Thursday, June 6, 2013

கவுஸ் மாஸ்டர்: சிங்கள இசையின் தவிர்க்க முடியாத பெயர்



இலங்கை சிங்கள சினிமா வரலாறு பொன் விழாக் கண்டுவிட்டது.
1935ஆம் ஆண்டுக்கு முன்பே சிங்களத் திரைபட தயாரிப்பு முயற்சிகள் தொடங்கிவிட்டன எனலாம்.1947.01.21 ஆம் திகதி இலங்கையின் முதலாவது சிங்களப் பேசும்படம் “கடவுனு பொறொந்துவ“ திரையிடப்பட்டது.


இப்படத்தைத் தயாரித்தவர் சுந்தரம் மதுரநாயகம்(எஸ்.எம் நாயகம்) எனும் தமிழராவார்.இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டெசி டேனியல் எனும் தமிழ்ப் பெண்ணாவார்(ருக்மணி தேவியாக அறிமுகமானவர்).இப்படத்தில் நகைச்சுவை நடிகராக பாத்திரமேற்று நடித்தவரும் ஒரு முஸ்லிம் பெண்மனி.

இலங்கையின் சிங்களக் கலை வரலாற்றை நோக்கும் போது அங்கு தமிழ் முஸ்லிம் கலைஞர்களின் பெருவாரியான பங்களிப்பு இருப்பதனை நாம் அவதானிக்கலாம்.

இலங்கையின் முதலாவது சிங்களப் படத்தை ஜீ.ஏ.ஜீ நூர் பாய் 1920 களில் தயாரித்தார்.இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டும் இது திரையிட ப்பட்டது.இலங்கைக்கு வரும் வழியில் படச்சுருள் தீக்கிரையாக்கப்பட்டது.
இலங்கையின் சிங்கள சினிமாவுக்கு தமிழ் முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பு இருப்பது போலவே முதலாவது தமிழ்த் திரைப்படத்தை இலங்கையில் தயாரித்ததும் ஹென்றி சந்திரவன்ச எனும் சிங்களவராவார்.
எனவே இலங்கைக் கலை வரலாற்றில் மூவினங்களும் இணைந்தே தமது கலைப் பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள் என்பதனை இதிலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம்.

அந்தவகையில் இலங்கையின் இரண்டாவது சிங்களப் படமான அசோகமாலா திரைப்படத்திற்கு கவுஸ் மாஸ்டர் இசையமைத்தார்.
சிங்கள இசை வளர்ச்சியை ஆராயும் எவரும் கவுஸ் மாஸ்டர்,மொஹிதீன் பேக் ஆகிய இருவரையும் ஒரு போதும் விட்டுவிட முடியாத அளவுக்கு அவர்களது பங்களிப்பு இருக்கின்றது.

கவுஸ் மாஸ்டர் 1910 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் பெங்களுரில் பிறந்தார்.உருதைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் இளம் வயதிலேயே இசையில் ஆர்வம் காட்டினார்.இவரது மனைவி பல்கலைக்கழகத்தில் உருது மொழி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.தனது இசைக் கல்வியை கவுஸ், அப்துல் சத்தார் எனும் இசை ஆசிரியரிடம் பெற்றுக் கொண்டார்.பின்னர் பம்பாயில் புகழ்பெற்ற கண்டேகானிடம் இசை பயின்றார்.

இந்தியாவின் இசை மேதை நவ்ஷாத் அலியும் அப்போது அங்கு இசை பயின்றார்.கவுஸ் மாஸ்டரும் நவ்ஷாத் அலியும் இறுதிவரை நண்பர்களாக இருந்தனர்.சிலபோது அவரின் இசை நவ்ஷாதின் இசையை ஒத்ததாகவும் இருந்தது.

“இந்தியாவில் மௌனப்படம திரையிடப்பட்டு வந்த காலத்தில் திரைப்பட இடைவேளையின் போது நேரடியாக இசை வழங்குவதே கவ்ஸ் செய்த முதல் தொழிலாகும்.இக்காலத்தில் ராம்பியாரி நடனக் குழுவிற்கும் மற்றும் பல நடனக் குழுக்களுக்கும் இசை வழங்கி வந்த கவுஸ், இசை நடன நிகழ்ச்சிகளுக்காக இலங்கைக்கு அடிக்கடி வந்து சென்றார்.1930 ஆம் ஆண்டு பயனியர் தியேடர் காரருடன் இலங்கை வந்த கவுஸ் இலங்கையில் நிரந்தரமாக தங்கிவிட்டார்.

பம்பாய் பார்ஸி இசை நாடகக் கம்பனியாரின் ஹிந்துஸ்தானி இசை ஆக்கிரமிப்பு இன்னும் மறையாத காலம்.கவ்ஸ் மாஸ்டரின் இசையை மக்கள் விரும்பி ரசித்தனர்.அவரது ஹார்மோனிய இசைக்கு மக்கள் மயங்கினர்.பாடல்கள் நிறைந்த ஜோன்த சில்வாவின் நூர் பாணி நாடகங்கள் மீண்டும் மீண்டும் மேடை ஏற்றப்பட்டன.கவ்ஸ் மாஸ்டர் அவற்றிற்கு இசை வழங்கினார்.1939 இல் இருந்து இலங்கையில் வெளியான கிராமபோன் இசைத் தட்டுப் பாடல்களுக்கான இசையமைப்பாளராகவும் கவ்ஸ் மாஸ்டர் பணியாற்றினார்.“(இலங்கையில் முஸ்லிம் நுண்கலை-கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ். பக்-23-24)

அசோகமாலா திரைப்படத்திற்கு இசையமைத்ததைத் தொடர்ந்து அவரது புகழ் மேலும் அதிகரித்தது.இப்படத்தில் இசைக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.எந்தவொரு மெட்டையும் பிரதி பண்ணாமல் சுயமாக உருவாக்கிய பாடல்களே இப்படத்தில் இடம் பெற்றது முக்கிய அம்சமாகும். மொஹிதீன் பேக்,அமரதேவா போன்ற கலைஞர்களுக்கு இப்படத்தில் பாடும் வாய்ப்பை அவர் வழங்கினார்.அதற்குக் காரணம் இருவரது திறமையையும் கவுஸ் அடையாளம் கண்டமையாகும்.பின்நாட்களில் அவர்கள் பிரபலம் பெற்றனர்.

1950 களில் இலங்கை வானொலியில் உருது மொழியில் பல பாடல்களை இவர் பாடினார்.அவரது மனைவி குர்ஷித் கவ்ஸும் பாடினார்.
“கவுஸ் மாஸ்டர் உருவாக்கிய பாடல்களின் ராகங்களும் இசை நுட்பங்களும் நவ்ஷாத் அலியின் இசைக்கு சமீபமானது என்று கருதப்படுகின்றது. நவ்ஷாத் அலியம் கவுஸ் மாஸ்டரும் ஒரே இடத்தில் இசை பயின்றதால் இத்தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.அதேவேளை அவரது பாடல் இந்தியாவின் “கிராணா“ சங்கீத மரபிற்கு உரியதாக கருதப்படுவதாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன கூறுகிறார்.பஞ்சாப் மாநிலத்தின் கிராணா என்ற கிராமத்தை மையமாகக் கொண்ட கிராணா இசையின் தந்தை அப்துல் கரீம்காணின் சந்கீத மரபு கவுஸ் மாஸ்டரினால் பின்பற்றப்பட்டுள்ளதாக சிங்கள இசை ஆய்வுகள் கூறுகின்றன“.(முஹம்மத் கவுஸும் பீ.எஸ் பெரோவும்-1998)

சிங்கள இசையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தன்னை மாஸ்டர் கவுஸ் அர்ப்பணித்தார் என்றுதான் கருத வேண்டும்.சிங்கள இசையின் தனித் தன்மைகளை பின்நாட்களில் உருவாக்கிக் கொள்வதற்கு கவுஸ் மாஸ்டரின் பங்களிப்புக்கள் காரணமாக அமைந்திருக்கலாம்.

கவுஸ் மாஸ்டர்,மொஹிதீன் பேக் ஆகிய இருவரும் சிங்கள இசையில் நீண்ட தூரம் பயணித்தவர்கள்.இருவருமே இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவர்கள்.இருவருமே சிங்கள மொழியை அதன் கலாசாரத்தை,பண்பாட்டை மொத்தமாக உள்வாங்கி வியக்கத்தக்க வகையில் சிங்கள இசை வரலாற்றில் மிளிர்கிறார்கள் என்றால் அது வியப்புக்குரிய ஒன்றாகத்தான் இருக்கிறது.

இனம்,மொழி என அனைத்தையும் கடந்து உரையாடும் சக்தி இசையின் மொழிக்கு இருக்கிறது.அந்த மொழியால் தம்மை அவர்கள் முன்னிறுத்தினார்கள்.இன்னொரு கலாசாரத்தினது கலை வரலாற்றின் வேர்களாகவும் விழுதுகளாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.
வரலாற்றுப் பக்கங்களில் மெல்ல மெல்ல அவர்கள் மறக்கப்பட்டாலும் புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு ராகத்திலும் அவர்கள் குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.

No comments:

Post a Comment