ராம் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர். சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம்
பெற்றவர். இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராக பணி
செய்துள்ளார். 2007 ஆம்
ஆண்டு இவரின் முதல் படைப்பான “கற்றது தமிழ் “ வெளியானது.அண்மையில்
இவரது இயக்கத்தில் வெளியான அப்பா மகள் உறவைச் சித்தரிக்கும் “தங்கமீன்கள்“ தமிழில்
முக்கிய ஒரு படமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நேர்காணலை வழங்க ராம் விருப்பம்
தெரிவித்தார்.தனது இக்கட்டான பணிச் சூழலில் உரிய நேரத்தில் இதனைச் செய்து தர
முடியவில்லை என்று வருந்தினார்.ஒரு உண்மையான படைப்பாளியின் எளிய குணமும் பிரியமும்
அவனது படைப்பையே சிறந்ததாக மாற்றுகிறது.ராமுடன் தொடர்பு கொள்ள உதவி செய்த நண்பர்
பஷீர்,கேள்விகளை திருத்தி செம்மைப்படுத்திய நண்பர் அமீர் அப்பாஸ் இருவருக்கும் நன்றிகள்.
வணிகச்சூழல் தருகின்ற
நெருக்கடியில் ஒரு கலைஞனாக உங்களை எப்படி தக்கவைத்துக் கொள்கின்றீர்கள் ?
வணிக சூழலில் நெருக்கடி என்கிற வார்த்தை அவரவர் வாழும், வாழ
விரும்பும் வாழ்வை பொறுத்தது. என் வாழ்வும் என் எதிர்பார்ப்பும் வாழ்வு பற்றிய என்
அடிப்படையும் வெகு எளிமையானது. எளிமையானவர்களை வணிக சூழல் என்றைக்கும் எந்த
நெருக்கடிக்கும் உள்ளாக்காது. நான் எளிமையானவன்.
இங்கு யதார்த்த படம்
என்பது இயலாமையின் கண்ணீர்த்துளிகளில் முடிந்து விடுகின்றது. ஏன் போராட்ட உணர்வை ஊட்டுவதாக இல்லை ?
யதார்த்தத்தில் மனிதர்ளுக்கு
என்ன நிகழ்கிறதோ அதைத்தான் இங்கு காட்சிப்படுத்த
முடியும். இன்றைய தமிழகத்தில் போராட்டம் என்பது காலையில் கைதாகி மாலையில்
விடுதலையாகி இரவில் குற்றவுணர்ச்சிக்குள்ளாகும் வகையில்தான் இருக்கிறது. அதன்
முடிவில் கசிவது கண்ணீர் தான்.
உலகமயமாக்கலுக்கு எதிரான
கலகமாக உங்கள் இரண்டு படங்களையும் பார்க்க முடிகின்றது. ஆனால் தமிழ் திரைப்படங்கள்அரசியல்
நீக்கம் செய்யப்பட்டே வெளி வருகின்றன. ஒரு
அடிமைக்கான மன நிலையை கட்டமைப்பதில் இந்த
படங்கள் முக்கிய பங்காற்றுகின்றனவா ?
இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் சினிமா என்பது ஒரு வியாபாரமாகத்தான் இருக்கிறது.
வியாபாரிகள் அடிமை மனநிலையை உருவாக்கத்தான் முயலுவார்கள். என்பதற்கு நீங்கள் சுட்டிக்காட்டும்
சினிமாக்களே உதாரணம். ஆனால் இவையெல்லாவற்றையும் தாண்டி சில இயக்குநர்கள் தங்கள் கருத்தியலை
சமூக கோபங்களை முன்னெடுக்க தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே நமக்கு
பெரிய ஆறுதல்.
மக்களை மலிவான ரசனையிலிருந்து எப்படி மீட்டெடுப்பது ? அதற்கான
செயல் திட்டம் என்ன ?
அரசியல் இயக்கங்கள், தத்துவ இயக்கங்கள், இலக்கிய
இயக்கங்கள் உருவாகி, அவை ஒருமித்த குரலில் மக்களிடம் கருத்தாடுவதே தீர்வு என்று
நினைக்கிறேன். இன்றைய சூழலில் இது ஒரு பெரும் பகல் கனவே. தலைவர்கள் இன்றி
இயக்கங்கள் இன்றி தத்துவம் இன்றி மொன்னையான சூழலில் சுயமைதுனம் செய்து
கொண்டிருக்கிறது தமிழகம்.
ஒரு கலைஞன் என்பவன் பரந்து
விரிந்த சுதந்திரத்தை
விரும்புகின்றவன் . தணிக்கை துறையானது அந்த
சுதந்திர சிறகுகளை கத்தரிக்கும் இடமாக இருக்கின்றது. நீங்கள் ஒரு கலைஞன் என்ற
வகையில் இந்த நெருக்கடியை எப்படி கடந்தீர்கள் ?
தணிக்கைத் துறை என்பது சமூகத்தின் பொதுபுத்தி அறத்தையும் அரசின் இறையாண்மையும்
பாதுகாக்கும் வகையில் விதிகளைக் கொண்ட ஒன்று. பெரும்பாலும் தமிழ் திரைத்துறையில் பொதுபுத்தி
அறத்தை கேள்விக்குள்ளாக்கும் படைப்புகள் வருவதில்லை. அரசின் இருப்பைப் பற்றி பேசுகிற
படங்களும் வருவதில்லை. அரசியல்வாதிகளை விமர்சிக்கும் படங்களும், பொதுபுத்தி அறத்தை
மேலோட்டமாக கிண்டல் செய்யும் விதத்தில் தான் வருகின்றன. வரமுடியும். ஏனெனில் சினிமா
என்பது வியாபாரம். எனவே இந்தவிதப் படங்களுக்கு இந்தியத் தணிக்கைத் துறை எந்த பெரிய
சிக்கலையும் உருவாக்குவதில்லை.
தங்கமீன்களிலும் சரி கற்றது தமிழிலும் சரி நான் எந்த வித சிக்கலையும் எதிர் கொள்ளவில்லை.
ஏனெனில் கற்றது தமிழும் சரி, தங்கமீன்களும் சரி பிரச்சனைகளைப் பதிவு செய்த படமே அன்றி,
போராட்டங்களை உருவாக்கக் கூடிய படைப்புகள் அல்ல.
கதைகளை யோசிக்கும் போதே தணிக்கைத் துறையின் விதிக்குட்பட்டே யோசிக்கிறோம். எனவே
தணிக்கைகள் செய்யப்பட கதையைத் தான் படமாய் ஆக்குகிறோம்.
திரைப்படம்தான் உங்கள்
தேர்வு என்று தீர்மானித்த புள்ளி எது ?
தனித்து சொல்லக்கூடிய சம்பவம் என்று எதுவுமில்லை.
படித்த புத்தகங்கள், பார்த்த படங்கள், போன பயணங்கள், காடுகள், மலைகள், வெப்பம்,
பனி, குழந்தைகள், பெண்கள் முதியோர்கள் என அனைவரும் தந்த பிரியங்கள், காட்டிய
கோபங்கள், அளித்த தீர்ப்புகள் என எல்லாமும்தான் காரணம் என நினைக்கிறேன்.
விளிம்பு நிலை மனிதர்களை
சமூக விரோதிகள் , கடத்தல் காரர்கள் , தீவிர வாதிகள் என நடைமுறையிலுள்ள திரைப்படங்கள் சித்தரிக்கின்றன. நேர்மையான தலித் திரைப்படம் , ஈழ ஆதரவு திரைப்படம்
, இஸ்லாமியரை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் ஏன் இங்கு வரவில்லை ? அதை
சாத்தியப்படுத்த முடியுமா ?
ஏற்கனவே சொன்னதுதான் பதில். சினிமா என்பது வணிகம். வியாபாரிகள் எதை விரும்புவார்களோ அதுவே சந்தைக்கு வரும். சமூக அமைப்பில் மாற்றங்கள் சாத்தியம் ஆகும் போது , திரைப்படத்திலும் சாத்தியம் ஆகும். இருப்பினும் தனித்த சிலர் சாத்தியபடுத்தத்தான் முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் முயற்சியை வெகுஜன
ஊடகங்கள் கொன்று புதைக்கின்றன.
குழந்தைகளை திரைப்படம்,
நடிப்பு என்ற சட்டகத்திற்குள் கொண்டு வருவது
மிகக் கடினமான ஒன்று. அந்த
அனுபவத்தை சொல்லுங்களேன் ?
எனக்கு மட்டுமல்ல எல்லா இயக்குநர்களுக்கும் முன்
தீர்மானத்தோடு வரும் பெரியவர்களை விட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும்
குழந்தைகளை நடிக்க வைப்பதுதான் ரொம்ப ரொம்ப எளிது,
ஈரானியத் திரைப்படங்கள் உங்களைப் பாதித்திருக்கின்றனவா?
ஈரானிய படங்கள் மட்டுமல்ல உலகின் உள்ள எல்லா மொழிகளிலும் உள்ள நல்ல படங்களும் என்னை
பாதித்திருக்கிறது. எந்தப் பாதிப்பையும் எனக்கு ஏற்படுத்தாத படங்கள் என்பது ஈரானிலும்
உண்டு.
No comments:
Post a Comment