; நிழலற்ற நாளில் தலைக்கு மேல் நிழலைக் கொண்டு வந்து தரும்.

ஒரே வீட்டில் ஆயிரம் குறைகளுடன் நாம் வாழ்வதில்லையா? உறவுக ளிலும் சகோதரத்துவத்திலும் அது போலத்தான். ஆடையோடு சேர்ந்து தம் அத்தனை குறைகளையும் நாம் மறைத்துக் கொள்ளத் தேவை யில்லை. தன் சகோதரன் தனது குறைகளைச் சுட்டிக்காட்டட்டும். திருத்திக் கொண்டு பரிபூரணத்தை நோக்கிப் பயணிக்க வேண்டியதுதான்.

ஒரு முஃமின் அடுத்த முஃமினின் கண்ணாடி என்று இறைதூதர் சொன்னார்கள். எல்லோரும் எல்லோருக்கும் கண்ணாடிதான். குறைகளை நளினமாகச் சோல்லும் போது நமக்கு அவர்மீதான அன்பு குறைந்து போகத் தேவையில்லை. கண்ணாடி தன் அத்தனை குறைகளையும் காட்டுகின்றது என்று நாம் யாரும் கண்ணாடியைக் கடிந்து கொள்வதில்லையே.

No comments:

Post a Comment