Wednesday, March 27, 2013

பிரார்த்தனை ஆயுதம்


பனி கொட்டும் அதிகாலையில் நிலவின் கலங்கம் தெரியும் வானைப் பார்த்து தன் இரு கரங்களையும் ஏந்திப் புரியும் ஒருவனின் பிரார்த்தனை வீண் போக வாய்ப்பில்லை. எல்லா மனிதரும் தம் நெருக்கடி மிகுந்த பொழுதொன்றில் யாரோ ஒருவனிடம் பிரார்ததனை புரியவே செய்கின்றனர்.கடவுள் நம்பிக்கையற்ற ஒரு நாஸ்திகனும் தன் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள வானத்தைப் பார்த்துக் கொள்கிறான்.

ஓவ்வொரு நாளும் கோடிப் பேரினுடைய குரல்கள் வானத்தின் பக்கம் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.வானவர்களும் அல்லாஹ்வும் அதனை செவிமடுக்கிறார்கள்.காற்றின் திசைகளிலும் வானவெளியிலும் அவை அலைந்து கொண்டு அங்கீகரிப்பிற்காக காத்து நிற்கின்றன.




எத்தனையோ பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.எத்தனையோ பிரார்த்தனைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.மறுக்கப்பட்ட பிரார்த்தனையின் சொந்தக்காரர்கள் தம் வாழ்வை ஒரு முறை மீட்டிப்பார்ப்பதனால் மறுக்கப்பட்டமையை புரிந்து கொள்ளலாம்.

கேட்கப்படுவதற்காக ஒரு பிரார்த்தனை அங்கீகரிக் கப்படுவதில்லை. கேட்கின்றவரின் தூய்மையிலேயேதான் அங்கீகாரமும் தங்கியிருக்கின்றது. இறைவனுக்கு விருப்பமற்ற முறையில் தன் வாழ்வை ஆக்கி வைத்துக் கொண்டு இருகரங்களையும் ஏந்தி எவ்வளவு அழுதாலும் பயன் கிட்டப் போவதில்லை.காற்றெடுத்துப் போகும் தூசு போல அது காற்றோடு கலந்து போய்விடும்.

மனிதன் இறைவனிடம் தேவை கொண்டவனாகவே படைக்கப் பட்டிருக் கிறான். அவன் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. தம் சக்திகளுக்கும் அப்பால் சென்று சாதனைகளை நிலைநாட்டியவர்கள் தம் பிரார்த்தனைகளாலேயே அவற்றை சாத்தியப்படுத்தினார்கள்.

ஆழ் கடலில் மீனின் வயிற்றினுள் இருந்த நேரத்திலும் நபி யூனுஸ் அவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்கத் தவறவில்லை.நீரலைகளைக் கிழித்துக் கொண்டு அக்குரல் வானங்களைக் கடந்து சென்றது.'இது தூர தேசத்திலிருந்து வரும் பரிச்சயமான குரல் போல் இருக்கிறதே' என்றார்கள் வானவர்கள்.அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்து.மீனின் வயிற்றிலிருந்து அவர் விடுதலை பெற்றார்.

'அவர் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தித் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால் மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே தொடர்ந்தும் இருந்திருப்பார்'.(ஸாப்பாத்-143-144)

கஷ்டத்தில் மாத்திரம் அவர் பிரார்த்திக்கவில்லை.தன் எல்லா நிலைகளிலும் அவர் இறைவனுடன் தொடர்பிலிருந்தார்.

தான் கடலுக்குள் சிக்கி உயிர் பிரியப் போகின்றது என உணர்ந்த வேளையில் பிர்அவ்னும் பிரார்த்தித்தான்.ஆனால் அக்குரலை இறைவன் வெளிப்படையாக நிராகரித்தான்.

பிராத்தனை ஒரு முஃமினின் ஆயுதம் என இறைதூதர் அவர்கள் சொன்னார்கள். ஒரு பலமுள்ள ஆயுதம் தன்னகத்தே இருந்தும் நாம்(முஸ்லிம் உம்மத்) நிராயுதபானியாக இருக்கிறோம்.

இம்மாத இஸ்லாமிய சிந்தனை இதழில் வெளியானது



2 comments:

  1. அருமை சகோதரரே! உங்களுடைய எழுத்தின் மேல் எப்பொழுதும் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு! வசீகரமான வரிகள்.

    ReplyDelete