Thursday, January 16, 2014

சிறுவர்களுக்கான நூல்கள்: ஏன் ஒரு தனியான பதிப்பகம் இல்லை?



                                      
பதிப்பகங்களின் வளர்ச்சி கடந்த காலத்தை விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.இணையத்தின் வருகை பதிப்பகங்களை மூடிவிடும் என்ற பலமான அச்சம் நிலவினாலும் பதிப்புலகின் வாயில்கள் இன்னும் அகலத் திறந்தே இருக்கின்றன.ஒவ்வொரு வருடமும் கோடிகணக்கான புத்தகங்கள் உலகில் விற்றுத் தீர்கின்றன.


பல்வேறு உள்ளடக்கங்களில் பல வாசக மட்டங்களை,சந்தைகளைக் கருத்திற் கொண்டு புத்தகங்கள் வெளிடப்படுகின்றன.பிரமாண்டமான புத்தகக் கண்காட்சிகள் உலகில் நடந்தேறுகின்றன.புத்தகங்களின் வருகை என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது.
இலங்கையின் பதிப்பகச் சூழலும் பாரிய மாற்றங்களை உள்வாங்கி வளர்ந்து வருகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.சிங்கள ஆங்கில வெளியீடுகளுடன் ஒப்பிடுகிற போது தமிழ் வெளியீடுகளின் அளவு குறைவாக இருந்தாலும் கடந்த காலத்தை விட அது முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.ஆனாலும் வாசிப்பதிலும் தேடலிலும் உள்ள குறைந்த ஆர்வம் அப்படியேதான் இருக்கிறது.

அந்தவகையில் இலங்கை முஸ்லிம்களின் பதிப்புச் சூழலை நோக்கும் போது புதிய பதிப்பகங்களின் வருகையையும் வித்தியாசமான முயற்சிகளையும் நாம் காணலாம்.ஒரு புத்தகம் என்பது உள்ளடக்கம் மட்டுமல்ல என்ற யதார்த்தத்தை மிகக் கஷ்டப்பட்டு புரிந்து கொண்ட ஒரு நிலை அண்மையில் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது. அச்சு,வடிவமைப்பு,தளக்கோளம்,எழுத்துரு,அட்டைப்படம் என வெளியீட்டின் எல்லா அம்சங்களிலும் புதுமையும் மாற்றமும் ஏற்படத் தொடங்கியுள்ளமை முஸ்லிம் பதிப்பக சூழலில் ஒரு முக்கிய அம்சமே.இருந்தாலும் அவை அனைத்தையும் கவனத்திற்கொள்ளாத பதிப்பகங்கள் நம் மத்தியில் இல்லாமல் இல்லை.

வாசிப்பு ஆர்வம் குறைந்த ஒரு சமூகத்தில் பல பதிப்பகங்கள் தோன்றுவதை வாசிப்பை பல்வேறு நிலைகளில் சாத்தியப்படுத்து வதற்கான முயற்சியாகவும் பார்க்கலாம்.ஆனால் சந்தையை மாத்திரம் கவனத்திற் கொண்டு வெளியீடுகளைச் செய்வதும் தமது இயலுமைக்கேற்ற புத்தகங்களை மாத்திரம் வெளியிடுவதும் ஆரோக்கியமல்ல.

ஒரு பதிப்பகம் நடாத்துவது இலங்கைச் சூழலில் சிரமம்வாய்ந்தது என்பதனை மறுக்க முடியாது.வாசகர்களையும் எழுத்தாளர்களையும் சிக்கல் நிறைந்த பாதையில் அது தள்ளிவிடுகிறது என்பது என்னவோ விழுங்க முடியாத உண்மைதான்.

ஒரு பதிப்பகம் தனது புத்தகத் தேர்வுக்குப் பின்னால் பல நோக்கங்களை வைத்திருக்க முடியும்.அதில் தவறில்லை ஆனால் மக்களுக்கு, வாசகர்களுக்குத் தேவையான விடயத்தை நாம் வழங்குகிறோமா என்பதுதான் முக்கியம்.

எமது பதிப்பகச் சூழல் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயத்தை நினைவுபடுத்தவே இதனை எழுதுகிறேன்.எமது பெரும்பாலான பதிப்பகங்கள் குழந்தைகளுக்கான இலக்கியங்களை,நல்ல புத்தகங்களை இன்னும் பதிப்பிக்கவில்லை.(இப்படிச் சொல்வதற்காக குழந்தைகளுக்கான ஓரிரு நூல்களை வெளியிட்டுள்ளவர்கள் தயவுசெய்து கோபித்துக் கொள்ளக் கூடாது)குழந்தைகளுக்கான நூல்களைப் பதிப்பிப்பது பாரிய சவால்களைக் கொண்டது என்பது உண்மைதான்.ஆனால் பதிப்பகங்கள் அதிலும் கால்வைக்க வேண்டும் என்பதையே இங்கு பிரதானப்படுத்த விரும்புகின்றேன்.
“குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பதிப்பிப்பது ஒரு கனவை உருவாக்குவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.அதன் வண்ணங்கள்,வடிவமைப்பு,நூலின் அளவு,மொழி எல்லாமே குழந்தைகளின் இதயத்தை  தொடக்கூடிய ஒன்று.தமிழில் குழந்தைகளுக்கு அழகியல் உணர்ச்சியுள்ள நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. குழந்தைகளுக்கான புத்தகங்களை ஒரு கலைப் பொருளை உருவாக்குவது போல உருவாக்குங்கள்“ என மனுஷ்ய புத்திரன் ஒருமுறை எழுதினார்.

குழந்தைகளுக்கான  நூல்களை மட்டும் உருவாக்கும் தனியான பதிப்பகங்கள் நம் மத்தியில் இல்லை.குழந்தைகளுக்கான நூல்கள் சந்தைக்கான வாய்ப்பையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. குழந்தைகளின் கற்பனையை விரியச் செய்யும் தரமான குழந்தை இலக்கியங்களை நமது படைப்பாளிகள் படைக்க வேண்டிய வலுவான தேவை இன்றும் இருந்து கொண்டே இருக்கின்றது.நமது படைப்பாளிகள் இதில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை.

என் குட்டித் தங்கைக்கு கொடுக்க குழந்தை நூல்களைத் தேடி பல தடவை அளுப்படைந்திருக்கிறேன்.யாரை நொந்து கொள்வது?குழந்தைகளுக்கான நூல்கள் வராமல் இருப்பதற்கு பல தடைகள் இருக்கத்தான செய்கின்றன.வாசிப்பு ஆர்வம் இன்மை,குழந்தைகளுக்கு எழுதக் கூடிய எழுத்தாளர்கள் இல்லாமை,பாடப்புத்தகத்திற்கு வெளியில் வாசிக்க தூண்டுதல் அளிக்காமை,அதிகரித்த விலை என அதன் பட்டியல் நீளத்தான் செய்கிறது.

இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி குழந்தைகளுக்கான தரமான நூல்களைப் பதிப்பிக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.இதனைச் செய்யாத போது பிற கலாசாரங்களை தம் கலாசாரமாக நுகரும் ஒரு பரம்பரை உருவாகுவதனை எம்மால் தடுக்க முடியாமல் போய்விடும்.

எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள்,கவிஞர்கள்,ஆசிரியர்கள்,பதிப்பகங்கள், புத்தகசாலைகள்,எழுத்தாளர்களை ஊக்குவிப்போர் என அனைவரும் சிந்திக்கின்ற போதே  இதற்கான தடைகளை இலகுவாக கடக்க முடியும்.
நாம் பதிப்பித்துள்ள புத்தகங்களை அவர்கள் வளர்ந்த பிறகு படித்துக் கொள்வார்கள் என்ற மனநிலையில் நாம் இருப்பது பிழையானது.ஏனெனில் குழந்தைகளின் கற்பனைகளை வளர்ச்சியடையச் செய்யாமல் இதில் எம்மால் வெற்றி பெற முடியாமல் போய்விடும்.அதற்காக அவர்களை சிறிய வயதிலிருந்தே வாசிக்கச் செய்ய வேண்டும்.வாசிப்பு ஒரு பழக்கம் வயது கடந்த பிறகு அது பற்றிச் சிந்திக்க முடியாது.

எனவே முஸ்லிம் பதிப்பகங்கள் குழந்தைகளுக்கான காத்திரமான நூல்களை வெளியிட முன்வருவது, அதனைச் தொடர்ச்சியாய் மேற்கொள்வது நமது சிறார்களை எல்லைகள் கடந்த சிந்தனையோடு வளரச் செய்யும்.
(இவ்வார விடிவெள்ளியில் வெளியான கட்டுரை)



1 comment:

  1. குமுதம் இதழால் பாராட்டப்பட்ட சிறுவர் இலக்கிய நூல்
    பூனை, நாய், சிங்கம், கரடி என்று விலங்குகளில் கதைகளையே சிறுவர்களுக்கு வழங்கி வந்த நிலையில் நபிமார்கள், ரஸூல்மார்களுடைய உண்மை வரலாற்றை சின்னஞ்சிறுவர்கள் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட்ட நூல். ஏளிமையான கதைகள், கூடவே அவை சொல்லும் உண்மை வரலாறுகள். மனதில் பதியும்படி திரும்பத் திரும்ப சொல்லப்படும் வாக்கியங்கள். சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்கிறது. இஸ்லாமிய சிறுவர்கள் மட்டுமின்றி மற்ற மதத்தினரின் சிறுவர்களும் படித்துப் பயன் பெறும் வகையில் நூல் அமைந்துள்ளது சிறப்பு. மௌலவி சேக் முஹம்மது மழாஹிரியின் எளிய மொழி பெயர்ப்பு சிறுவர்களைக் கவரும்.
    வெளியீடு: ஸலாமத் பதிப்பகம், லிங்கிச் செட்டித் தொரு, முதல் மாடி, சென்னை-1 பக்: 80, விலை: ரூ.50.
    - இரா. மணிகண்டன்

    From: sheikiqu@gmail.com (if you have any doubt pls ask me through my email address)

    ReplyDelete