Thursday, May 17, 2012

கனவுகளோடு...



இருட்டில் இருப்பதென்றால்
அப்படியொரு பிடிப்பெனக்கு.
அப்போதுதான் விழிநீர்
வெளியே தெரியாமல்
மொத்தமாய் அழுது
தொலைக்கலாம்...

பிறகென்ன...
பேனை  பிடிக்க நினைத்தபோது
கைகளில் அகப்பை தந்து
அழகு பார்த்தாள் உம்மா.

எல்லாத் திறமைகளுக்கும் சேர்த்து
பர்தா போட்டார் வாப்பா.

எனக்குள்ளும்..
நிறைய ஆசைகள் திறமைகள்

சமயலறைக்குள்ளே  புதைந்து
போகுமென்று
எனக்கெப்படித் தெரியும்?

உம்மா...!
எனக்கோர் ஆசை
பல ஊர்களைப்
பார்க்க வேண்டும்.
பல மனிதர்களை, மனங்களை
சந்திக்க வேண்டும்.

என்ன செய்ய...?
வீட்டு முற்றத்தில்
ஐந்து நிமிடம்
நிற்க விடாத
உம்மாவிடம் தான்
இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்போதெனக்கு முடிந்ததெல்லாம்...
வீட்டுச் சுவரில்
எத்தனை கிறுக்கல்கள்...

மொத்த வீட்டையும்
கூட்டி முடித்து.
பாத்திரங்களைக்
கழுவி வைக்க எடுக்கும் நேரம்.

ஆடைகளை எவ்வளவு
சீக்கிரம் கழுவலாம்.
என்பதையெல்லாம்
மூச்சுவிடாமல்
சொல்லி முடிக்கத்தான்.

என் முந்தானைக்குள்
நிறையக் கனவுகளை
முடிந்து வைத்திருக்கிறேன்.
இப்போது கொஞ்சம்
சோகங்ளையும்
முடிந்து கொள்கிறேன்.
நாளை எனக்குத்
திருமணம் என்பதால்...

No comments:

Post a Comment