Thursday, January 26, 2012

என்னைப் பொலிஸ்காரன் என்றழைத்த பெண்...



எல்லா ஊர்களிலும் விசித்திரமானவர்களும் ஸ்வாரஷ்யமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லோருடனும் நாம் நெருங்கிப் பழகுவதில்லை. இருந்தாலும் அவர்களது வார்த்தைகளையும் செயல் களையும் நாம் ரசிக்கத் தவறுவதில்லை.அத்தகைய பாத்திரங்கள் எம் நினைவில் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

எனக்கும் ஊரில் அத்தகைய பாத்திரங்கள் சிலர் இருக்கிறார்கள்.இப்போது கொழும்பிலும் சிலர் இருக்கிறார்கள்.அவர்களது செயல்கள் விசித்தி ரமாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றன. மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் எப்போதும் பள்ளி செல்லும் வழியில் பணம் கேட்டு அமர்ந்தி ருப்பான். அவன் தொழுகைக்க்காக பள்ளிவாசலுக்கும் வருவதுண்டு.ஒரு நாள் தொழுகை முடிந்து வரும் போது தன் பொக்கட்டினுல் கையை விட்டு 10 ரூபாயை எடுத்து முன்னால் இருந்த யாசகனுக்குக் கொடுத்தான்.அவரோ அவனை ஆச்சரியம் மேலிடப் பார்த்துக் கொண்டிருந்தார்.அதனிலும் ஆச்சரியம் என்னவென்றால் மறுகனமே அவன் கைகளை ஏந்திக் கொண்டு நின்றிருந்த்துதான்.

அத்தகைய பாத்திரங்களின் எல்லாச் செயல்களும் ரசிக்கப்படவே செய் கின்றன.கடைத் தெருக்களில் அவை ஸ்வாரஷ்யமான பேசு பொருளாகக் கதைக்கப்படுகின்றன.அத்தகையவர்களின் மரணம் எல்லோரையும் கண் கலங்கவே செய்துவிடுகின்றது என்பதனை நான் பல தடைவை கண்டும் கேட்டுமிருக்கிறேன்.

இன்றும் எனது ஊரில் அப்படி ஒருவரின் மரணம் நிகழ்ந்ததாக செய்தி அறிந்து கவலைப்பட்டேன்.

எப்படியும் அவருக்கு 45 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.ஒரு மாதிரியான மனநிலை கொண்டவர்.தெரு நெடுக எதையாவது சொல்லிக் கொண்டு,யாருக்காவது ஏசிக் கொண்டுதான் செல்வார். அந்தப் பேச்சில் ரசிப்பதற்கு ஏதோ ஒன்றிருக்கும்.

ஊரில் யார் வீட்டிலாவது ஏதேனும் விழாவோ வைபவமோ இருந்தால் அது எல்லோருக்கும் அறியும் படி செய்துவிடுவார்.அதே போல அவருக்கு யாரேனும் நலவோ கெடுதியோ செய்தாலும் அப்படித்தான்.பணமோ பொரு ளோ கொடுத்தால் அதிகம் மகிழ்வார்.

ஊர் மொழியின் கொச்சைப் பாஷையில் அவர் சொல்லிச் செல்லும் வார்த் தைகள் இன்னும் காதோரம் இருக்கின்றது.அவை யாருக்கும் சிரிப்பை வரவ ழைக்க்க் கூடியவை. என் குட்டித் தங்கையும் அவற்றைச் சொல்லிச் சிரிப்பாள்.

அவர் என்னைப் “பொலிஸ்காரன்“ என்றுதான் அதிக சந்தர்ப்பங்களில் அழைப்பார்.சில போது “கண்ணாடி“ என்பார்.ஏனெனில் நான் கண்ணாடி அணிந்திருப்பதால்.இருந்தும நான் அவரை ஒருபோதும் கடிந்து கொண்டதில்லை.

ஒரு நாள் என் வீட்டிற்கு இரண்டு வெளியூர் நண்பர்கள் வந்தி ருந்தார்கள்.அது “கிறீஸ் மனிதன்“ குழப்பம் நிலவிய காலம்.நாங்கள் வீட்டினுல் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.திடீரென அப் பெண் வீட்டினுள் நுழைந்தார்.புதியவர்களைக் கண்டதும் உடனே திரும்பிவிட்டார்.
நேராக அவர் பக்கத்து வீட்டிற்குப் போயிருக்கிறார்.எங்கள் வீட்டிற்கு இரண்டு “கிறீஸ் மனிதர்கள்“ வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.பின்னர் செய்தியறிந்து நாம் விழுந்து விழுந்து சிரித்தோம்.

சிலவேலை அவர் புதியவர்கள் என்பதனை கிறிஸ் என்ற சொல்லினூடாக நாடியிருக்கலாம். அல்லது இருவரும் கிறிஸ் மனிதர்கள் போல அவ ருக்குக் காட்சியளித்திருக்கலாம்.

கொஞ்ச நாளைக்கு முன்னர் அவர் குளிர் காய்வதற்காக அவர் அடுப்பை மூட்டிவிட்டு முன்னால் அமர்ந்திருந்திருக்கிறார்.திடீரெனத் தீ மேனியில் தாவி எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று அவர் மரணித்துவிட்டதாக செய்தி வந்த்து.வீட்டிற்கு வந்த கிறீஸ் நண்பன் ஒருவனிடம் செய்தியைச் சொன்னேன். இது போன்ற மரணங்கள் கவலையைத் தருபவை என்றான்.இனிமேல் என்னை யாரும் பொலிஸ் காரன் என்று அழைக்கப் போவதில்லை.



Wednesday, January 25, 2012

நூல் அறிமுகம்: இஸ்லாத்தில் இசை


இஸ்லாத்தில் இசை நூலுக்காக நேசத்திற்குரிய ஆசான் ஏ.பீ.எம் இத்ரீஸ் அவர்கள் அவரது இணையத்தில்  எழுதிய அறிமுகத்தை நன்றியோடு பிரசுரம் செய்கிறேன்.

‘இஸ்லாத்தில் இசை’ என்ற கருத்தாக்கம் அறபு முஸ்லிம் சிந்தனைப் பரப்பில் மட்டுமல்ல இஸ்லாம் பரவிய ஆசிய சமூகங்களிலும் பெரும் வாத விவாதங்களை இன்றுவரை கிளறிவிட்டுள்ள ஒரு விவகாரம் என்பதை நாம் நன்கறிவோம். நாம் வாழும் இப்பின்நவீன யுகத்தில் மட்டுமல்லாது பல நூற்றாண்டுகளாக எமது பாரம்பரியத்தில் இவ்விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. கருத்தியல்கள் அல்லது சிந்தனைகள் அடிப்படை யில் ஒரு தேசம் உருவாகிய பின்பும் அதன் கோட்பாடு சார்ந்த வாத விவாதங்கள் முடிவடையாமல் தொடர்வதைப் போல அழகியல் பற்றிய அல்லது நுன்கலை பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு குறித்த வாதமும் இந்த வகையிலேயே நோக்கப்பட வேண்டும்.

‘ஹந்தஸத் அஸ்ஸவ்த் – ஒலி தொழில்நுட்பம்’ குறித்த ஆய்வு அறபு இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட நெடும் பாரம்பரியத்தைக் கொண்டது. பதிற்றுக்கணக்கான இமாம்கள், சட்ட வல்லுனர்கள், பிற துறை சார்ந்தவர்கள் இந்த ஒலித் தொழில்நுட்பத் துறையிலும் பெரும் பங்காற்றியுள்ளனர். சென்ற நூற்றாண்டின் இறுதியில் ‘இஸ்லாமிக் ஓர்னமென்டேஷன்’ என்ற இஸ்லாமிய அழகியல் கலைகள் பற்றிய மிக விரிவான ஆய்வை முன்வைத்த இஸ்மாயில் பாரூக்கியும் அவரது துனைவியார் லம்யா அல் பாரூக்கியும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்கள் எனக் கருதுகின்றேன். இஸ்லாத்திற்கு ஒரு நாகரீக பதிலீட்டை கோரிநிற்கும் முகமாகவே இவ்வாய்வுகள் மேற்கிளம்பி வரு கின்றன. இஸ்லாம் வெறும் இலட்சியவாதமாகவன்றி அது நடைமுறைச் சாத்தியமான பண்பாடாக முன்வைக்கும் வகையிலேயே மேற்குறித்த ஆய் வுகள் நம்மை வந்தடைகின்றன.

முஸ்லிம்கள் இந்த இடத்தை வந்தடைவதற்கு, இஸ்லாத்தில் இசை பற்றிய எதிர்மறைப் பார்வைகள் அல்லது பத்வாக்கள் பொதுமைப்படுத்தப்பட்டு அனைத்து வகையான இசை முயற்சிகளையும் அல்லது ஒலித் தொழில்நுட்பம் குறித்த எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்ற நிலைக்கு சென்றமை மிக முக்கியமான காரணியாகும். மற்றது பாடல், இசை, இசைக் கருவிகளை தடைசெய்து வந்துள்ள பலவீனமான ஹதீஸ்களை அப்படியே எந்தவித விமர்சனமுமின்றி வரலாறு நெடுகிலும் பரிவர்த்தனை செய்தமையும் காரணமாகும். இசை இன்றி எந்தவொரு வழிபாடும் பண்பாடும் உலகில் கிடையாது. முஸ்லிம்களால் நம்பப்படும் தாவூத் நபிகள் இசை மூலமே வழிபாடு செய்தார். அவர் இறைவனால் அருளப்பட்ட வார்த்தைகளை ‘மிஸ்மார்’ எனும் யாழ் கருவி மூலமே இசைத்தார் எனவும் அப்போது மொத்த இயற்கையிலுள்ள அத்தனை ஜீவராசிகளும் அதற்கு கட்டுண்டு கிடந்ததாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய வழிபாடுகளில் அடிக்கடி ஓதப்படும் அல் பாதிஹா அத்தியாயம் ஏழு ஸ்வரங்களைப் போல ஏழு வசனங்களும் தனியான இசைத் தன்மை கொண்டது. ‘ஸபுஉமதானி’ என்பது கூட ‘சரிகமபதநி’ என்ப தையே நினைவூட்டுவதாகவுள்ளது. அல்குர்ஆனை முறைப்படி ஓதுவதற்கு பயன்படும் தஜ்வீத் நெறிமுறைகள் இசைக் குறியீடுகளே.

அந்த வகையில் ‘இஸ்லாத்தில் இசை’ என்ற கலாநிதி முஹம்மத் இமாரா அவர்கள் எழுதிய அஷ்ஷெய்க் பி. தாரிக் அலி அவர்களால் மொழி பெயர்க் கப்பட்டு நிகழ் பதிப்பகத்தால் அழகிய வடிவமைப்புடன் வெளி வந்திருக்கும் இந்நூல் தமிழ் வாசகப் பரப்பில் காத்திரமான பணியாகும். நான் அறிந்தவரை இஸ்லாத்தில் இசை பற்றிய எதிர்மறைச் சிந்தனைகள் நிரம்பிய தமிழ் வாசகப் பரப்பில் இசை பற்றிய சமன் செய்யப்பட்ட பார்வை ஒன்றை முன்வைக்கும் இரண்டாவது நூலாக இதனைக் கருதுகின்றேன். பல தசாப்தங்களுக்கு முன்னர் அப்துல் வஹாப் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவின் ஓர் அத்தியாயமான ‘கிதாபுஸ் ஸமாஃ – இசை கேட்பதிலுள்ள இஸ்லாத்தின் ஒழுங்கள்’ என்ற நூலுக்குப் பின் வருகின்ற இரண்டாவது வரவாக இதனைக் கொள்ளலாம்.

அல்குர்ஆன் சுன்னாவின் ஒளியில் பாடலும் இசையும், கருத்து முரண்பாடுகளுக்கான காரணங்கள், பல்வேறு சட்டமரபுகளின் பார்வையில் இசை பற்றிய கருத்துக்கள், நுன்கலைகள் பற்றிய இஸ்லாத்தின் பொதுப் பார்வை ஆகிய பெருந்தலைப்புக்களில் இந்நூலில் இஸ்லாத்தில் இசை பற்றிய ஆராயப்படுகின்றது. இசை பற்றிய உடன்பாடான நிலைப்பாட்டை எடுக்கும் போதே எமக்கான மாற்றீடுகளை உருவாக்கும் முயற்சியில் நாம் முனைப் போடு செயற்பட முடியும். வெறும் பத்வாக்களையும் சமயவாதப் பிரதி வாதங்களையும் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருப்பதால் மாற்றீடுகளை உருவாக்குகின்ற பணி தாமதப்படும் என்பதில் சந்தேகமில்லை. நமது பாரம்பரியத்தில் இசை பெற்றுவந்த வகிபாகத்தையும் அதில் புலமை வாய்ந்த கலைஞர்களையும் அவர்களது சாதனைகளையும் இசை முயற்சிகளையும் கோவைப்படுத்துவதும் மறுவார்ப்புச் செய்வதும் அத்தகைய கலைஞர் களுக்கான வாய்ப்புக்களை சமூகக் களத்தில் பெற்றுக் கொடுப்பதும் முஸ்லிம் இசை மரபை ஒரு பயில் நிலை கற்கை நெறியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதுமே இன்றைய எமது தேவையாக இருக்கின்றது. எனவே நிகழ் பதிப்பகமும் எதிர்காலத்தில் இசையை பயில் வதற்கான வெளியீடுகளை கொண்டுவர வேண்டுமென ஆசைப்படுகின்றோம்.

                                                                                                                  nihalsrilanka@ gmail.com