Thursday, May 30, 2013

டி.எம்.எஸ்-நம் காலத்தில் இல்லாத குரல்



காலை உணவுக்காக சைவக் கடையில் போய் அமர்ந்தேன்.டி.எம் சௌந்தராஜன் பாடிக் கொண்டிருந்தார்.கடைக்கார அண்ணா உற்சாகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அவரது பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பே ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.


சாப்பிட்டு முடிந்ததும், என்ன டீ.எம்.எஸ் நினைவுக்காக பாடல்களை போட்டீர்கள் போல! என்றேன்.30 “வருசமா தமிழ் பாடல் உலகை தனது கைக்குள் வைத்திருந்தவர் இல்லையா“ என்றார் பெருமிதமாக. ம்.. இறந்திட்டார் அல்லவா என்றேன்.அப்படியா? எப்போது என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.அவர் இறந்த செய்தியை அவர் அறிந்திருக்கவில்லை.பின்னர் நிச்சயம் அதற்காக அவர் வருந்தியிருப்பார்.

பழைய பாடல்களைக் கேட்க எப்போதும் எனக்கு விருப்பம் இருந்ததில்லை.புதியதலைமுறை எப்போதும் அவற்றை ஒதுக்கியே வைத்திருக்கிறது.தத்துவங்களையும் உபதேசங்களையும் இப்போது எல்லோரும் ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்.புதிய பாடல் வரிகளெல்லாம் வாந்தியை வரவழைக்கிறது.

பின்னர் அப்பாடல்கள் மேல் ஒரு காதல் வந்தது.தெவிட்டாமல் கேட்கத் தொடங்கினேன்.பயணங்களில் கூட்டாகப் பாடும் போது களைப்பைத் தொலைக்கச் செய்யும் காணங்களாக அவை மாறின.

கடந்த வருடம் மூன்று நாள் பயணம் ஒன்றில் இருந்த போது வண்டி ஓட்டுணர் அன்ஸார் காக்காவுடன் சேர்ந்து டி.எம்.எஸ் இன் பல பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தேன்.அவருடைய குரலில் இரண்டு பாடல்களை பதிவு செய்து கொண்டு வந்தேன்.அவருக்கும் நல்ல குரல். அவரது பாடும் திறமையைப் பாராட்டியதும் பதிவு செய்ததும் அவரைப் பொறுத்தவரை ஒரு பெரிய அங்கீகாரம்.

இது போன்றவர்களுக்கு டி.எம்.எஸ் உடைய பாடல்கள் நிறைய நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுத்திருக்கின்றது.அன்ஸார் காக்கா என்னுடன் இருந்த மூன்று நாட்களிலும் மட்டற்ற மகிழ்ச்சியோடு பாடிக் கொண்டே இருந்தார்.இப்போது அவருக்கு போன் செய்தேன்.தனது கவலையை தெரிவித்தார். டி.எம்.எஸ் போனால் என்ன நீங்கள் இருக்கிறீர்கள்தானே? என்றேன்.வழமை போல அவரை மறந்து சிரிக்க ஆரம்பித்தார்.

எனது வாப்பா இரவில் தூங்கச் செல்லும் போது டி.எம்.எஸ் இன் பாடல்களுக்காகவே வானொலிப் பெட்டியை தன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்.அவர் உறங்கிய பிறகும் வானொலிப்பெட்டி பாடிக் கொண்டிருக்கும்.

எத்தனையோ மனிதர்கள் அவரின் பாடல்களாலும் அப்பாடல்களின் கருத்துக்களாலும் ஆசுவாசம் கொள்கிறார்கள்.“அர்த்தமுள்ள பாட்டுக்கள்“என்று எனது உம்மா அவரது பாடல் ஒலிபரப்பாகும் போதெல்லாம் சொல்வார்.

அவரது குரலும் பாடும் பாவமும் இப்போது கேட்டாலும் அதிசயிக்க வைக்கிறது.நான் பிறக்கும் போதே அவருக்கு 60 வயது கடந்துவிட்டது.அவர் பாடுவதை நிறுத்திய காலத்தில் நங்கள் பாடல்களைக் கேட்கத் துவங்கியிருந்தோம்..மிக அண்மையில்தான் நானும் அவருக்கு ரசிகனானேன்.அதுவே என்னை இச்சிறு குறிப்பையும் எழுதத் தூண்டுகிறது.

அவருக்கு உலகெங்கும் எத்தனை ரசிகர்கள்.எத்தனை தலைமுறைக்கு தன் நினைவுகளை விட்டுச் செல்கிறார்.வாழும் காலத்திலே அவரை மறந்த உலகம் இறப்புக்குப் பின்னர் எங்கே நினைவில் கொள்ளப் போகிறது. தம் காயங்களுக்கு மருந்தாகவும் தனிமைக்குத் துணையாகவும் சிலருக்கு அவரது பாடல்கள் இருக்கின்றன.எத்தனை பேருக்கு மத்தியிலும் கம்பீரமாகக் கேட்கும் குரல் போல காலத்தில் தோய்ந்து போயிருக்கிறது அவரது குரல்.அவை அழிக்க முடியாத காணங்களாக காற்றின் தீராத பக்கங்களில் நிரம்பியிருக்கின்றன.

அண்மையில் தலை மன்னாரிலிருந்து கொழும்பு வரும் வரைக்கும் அலாவுத்தீன் நாநாவுடன் டி.எம்.எஸ் இன் பாடல்களையே பாடிக் கொண்டு வந்தேன்.அந்தியின் மஞ்சள் கரைந்து இருட்டி நள்ளிரவைக் கடந்து நேரம் போய்க் கொண்டிருந்தது.பாடல்கள் காற்றில் மிதந்து கொண்டிருந்தன.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. http://www.youtube.com/watch?v=rMtq2MEnJ2s&list=PL794A61AB3CED83FE

    ReplyDelete