Tuesday, December 24, 2013

இங்கிருந்து...மலையகத்தின் வாழ்வியல் பதிவுகள்

 
இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் 1950 களுக்கு முன்னரே இருந்திருக்கின்றன.அரை நூற்றாண்டுகளைக் கடந்த நிலையில் இலங்கைத் தமிழ் சினிமா வரலாற்றுப் பாதையில் நவீன பரிமாணமாக “இங்கிருந்து“ நம்முன் நிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவர், கலாநிதி சுமதி சிவமோகன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
 
மலைய மக்களின் துயர்மிகுந்த வாழ்வையும் வரலாற்றையும் இந்த முழு நீளத்திரைப்படம் பேச முற்படுகின்றது.1820 களைத் தொடர்ந்து இலங்கையில் பணிபுரிவதற்காக தென்னிந்திய தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்டனர்.இன்று வரை அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.மக்களின் வாழ்வியல்,கலாசார அவலங்களைப் பதிவு செய்யும் முயற்சியாகவே கலாநிதி சுமதியின் இத்திரைப்படம் காணப்படுகிறது.
 
ஒரு வாய்பேச முடியாத பெண்,குடும்பத்தில் கஷ்டத்தை எதிர்கொள்ளும் ஒரு குடும்பப் பெண்,கொழும்பிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் ஆகிய மூன்று பிரதான பாத்திரத்தினூடாக இயக்குனர் கதையை சொல்ல நினைக்கிறார்.இத்திரைப்படத்தில் கதை ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை.காலமாற்றங்கள் காட்சித் தன்மையால் பிரித்துக் காட்ப்படுவதில்லை.நிகழ்காலத்திரிருந்தே காட்சி மொழி அமைக்கப்பட்டிருக்கிறது.இது சிலபோது பார்வையாளனை சிக்கல் நிறைந்த வரைபடம் ஒன்றிற்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது.திரைக்கதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படத்தைப் பார்த்தால் அலுப்புத்தான் ஏற்படும்.
 
 
இலங்கை தமிழ் சினிமா வரலாற்றில் “இங்கிருந்து“ ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி.மலையக மக்களின் வாழ்க்கை நுட்பங்களை,வலியின் கனதியை,துயரின் வெம்மையை இயக்குனர் அம்மக்களுடன் பங்கேற்று உற்று நோக்கி வெளிக் கொணர்ந்துள்ளார்.இதனை மானுடவியல் ஆய்வின் ஒரு பகுதியாகவும் பார்க்கலாம்.சில அற்புதமான காட்சி அமைப்புக்கள் அந்தனி சுனேந்திரவின் இசையுடன் கலக்கும் நேரம் உன்னத தருணம் ஒன்றை அது உருவாக்கிவிடுகிறது.
 
இத்திரைப்படம் மலையக மக்களின் வேர்களிலிருந்து இன்றைய வாழ்வின் நவீன அடையாளங்கள் வரை அது எத்தகைய நிலைகளைக் கடந்து வந்திருக்கிறது,இனப்பிரச்சினையின் கோரம் என்ன வடிவங்களில் அந்த வாழ்நிலையைப் பாதித்திருக்கிறது,பசுமையின் பூமியில் மக்கள் எதிர்கொள்ளும் வரண்ட வாழ்க்கை என பல்வேறு பேசுபொருள்களை இரண்டு மணி நேரத்திற்குள் தன் காட்சிமொழியில் பதிவு செய்யத் தவறவில்லை.
 
தேயிலைத் தோட்டமும் தேயிலைச் செடிகளும் தூரத்தே இருந்து பார்க்கையில் எத்தனை பசுமையாகக் காட்சியளிக்கிறது?அச்செடிகளின் பசுமையிலும் அந்தப் பச்சை இலைகளின் சுவையான தேநீரிலும் தென்படாத ஒரு மனிதக் குழுமத்தின் வாழ்க்கை என்பது எத்தனை துயர்கள் நிறைந்தது என்பது உலகத்திற்கு மறைக்கப்பட்ட ஒன்று.அந்த வாழ்க்கையை பேச முனைந்த “இங்கிருந்து“ நிச்சயம் பேசப்படும்.
ஐக்கியஅமெரிக்காவின் க்ளோபல் பில்ம் இனிசியேற்றிவ்வின் 'விதந்துகுறிப்பிடத்தக்கதிரைப்படத்திற்கானவிருதை'ப் பெற்றுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் மார்ச் 2014இல் டெல்லியில் நடைபெறவுள்ள 10வது ஆசியப்பெண்கள் திரைப்படவிழாவில் திரையிடவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
 
 
இலங்கையின் சினிமா வரலாறு மூவின மக்களாலும் கட்டியெழுப்ப்ப்பட்ட ஒன்று.இலங்கை மக்களின் உண்மையான பிரச்சினைகளை வலுவான திரைமொழியில் சர்வதேசமயப்படுத்த இக் கருவியை மூவினத்தின் கலைஞர்களும் இணைந்து பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment