Monday, December 2, 2013

குனசிறி மஹத்தயா- நெஞ்சைத் தட்டும் நினைவு





“ஒரு எறும்புக்குக் கூட நான் அநியாயம் செய்ய நினைப்பதில்லை. என்னை ஏன் நரகத்தில் போட வேண்டும்“ குனசிறி அவர்களை நினைக்கும் போது அவர் சொன்ன இந்த வார்த்தைகள்தான் எனக்கு நினைவில் வருகிறது.அவசரமாய் நிகழாது என்று நினைத்த ஒரு மரணம் குறித்த செய்தி என் செல்போன் திரையில் தோன்றியது.
எல்லா மரணச் செய்திகளும் வாழ்க்கையின் நிச்சயமின்மையை திரும்பத் திரும்ப நினைவுபடுத்துகின்றன.


குனசிறி ஐயா நளீமியா வளாகத்தில் தன் ஆயுளின் பெரும்பகுதியை கழித்த மனிதர்.எனது வாழ்க்கையோடும் அவர் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் என்பதனால் இந்த மரணம் வலிக்கத்தான் செய்கிறது.அவர் ஒரு கடின உழைப்பாளி.அவர் மாரடைப்பால் இறந்தார் என்பதை சீரணிக்க சிறிது நேரம் எடுத்தது.

ஒரு கலாநிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்த அவர் பல்வேறு மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் நெருக்கமாய் உறவு வைத்தவர்.எல்லோருடனும் ஒன்று போலப் பழகியவர்.

மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள் மற்றும் சீனி,பிஸ்கட் போன்றவற்றைக் கொண்ட சிறிய கடையை அவர் நடத்திவந்தார்.அவரது கடைக்குப் போவதும் கல்லூரி வாழ்க்கையில் ஒரு அம்சம்.
கடன்களின் பெயர் நிறைந்த ஒரு கொப்பி எப்போதும் அவரது மேசையில் இருக்கும்.“கடன் அன்பை முறிக்கும்“ என்ற வார்த்தைகளை அவரது அந்தச் சிறிய கடையில் காண முடியாது.

எப்போதும் கீழ் நிலை ஊழியர்களின் வாழ்க்கைக் கனவும் போராட்டங்களும் வித்தியாசமாகத்தான் இருக்கும்.அவற்றை கேட்டறியும் தேவை எல்லோருக்கும் இருப்பதில்லை.

குனசிறி ஐயா ஒரு நல்ல வாசகன்.கம்யூனிசம் குறித்து ஆழமான வாசிப்புடையவர். தன் கடின வேலைக்கு மத்தியிலும் அவர் தினசரிப் பத்திரிகை படிக்கத் தவறுவதில்லை.சிறப்புக் கட்டுரைகளை முழுமையாகப் படிப்பவர் அவர்.படிக்கும் மாணவர்களே அவற்றை முழுமையாகப் படிப்பதில்லை.

 
எனக்கும் அவருக்கும் இடையிலான உறவில் இந்த விடயங்களை அதிகம் பரிமாறி இருக்கிறோம்.நடைமுறை அரசியல் சார்ந்த விமர்சனங்களை நாம் உரையாடியதுண்டு.என் நகைச் சுவை கலந்த அரசில் கிண்டல்களுக்காய் அவர் காத்திருப்பார்.இருவரும் வாய்விட்டுச் சிரிப்போம்.மீண்டும் அதனைசொல்லக்  கேட்பார்.

இலங்கையின் பொருளாதாரத் திட்டம் குறித்து அவரிடம் நிறைய விமர்சனங்கள் இருந்தன.அரசைக் கடுமையாக விமர்சிப்பவராக அவர் இருந்தார்.

தன் அன்பினால் அவர் எல்லோர் மனங்களையும் வென்றார்.தன் புன்னகையால் எத்தனையோ பேருடைய அன்பில் நிலைத்தார்.தெளிந்த நீரோடை போல உள்ளத்தை வைத்திருந்தவர்கள் தோற்றுப் போவதில்லை என்பதற்கு அவரே ஆதாரம்.

யாருக்கும் அநியாயம் செய்ய அவர் நினைக்கவில்லை.மதங்களில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை.பௌத்த கோட்பாடுகளில் கூட அவருக்கு தீவிரமான நம்பிக்கை இருக்கவில்லை.அவர் இஸ்லாமிய சூழலுக்குள் இருந்தும் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்ற வருத்தம் பலருக்கு இருக்கிறது.சிலபோது அது விமர்சனமாக்க் கூட முன்வைக்கப்படுகிறது.

அது அவரது நம்பிக்கை சார்ந்தது.அதற்கு காரணங்களையும் அவர் வைத்திருந்தார்.பன்மைத்துவத்தின் வெளிப்பாடக அதனைப் பார்த்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.அவர் இஸ்லாத்தைப் பற்றி அறியாதவர் அல்ல.அடுத்தவர்களை அவர்களது வித்தியாசங்களுடன் அங்கீகரிப்பதுதான் சிக்கலற்ற வாழ்க்கை முறையைத் தோற்றுவிக்கும்.

ஏன் நீங்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்ற கேள்விக்குத்தான் அவர் “ஒரு எறும்புக்குக் கூட நான் அநியாயம் செய்ய நினைப்பதில்லை. என்னை ஏன் நரகத்தில் போட வேண்டும்“ என அவர் கேள்வி எழுப்பினார்.நேர்வழியைக் கொடுக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றிருக்கிறான்.

எல்லோருடைய அபிமானத்தையும் அவர் வென்றார்.தன் வாழ்க்கையின் பிரத்தியேக்க் கனவுகளை,தீராத ஆசைகளை,தன் குடும்பத்திற்காக அவர் தாங்கிய தியாகங்களை அவருக்குள்ளேயே வைத்துக் கொண்டார்.நடந்து களைத்த வியர்வைத் துளியின் பிரமாண்டத்தில் எல்லாம் மறைந்து விட்டன.

வெய்யில் நிரம்பிய பொழுதிலும் தன் கருத்த மேனியில் வியர்வை வழிய, அவர் தன் பணியைச் செய்து கொண்டிருந்தார்.மாடிக் கட்டிடத்தின் மேல்த் தரையில்  படுத்து உறங்கினார்.தனக்கென ஒரு அறையோ, தொலை பேசியோ எனக்குத் தெரிந்தவரை அவருக்கு இருக்கவில்லை.மின் விசிறிகளுக்குக் கீழ் அவர் உறங்கவில்லை.ஒரு சைக்கிள் அவருக்கு இருக்கவில்லை.தன் கால்களையே கடைசி வரை அவர் நம்பினார்.தேயும் வரை உழைத்தார்.கிடைக்கும் பணத்தை பத்திரப்படுத்தி மாதங்களில் சில நாள் வீடு சென்று வந்தார்.

அவரை நோய்வாய்ப்பட்டு நான் பார்த்ததில்லை.அதனால்தான் அவரது மாரடைப்பை என்னால் சீரணிக்க முடியவில்லை.மரணத்திற்கும் ஒரு காரணம் வேண்டும்தானே.

அந்த வானப் பெரு வெளியின் கீழ் அவரைச் சந்தித்து உரையாடிய நினைவுகள்,இருவரும் மனம்விட்டுச் சிரித்த தருணங்கள்,“மாமே“எனச் செல்லமாகக் கொஞ்சிய நினைவுகள்,ரசித்துக் கொண்டே இருவரும் முணுமுணுத்த பாடல் வரிகள் எல்லாமே ஒன்று சேர்ந்து என் நெஞ்சச் சுவரை தட்டுகின்றன.

அவரது இழப்பு எல்லோருக்கும் கவலை அளிக்கும் ஒரு நிகழ்வு. நளீமியா மாணவர்கள் அவர் குறித்த ஒரு சிறப்பிதழாக ராபிதா கலமிய்யாவை மாற்றி அவருக்கு கௌரவம் அளிக்கும் படி வேண்டுகிறேன்.அவர் குறித்த தனித்த நினைவுகள் வாசிகசாலையில் நிரந்தரமாய் இருக்கட்டும்.

மூன்று மாதங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன்.சிரித்து உரையாடினேன்.மரணத்தின் எந்த அடையாளங்களும் அந்த அறையில் இருக்கவில்லை.கரங்களைப் பலமாகப் பற்றி அன்பை வெளிப்படுத்தினேன். அவரது கரங்களைத் தொட்ட இறுதிக் கணங்களாக அது இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.


3 comments:

  1. izai washiththu mudindapozu naan aluzirundazai unarnden, ini naleemiyavil Gunasiri Ayya illai enpazai ninaikkumpozu............

    ReplyDelete
  2. இன்ஷாப் பன்மைத்துவம் என்பது வேறு....ஒருவர் மீதான அன்பினால் அவருக்கு ஹிதாயத்தை யாசிப்பது என்பது வேறு...ஒரு முஸ்லிம் தான் நேசிப்பவருக்கு இந்த உலகில் தன்னால் கொடுக்க முடியுமான மிக உயர்ந்த பரிசாக ஹிதாயத்தை தவிர வேறு ஏது இருக்க முடியும்...எனவேதான் அல்லாஹ் தன்னுடனே தொடர்பு படுத்திக் கொண்டான்.

    ReplyDelete
  3. Insaf, really inspiring your verses. Allah is always just, he will make a right decision about him @ the day of judgement ia, May Allah accept him.

    ReplyDelete