இயற்கையோடு தம்மையும் இணைத்துக் கொண்டு ஜென் துறவிகள் உலகை அறிய முற்பட்டதன் விளைவாக ஜென் கவிதைகள் தோற்றம் பெற்றன.தமது புலன்களால் இயற்கையை உணர்ந்து அதன் காட்சிகளை தம் கண்களுக்குள் உள்வாங்கி,அதன் சுகங்களை அனுபவித்து,தெரிந்த சொற்களால் தெரியாத அர்த்தங்களைப் படைக்கும் விசித்திரத்தை அவர்கள் செய்து காட்டினார்கள்.
தாம் அன்றாடம் காணும் கற்கள்,நீர்,குளம்,ஆகாயம்,நிலா என இறைவனின் எல்லாப் படைப்பினங்களையும் ரசித்துணர்ந்தனர்.துளியின் பிரமாண்டத்தையே அவர்களது கவிதைகள் உருவாக்கின.
அழகை ரசிப்பதன் ஊடாக அந்தத் துறவிகள் ஆனந்தத்தை அனுபவித்தனர்.தம் வாழ்நாளை உயிர்த்துடிப்புள்ளதாக மாற்றிக் கொண்டனர்.
நாம் அன்றாடம் காணும் இப் பூமியில் இயற்கையின் வண்ணம் சிந்தியிருக்கும் இடமெல்லாம் அழகுணர்ச்சி விரவியிருக்கின்றது.இப் பிரபஞ்சத்தில் நாம் காணும் ஒவ்வொரு படைப்பும் நம்மைத் தன்னகத்தே அழைக்கின்றது.தம் தனித்தன்மையை உலகுக்குப் பறைசாற்றுகின்றது.தம்மை உருவாக்கியவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது.
மலையின் அழகும் அதில் பொழியும் மழையின் அழகும் ஒரு நித்திய தரிசனமாகத்தான் கண்களுக்குள் தங்கியிருக்கின்றன.பூமியின் உயரமான இடத்தில் இருந்து பார்க்கையில் காற்றின் தூய்மையான சுவாசமும் பரந்துவிரிந்த இப் பிரபஞ்சத்தின் தனித்த அழகியலும் எம்மை ஒரு விசித்திர உலகத்திற்குள் அழைத்துச் செல்கின்றது.
இறைவனின் ஒவ்வொரு படைப்பையும் நாம் பார்க்கிறோம்,அவதானிக்கிறோம்.ஒவ்வொன்றும் எம்மை வியக்க வைக்கின்றது.மனது அந்தரத்தில் பறக்கத் தொடங்கிவிடுகின்றது.இதனையே இறைவனின் படைப்பினங்களைப் பற்றிச் சிந்தித்தல் எனும் பதம் சுட்டுகிறது.
நாம் இறைவனை வெற்று நாவினால் ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என படர்க்கையில்தான் புகழ்கிறோம்.ஆனால் இறைவன் தன் படைப்புக்களை ரசித்து தன்னை முன்னிலையில் 'ஸுப்ஹானக' என்று புகழுமாறே சொல்கிறான்.
'இறைவா இவற்றை நீ வீணுக்காக படைக்கவில்லை.நீ தூய்மையானவன். நரகத்தின் வேதனைகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பாயாக'
நம்மைச் சூழ உள்ள பேரண்டத்தின் அழகியலோடு இணைந்து வாழ்ந்தால்தான் இந்த வார்த்தை வெளிப்படும்.
'பூமி தன்னகத்தே இசையைக் கொண்டிருக்கிறது அதனைக் கேட்ப வர்களுக்காக.'-யாரோ-
No comments:
Post a Comment