பாலாவின் பரதேசி
திரைப்படத்தை பார்க்கும் எண்ணம் எனக்கு ஏனோ இருக்கவில்லை.அண்மையில் வாங்கிய சஞ்சிகைகளில்
அது குறித்த விமர்சனமே அதிகம் இருந்ததால் படத்தை பார்க்க வேண்டியேற்பட்டது. அண்மையில்
இலங்கையில் முதலாவது தேயிலை பயிரிடப்பட்ட லூல்கந்த பிரதேசத்திற்கு சென்றுவந்திருந்தேன்.அந்த
அனுபவம் பரதேசியை மேலும் பார்க்க ஆவல் தந்தது.
இங்கு திரைவிமர்சனத்தையும்
மதிப்புரையையும் தவிர்த்து தேயிலை தொடர்பான எனது உணர்வுகளைப் பிரதானப்படுத்தி எழுதுவதே
எனது நோக்கமாக அமைகிறது.
நான் வசிக்கும்
பிரதேசம் தேயிலையை பிரதான தொழிலாகக் கொண்ட ஊர் என்பதால் இதனை எழுதுவது கொஞ்சம் வசதியாக
இருக்கிறது.எனது வாப்பாவும் வாப்பாவின் வாப்பாவும் தேயிலைத் தொழில் செய்தவர்கள். ஆரம்ப
நாட்களில் தேயிலை வியாபாரம் செய்தார்கள்.பின்நாட்களில் கூலி வேலை செய்தார்கள்.
எனக்குத் தெரிந்த
நாட்களிலிருந்து எனது வாப்பாவை ஒரு தேயிலைக் கூலி தொழிலாளியாகவே நான் கண்டிருக்கிறேன்.நான்
9 ஆம் ஆண்டு படிக்கும் போது வாப்பா ஒரு தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.அப்போது
தேயிலைத் தொழற்சாலையைப் பார்க்க அவருடன் நான் முதன் முதலாகச் சென்றேன். தேயிலைக் கொழுந்து
பறிப்பது முதல் அது கருப்பு நிற தேயிலைத் தூலாக மாறும் வரை நடக்கும் அத்தனை தொழிற்பாடுகளையும்
கண்களை அகலத் திறந்து பார்த்திருந்தேன்.
இலையின் கருப்பு
நிறம் ஒரு அதிசயம் போல என் கண்களுக்குள் இன்னும் இருக்கிறது.உடல் உழைப்பினால் தொழிலாலிகளே
அந்த அதிசயத்தை நிகழ்த்துகிறார்கள்.இலங்கையில் மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில்
அதிகம் வேலை செய்கிறார்கள்.
கொழுந்து பறிக்கும்
செயற்பாடு தூர இருந்து பார்ப்பதற்கு பச்சை அழகாக இருக்கும்.ஆனால் அதிலிருக்கும் வலியும்
வேதனையும் வெளிக்கு வராமல் மலைப் பள்ளத்தாக்குகளில் புதைந்திருக்கிறது.
அத்துயரின் சாரத்தைப்
பிழிந்து காட்டுகிறது பரதேசி. இத் திரைப்படம் பி. எச் டேனியலின்
Red Tea என்ற
ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டது.
தமிழில் இந்நாவலை "எரியும் பனிக்காடு" என்ற
பெயரில் இரா முருகவேல் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஆங்கிலேயர்கள்
கொத்தடிமைகளாக மக்களைப் பயன்படுத்தி தமக்குத் தேவையான எல்லாக் காரியங்களையும் சாதித்திருக்கிறார்கள்.அந்த
வேதனைகளைின் வெளிப்பாடுகளை பரதேசியில் காண முடிகிறது.
நான் தேயிலைச்
செடிகளுக்குள்ளால் பயணிக்கும் போது அந்த உணர்வே என் உள்ளத்தைத் தட்டிக் கொண்டிருந்தது.
1867 ஆம்
ஆண்டு ஸ்கொட்லாந்து
நாட்டவரான
ஜேம்ஸ்
டெய்லர் என்பவரால் இலங்கையில் முதலாவது தேயிலைப் பயிர்ச்செய்கை
ஆரம்பிக்கப்பட்டது. இது கண்டிக்கு
அருகில் தெல்தோட்டை
நகரின் எல்லையில் அமைந்துள்ளது. இலங்கையில்
தேயிலையின் உற்பத்தி தீவில் காணப்பட்ட கோப்பி
பெருந்தோட்டங்கள் ஏமியா வஸ்டரிக்ஸ் (Hemileia
vastatrix) என்ற நுண்மத்தாக்குதலுக்கு உள்ளாகி அழிவுற்றதன் பின்னர்
இது
தொடங்கியது. கோப்பி
பெருந்தோட்ட அதிகாரிகள் வேறு ஒரு பயிருக்கான
தேவையை உணரத்தொடங்கினர். லூல்கந்துரை பெருந்தோட்டம் தேயிலை வளர்ப்பிற்கான ஆர்வத்தைக்
கொண்டிருந்தது. பெருந்தோட்டத்துக்கு வந்திருந்த ஜேம்ஸ் டெய்லர் 1867 தேயிலையைப்
பயிரிட்டார். மொத்தம் 19 ஏக்கர் நிலத்தில் தேயிலை
பயிரிடப்பட்டது. மேலும் டெய்லர் இங்கு
தேயிலை அரைக்கும் பொறி ஒன்றைக் கொண்ட
தேயிலைத் தொழிற்சாலை ஒன்றையும் அமைத்தார்.
இப்போதும் அங்கு
தேயிலைப் பயிர்ச்செய்கை நடைபெறுகிறது.சீரற்ற பாதை வழியே 250 ரூபா அனுமதிப் பணம் செலுத்தி
வாகனத்தைக் கொண்டு சென்றோம்.150 வருடப் பழமை கொண்ட லூல்கந்துர மலைப்பகுதியின் காற்றும்
குளிரும் வனப்பும் நுரையீரல் சுவர்களில் ஒட்டிக் கொண்டது.
உலகம் முழுவதும்
உற்சாகமாக அருந்தும் ஒரு பானம் இயற்கையின் முதுகிலிருந்து உருவாகிறது.எத்தனை மனிதர்களின்
உழைப்பும் வியர்வையும் அந்த அழகை நமக்குத் தருகின்றன என்பதை நாம் நினைக்கத் தவறிவிடுகின்றோம்.தம்
உச்சந்தலைகளில் வெயிலையும் உள்ளங்கால்களில் வலிகளையும் தாங்கி தொழிலாளிகள் பறிக்கும்
கொழுந்து இன்னும் எத்தனையோ பேரின் உழைப்பினால் நம் கரங்களுக்குக் கிடைக்கிறது.ஆனாலும்
நல்ல தேயிலையை யாரோதான் அருந்துகிறார்கள்.உயர் ரகத் தேயிலை ஏற்றுமதிக்குப் போய்விடுகிறது.
எனது ஊரில் 90
வீதமான மக்களின் தொழிலாக தேயிலையே இருக்கிறது.தேயிலை வியாபாரம் செய்வர்களும் அவர்களிடத்திலே
கூலி வேலை செய்பவர்களும்தான் அதிகம்.காலை முதல் மாலை வரை உழைக்கும் மனிதர்களை நான்
அன்றாடம் காண்பதுண்டு.
தேயிலையை அரைப்பது,
பதப்படுத்துவது போன்ற பணிகளை அவர்கள் செய்கிறார்கள்.ஆனால் தொழிலாளிகளுக்குத் தேவையான
உரிய பாதுகாப்பு அங்கு இருப்பதில்லை.தேயிலைத் தூசு நாசித் துவாரங்களுக்குள் செல்வதைத்
தடுக்க தொழிலாளிகள் துணிகளைத்தான் கட்டிக் கொள்கிறார்கள்.
என்னுடைய வாப்பாவும்
தேயிலைத் தூசின் கொடூரத்தால் சுவாசக் கோளாறுக்கு ஆளானவர்.அதன் காரணமாகவே அவர் தொழிலையும்
விட வேண்டி வந்தது.அன்றாட ஜீவனோபாயத்தைத் தேடும் போராட்டத்தில் அவர்கள் இதைப் பொருட்படுத்துவதே
இல்லை.இரவு பகலாக உழைக்கிறார்கள்.
தம் பிள்ளைகளைப்
படிக்க வைக்க அவர்கள் முனைகிறார்கள்.தமது தொழிலிருந்து அவர்களை விடுவிக்கவே அவர்கள்
நினைக்கிறார்கள்.சின்ன வயதில் காசு வேண்டும் என்பதற்காக வாப்பாவுடன் வேலை செய்யச் சென்று
என்னை அவர் அடித்து விரட்டியதை நினைக்கும் போது சிரிப்பாக இருக்கிறது.
பரதேசி திரைப்படம்
இரண்டு கதைக்களங்களைக் கொண்டு இயங்குகிறது.படம் கொண்டாடும்படியாக இல்லாவிட்டாலும் தமிழ்
சினிமாவின் மரபார்ந்த விடயங்களை கொஞ்சம் உடைத்திருக்கிறது.ஒரு தமிழ் சினிமாவில் ஹீரோ
அழுது கொண்டு எந்தப் படமும் முடிவதில்லை.அது பரதேசியில் நிகழ்கிறது.
காட்சி அமைப்புக்களும்
தயாரிப்பும் அபாரம்.கவிஞர் விக்ரமாதித்தியனின் சிரிப்பும் ஒட்டுப் பெறுக்கியின் வயதான
தாயும் செழியனின் கமெராக் கோணங்களும் அதர்வாவின் நடிப்பும் பாலாவை பாராட்டாமல் தடுக்கவில்லை.பரதேசி பேச எடுத்துக்
கொண்ட விடயம் ஒரு உண்மை.நாம் அன்றாடம் அருந்தும் தேநீருக்குள் இருக்கும் எத்தனையோ மனிதர்களின்
செந்நீரை அது நினைவுபடுத்துகிறது.அடிமைத்தனமும் ஏழ்மையும் வறுமையும் இன்னும் ஓயவில்லை
என்பதை பச்சை இலையின் கருப்பு நிறத்தைக் கொண்டு அது பறைசாற்றுகிறது.
nice
ReplyDeletegood, writing something different. missing the smell of the tea
ReplyDelete