Friday, January 13, 2012

ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை...

அதிகாலை
ஒரு அதிகாலை என்பது எவ்வளவு இனிமையானது. இருந்தாலும் அதன் அழகை தூக்கம் காவுகொண்டு விடுகின்றது. அதிகாலையின் அழகை இந்த உல கில் நிறையப்பேர் தூக்கத்திலேயே காண்கின்றனர். அதிகாலை என்பது ஒரு பிரத்தியேகமான மகிழ்ச்சிகுதூகலம். இந்தக் காலை ஒவ்வொருத்தருக்கும் ஒவ் வொரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 

எங்கள் இறைவனே (உன் தூதரின்) அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற் றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின் பக்கம் அழைத்து உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக, எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக. (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படி செய்வாயாக’.

விடிகாலையில் இறைவனைத் தொழ நினைப்பவன் இப்படி ஓதிக் கொண்டி ருக்கிறான். இப்பிரபஞ்சத்தின் படைப்பாளன் கேட்பவர்களுக்கு கீழ் வானத் திலிருந்து பதிலளிக்கக் காத்திருக்கிறான். மனிதனோ ஆழ்ந்த கனவுகளில் திளைத்திருக்கிறான். பதில் கிடைக்காத நேரங்களில் மனிதன் திரும்பத் திரும்ப அழைக்கிறான். பின்னர் தன் அழைப்புக்குப் பதில் இல்லையென தன் னைத்தானே நொந்து கொள்கிறான். அதிகாலையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு புறப்படுகிறது ரயில். ஆனால், அந்த சத்தம் ரயிலினுள் உறங் குபவர்கள் எவரது தூக்கத்தையும் கலைத்துவிடுவதில்லை.

முன்பகல்

முன்பகலின் மீது சத்தியமாக, மறை த்துக் கொள்ளும் இரவின் மீது சத்தி யமாக... இரவின் அடர்த்தி மெல்லக் குறைந்து முன்பகல் எங்கும் வியா பிக்கும்போது அந்த நாளின் இயக்கம் தொடங்கிவிடுகிறது. இருள் விலகி வெளிச்சம் வருவதுபோல எத்த னையோ பேர் தம் வாழ்வில் வெளிச்ச த்தை எதிர்பார்த்திருக்கின்றனர். முன் பகல் பொழுதென்பது மிகுந்த உற் சாகத்திற் குரியது. வாழ்க்கையின் இள மைப் பருவம் போலதான் அதுவும். ஒரு நாளின் இளமைதான் முன்பகல். நகர்ப் புறங்களில் ஒரு அமைதி வேளையைத் தேடுவது எத்தனை கொடுமை யானது. குளிரூட்டப்பட்ட அறையினுள்ளும் குளிர் தொந்தரவுபடுத்திக் கொண் டுதான் இருக்கிறது.



உடம்பில் இருக்கின்ற ஒவ்வொரு மூட்டிற்கும் ஒரு மனிதன் தர்மம் செய்ய வேண்டியிருக்கிறான். குறைந்தது இரண்டு ரக்அத்துக்கள் தொழுது ஒருவன் அதனை நிறைவு சேது கொள்ளலாம். அவற்றுக்கு தர்மமே கொடுக்காத எத்த னையோ மனிதர்களின் முன்பகல்கள் எவ்வளவோ வருடங்கள் வீணா கிவிட்டன.



நண்பகல்

வாகனங்களால் வீதி எங்கும் நிரம்பி வழிகின்றது நண்பகல். தலை நகரத்தில் நண்பகல் பயனம் என்பது பாதி நரகம் போன்றது. இயற் கையைக் கடிந்து கொள்வதால் எந்தப் பயனும் வரப்போவதில்லை. ஒரு பகலின் கொடூரத்தை விட நரகம் எத்தனையோ மடங்கு வேத னையைத் தரக்கூடியது என்பதனை மட்டும் உணரமுடிகிறது.

மழையைப்போல வெயிலும் ஒரு வசீகரம்தான். இருப்பினும் யாரும் அதனைக் கொண்டாடுவதில்லை. எல்லாக் குளிர்பானங்களுக்கும் வெயில்தானே சுவையைப் பெற்றுக் கொடுக்கிறது. அடைமழை பெய்து கொண்டிருக்கும்போது எல்லோரும் வெயிலைக் கொண்டுவரும் படியும், பட்ட வெயில் நாளில் மழையைக் கொண்டுவரும்படியும் மனிதன் பிரார்த்திக்கிறான். இன்னொரு நாளில் வெயிலைத் திட்டுகிறான். பிரிதொரு நாளில் மழையைத் திட்டுகிறான். வெயிலும், மழையும் யாரோ ஒருவரால் சபிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அந்தி

மஞ்சள் அந்தியை நினைக்கும்போது மனது பேருவகை கொள்கிறது. அது எல்லா நினைவுகளினதும் தங்கு மிடமாகிறது. ஒரு அந்தியின் வசீ கரத்தை யாரும் விரும்பாமலில்லை. எல்லா வினோதங்களும் இங்குதான் ஆரம்பமாகின்றன.

அந்தி நேரம் பெரும் ரசனைக்குரிய ஒன்றாக மாறிவிடுகின்றது. இந்த நேரத்தில் எல்லாமே இன்னொரு அழகைப் பெறுகின்றன. எல்லா அந்தியிலும் எல்லோ ருக்கும் ஏதோ ஒரு இடம் விருப்பத்திற்குரிய இடமாக மாறிவிடுகின்றது. தலைநகரில் காலி முகத்திடல் அந்தியின் கடலோரக் காற்றை சுவாசிக்க நல்லதொரு இடம். எல்லாக் கடலோர அந்திகளும் "கடல்கள் தீப்பற்றி எரியும்போது" என்ற மறை வசனத்தையே திரும்பத்திரும்ப நினைவு படுத்து கின்றன. ஒரு தனிமையின் அந்தி என்பது எவ்வளவு வேதனைக்குரியது. 

சொந்த ஊரின் வாசம் தொலைத்து
நகரங்களில் வசிப்பவர்களுக்கு
வருத்தத்தையே கொடுக்கிறது
தனிமை.

ஒரு மழைத்துளியின் அடர்த்திபோல
எப்போதும் அது ஈரத்தைத் தருகிறது.
யாருடனாவது தொலைபேசியில் பேச
இழந்தவைகளை மீட்டிப் பார்க்க
வைக்கிறது.

பிறகு
எதையாவது நினைக்க வைத்து
கவனத்தைக் கலைக்கிறது.
இழந்தவைகளை
அடையத் தூண்டுகிறது.

மறக்க முடியாத ஒரு நிகழ்வை
அடிக்கடி நினைக்க வைத்து
இதயத்தை கனக்க வைத்துவிடுகிறது.
வாழ்வை நொந்து கொள்ளச் செய்கிறது.

ஒரு பட்டாம் பூச்சியின் சிறகுகள்
உதிர்வது போல
சந்தோசத்தை உதிர்த்துவிடுகிறது.

நினைவின் எல்லாத் தொலைவுகளையும்
ஒரு முறை சுற்றி வந்து
நடுக்கத்தை ஏற்படுத்துகின்றது.

வெறுமை என்றால் என்னவென்பதை
நமக்குக் கற்பிக்கின்றது.
மறைந்திருக்கும் கண்ணீர்த் துளிகளை
வரவழைத்துவிடுகிறது.

பின்
இந்த அந்தியில் எழும் இந்தக்
கவிதையை
எழுத வைத்துவிடுகிறது
தனிமை.








இரவு

எல்லாப் பொழுதுகளையும்விட இரவு தன்னை சிறப்பாக்கிக் கொள்கிறது. இரவு என்பது ஒரு கரு நிற ஒவியம். அதில் ரசிக்க எவ்வளவோ இருக்கிறது. நிலவையும் விண்மீன்களையும் தவிர எல்லாமே இரவில் உறங்கிப்போய் விடுகின்றன.

இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்எனக் கூறும் இறை வரியில் இருக்கும் அழகியலை மனிதன் ரசிக்க மறந்து விடுகிறான். எல்லாக் களைப்புகளுக்கும் இரவு விடுதலையாகவும், சிலபோது நிவாரணமாகவும் அமைந்து விடுகிறது. அவரவர் குறைகளை, தவறுகளை, பாவங்களை இரவு அவரவருக்கு உணர்த்திவிடுகிறது. நண்மைகளுக்காக இறைவனைப் புகழவும், பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கவும் செய்துவிடுகிறது.



இப்படித்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதுகளைக் கொண்டு மனித வாழ்வு பிணைந்திருக்கிறது. ஒவ்வொரு பொழுதிலும் மனிதன் ஒவ்வொரு வாழ்க்கையை வாழ்கிறான். எல்லாப் பொழுதுகளும் பல்வகை அனுபவங்களைத் தருபவை. நாம் எத்தனை பொழுதுகளைக் கடந்தாலும், ஏதோ ஒரு பொழுதில் திடீரென இந்த உலகத்துடனான தொடர்பை நாம் துண்டித்துக் கொண்டு மறு உலகத்திற்கா செல்ல வேண்டிவரும்.

விடியல், அந்தி, இரவு என எல்லாமே முடிந்துபோகும் மாயைகள்தான். விடைபெறும் பொழுதுதான் முக்கியமானவை. வீட்டின் கடைசி மின்குமிழ் அணைகிறது.

இறைவா! உன் பெயரைக் கொண்டே மரணிக்கிறேன். உன் பெயரைக் கொண்டே விழித்தெழுகிறேன்...





No comments:

Post a Comment