ஊடகங்கள் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளை நேர்வழிப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்
சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத்
சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள், வடக்கைச் சேர்ந்தவர், இல்லை இல்லை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று அப்பிர தேசங்களைச் சார்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதுண்டு. உண்மையில் இவர் கொழும்பு, தெமட்டகொடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.. வறிய குடும்பம் ஒன்றில் பிறந்து, இளமையிலேயே தந்தையை இழந்த இவரை தாயார் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் கடைகளுக்கு ஆகாரம் விற்றுக் கிடைக்கும் வருமானத்திலேயே படிக்க வைத்தார். எதிர்பார்ப்புக்கள் எதுவும் அற்ற வாழ்க்கைச் சூழலில் எதேச்சையாக
வானொலி துறைக்குள் நுழையும் வாய்ப்பு அமைந்தது என்று கூறும் இவருக்கு, பாடசாலைக் காலத்தில் நல்லாசிரியர்களின் வழிகாட்டலில், தமிழ் அட்சரங்களைப் பிழையின்றி உச்சரிக்கவும்;, தூய தமிழில் உரையாடவும் கிடைத்த பயிற்சி வானொலி நிலையத்தில் காலடி வைத்த முதல்நாளே கைகொடுத்தது.
பின்நாட்களில் இவரது சாதனைகளுக்கு அதுவே அடிநாதமாக அமைந்து விட்டது. 11வது வயதில் 1960ம் ஆண்டு 'சிறுவர் மலர்' எனும் வானொலி நிகழ்ச்சியில் ஒலிக்க ஆரம்பித்த இவரது குரல், இன்று உலகத்தின் எந்த மூலையிலும் வாழும், தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவர் அனைவரும், மதித்து நேசிக்கும் குரலாக சிகரம் தொட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. அறிவிப்பு, நேர்முக வர்ணனை, செய்திவாசிப்பு, சஞ்சிகை நிகழ்ச்சித் தயாரிப்பு, நாடக ஆக்கம், பாடலாக்கம், நடிப்பு என பன்முகத் திறமைகளை ஒரு சுயம்புவாக வளர்த்துக்கொண்ட இவர்; தென்னிந்தியாவில் வரலாறு படைத்த கலைஞர்கள் பலரது, நேசத்துக்கும் பாசத்தும் உரிய ஒலிபரப்பாளராக இன்று வரை மிளிர்கிறார். அதன் காரணமாக, தென்னிந்திய திரைத்துறையிலும் பாடலாக்கம், நடிப்பு என இவரது பங்களிப்பு தொடர்ந்துள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலே ஒரு ஒலிபரப்பாளராக 1967 முதல் தொடர்ந்து 32 ஆண்டுகள் பணியாற்றிய இவர், பல்துறை சார்ந்த அறிவைத் தேடித் திரட்டிக்கொள்ள 'வானொலி நிலையம் ஒரு பல்கலைக்கழகத்தை விடச் சிறந்த தளமாக தனக்கு அமைந்ததாக நன்றியுணர்வுடன் கூறுகிறார். மீள்பார்வை அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
சந்திப்பு : இன்ஸாப் ஸலாஹதீன், அஹ்ஸன் ஆரிப்
32 ஆண்டுகள் வானொலியிலே பணியாற்றியிருக்கிறீர்கள். அதனது ஆரம்ப காலத்திற்கும் கடைசிக் காலத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை எப்படி உணர்கிறீர்கள்?
வானொலியில் நான் பணியாற்றிய காலத்தின் முதல் இரண்டு தசாப்தங்களும், நல்ல சுதந்திரமும் மகிழ்ச்சியும், ஊக்குவிப்பும் நிறைந்த பொற் காலமாகும். எனக்கு வழிகாட்டிகளாய் இருந்து, ஊக்குவித்த மூத்த ஒலிபரப்பாளர்களை, என்றென்றும் மறக்க மூடியாது. அங்கு, 17 வருடங்கள் பணியாற்றியதன் பின் 1985ம் ஆண்டு சிறப்புப் பயிற்சிக்காக நெதர்லாந்து (ஹாலந்து) சென்றேன். ஆறுமாத பயிற்சி முடிவில் மூன்று நட்சத்திர அந்தஸ்துடன் சான்றிதழ் எனக்கு வழங்கப்பட்டது. பின், 1996ல்; மேற்கு ஆபிரிக்காவின் 'பெனின்' நகரில் நடைபெற்ற மற்றுமொரு பயிற்சிப்ப ட்டறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
இப்பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே, அமைந்த கடுமையான பயிற்சிகள். ஒரு முழுமையான ஒலிபரப்பாளனாக, நாடு திரும்பினாலும். நான் பெற்ற பயிற்சிகளின் பலனை இலங்கை ஒலிபரப் புத்துறைக்கு வழங்க முடியாத அளவுக்கு, நிலைமை மாறிப்போயிருந்தது. படைப்பாற்றல் மிக்கவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து இயங்கிய ஒலிபரப்புச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருந்தது. அரசியல் செல்வாக்குடன் வந்தவர்கள், பெரும்பதவிகளை பெறும் நிலை. அரசியல் வாதிகளைத் திருப்திப்படுத்துவதில்தான் அவர்களுக்கு அதிக அக்கறை இருந்ததே தவிர சமூகத்திற்கான பணியை வழங்கும் கடமை உணர்வோ, புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமோ, மூத்த வர்களை மதிக்கக் கூடிய பக்குவமோ இல்லாமல் இருந்தது. அபூர்வமாக சில நல்ல திறமைசாலிகளும் இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களாக வந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்களில் சிலரைப் பயிற் றுவிக்க என்னால் முடிந்தாலும் உயர்ந்த தரத்தில் வானொலி ஒலிபர ப்புக்களை மாற்றியமைக்கக் கூடிய காலம் உருவாகமல் பேய்விட்டது என்பதே கவலை.
ஆரம்பகாலத்தில், ஒலிபரப்புத்துறையில் கல்வி, தகவல், பொழுதுபோக்கு ஆகிய மூன்று விடயங்களே தாரக மந்திரமாய் இருந்தன. பின்நாளில் தகவல், அதற்கடுத்து பொழுதுபோக்கு, மூன்றாவது நிலையில் கல்வி என்றிருந்தது. காலப்போக்கில் கல்வி காணாமல் போனது. அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் தகவலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பொழுதுபோக்கு மட்டுமே முன்னுரிமை பெற்று விளங்குகிறது. இப்படி நான் ஆதங்கப்பட்டாலும் இந்நிலைமையை சீர்திருத்த செய்யக் கூடியது எதுவும் இல்லை என்பதே உண்மை. சீர்திருத்தங்களைச் செய்யக் கூடிய துணிச்சலும், அக்கறையும் உள்ள இளம் அறிவிப்பாளர்கள் சிலர் இருந்தாலும் இந்த ஊடகங்களை நடத்துபவர்களுக்கு, நிர்வாகிகளுக்கு, அல்லது அவற்றின் உரிமை யாளர்களுக்கு அவ்வாறான அக்கறை இல்லை என்றே தோன்றுகிறது. எப்படியாவது வருமானத்ததைத் தேடவேண்டும் என்ற நிர்பந்தந்தத்தில் அனைத்துமே வர்த்தக மயமாகிவிட்டது. தனியார் வனொலிகளுக்குத்தான் இந்தத் தலைவிதியென்றால், அரச வானொலியும் இந்த வர்த்தகப் போட்டிகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருப்பது வேதனையைத் தருகிறது.
சினிமாச் சிந்தனைகளும், பாடல்களுமே நேயர்களுக்குத்தேவை என்றொரு மாயை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் பணியாற்றிய காலத் தில் இவ்வாறான ஜனரஞ்சக அம்சங்களை இனிப்பூட்டப்பட்ட மருந்தைக் கொடுப்பதுபோல, அளவோடு பயன்படுத்தினோம். அதிகமாக பயனுள்ள தகவல்களை வழங்கினோம். நேயர்கள் மத்தியிலும் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்கள், கவிஞர்களை உருவாக்கக் களம் அமைத்தோம்..
அத்தகைய சூழலில் தொடர்ந்தும் பணியாற்றாமல் நீங்கள் வெளியேறக் காரணம்?
ஆரோக்கியமான சூழல் மாற அரம்பித்ததாலும், அரசியல் செல்வாக்குடன் வந்தவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டதாலும், அவமானப்பட்டு வெளியேறும் காலம் வருமுன்; 1998 இல் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எனது பொறுப்பை இராஜினாமாச் செய்தேன். மும்மதங்களைச் சார்ந்து மொழியால் ஒன்றிணைந்த சமூகத்தை நோக்கியே எனது பார்வை இருந்தது. இன்று வரையும் அவ்வாறே இருக்கிறது. ஆனால் இராஜினாமா கடித்தை ஒப்படைத்தபோது, அடுத்த கட்டம் என்ன? என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், இதுவரை என்னைக்காத்த இறைவன் இனிமேலும் காப்பான என்ற நம்பிக்கையோடு தான் வெளியே வந்தேன். ஒரு வாசல் மூடி மறு வாசல் திறப்பான் இறைவன் என்பபார்களே! அதுபோல எனக்கு பல வாசல்கள் திறந்து வைத்தான் இறைவன். அதுவும் இடைவெளியே இல்லாமல்.
இன்றைய ஊடகங்கள் எதிர்நோக்கும் பிரதான சவால் பற்றி என்ன சொல்கிறீர்கள்.
நாங்கள் வளர்ந்த, வாழ்ந்த ஊடகச் சூழல் வேறு, அது, அரச ஊடகம் என்பதால் அங்கு வருமானத்தைத் தேடவேண்டிய கவலை எங்களுக்கு இருக்கவில்லை. ஆனாலும் தன்னிறைவு காண்பதற்கும் மேலதிகமாக, வருமானம் கிடைத்தது, அதற்குக் காரணம் எமக்குப் போட்டியாக, தொலைக்காட்சியோ, வேறு தனியார் வானொலிகளோ இருக்கவில்லை. ஆனால், தற்பொழுது ஊடகத் துறையில் பணியாற்றுபவருக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் இத்தனை போட்டிகளுக்கும் மத்தியில், எப்படி பணம் உழைப்பது என்பதுதான். இவ்வாறு, போட்டிகள் பெருகும்போது விழுமியங்கள் தொலைந்து போவது இயல்புதானே.
இதனால், இலட்சியங்கள், சமூக கடப்பாடு என்பவை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆயினும், இத்தனை சவால்களுக்கு மத்தியிலும், மொழிப்பற்றோடு, அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளை நடத்தும் சில இளம் ஒலிபரப்பாளர்கள் உண்டு, அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் மனமாறப்பாராட்டவும் நான்தயங்குவதில்லை. எத்தனை நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும்,'வானொலி' என்பது இனி வரும் காலங்களிலும் அதி சக்திமிக்க ஊடகம் விளங்கும் என்பதை எவரும் மறுக்கமுடியாது. காரணம், தொலைக்காட்சிபோன்றவை நமது ஐம்புலன் களையும் ஒருமுகப்படுத்திப் பார்க்கவேண்டியவை. ஆனால் நமது அன்றாட அலுவல்களுக்கு இடையூறின்றி நமது செவி வழியாக வந்தடையக்கூடியது என்பதே வானொலியின், அசைக்கமுடியாத சக்தி. ஆயினும் அதனை நமது நாட்டில் சரியாக உணரந்து பயன்படுத்துகிறோமா? என்ற கேள்விக்கு இன்றைய தலைமுறைதான் பதிலளிக்கவேண்டும்.
அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் மொழியை, பிழையறப்பேச உச்சரிக்க, செவிவழி செல்லும் ஊடகமே சிறந்த பங்காற்றமூடியும். ஒரு குழந்தை செவி வழியாக கிரகித்த ஒலிகளைக் கேட்டு முதன் முதலாக பேச ஆரம்பிக்கிறதே அதுவே சிறந்த உதாரணம். செவிவழியாகச் செல்லும் எந்தமொழியும் கொச்சைப் படுத்தப்பட்டால் எதிர்காலத்தில், அந்த மொழியே சீரழிந்துவிடும் அல்லவா? அதுபோல் நமது மதம் காட்டும் நன்நெறிகள், மற்றும் சமூதாயம் சார்ந்த பண்பாட்டுக் கோலங்களை தக்கவைப்பதிலே ஊடகத்துறைக்கு, குறிப்பாக, வானொலிக்கு, மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது.
ஊடகத்துறையில் நீண்ட தூரம் பயணித்த நீங்கள் அத்துறையில் உள்ளவர்களுக்கு என்ன ஆலோசனைகளை முன்வைக்கிறீர்கள்?
நாம் தற்போது செய்மதி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால், எங்கெங்கோ இருந்து அநாச்சாரப் பழக்கவழக்கங்கள், நவீனநாகரிகம் என்றபோர்வையில் குக்கிராமம் வரை எட்டிப்பார்க்கின்றன. சமூக வரம்புகளை மீறிப் போகத் தூண்டுகின்றன. எனவே, நமது அடையாளத்தை, நாம்பெருமையோடு பின்பற்றிவந்த பண்பாட்டை, கலாசாரத்தை காக்கின்ற பணியையும், அதற்காக அடுத்த தலைமுறையை தயார்படுத்த வேண்டிய பணியையும் ஊடகங்களே செய்ய வேண்டி உள்ளது.
இதனையே 1996ம் ஆண்டு 'மேற்கு ஆபிரிக்காவின் பெனின் நகரில் நான் கலந்து கொண்ட பயிற்சிப் பட்டறையும்' (
THE RELEVENCE OF THE MEDIA FOR ADOLESCENTS
GROWING UP IN THE ISLAND SOCIETIES) வலியுறுத்தியது. உலகமயமாதலினால், கலாசார அதிர்ச்சி, ரசனை மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது எனினும்;, நமது சிறப்பான பண்பாடுகளைக் காக்க முயற்சியாவது செய்யலாம். அம்முயற்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பே மிகமுக்கியமானது. எனவே ஊடகத்துறை சார்ந்த எங்களது பார்வை அடுத்த தலைமுறையை நோக்கி யதாகவே அமையவேண்டியது அவசியமாகிறது
அதற்குப் புதிய அணுகுமுறையும் அவசியமாகிறது. சிலவேளை நமது புதிய அணுகுமுறை, மூத்த தலைமுறையின் விமர்சனத்துக்குள்ளாகலாம். அதனால் விரக்தியடையாமல் எடுத்த முயற்சிகளைத்தொடரவேண்டும். அதேவேளை மூத்த தலைமுiறையை உதாசீனப்படுத்தாமல், அவர்களையும் மதித்துப் போற்ற வேண்டும். ஏனெனில், அவர்கள் விட்ட இடத்தில் இருந்துதான் நாங்கள் ஆரம்பிக்கின்றோம். 'ஒவ்வொரு தலைமுறையும் சாதிப்பதைவிட அடுத்த தலைமுறை அதிகமாக சாதிக்கும், அது காலத்தின் நியதி'.
இன்னொரு புறம் பார்த்தால், இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சி வேகமாக பரவிக் கொண்டிருப்பதனால், அச்சு ஊடகத்தின் வீச்சு குறைந்து கொண்டு வருவதையும் காணமுடிகிறது. எனவே, நவீன விஞ்ஞானத் தேரேறி இலத்திரணியல் ஊடகத்தோடு அச்சு ஊடகம் கைகோர்க்கவேண்டும். இப்போ தெல்லாம் இயந்திரகதியில் இயங்குகின்ற மனிதர்கள் மத்தியில், கையில் கொண்டு செல்லும் கருயின் மூலமே, பத்திரிகைகள், சஞ்சிகைகள் ,செய்திப் பக்கங்களை, வாசிக்கும் பழக்கம் மேலோங்கிவருகிறது. 'ஈ.புக்', 'ஓடியோ புக்' என்பனவும் மிகப்பிரபலம். எனவே இவற்றை நோக்கி எமது அச்சு ஊடகங்கள் வேகமாக நகரவேண்டும்.
நமது சமூகத்தைப் பொறுத்தளவில், நாம் எல்லோரும் ஒன்றிணைந்து, கைகோர்த்து இத்தகைய பணிகளை முன்னெடுக்க வேண்டும். தனித்தனித் தீவுகள் போன்று அமைப்புகளை உருவாக்கி, இயங்கும்போது ஒருவரை ஒருவர் அங்கீகரிக்காமல் விமர்சிக்கும் மனப்பான்மையே மேலோங்கும். எனவே நட்புறவுடன் சமகாலச் சிந்தனைகளில் ஒன்றுபடக் கூடியவர்கள் பொதுத் தளத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இலங்கையில்-முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் என்ற கருத்தோடு உடன்படுகிறீர்களா?
இது ஒரு சிக்கலான விடயம். நாம் ஏன் அப்படி நினைக்க வேண்டும்? எது எங்களை அப்படி நினைக்கத் தூண்டுகின்றது? என்ற கேள்வி எழுகிறது. எமது சமூகத்தைப் பொறுத்தவரை மொழி அடையாளத்தைவிட எமக்கு மத அடையாளமே முதன்மையானது. ஆயினும் தமிழ் மொழி சார்ந்த நன்றி உணர் வையும் உரிமைகளையும் நாம் தைரியமாக வெளிப்படுத்துகிறோமா? எமது தாய் மொழி தமிழ் என்பதை நாம் மறுக்க முடியாது. அல்லாஹ்வைப் பற்றியும், எங்கள் நபிகள் நாயகத்தைப்பற்றியும், நாம் பின்பற்றும் மார்க்கத்தைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள மூலமானது எந்த மொழியோ அந்த மொழியே நமது தாய் மொழியானால் அந்தமொழியைப் புறக்கணித்து வாழவும் முடியாது. மொழியின் உரிமையை எமது சமூகத்தில் பெரும்பாலானவர்கள் சந்தர்ப்ப வாதிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
இந்தமொழி மூலமான கல்வியையும், அதன் பலானாக கிடைக்கும் அனுகூலங்களையும் அனுபவித்துவிட்டு, மொழி அடையாளமற்ற அதாவது முகம் அற்ற சமூதாயமாகவே இங்கு வாழ்ந்து வருகிறோம். ஆனால், எமக்கொரு ஊடகம் என்று வேண்டும் என்று எண்ணும்போது அது தமிழ்மொழி சார்ந்ததாகவே பெரும்பாலும் அமையவேண்டிய நிர்பந்தத்தையும் மறுக்க முடியாது. அனால் நாங்கள் வாழ்வதோ பல்லின, பன்மொழிக்கலாசார நாடு, இங்கு நமது கவனைத்தை ஈர்த்து அலைக்களிக்கும் பல்வேறு ஊடகங்களுக்கு மத்தியில் 'எமக்கென்றொரு ஊடகம்' எனும் முயற்சிக்கு நமது சமூகத்தைச் சார்ந்தவர்களே எந்த அளவுக்கு ஆதரவு தருவார்கள் என்பது கேள்விக்குறி.
இத்தனைக்கும் மத்தியில், பொதுவாகவே தமிழைத் தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள், ஊடகத்துறையில் புறக்கணிப்படுவதால்தான், முஸ்லிம்களுக் கென்று தனி ஊடகம் என்ற சிந்தனை உருவாகிறது என்று வாதத்துக்கோர் பதில், இன்று இலத்திரனயல் ஊடகங்ககளில், கணிசமான அளவு முஸ்லிம் இளைஞர்கள் தமது சுய முயற்சியால் வாய்ப்புகளைப்பெற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதரசமூகங்களிடமிருந்து எம்மை பிரித்து வைத்துக்கொண்டு மொழி அடையாளமின்றி, இன அடையாளத்தை மட்டும் வைத்து வாய்ப்புக்கள் இல்லை என்று நாம் சொல்வது தவறு. காரணம் நாம் பங்குகேட்பது மொழி அடிப்படையிலான பொதுத் தளங்களில். எனவே ஏனைய சமூகங்களோடு புரிந்துணர்வும், நட்பும் இன்றி எந்த ஒரு பொதுத்தளத்திலும் எமக்குரிய இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. மதம் சார்ந்து எமக்கென்றொரு ஊடகம் வேண்டுமானால் அமையலாம்.
அந்த வகையில் பார்த்தால். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் 'முஸ்லிம் சேவை' என்று முஸ்லிம்களுக்கு மாத்திரம்தான் தனியான சேவை இருக்கின்றது. கிறீஸ்தவ சேவை, இந்து மத சேவை என்றெல்லாம் அங்கு கிடையாது என்பதை நினைத்துப்பாருங்கள். சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினாராக வாழும் எமக்கு, அரச வானொலியில், தனியாக ஒரு சேவை அமைந்திருப்பது, ஒரு வரப்பிரசாதமல்லவா? எமக்கென்றொரு ஊடகம் என்பதை விட இன்றைய காலத்தின் தேவை என்ன என்பதை முதலில் சிந்தித்துச் செயல்படவேண்டும் என்பதே என் கருத்து. அதாவது, முஸ்லிம் களின் குரல் முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டுமே கேட்காமல், நம்மைச் சூழவுள்ளவர்களுக்கு கேட்கவேண்டும், அதுவும் நல்ல விதமாக கேட்க வேண்டும். இன்று சர்வதேச மட்டத்தில் ஊடகங்கள் அமெரிக்காவின், முஸ்லிம் விரோதக் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருப்பதை எவரும் அறிவர்.
முஸ்லிகள் என்றாலே ஈவு இரக்கமற்ற பயங்கரவாதிகள் என்ற உருவகமே திட்மிட்டுப் பரப்பப்படுகிறது. இந்த உருவகத்தை மாற்று மதத்தவர் மனங்களில் இருந்து அகற்றவும், நமது சாந்தி மார்க்கத்தின் உண்மைநிலையை, பெருமை களை அவர்கள் உணரவும் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதை சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டமிது. எனவே நம்மைச்சுற்றி வாழும் இதர மதங்களைச்சார்ந்த மக்களோடு சுமுக உறவுகளைப்பேணி உண்மைகளைத் தெளிவுபடுத்தும் ஊடகம் ஒன்று வேண்டும். அதுவே உண்மையில் 'நமக்கென்று ஒரு ஊடகம்' என்ற எண் ணத்தை அர்த்தமுள்ளதாக்கும்.